எம்.எஸ்.சுவாமிநாதன் வரலாற்றின் விளைபொருள்…! பிரியம்பதா ஜெயக்குமார் | நேர்காணல்: வசந்த் ஸ்ரீனிவாசன் (தமிழில்:மோசஸ் பிரபு)
இந்தியக் கல்வியமைப்பு மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான அமைப்பு! – வே. வசந்திதேவி | சந்திப்பு: ஜி.செல்வா
“வெளியிலிருந்து வரும் மக்களை நிச்சயமாக நாம் அதிகமாகவே ஏற்றுக் கொள்கிறோம்” : நிர்மலா லஷ்மண்
மோடி இந்தியாவில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் : நேர்காணல்
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
புதிய புத்தகம் பேசுது – மார்ச் மாத இதழ் – 2023
நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்
நூல் : கேட்டதால் சொல்ல நேர்ந்தது
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹200/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

கேட்டதால் சொல்ல நேர்ந்தது என்ற நூலில் கேள்விகள் கேட்ட அனைத்து நெறியாளருக்கும் மிகுந்த நன்றியை நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த நேர்காணல் தொகுப்பு என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்து பாரம்பரிய மிக்க குடும்பத்தின் மிக முக்கிய எழுத்தாளராக இருந்துவரும் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் பல்வேறு காலகட்டத்தில் நடத்தப்பட்ட நேர்காணல்களாகும்.
இந்த நேர்காணலில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்க்கையின் பரிணாமங்கள் குறித்த கேள்விகளுக்கு நேர்மையான முறையில் அவர் பதிலளித்துள்ளார். 13 நேர்காணல்களில் அவரது முழுமையான ஆளுமையைப் புரிந்துகொள்ளும் விதத்தில் பதில்களாகப் பகிர்ந்துள்ளார்.
இந்த நேர்காணல்களில் பெரும்பாலான கேள்விகள் அவரது சிறுகதை குறித்தே இருந்துள்ளன. ஏனெனில் அவரது சிறுகதைகளின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதுதான் சொல்லாமல் விளங்கும் செய்தி ஆகும். கிட்டத்தட்ட எல்லா நேர்காணல்களிலும் தவறாது ஏன் சிறுகதை எழுதவில்லை என்பதும் அதற்கு அவர் இன்னமும் எழுதாமல் 150,200 கதைகளும் உள்ளன என்றால் அரவது மேதமையை புலமையை வியக்காமல் இருக்க முடியாது.
மேலும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் பார்வை மற்றும் சிந்தனைக்கு ஒரு சான்றாக பண்பாடு குறித்த கேள்வியில் அவர் சொன்ன பதில் இன்னமும் பண்பாடு என்பது ஒற்றை பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன் பரிணாம வளர்ச்சியில் அவன் சமூகமயமாதலின் போது தேவைப்பட்ட பண்பாடு என்பது வேறு. தற்போது முதலாளிகளின் லாப உற்பத்திக்கேற்ற அடிமைகளினை உருவாக்கும் விதிமுறைகளையும் அதனால ஏற்படுத்தப்படும் ஒழுங்குகளையும் தான் பண்பாடு என்றால் அது இப்போது தேவை இல்லை என்பது சமூகம் மற்றும் கலாசாரத்தின் மீது அவர் கொண்டுள்ள மக்கள் நலன் சார்ந்த எழுத்தாளர் என்பதை காட்டுகிறது.
ஒரு பொதுவுடைமை இயக்கத்தின் பிரதிநிதி என்றால் அவர் கடவுள் மறுப்பாளர் என்றும் அதன் மீது தீவிர எதிர்ப்பு வெறுப்பு கொண்டவர் என்கிற கருத்தை அவர் மாற்றி அமைகிறார். எவ்வாறெனில் கடவுள் என்பதில் அவர் மக்களின் கடவுள் நம்பிக்கையை பற்றி பேசுகிறார். “இங்கு கருணை இருந்திருந்தால் மனிதன் புதிதாக ஒரு கருணை வடிவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை” என மார்க்சின் கருத்தினை எளிமையான முறையில் விளக்கம் கொடுக்கின்றார். கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் ஆகிய இரண்டின் எல்லைகளையும் இதில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு அரசியல்படுத்தப்படுகிறது என்பதையும் எளிமையாக சொல்கிறார். இது போன்றே சாதி குறித்தும் அவர் சாதியையும் அரசியல் படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். ஒட்டு அரசியல் இருக்கும் வரை மதம் மற்றும் சாதி என்பது அரசியல் செய்வோரின் பாதுகாப்பு கவசமாகவும், ஒட்டு பெறும் அட்சய பாத்திரமாகவும் உள்ளது என்கிறார்.
கல்வி குறித்த கேள்விகளுக்கு கல்வி எவ்வாறு இன்று மக்களுக்கு புகட்டப்படுகிறது என்பதையும் அது எவ்வாறு மக்களின் சிந்தனையை மழுங்கடித்து கடிவாளம் போட்ட குதிரை போல இளைஞர்களையும் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி கற்பிக்கும் முறைகளையும் அவைகளை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளையும் விவரிக்கின்றார்.
இளம் படைப்பாளர்களுக்கு தனது வாசிப்பு மற்றும் தனது எழுத்து அனுபவங்கள் தன்னை எழுதத் தூண்டிய அனுபவங்கள். தனது அஞ்சல்துறை அனுபவம் அறிவொளி திட்டப்பணிப் பயணம் குறித்தவை தனது இளமைக்கால அனுபவங்கள் யாவும் பயனுள்ள விதத்தில் பகிர்ந்துள்ளார். தனது அபிமான எழுத்தாளரான கு.அழகிரிசாமி அவர்களின் எழுத்தும் அவரது எழுத்து தன்னைப் பாதித்த அம்சங்கள் குறித்தும் அவரைப் போல வெறும் நாய் மற்றும் அன்பளிப்பு போன்ற ஒரு நூறு கதைகளாவது எழுதிவிடமாட்டமா என்கிற ஏக்கத்தையும் அவர் வெளியிடாமல் இல்லை.
தனது இலக்கிய பயணத்தில் தனது இணையரது பங்கு பற்றி கூறும்போது அவர் தனது இணையர் பொருளாதார தேவைகளையும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டதாலேயே தன்னால் இந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்ய இயலும் என்றவர், தாமும் பெண் விடுதலை குறித்தும் பெண் சுதந்திரம் எவ்வாறு குடும்ப அமைப்பிற்குள்ளிருந்து துவங்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ஆண்கள் தமது ஆண் என்கிற எண்ணத்தை வீட்டின் சமையலறையில் இருந்து பெண்களுக்கு முழு விடுதலை வழங்கவேண்டும் என்பதை சொல்லியதோடு மட்டுமல்லாது தமது வீட்டிலும் செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த நூலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வானது சிறுவயதில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஏற்பட்டதை போலவே இருந்தது. அவர் தமது அம்மாவின் தந்தை (தாத்தா) வீட்டிற்க்கு சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லும் போது என்னுடைய சிறுவயது நினைவுகள் நிழலாடியது, என்னை அந்த பால்ய வயதிற்கே கூட்டிச்சென்றது இந்த நூலின் மறக்க இயலாத பக்கங்களாகும்.
இலக்கியம் குறித்து சொல்லும் பொது “வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான, மனித மனங்களைப் புரிந்து கொள்வதற்கான, மனிதன் கண்டுபிடித்த ஒரே சாதனம், இலக்கியம்தான்” என கூறுகிறார் இலக்கியம் குறித்து இதற்கு மேல் எதுவும் கூறிவிட இயலாது என எண்ணுகிறேன்.
எழுத்தாளர்கள் குறித்து: “குழந்தைகளுக்கு தனது துயரம் மற்றவர்களின் துயரம் என்று தெரியாது, அனைவரது துயரத்தையும் தனதாகவே நினைப்பார்கள். அதனால் தான் எழுத்தாளர்களுக்கு குழந்தை மனநிலை வேண்டும் என்று சொல்வார்கள்” என எழுத்தாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என தனது மனதினையும் கன்னாடியைப் போல பிரதிபலித்துள்ளார் எனக் கொள்ளலாம்.

மேலும் இந்த நூலில் நமக்கு அரசியல் குறித்த கருத்தாகட்டும், காதல், மதம், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமை இயக்கம், சிறுகதை, கட்டுரை தொகுப்பு, போன்ற எது குறித்த கருத்துகளுக்கும் இங்கு நமக்கு பரிந்துரைகளும் புரிதல்களும் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக கூறுவேன்.
நன்றி:
பிரபாகர் பாண்டியன் முகநூல் பதிவிலிருந்து…..








