நூல் அறிமுகம்: கவிஞர் இரா எட்வினின் ’இவ்வளவுதான்’ கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்
குழந்தைகளின்
மனசுக்குள் புகுந்து
குழந்தையாகவே மாறி விடுவதெல்லாம்
எல்லோராலும் முடியாது..
அதை வாய்க்கப் பெற்றவராக
எங்களின் பேரன்பு குழந்தை
பெரிய தோழன்
கவிஞர் இரா எட்வின்.
இரா எட்வின்
தன்னுடைய பக்கங்கள் பா
இவ்வளவுதான் என்கிற கவிதை தொகுப்பில்.
கவிதை தொகுப்பிற்குள் எளிய வார்த்தைகளை
கைகளில் எடுத்து
அரசியல் பாகடிகளையும் நிகழ்த்தியிருக்கிறார்.
மனசுக்குள்
இயற்கை வரைந்த கலர் கலர் ஓவியங்களை
வார்த்தை ஜாலங்களுக்குள் எல்லோருக்கும் புரியும்படி
எழுத்துக்களை தூரிகையாக்கி வரைந்து காட்டியிருக்கிறார்.
தொகுப்பை
வாசிக்க தொடங்கியதும்
பிடித்த கவிதைகள் இருக்கும் பக்கங்களை மடித்து வைத்துக் கொள்வது எனது பழக்கம்.
வாசித்து முடித்ததும் புத்தகத்தை பார்த்தால்
95% பக்கங்களை மடித்து வைத்திருக்கிறேன்.
எளிய தமிழ் பேசும் எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது.
இலக்கிய தமிழ் பேசும் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகாது.
தோற்பதற்கு தயாரில்லை எனில் ஒருபோதும்
குழந்தைகளோடு
விளையாடாதீர்கள்
குழந்தைகளிடம் தோற்பது ஒருபுறம் இருக்கட்டும்
எத்தனை பேர் குழந்தைகளிடம் விளையாடி இருக்கிறோம்
குழந்தைகளாக.
முழுவதும் வெந்துவிடாமலும்
இன்னமும்
வெந்துகொண்டும்தானிருக்கிறது “என்ன சொல்றாங்க”
எனக் கேட்கும் நந்தனின் உடல்
“என்ன சொல்றாங்க” என்கிற நந்தனின் கேள்வி அன்று மட்டும் அல்ல
இன்று மட்டுமல்ல
இந்திய சாதிய சமூகத்தில் சாதி அழித்தொழிக்கப்படும் வரை கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.
நந்தனுக்காக இன்று கேட்டிருக்கிறார் எட்வின்.
சிதையில் வைக்கும் முன்
எதற்கும் ஒரு உலுக்கி உலூக்கி விடுங்கள்
என் உடலை
உடலின் ஏதோவொரு மடிப்பில் யாருக்காகவோ
ஒன்றிரண்டு சொற்கள்
இருக்கக்கூடும்
கண்மூடும் அந்த கடைசி வினாடியில் கடைசி கணத்தில் ஒவ்வொருவரின் கண்களுக்குள் பழகிய பேசிய ஒரு சிலருக்காக நூறு நூறு வார்த்தைகளை ஒற்றை சொல்லுக்குள் சேர்த்து வைத்திருப்பார்கள்.. இந்தக் கவிதை வரிகளை வாசித்து முடித்ததும் உங்களுக்குள் யாரேனும் ஒருவர் வந்து போகலாம்.
எனக்கு என் ராசாத்தி.
நீ தந்த தண்ணீரில்
வளர்ந்தது
நீ தந்த தாகம்
நீ எத்தனை முறை தண்ணீர் கொடுத்தாலும்
காதல் தாகம் மட்டும் ஒருபோதும் தீராது ராசாத்தீ..
என் ராசாத்திக்காக எட்வின் எழுதி இருக்கிறார்.
மரத்தின் நிழலை
கடத்த முடியாத கோபத்தில்
வெள்ளமாய் பெருத்து வந்து
மரத்தை கடத்திப் போனது
நதி
இப்படி எண்ணற்ற கோபங்கள்
ஒரு நாளில்
காட்டாற்று வெள்ளமாய்
கரைகள் உடைக்க ராஜ நடை போடும் காலம் வரும்..
அந்த காலத்தை கனவு கண்டிருக்கிறார் கவிஞர்.
எழுந்து ஓடி வந்த
துணை நடிகன்
“பேக் அப்” சொன்ன இயக்குனரிடம் கேட்டான்
“ஒழுங்கா செத்தேனா சார்”
துணை நடிகர்களின் வாழ்க்கையின்..
வாழ்வின் வலியை பேசி இருக்கிறது.
ரொம்பக்
கணக்கிறது
வயிறு முட்ட பசி
இந்தியா முழுவதிலும் பல கோடிக்கணக்கான மனித உயிர்கள்
இரவு பொழுதின் ஒருவேளை
சோற்று உருண்டைக்காக
கண்களில் வலியோடு திறந்து கிடக்கிறது தூக்கத்தை தொலைத்து
கண்களில் உதிரம் வடிய.
தன் இருத்தலை நிறுவ
ஒரே ஒரு சொட்டேனும்
இருட்டு தேவைப்படுகிறது வெளிச்சத்திற்கு
வண்ணங்களுக்கான மரியாதை
கருப்பினால்தான் நிறுவ முடியும் என்பதை கவிஞர்
மனிதர்கள் வாழும் வாழ் நிலையில் இருந்து படிமம் ஆக்கி இருக்கிறார்.
டீ மாஸ்டரை கொஞ்சம்
ஒதுங்க சொல்லி
டீ போட்டுக் கொடுத்து
வாக்கு கேட்டுவிட்டு நகரும்
உங்கள் கண்களில்
இஸ்திரிகாரர்
நாற்றுநடும் அக்கா
சித்தாள் என
எல்லோரும் படுகிறார்கள்
மலக்குழி இறங்கும்
என் தோழர்களைத் தவிர.
ஜனநாயக தேர்தல்.. அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்தை..
அடிக்கும் கூத்தினை வலி மிகுந்த வார்த்தைகளைப் பேசி அமைதியான கோபத்தோடு முடித்திருக்கிறார்.
இவ்வளவுதான்..
என்கிற கவிதை தொகுப்பில்
இரா_எட்வின் அவர்கள் எவ்வளவோ செய்திகளை பெருவலிகளோடும்
நக்கல் நையாண்டி மிகுந்த கோவத்தோடும் பேசி
நிஜம் பேசும் குழந்தைகளின்
மனசுக்குள் புகுந்தும் குழந்தையாக நின்று மகிழ்வுறுகிறார்.
கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்து கொண்டு வருவதில்
பாய்ச்சல் வேகத்தில் நிமிர்ந்து நடை போட்டு வருகிறது
வேரல் பதிப்பகம்
அம்பிகா குமரன்
சக்தியான லார்க் பாஸ்கரன் அவர்களின்
Lark Bhaskaran வடிவமைப்பு
வேரல் வெளியீட்டு நிறுவனத்திற்கு ஆகப்பெரும் சக்தியாக பல தொகுப்புகளில் உணர்ந்திருக்கிறேன்.
இதிலும் அப்படியே தொடர்ந்திருக்கிறது.
லார்க் குறித்தும்..
வேரல் குறித்தும் தனிப்பதிவாக
தேவை இருக்கிறது.
கருப்பு அன்பரசன்.
நூல் : இவ்வளவுதான் கவிதை தொகுப்பு.
ஆசிரியர் : கவிஞர் இரா.எட்வின்
விலை : ரூ.₹100/-
பக்கங்கள்: 94
வெளியீடு : வேரல் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com