உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் – என். குணசேகரன்



நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன் போர்: உலக அரசியலை கட்டுப்படுத்த

முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
நூல் வெளியீட்டு விழாவில் என். குணசேகரன் பேச்சு
சென்னை, மே 19 –

உக்ரைன் போரை பயன்படுத்தி உலக அரசியலை கட்டுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோவை பலப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.

இ.பா.சிந்தன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உக்ரைனில் என்ன நடக்கிறது?’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதனன்று (மே 18) சென்னையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட கட்சி கல்விக்குழு நடத்தி இந்நிகழ்வில் நூலை வெளியிட்டு என்.குணசேகரன் வெளியிட, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

இரண்டாம் உலகப்போருக்கு பின் போராற்ற உலகம் முழக்கம் எழுந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவும், ஜெர்மனை வளரவிடாமல் தடுக்கவும் நேட்டோ அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகும் நேட்டோ தொடர்கிறது. இந்த நேட்டோ காரணமாகவே ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது.

இந்தப்போரை முடிவுக்கு கொண்டுவர மனிதநேய மிக்கவர்கள் வலியுறுத்துகின்றனர். உக்ரைன் ஆளும் கூட்டம் போரை நீட்டிக்க விரும்புகிறது. உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்யும் கூட்டத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பா, அமெரிக்காவின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இந்தக் கூட்டம், போரை தங்களது லாப வேட்டைக்கும், மூலதன குவியலுக்கும் வாய்ப்பாக கருதுகிறது.

மேற்கத்திய, ஐரோக்கிய நாடுகள் ஆயுதங்களை ஒருங்கிணைந்த முறையில் தடையின்றி வழங்க வேண்டுமென்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகவே, போர் தற்போதைக்கு முடிவுக்கு வராது.

இந்தப்போரை பயன்படுத்தி ஐரோப்பிய, ஆசிய அரசியலை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. அதற்காக நேட்டோ பலப்படுத்துகிறது. நேட்டோவிற்குள் புதிய நாடுகளை சேர்க்கிறது. அதன்வாயிலாக ஏகாதிபத்திற்குள் உள்ள முரண்பாடுகளை கட்டுப்படுத்தி, உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை செய்கிறது.

மேலும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, சீனாவின் பொருளாதார, அரசியல் வல்லமையை கட்டுப்படுத்த இந்தியாவுடன் உறவு கொண்டாடுகிறது. இதன்வாயிலாக உலக அரசியலை தனது ஆதிக்கதிற்குள் கொண்டு வர அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏமன், சிரியாவை உருக்குலைப்பதிலும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலும், இந்தியாவில் எல்ஐசியை விற்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு உள்ளது.

500 கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உலகம் வேட்டையாடப்படுகிறது; உலகின் இயற்கைவளம் அழிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும். பேச்சுவார்த்தை மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இதற்கு வெகுமக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்.

அடையாள அணிதிரட்டல், இனவெறி போன்றவை வர்க்க ஒற்றுமையை சிதைப்பதோடு, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே உள்ளன. இதுவே உக்ரைன் போர் படிப்பினையாக உள்ளது. உக்ரைனில் இரண்டுமுறை ஆட்சிக்கவிழ்ப்பு நடந்துள்ளது. அவற்றை ஆரெஞ்ச் புரட்சி, மைதான புரட்சி என்றனர். ஆளும் வர்க்கத்தை முற்றாக வீழ்த்தி, கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அமைவதுதான் புரட்சி. புரட்சி என்ற வார்த்தையை மலினப்படுத்த ஆட்சி கவிழ்ப்பை புரட்சி என்றார்கள்.

ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. மின்தேவைக்கு ரஷ்யாவை சார்ந்து இருப்பதாலும், அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவின் துதிபாடியான பிரதமர் இந்த நிலையை எடுத்துள்ளார்.

சிஎன்என் போன்ற சேனல்கள் முதலாளித்துவாதிகளால் நடத்தப்படுகின்றன. அவை கார்ப்பரேட்டுகளின் குரல்களையே பிரதிபலிக்கின்றன. அவற்றை பின்பற்றியே பிற ஊடகங்களும் இயங்குகின்றன. ஊடகங்கள ஒருசார்பான செய்திகளையே வெளியிடுகின்றன.

போருக்கு எதிரான முழக்கம் அழுத்தமாக உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். இடதுசாரிகளின் பின்னால் உலகம் அணிதிரண்டால்தான் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்திய முறைமை அழிந்தால்தான் போர், வேலையின்மை, வறுமைக்கு முடிவு கட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினர்.

இந்த நிகழ்விற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா, எஸ்எப்ஐ மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, பாரதி புத்தகாலம் மேலாளர் எம்.சிராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

2022 மே 19

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில்  என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்

நூல் பதிப்புரை : இ.பா. சிந்தனின் உக்ரைனில் என்ன நடக்கிறது? – அ. பாக்கியம்




நூல் : உக்ரைனில் என்ன நடக்கிறது ?
ஆசிரியர் : இ.பா. சிந்தன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 100.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com

உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக பிரச்சாரத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த புத்தகம் தெளிவாக பதில் அளிக்கிறது.

இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி எப்படி மேலாதிக்கம் பெற்றது. 90-ம் ஆண்டுகளுக்குப்பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடன் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் எப்படி அதிகரித்துக் கொண்டது. சோவியத் யூனியனை சிதைத்தபிறகு ரஷ்யாவை அமெரிக்கா எப்படி தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது. இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் எவ்வாறு தோல்வி கண்டது என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா உலகை கபளீகரம் செய்யக்கூடிய முயற்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பலவற்றை அழித்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் சிக்கி கொண்டதையும், அதனால் உலகின் மேலாதிக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் புத்தகம் ரத்தினச் சுருக்கமாக அறிவிக்கிறது.

சிதைந்துபோன ரஷ்யா மீண்டும் அரசியல் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்திக் கொண்டது அமெரிக்காவிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. அதேநேரத்தில் சப்தமின்றி, அமைதியான முறையில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நேட்டோ இராணுவத்தை பயன்படுத்தியது.
குறிப்பாக ஐரோப்பாவில் பலம்பொருந்திய ஜெர்மனியின் முன்னேற்றத்தை அமெரிக்கா திட்டமிட்டு தடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு எடுத்த முயற்சிகளை ஜெர்மனி எதிர்கொண்டது. இந்த விஷயங்களை பொருளாதார ரீதியிலான ஒப்பந்தங்களுடன் இணைத்து இப்புத்தகம் அமெரிக்கா வின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவினால் அடிக்கடி விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும், பெட்ரோ டாலர் மூலமாக வணிகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் ரஷ்யா, சீனா, ஜெர்மனியும் பங்குபெற்று பின்னுக்குத் தள்ளியது என்பதையும் அன்னிய செலவாணி பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தையும் இப் புத்தகத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் பின்னணியுடன் தான் உக்ரைன் ரஷ்ய போரை இந்தப் புத்தகம் விளக்குகிறது.யுத்தம் நேரடியாகவும், தகவல்தொழில்நுட்ப வழியாகவும், பொருளாதார அடிப்டையிலும் என மூன்று தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து உலகம் முழுவதும் ஒரு தரப்பான செய்தியையே வெளியிடுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பா கண்டத்திலேயே ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுஉக்ரைன். இதன் பூகோள எல்லைகள் எப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

சோவியத் நாட்டின் சிதைவுக்கு பிறகு ரஷ்யாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய உக்ரைனை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு விளைவுதான் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும்.

உக்ரைனில் வாழக்கூடிய மக்களில் ரஷ்ய இனமக்கள் 30% பேர் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமையில் கை வைப்பதற்கான வழக்கமான சதி வேலைகளை, ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராக என்பதைவிட தன்னுடைய திட்டத்திற்கு அடிபணியாத ஆட்சியாளருக்கு எதிராக, ஜனநாயகம் இல்லை என்ற போர்வையில் பல கோடி டாலர்களை ஒதுக்கி கலவரத்தை தூண்டிவிட்டு குழப்பத்தை உருவாக்கினார்கள்.

தனக்குப் பிடிக்காத ஆட்சியை எதிர்ப்பதற்காக நவபாசிச சக்திகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும், அண்டை நாட்டில் புகழ் இடங்களையும், ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வேலைகளை அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பு கும்பல் அற்புதமாக செயல்படுத்தி கொண்டிருந்தது இதனால் உக்ரைனில் பெரும் குழப்பமும் ரஷ்ய இன மக்களை அழித்தொழிக்கும் நிகழ்வுகளும் நடந்தது.

அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் பதவிக்கு வந்தவுடன் நவ பாசிச பயங்கரவாத அமைப்புகளை துணை இராணுவமாக அங்கீகரித்து மக்களை அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுகளை இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுளுடன் இணைத்து புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை, சுத்தியல் அரிவாள் சின்னம் பயன்படுத்தக்கூடாது, லெனின் சிறை தகர்ப்பு போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாக அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் செயல்பாடு இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

ஐரோப்பாவின் எரிவாயு தேவையை ரஷ்யாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை தடுப்பதன் மூலம், அமெரிக்கா ஒரே நேரத்தில் ரஷ்யாவையும், ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

உக்ரைன் பிரச்சனைகளை துல்லியமாக விளக்குவதற்கு சிரியாவை சிதைத்த தன்மைகள், ஈராக் மற்றும் ஏமன் நாடுகளை எப்படி ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்துக்காக பகடைக்காயாக பயன்படுத்தி, ஜனநாயகத்தையும் அழித்தொழித்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தது என்பதை ஒரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குவதோடு விளக்கப்பட்டுள்ளது.

எனவே உக்ரைன் யுத்தம், உக்ரைன்-ரஷ்யாவிற்குமான யுத்தம் மட்டுமல்ல. அது பல வழிகளில் பல கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு யுத்தம் என்பதை இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

புத்தகத்தின் இறுதிப் பகுதியில் யுத்தம் தொடர்பான பதிவுகள் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி அறைகூவல் விடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் அவசியமாக படிக்கவேண்டியது மட்டுமல்ல நிலைமையை புரிந்து கொள்வதற்கு அவசரமாகவும் படிக்க வேண்டும்.

அ. பாக்கியம்