நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – மு.ஜெயராஜ்

நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – மு.ஜெயராஜ்




நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹110/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

இந்த நூலை வாங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, வாசிக்காமல் தேங்கிப் போய் இருந்தது. வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழும வாசிப்பு மாரத்தானில் கூட சென்ற ஆண்டு என்னுடைய இலக்கை எட்ட இயலவில்லை. இந்த நிலையில் வாசிப்பை நேசிப்போம் குழு சந்திப்புக்கு சென்ற போது பல்லவனில் அமர்ந்து வாசித்து முடிக்கவும் மாம்பலம் வரவும் சரியாக இருந்தது.

நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை நூலின் தலைப்பே சொல்லி விடுகிறது. மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்கு காரணம் என்ன, வன்முறை இன்றி வகுப்பறையை கையாளும் முறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் அறிவியல், உளவியல் மற்றும் நடைமுறைகள் ஆகிய விஷயங்களை முன்வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார் நூலாசிரியர்.
என்னைப் பொறுத்தவரை “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா“ வுக்கு பிறகு கற்றல் கற்பித்தல் குறித்த மிக முக்கியமான நூல் என்று இதனைக் கூறுவேன்.

“ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்கு பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்கு பிடிக்கும் என்று கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது. – கரோலின் டிவிக், குழந்தை உளவியலாளர்.

இவ்வாறு துவங்கும் நூலில் உள்ள முதல் புள்ளிவிவரமே நமது பள்ளி அமைப்பின் தோல்வியை பறைசாற்றுகிறது. ஆமாம், 99.1 விழுக்காடு குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்களாம். மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பள்ளிக் கூட அதிகார சூழலால் பாதியில் படிப்பை துறக்கும் குழந்தைகள் 4 மடங்கு அதிகம் என்கிறார்.

Parents are the teachers in Home; where as Teachers are the parents in School என்று அலங்காரமாக சொல்லிவிடுகிறோம். “ஹலோ பாஸ் கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடாதீங்க, அப்படி எல்லாம் இரண்டு உறவுகளும் ஒன்றல்ல” என்கிறார் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மக்கெரென்கோ. ஆதாரமாக ஒரு வேறுபாட்டு பட்டியலையே தருகிறார்.
இவர அவ்வளவு லேசுபட்டவராக நினைத்து விடாதீர்கள். “குழந்தைகளுக்கு முதல் உரிமை” என்று முழங்கிய இவரது கல்வி முறையினால் தான் 1927 ல் விளையாட்டு பாடவேளை பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளது.

ஒழுக்க நெறி என்கிற பெயரில் தங்கள் கட்டளைகளுக்கு தலையாட்டும் பிரஜைகளை உருவாக்கும் ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து இந்த விஷயத்தை மட்டும் உடும்பு பிடியாக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட மறுக்கிறோம்.
மூன்றாவது அத்தியாயத்தில் மாணவர்களை நாம் தண்டிக்கும் முறைகளைப் பற்றிய பட்டியலை தந்துள்ளார். யுனிசெஃப் அமைப்பின் பட்டியலில் உள்ள அந்த தண்டனை முறைகளை பார்த்தால் நமக்கே பதறுகிறது.
அதே வேளையில் நாங்கல்லாம் பிள்ளைகளை அடிப்பதே கிடையாது என்பவர்கள் கையாளும் நூதன தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதை வாசித்தால் “இதற்கு நீங்க அடிப்பதே பரவாயில்லை“ என்கிற அளவில் உள்ளது.

“அந்த காலத்துல எல்லாம் குருகுலத்தில்…“
“நம்மை உள்ளயே உட்ருக்க மாட்டாங்க அதானே?”
“நீங்க குருவா ஆசிரியரா? என்கிற அத்தியாயத்தில் “அந்த காலத்துல எல்லாம் …“ என்று துவங்கும் பழம் பெருமை ஃபர்னிச்சரை உடைக்கிறார். என்னதான் கட்டுப்பாடுகளை திணிக்கும் கல்விமுறை என்றாலும் பிரிட்டிஷ் கல்விமுறைகள் பாகுபாடுகளை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்தன என்று உதாரணங்களோடு நிறுவியுள்ளார்.
வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசும் அத்தியாயத்தில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள “தண்டனைகளின் பின் விளைவுகள்“ பற்றி ஆசிரியர்கள் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். இந்த பகுதி எனக்கே பல விஷயங்களில் அறிவுக் கண்களை அகலமாக திறந்தது எனலாம்.

சென்னையில் DPI வளாகம் தான் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலவலகங்களும் உள்ள இடம் என்பது ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா, DPI என்றால் என்ன? Department of Public Instruction. இது ஆங்கிலேயர்கள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது கல்வித்துறைக்கு வைத்த பெயர். இதுவே இங்கிலாந்தில் BCE- Board of control of Education இவ்வாறு செல்லும் அத்தியாயத்தில் நமது கல்விமுறையில் உள்ள ஆசிரியர்களின் தண்டனை வழங்கும் மனோபாவத்தின் நதி மூலத்தை ஆங்கிலேயர் காலம் முதலாக ஆய்வு செய்துள்ளார்.

“எனக்கு பனிரெண்டு வயது ஆகும் வரை எனது பெயர் “ஷட் அப்“ என்று நினைத்திருந்தேன்“ – சார்லி சாப்ளின்
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை நாம் எந்த அளவுக்கு அவர்களை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்பதைத் தான் சாப்ளின் நையாண்டியாக தெரிவித்துள்ளார்.

ஒரு தவறை ஏன் செய்யக்கூடாது என விளக்குவதோடு, எது சரியான செயல் என்பதையும் பதமாக எடுத்துக் கூறுவதன் மூலமும் சரியான செயலை உடனுக்குடன் அங்கீகரிப்பதன் மூலமும் தக்கவைத்தலும் தாத்தா பாட்டிகளின் பரிவும் பாசமும் தோழமையும் மிக்க நெறிபடுத்துதலின் உள்ளடக்கமாக இருப்பதை காணமுடியும் என சரியான உதாரணம் கொண்டு கூறியுள்ளார். மேலும் தற்போதைய குடும்ப அமைப்பில் இது தவிர்க்கப் பட்டு ப்ரீ-ஸ்கூல் கலாச்சாரத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கூறியுள்ளார்.

மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைக்கான காரணம், அவர்களை புரிந்து கொள்வது எப்படி என்பன பற்றி இரண்டு அத்தியாயங்களில் பள்ளி அளவில் நடந்த சம்பவங்களைக் கொண்டு தெளிவாக விளக்கி கூறியுள்ளார்.
குமரப்பருவ மாணவர்களின் நடத்தை சிக்கல்களை அவர்களின் மூளை வளர்ச்சி குறித்த அறிவியல் ஆய்வுகளின்பால் நின்று ஆசிரியர் தக்க உதாரணங்களுடன் விளக்கி உள்ள இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாத ஒன்று. அறிவியல் மற்றும் உளவியல் வழி நின்று பேசும் இந்த அத்தியாயங்களில் உள்ள பொருட்கள் பி.எட் பாட வகுப்புகளில் வைக்கப் பட வேண்டும்.

மாநிலத்திற்கான புதியக் கல்விக் கொள்கை கருத்துரு உருவாக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்த போது பி.எட் குறித்து பேசவில்லை. பிரிதொரு வேளையில் நண்பர் ஒருவர் கேட்ட போது எழுதிய அனுப்பியவற்றில் பி.எட் வகுப்புகளுக்கான பாடங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் பற்றி கூறி இருந்தேன். முக்கியமாக பி.எட் படிப்பில் Irregular mode என்கிற ஒரு சட்டத்திற்கு புறம்பான தவறான முறை முற்றிலும் இல்லவே இல்லை என்பதை கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைக்கு செல்லாத ஒருவர் எவ்வாறு நல்ல ஆசிரியராக பயிற்சி எடுக்க இயலும்?

இதை வாசிக்கும் எனது மாணவர்கள் MJ sir கொடுக்காத தண்டனையா அவரா இப்போது இப்படி பேசுவது என்று நினைக்க கூடும். என்ன செய்வது தலை வழுக்கை ஆன பின்பு தான் என் கையில் சீப்பு கிடைத்தது. நிச்சயமாக வாசிப்புகள் “அடச்சே நாம இப்படி எல்லாம் தவறாக நடந்து கொண்டு இருந்திருக்கிறோமே” என்று வருந்தச் செய்து எனது செயல்பாடுகளை திருத்தி அமைத்தவண்ணம் உள்ளன.
ஆசிரியப் பெருமக்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

நன்றி: முகநூல் கட்டுரை – மு.ஜெயராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம்.

நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – பூங்கொடி கதைசொல்லி

நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – பூங்கொடி கதைசொல்லி




நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 112
விலை : ₹95.00
தொடர்பு எண் ; 044 24332924

புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

குழந்தைகளை அறிதல் என்ற ஒரு முக்கியமான பாடநூல் இல்லாத பாடத்தை, ஆசிரியர்கள் அறிந்து கொண்டால், ஒரு வன்முறை இல்லாத வகுப்பறையை உருவாக்கலாம் என்பதுதான் இந்த நூலின் உயிர்நாடியான கருத்து. கல்வியாளர்கள், கல்வி நிலைய அமைப்பினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லாருக்குமே பயன்படுகின்ற வகையில், இந்த நூலை ஆயிஷா நடராஜன் அவர்கள் அற்புதமாய் உருவாக்கித் தந்துள்ளார்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், துன்புறுத்தும் சம்பவங்கள் வகுப்பறையில் நடைபெறாமல் இருக்க , ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை 25 கட்டுரைகளின் வழியாக ஆசிரியர், விளக்கியுள்ளார்.

” மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப் போல, ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது” என்ற கரோலின் டிவிக் ( குழந்தை உளவியலாளர்) அவர்களின் வரிகளோடு, குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்? என்ற கட்டுரை ஆரம்பிக்கிறது.

தேசிய கல்வி கணக்கெடுப்பு 2006 தந்த இறுதி முடிவில்

1) 99.1 குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
2) பெரும்பான்மை குழந்தைகள் புரிந்து கற்பது இல்லை.
3) மனச்சோர்வு அவமதிப்பு பெரும் பதற்றம் இவற்றோடு வீடு திரும்புகிறார்கள்.

இந்த மூன்று காட்டமான முடிவுகளை முன்வைத்தது.
இவற்றுக்கெல்லாம் தீர்வு குழந்தைகள் தைரியமாகக் குதூகலிக்கும் ஒரு வகுப்பறை. ஆசிரியர் மாணவர் உறவில் நேர்மறை, குழந்தைகள் தங்களைப் பாதுகாப்பாக உணருகிற, கற்றல் தடையின்றி நடக்கும் ஒரு வகுப்பறை. அதற்கு முதலில் குழந்தைகள் ஏன் ஒழுங்கீனமாக நடக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருத்தை வலியுறுத்துகிறது முதல் கட்டுரை.

பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது, என்ன எடுத்துச் செல்கிறார்கள்? குட்டி முயற்சிகளால், பெற்ற ஏராளமான பாராட்டுகள், மதிப்பு மிக்க ஆளுமை தன்னம்பிக்கை இவைகளையா ? அல்லது உடல் வருத்தும் தண்டனையோ மனம் வருந்தும் தண்டனையோ பெற்றுச் செல்கிறார்களா? இதற்கான விடை தான் நீங்கள் ஆசிரியரா? இல்லை குருவா? நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா? இல்லை ஆசிரியப் பணியாளரா? என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும்.

அவர்களின் ஒவ்வொரு ஒழுங்கீனமான செயல்களுக்கும், பிறழ் நடத்தைக்கும் பின்னேயும் ஒரு காரணம், ஒரு நோக்கம் இருக்கிறது. அதை கண்டறிவது ஒவ்வொரு ஆசிரியரின் முக்கியமான கடமையாகும். ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தை எவ்வளவு கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், அவர் குழந்தை உளவியலை எந்த அளவுக்குத் தெரிந்து வைக்கிறார் என்பது அதைவிட முக்கியம் என்று பேராசிரியர் யஷ்பால் அவர்கள் சொல்வது முக்கியமான ஒன்று.

அப்படி எனில் அந்த சூழலை, குழந்தைகளின் பார்வையிலிருந்து அணுகும் போது அவர்கள் நடத்தையின் காரணம் கண்டிப்பாகப் பிடிபடும். இந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பல கட்டுரைகள் மிக சிறப்பாக விளக்குகின்றன.
மீண்டும் மீண்டும் மன அழுத்தமும் வலியும் தரும் சூழலை சமாளிக்கத் தெரியாமல், குழந்தைகளுடைய ஹார்மோன்களில் வசோப் ரேசின் என்ற ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கிறது. எதிர்த்து நில் அல்லது தப்பி ஓடு என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யும் பதட்ட நிலையை அடைகிறது. இந்த மனநிலையில் கற்றல் சாத்தியமில்லை என்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபரின் கருத்தை ஆசிரியர் மிக சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

வளரிளம் பருவத்தினர் அதிகம் நாடுவது அங்கீகாரம்தான், என்ற உளவியல் அறிஞர் ஃபைனஸ்டீன் என்ற கருத்தை தீவிரமாக வலியுறுத்தி, அந்த வளர் இளம் பருவ குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை, உற்சாகம், ஊக்கம் கண்டிப்பாக அளிக்க வேண்டியது அவசியம் என்று அறுதியிட்டு உரைக்கிறார்.

மேலும் குழந்தைகள் ஏன் தவறு செய்கிறார்கள்? மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் காரணம், குழந்தைகளின் நடத்தையை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதையெல்லாம் அறிவியல் விளக்கங்களோடு, சில கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

சமூகநீதியை, மனிதநேயத்தை, இயற்கை பாதுகாப்பைக் கடைப்பிடிக்கப் பயிற்றுவிப்பது தான் கல்வி. அதற்கு குழந்தைகளின் செயல்களுக்குத் தண்டனை தருவதை விட அவர்களை நெறிப்படுத்துவது தான் சாலச் சிறந்தது.

இன்றைய ஆசிரியர்களின் மிகப்பெரிய வேலைச் சவாலாக உள்ளது. குழந்தைகளை அடிக்கக் கூடாது. எதுவுமே சொல்லக்கூடாது என்றால் இதன் பொருள் என்ன? ஒருபுறம் குழந்தைகளின் தலையைத் திறந்து பாடப்பொருளைக் கொட்டித் தீர்க்கத் தூண்டும் பாடச்சுமை. மற்றொருபுறம் குழந்தைகள் உரிமை என்னும் பெயரில் மிரட்டல்… தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக் காட்டாத ஆசிரியர்களுக்கு துறை நடவடிக்கை. இந்தச் சூழல் களையெல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு சிறந்த ஆசிரியராக இருக்கலாம் என்பதற்கு வழிகாட்டுகிறது இந்த நூல்.

T- Tolerance ( சகிப்புத்தன்மை)

E – Example for all ( அனைவருக்கும் முன்னுதாரணம்)

A – Ability to read child’s mind ( குழந்தை மன நிலையை அறியும் வல்லுநர்)

C- Character builder ( பண்பு நலன் வளர்ப்பவர்)

H – Humanitarian approach ( மனிதநேய அணுகுமுறையாளர்)

E – Enthusiastic ( முயற்சிகளை உற்சாகப் படுத்துவர்)
இத்தனையும் சேரும் போது அந்த ஆசிரியர்
R – Respectable ( மரியாதைக்கு உரியவர்) ..

இப்படியான குணநலன்கள் உள்ள ஆசிரியர்களால், வன்முறை இல்லாத வகுப்பறையைத் தாண்டி, வாழ்வின் அடிநாதமான அன்பான வகுப்பறையைக் கட்டமைக்க முடியும் என்பதை இந்த நூல் தெளிவாக அறிவியல் விளக்கங்களோடு எடுத்துரைக்கிறது.

– பூங்கொடி கதைசொல்லி