பெகாசஸ் உளவு மென்பொருள் ஊழல்: மோடி அரசு பதிலளிக்க வேண்டிய மூன்று கேள்விகள் – இப்சிதா சக்ரவர்த்தி | தமிழில்: தா.சந்திரகுரு
அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலமாக பெகாசஸ் உளவு மென்பொருள் இந்தியாவிற்குள் நுழைந்தது என்று இதுவரையிலும் .பரவலாக ஊகிக்கப்பட்டு வந்த விஷயத்தை சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் நடத்திய விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2017ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பயணத்தின் போது கையொப்பமிடப்பட்ட இருநூறு கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே அந்த கண்காணிப்பு மென்பொருள் இருந்தது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் குற்றம் சாட்டியுள்ளது.
தொலைபேசிகளை ஹேக் செய்வது, எதிர்ப்பாளர்களை உளவு பார்ப்பது போன்ற வேலைகளுக்காக பெகாசஸை வாங்கியிருக்கும் ஹங்கேரி, போலந்து, சௌதி அரேபியா மற்றும் பிற சர்வாதிகார நாடுகள் பட்டியலுக்குள் அந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவும் சேர்ந்து கொண்டது.
முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளிநாடுகளுடனான உறவுகள், சலுகைகளைப் பெறுவதற்காக தங்கள் நாட்டு உளவு அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ (NSO) குழுமத்தால் தயாரிக்கப்பட்ட இணைய ஆயுதங்களை வர்த்தகம் செய்தார் என்று அந்தப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் கட்டுரை தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களிப்பது, பாலஸ்தீனத்திற்கு அளிக்கப்பட்டு வருகின்ற புதுதில்லியின் ஆதரவில் இருந்து பின்வாங்கிக் கொள்வது போன்றவையே இஸ்ரேலின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த ஒப்பந்தம் பிரதிபலன் சார்ந்ததாக இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை இஸ்ரேல், இந்தியா என்று இரண்டு நாடுகளுமே மறுத்துள்ளன. ஆயினும் இன்னும் பல விளக்கங்களைச் சொல்ல வேண்டிய நிலைமையிலேயே இந்திய அரசு இருந்து வருகின்றது.
இந்தியா பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதா என்ற கேள்விக்கு தெளிவற்றதாக, நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தடுப்பதாக, உச்சநீதிமன்றத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலே இந்திய அரசாங்கம் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டது. பொறுப்பேற்றுக் கொள்ளலைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பு என்ற வாதத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் 2021 அக்டோபர் மாதம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
கேட்கப்படும் தகவல்கள் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தும் என்றால் அவை ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்ற உண்மைகளை அரசாங்கம் நிரூபித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யப்படவில்லை. மேலும் கே.எஸ்.புட்டசாமி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ள தனிமனிதனின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை தேசப் பாதுகாப்பு என்ற கோரிக்கையைக் கொண்டு அரசாங்கம் சமப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதா என்பதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்குப் பதில் சொல்லுங்கள்:
பயங்கரவாதக் குழுக்களும், ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியாளர்களும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான தொழில்நுட்பங்களை வகுத்துக் கொண்டுள்ளனர் என்பதால் பெகாசஸின் உளவு மென்பொருள் சட்ட அமலாக்கத் துறை, உளவுத்துறைக்கு மிகவும் தேவையான ஆயுதம் என்ற வாதமே பத்தாண்டுகளுக்கு முன்னர் என்எஸ்ஓ அதனை அறிமுகப்படுத்திய போது முன்வைக்கப்பட்டது என்று நியூயார்க் டைம்ஸ் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் பல நாடுகளில் பெகாசஸ் மென்பொருளே அரச அடக்குமுறை, மனித உரிமை மீறல்களுக்கான கருவியாக இருப்பதால், அதுபோன்றதொரு வாதம் நீண்ட காலமாக வீழ்ச்சியையே கண்டுள்ளது.
பெகாசஸ் விற்பனையுடன் இப்போது ஒன்றிய அரசு நேரடியாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் பல அழுத்தமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
முதலாவதாக – பாரம்பரியமாக இருந்து வருகின்ற கண்காணிப்பு வழிமுறைகளைக் காட்டிலும் அதிகம் ஊடுருவக் கூடிய, ஆற்றல் மிக்க ‘ஆயுதம்’ என்பதாக அறியப்படுகின்ற இந்த உளவு மென்பொருளை வாங்குவதற்கான என்ன நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது?
இரண்டாவதாக – பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, தேர்தல் ஆணையர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் தொலைபேசிகளை ஹேக் செய்வதை எந்த ‘தேசிய பாதுகாப்பு’ நியாயப்படுத்துகிறது?
மூன்றாவதாக – பெகாசஸின் பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வமான ஆதரவு ஏதேனும் இருந்ததா? இந்திய புலனாய்வு அமைப்புகள் பாராளுமன்றத்தின் சட்டப்பூர்வமான மேற்பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை வனாந்தரத்திலேயே செயல்பட்டு வருகின்றன. தனிநபர்களைக் கண்காணிப்பதற்கான அனுமதிக்கு தடை மிகவும் குறைவாகவே உள்ளது. மிகவும் பழமையான 1885ஆம் ஆண்டின் டெலிகிராப் சட்டம், 2000ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் ஆதரவு பெகாசஸின் பயன்பாட்டிற்கு இருந்திருக்க வேண்டும். கடந்த காலத்தில் மிகவும் தளர்வாக விளக்கப்பட்டுள்ள ‘நெருக்கடி நிலை’. ‘பாதுகாப்பு’ போன்ற நலன்களைக் கருத்தில் கொண்டு டெலிகிராப் சட்டத்தின் கீழ் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதி அளித்து கையெழுத்திடலாம். ஆனால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் அதுபோன்ற தேவைகளையும் தேவையில்லாமல் செய்து ‘குற்றமிழைத்ததற்கான விசாரணைக்காக’ மின்னணு தகவல் தொடர்புகளின் கண்காணிப்பைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. அதுபோன்ற பலவீனமான விதிமுறைகளாவது பின்பற்றப்பட்டனவா?
அற்ப விஷயமில்லை:
பெகாசஸ் குறித்து வெளியாகி இருக்கின்ற செய்திகள் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மை மீது மோசமான சந்தேகங்களையே ஏற்படுத்தியுள்ளன. அவை எந்த அளவிற்கு மோசமானவை என்பதை குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 2021 அக்டோபரில் சுயாதீன குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்ததே தெளிவாக்கியுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக அரசாங்கம் கடந்த காலங்களில் இதுபோன்ற தரவு மீறல்களை விசாரிப்பதில் குறிப்பிடத்தக்க அளவிலே ஆர்வமின்மையுடனே இருந்து வந்திருக்கிறது.
பெகாசஸைப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக 2019இல் செய்திகள் வெளியானபோது, ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் அது குறித்த விசாரணையை எதிர்த்தனர். இறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் இருந்த இரண்டு நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் அதை ஆய்வு செய்தன. ஆனாலும் அந்த விசாரணை அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை.
உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் கண்டுபிடிப்புகளுக்காகக் காத்திருக்கும் இந்த நிலையில், பெகாசஸைச் சுற்றி அதிகரித்து வருகின்ற சந்தேகங்களைக் களைவதற்கு அரசாங்கம் இன்னும் கூடுதலாகச் செயல்பட வேண்டும். அரசாங்கம் இதுவரையிலும் அந்தக் குற்றச்சாட்டுகளைச் சிறுமைப்படுத்தும் வகையிலேயே வேலை செய்து வந்திருக்கிறது. 2021 ஜூலை மாதத்தில் நடந்த விசாரணை அறிக்கைத் திட்டம் மூலம் பெகாசஸ் ஹேக்கிங்கின் அளவு வெளிப்படுத்தப்பட்ட போது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரைச் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைக் கிளப்புகின்றன என்று அரசாங்கம் குற்றம் சாட்டியது. இப்போது ஒன்றிய அமைச்சர் ஒருவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தியை ‘சுபாரி மீடியாவின் வேலை’ என்று நிராகரித்திருக்கிறார்.
பெகாசஸை நாம் எவ்வாறு நம்ப வேண்டும் என்று அரசாங்கம் செய்கின்ற முயற்சிகளுக்கு மாறாக, பெகாசஸ் குறித்த செய்திகள் அற்பமானவையாக இருக்கவில்லை. தனிநபர் சுதந்திரம், தனியுரிமை, குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள், வாழ்வின் அடிப்படை நிலைமைகள் குறித்து ஜனநாயகத்தில் எழுகின்ற அடிப்படைக் கேள்விகளையே இப்போது வெளியாகி இருக்கின்ற செய்திகள் தட்டிக் கேட்கின்றன.
https://scroll.in/article/1016252/pegasus-scandal-three-questions-the-modi-government-must-answer-about-the-new-york-times-article
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு