உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையும் இந்தியாவின் நிலையும் உண்மையைத் தேடி – ஆயிஷா. இரா. நடராசன்

உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையும் இந்தியாவின் நிலையும் உண்மையைத் தேடி – ஆயிஷா. இரா. நடராசன்




நம் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அம்மையார் சமீபத்தில் பெருமிதத்தோடு குறிப்பிட்ட ஒரு விஷயம் உலக- கண்டுபிடிப்பு தரவரிசையில் நம் நாடு பலபடி முன்னேறி 40 வது இடத்தை பிடித்து விட்டது என்பது சர்வதேச கண்டுபிடிப்பு இன்டெக்ஸில் நம் நாடு 81 வது இடத்தில் இருந்து 40 வது இடம் நோக்கி முன்னேறிவிட்டது என்பது சிறப்பான செய்தி அல்லவா. குஜராத் பல்கலைகழகத்தின் இளம் பெண்களுக்கான ‘ஹர்-ஸ்டார்ட்’ (Her – START) திட்டத்தை தொடங்கி வைத்தபோதுதான் நம் ஜனாதிபதி அம்மையார் இப்படியாக பெருமிதம் கொண்டிருக்கிறார். நமக்கும் மகிழ்ச்சியே.

அதென்ன சர்வதேச கண்டுபிடிப்பாளர் இண்டெக்ஸ்,..? பொதுவாக நம் நாட்டில் அறிவியல் – தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் நிலை என்ன? நம் நாடு பட்டினி இண்டெக்ஸ், வளர்ச்சி கணக்கீடு, கல்வி என்று பெரும்பாலான உலகளாவிய தரவரிசைகளில் பின் நோக்கி அதிர்ச்சிப் பயணம் செய்து துயரம் தரும் காலத்தில் கண்டுபிடிப்பு தரவரிசை நம்மை ஆச்சரியப்படுத்துவது உண்மைதானா? கண்டுபிடிப்பாளர் என்றால் யார்? எதை வைத்து இந்த (கண்டுபிடிப்பு) சர்வே எடுக்கப்படுகிறது. இப்படி கேள்விகள் எழுவது நியாயம்தான். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அறிவியல் – தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்பது கண்டுபிடிப்பு (Invention). புதுமை புகுத்துதல் (Innovation) முன்னேற்றுதல் (IMPROVING) என்ற மூன்றையும் உள்ளடக்கியதாக பொதுவில் சொல்லப்படுகிறது.

ஒரு பேனாவையே கண்டுபிடிப்பது வேறு. ஏற்கனவே இருப்பதை மேம்படுத்துவது வேறு. ஒவ்வொரு படிநிலை முன்னேற்றமும் உரிமம் பெற தகுதியானதே விதவிதமான பேனாக்கள் சந்தையில் இருப்பதை காணலாம். இங்க் பேனா, இங்க் டேங்க் பேனா, பந்துமுனைப் பேனா, ஜெல் எனும் கூழ்மப் பேனா மூடி வைத்தது பின்னே பித்தான் வைத்தது தானியங்கி பேனா என அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாவகைக்கும் உரிமம் பெறப்பட்டு அதனதன அறிவுசார் உடைமை (Intellectual property rights) அதன் கண்டுபிடிப்பாளருக்கு தக்க விதத்தில் சென்று சேரவேண்டும்.

நவீன யுகத்தில் மனித வளர்ச்சி அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு – இது இன்னாருடைய பங்களிப்பு – என்று உரிமச் சான்று தரும்- அமைப்பு மறுமலர்ச்சியை இத்தாலியில் 1474ல் தொடங்கியது. ஆனால் அப்படி ஒரு தரச்சான்று அளிக்கும் முறை ஆதி கிரேக்கத்திலும் சீனத்திலும் கூட இருந்ததற்கு சான்று உண்டு இங்கிலாந்தில் முதல் ஆங்கிலேய வர்த்தகம் சார்ந்த கண்டுபிடிப்பு உரிமம் 1449ல் உத்தெய்னம்- ஜான் என்பவருக்கு கண்ணாடி தயாரிக்கும் முறைக்காக நான்காம் ஹென்றி மன்னரால் வழங்கப்பட்டது. அப்போதைய இங்கிலாந்தில் யாருக்குமே ஜன்னல் கண்ணாடிகள் செய்யத் தெரியாது. 1561 முதல் 1590 வரை முதலாம் எலிசபெத் மகாராணி தன் கையொப்பமிட்டு குறைந்த பட்சம் 50 சான்றிதழ்களாவது தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கியுள்ளதையும் வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. மன்னர் முதலாம் ஜேம்ஸ் தன் மனப்போக்கில் வேண்டப்பட்டவர்களுக்கு எல்லாம் உரிமங்களை வாரி வழங்கியபோது இங்கிலாந்து (அப்போதைய) பாராளுமன்றம் சர்வதேச அளவில் முதல் கண்டுபிடிப்பு- உரிமம் நடைமுறை சட்டம் – என்கிற ஒன்றை 1624ல் நிறைவேற்றியது. பிறகு தொழிற்புரட்சி ஆண்டுகளை உலகம் அடைந்த நாட்களில் அறிவியல் வளர்ச்சி மேலும் தெளிவான நடைமுறைகளை நோக்கி கண்டுபிடிப்புகளை பதிவுசெய்தலை பரிணாமம் அடையவைத்தது.

இந்தியாவில் தன் கண்டுபிடிப்புகளக்காக சில பெயர்கள் பிரபலமாக அறியப்பட்டது அவரவர்களின் நூல்களால் தான். சுஸ்ருதா மருத்துவ நூலும், நம் சங்க காலத்தின் வானவியல் கணிதத்தை தந்த சிலேட்டர், குடுக்கை நன் கணியார் என தமிழிலும் உண்டு. ஆங்கிலேயர்கள் 1911ல் இந்திய உரிமம் மற்றும் வடிவமைப்பு (Patents & Design Act) உரிமை சட்டத்தை அறிமுகம் செய்தது. 1950ல் இச்சட்டம் முதல்முறை திருத்தப்பட்டாலும் 1957ல் நேரு அரசு இன்னும் தெளிவான அனைவருக்கும் பயன்படும் உரிமம் பெறும் சட்டத்தை – கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் சட்டமாக மாற்றிட பரிந்துரைகளை வழங்குமாறு நீதியரசர். எம். ராஜகோபால் ஐயங்கார் கமிட்டியை நியமித்தது. அதன்படி அப்போது (1959) ஒரு முறை சட்டம் திருத்தப்பட்டது.

ஆனால் 1972, ஏப்ரல் 20 அன்றுதான் தெளிவான ஒரு கண்டுபிடிப்பு உரிமச்சட்டம் நம் நாட்டில் அமலுக்கு வந்தது. இது ஏறத்தாழ முப்பதாண்டுகள் கழித்து 1999ல் உரிம சட்டதிருத்த மசோதா மூலம் மேலும் கணினி இயல் – சந்தை வர்த்தகம் என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டு அதன்பின் 2002ல் ஒருமுறையும் 2005ல் ஒரு முறையும் மாற்றத்திற்கு உட்பட்டு டில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை நகரங்களில் இந்திய அறிவுசார் உடைமை-பதிவு அலுவலகங்களை திறந்து நவீன மயமாக்கப்பட்டது. இருமல் மருந்து, செருப்பு, கைபேசி பல்பு, குண்டூசி முதல் குவாட்டர் பாட்டில் வரை சகலத்திற்கும் அங்கே (சர்வலோக ) உரிமம் வழங்கப்படுகிறது. உரிமம் பெறத்தக்க கண்டுபிடிப்பாக எது இருக்க முடியும் என்பதற்கு அந்த அலுவலகத்தில் ஆயிரம் பக்கத்திற்கான (!) ஒரு வழிகாட்டி புத்தகம் கூட உள்ளது. (அதற்கும் உரிமம் வாங்கி வைத்து இருக்கிறார்கள்!)/

நம் நாட்டின் தற்போதைய சிக்கல் மிகவும் வினோதமானது. பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு சென்ற மாதம் நம் ‘கண்டுபிடிப்பு உரிமம் பெரும் சூழல் அமைப்பில் அவசர மூலதனம் ஏன் தேவை எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தது. இந்தியாவை அறிவார்த்த பொருளாதாரமாக்கிட (Intellectual – knowledge economy) தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதன் அவசியத்தை அவசரத்தை அந்த அறிக்கை விளக்கியது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விபரங்கள் நமக்குள் பல புதிர்களை விதைப்பனவாக உள்ளன.

ஒரு உற்பத்தி பொருள் மீதோ அல்லது கண்டுபிடிப்பின் மீதோ அறிவுசார் சொத்துரிமை கோரும் உரிம- அனுமதி இருவகை. ஒன்று இந்திய உரிமம் கோரும் அயல் கண்டுபிடிப்பாளர்களுடைய கண்டுபிடிப்பு உரிம-அனுமதி விண்ணப்பம். இரண்டாவது உள்ளூர் கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பம் முதல் முறையாக 2021 -2022 ல் அயல் விண்ணப்பங்களை விட உள்ளூர் கண்டு பிடிப்பாளர்களின் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. சென்ற பத்தாண்டு காலத்தைவிட (2010-19) இந்த புத்தாண்டின் தொடக்கமே சாதனை. 2010/19 காலகட்டம் தனக்கு முந்திய பத்தாண்டு காலகட்டத்தைவிட இருமடங்கு அதிக கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 2022-2023 பொருளாதார கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் – உள்ளூர் விண்ணப்பங்கள் மேலும் அதிகரிப்பதையே புள்ளிவிபர போக்கு நமக்கு காட்டுவதாகவும் பிரதம அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் சர்வதேச தரப்பட்டியல் வெளியானது. 80 விதவிதமான அளவுருக்களின் அடிப்படையில் அது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. கார்னெல் பல்கலைக்கழகம், இன்சீடு எனம் அமைப்பு மற்றும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இணைந்து நடத்துவது அது இன்சீடு என்பது ஒரு (Institute of European Administration of Business Affairs) பொருளாதார கல்வி வர்த்தக அமைப்பு. பிரான்சு, அபுதாபி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உண்டு. இன்சீடு(In SEAD) என்ற தனது இதழில்தான் அந்த தரவரிசையை அது வெளியிடுகிறது. இன்சீடு. ஒரு கல்வி நிறுவனம் எம்.பி.ஏ எம்.சி.ஏ என்று பட்டப்படிப்பும் உண்டு.

இந்த தரவரிசை இரு பிரதான அளவுரு வகைப்பாடுகளை கொண்டது. ஒன்று உள்ளீட்டு (கண்டுபிடிப்பு) அளவுரு மற்றது வெளியீட்டு (கண்டுபிடிப்பு) அளவுரு. இவற்றை மேலும் பல படிநிலை அளவுருக்களாக பிரிக்கிறார்கள். 2007ல் வெறும் 17 படிநிலை அளவுருக்காளாக இருந்ததை 2019ல் 120 படிநிலைகளாக பிரித்துவிட்டார்கள். காரணம் உண்டு. 2019ல் ஐ.நா. சபையின் கண்டு பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சி எனும் அறிக்கை வெளிவந்தது. அது ஆண்டுதோறும் உலக நாடுகளிடையே தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல்பூர்வமான நிலைத்த வளர்ச்சி குறித்த தரப்பட்டியலை வெளியிட முடிவு செய்தது. (நிலைத்த வளர்ச்சி –தரவரிசை பற்றி யாருமே பேசுவது இல்லை. ஏனெனில் இந்தியாவின் தர – இடம் கம்போடியா, வங்காளதேசத்திற்கும் கீழே உள்ளது- முதலாம் இடம் பின்லாந்து, 121-வது இடத்தில் இந்தியா).

இந்தியாவின் கண்டுபிடிப்பு –உரிமம் பெறும் நடைமுறை மிகுந்த சிக்கல் நிறைந்த நீண்ட போராட்டம் ஆகும். எனவே பெரும்பாலும் யாருமே நேரடியாக விண்ணப்பிப்பது இல்லை. அதற்கென்று இடைத்தரகர்கள் பெருகிவிட்டார்கள். இந்த நடைமுறை – சிவப்பு (திண்டாட்டத்தை) நாடா பள்ளத்தாக்கை நம்பி சுமார் இரண்டு லட்சம் வழக்குரைஞர்கள் பணியாற்றும் தனித்துறையே உள்ளது. நானும் எடிசன்போல பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவேன் எனும் குழந்தைப்பருவ கனவை விதைப்பவர்கள் – உரிமம் பெருகிற பின் விளைவு தெரிந்தால் அறிவியலைவிட்டே ஓடிவிடுவார்கள். ஷரத்து (9) 1ன் படி ஒவ்வொரு விண்ணப்பமும் வந்த ஒரு வருடத்திற்குள் கண்டுபிடிப்பு குறித்த தரச்சான்று தரும் அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் தரப்பட்ட சான்றாதார விபர அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அதைவிட கொடுமை 21(1)ம் ஷரத்து. உரிம அலுவலர் உங்கள் விண்ணப்பத்தில் ஒரு எழுத்து பிழையை கண்டுபிடித்து விட்டாலும் நீங்கள் முதலில் இருந்து –வேறு புதிய விண்ணப்பத்தை‘விலை‘ கொடுத்து வாங்கி மீண்டும் பயணத்தை முதல் பெட்டியில் இருந்து தொடங்கவேண்டும். ஒவ்வொரு படிநிலைக்கும் பழையபடி (இடைத்தரகர்) கட்டணம் உங்களை தாளித்து விடும் அவலம் ஒருபுறம். அதே விஷயத்தை தானும் கண்டுபிடித்ததாக சும்மா யாரோ ஒருவர் –ஒரு கடிதம் கொடுத்தாலும் நீங்கள் அம்போ.

இந்த நிலையில் 2016ம் வருடம் தேசிய அறிவுசார் உரிமை- கொள்கை என்ற ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது. தனது புதுமை – கண்டுபிடிப்பு உரிம அலுவலக சோதனைகளின் தேறாது என்று தெரிந்தேகூட ஒருவர் உரிம விண்ணப்பம் அளிக்க முடியும் என்று நம் நாட்டின் கொள்கை வாசல் திறந்து விட்டது. ஒருபுரம் உயர் கல்வியில் தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி (R&D) – உள்ளூர் செலவீனத்திலும் தனியாரை வரவழைத்து 2013ல் 5% மாக இருந்ததை 2018 ல் 7% மாக உயர்த்தி காட்டி இருக்கிறோம் (ஆதாரம் யுனெஸ்கோ அறிக்கை) 2015 – 16 ல் 838 ஆக இருந்த பத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு உரிமம் கொரும் விண்ணப்ப எண்ணிக்கை மேற்கண்ட காரணங்களால் 2019 – 20 ல் 2,533 ஆக உயர்ந்துள்ளது.

உரிமம் கோரி விண்ணப்பித்த அளவுருவில் உலகின் 40 வது இடம். சரிதான் சற்றே அருகில் வைத்து கணக்கீட்டை பரிசீலித்தால் பெரிய அதிர்ச்சியே ஏற்படுகிறது. சிஜிபிடி இயக்குனர் அலுவலக (controller General of Patents, Designs, Trademarks and geographical Indications) சமீபத்திய அறிக்கை ஒரு விஷயத்தை நம் கவனத்திற்கு கொண்டுவருகிறது. நம் நாட்டில் கண்டுபிடிப்பு உரிமம் கோரும் விண்ணப்பங்களில் கைவிடப்பட்ட அல்லது 9(1) மற்றும் 21(1) விதிகளின் படி ஏற்கப்படாத விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2010 – 11 ல் 5186 ல் இருந்து 2019 / 20 ல் 23, 291 ஆக உயர்ந்து விட்டது. இதை சர்வதேச தரக் கணக்கீடு கணக்கில் எடுத்ததா என்பதே புதிராக உள்ளது. ஆக நம் நாட்டில் கண்டுபிடிப்பு உரிமம் பெற விண்ணப்பித்தவர்களையும் பெற்றவர்களையும் எண்ணிக்கைப்படி ஒப்பிட்டால் மொத்தமாக 4.2 சதவிகிதம் பேர் மட்டுமே உரிமம் பெறுகிறார்கள் என்று சி.ஜி.பி.டி யின் அண்மை அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. இதற்கான காரணம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுவது என்னவென்றால் உயர்கல்வி மற்றும் இந்திய நிறுவனத்துறைகளில் கண்டுபிடிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்த ரசீது (ஆதாரம்) இணைப்பது உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு ஒரு நிபந்தனையாக 2016 முதல் அமலானது. உரிமம் பெற்றிருக்க வேண்டியதில்லை. விண்ணப்பித்தாலே போதும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) முதல் தளவாட ஆய்வு நிலையம் (DRDO) அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) ஏன் நம் எல்.ஐ.சி முதல் வங்கிகள் வரைகூட – வேலை பார்க்கும் ஒருவர் ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால் தன்சொந்த பெயரில் கண்டுபிடிப்பு உரிமம் பெறமுடியாது. அந்த நிறுவன தலைமையிடம் அனுமதி கோர வேண்டி உள்ளது மட்டுமல்ல கண்டு பிடிப்பாளரின் உழைப்பை அந்த நிறுவனத்தின் கூட்டுமுயற்சி என்று பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதும் நிறுவன விதிமுறைகள் உங்களை சுயமாக கண்டுபிடிப்பாளராக செயல்படமுடியாத நிலையும் நீடிக்கிறது.

கண்டுபிடிப்பாளர் சபீர்பாட்டியா ((HOT MAIL) ஹாட் மெயில் – புகழ்) சமீபத்தில் சொன்னதைப்போல ஒரு கண்டு பிடிப்பை நிகழ்த்துவதைவிட அதை பதிவு செய்து உரிமம் பெருவதற்கு பலநூறு மடங்கு செலவு செய்யும் கொடுமை இந்தியாவைத்தவிர வேறு எங்குமே கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளுக்கு உதவித்தொகை வழங்குவதை குறைத்து, சாந்தி சொரூப பட்னாகர் விருது உட்பட முன்னூறு அறிவியல் விருதுகளையும் கிடப்பில் போட்டுவிட்ட மத்திய அரசு – கண்டுபிடிப்பு உரிமம் பெறும் படி நிலைகளில் சிக்கல்களை களைந்து எளிமை படுத்தியாவது உதவ வேண்டும். அதற்காவது நமது மேதகு ஜனாதிபதி அம்மையாரின் பெருமிதம் உதவ வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

– ஆயிஷா. இரா. நடராசன்