கேரளாவில் மதவெறி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட இடமில்லை
கேரளாவில் மக்களின் சமூக சேர்மானம் என்பது நிகரற்ற ஒன்றாகும். இங்கே மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் 45 சதவீதத்தினராகும். மேலும் கேரளாவில் மூன்று மதத்தினருக்கிடையேயான தொடர்புகள் மிகச் சிறந்தமுறையில் பின்னிப்பிணைந்து தனித்துவத்துடன் விளங்கிவருகிறது. அவர்கள் அனைவரும் பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இம்மூன்று மதத்தினரிடையேயும் உள்ள மக்கள் அனைவருமே தங்கள் மதங்களுக்கும் அப்பாற்பட்டு தங்கள் சமூக-கலாச்சாரப் பண்புக்கூறுகளில் அனைவரும் மலையாளி என்ற அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு கேரள மக்கள் மத்தியில் அனைத்து மதத்தினரும் சகோதரத்துத்துவத்துடன் வாழ்ந்து வருவதற்கு அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு வலுவான மதச்சார்பின்மைப் பாரம்பர்யம் காரணமாகும். இத்தகையப் பாரம்பர்யத்தை உருவாக்கியதில் இடதுசாரிகள் மிகப்பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள்.
சமீப காலங்களில், ஆர்எஸ்எஸ்/பாஜக மூலமாக இந்துத்துவா அமைப்புகள் கேரள மக்கள் மத்தியில் நிலவிவரும் இத்தகைய பரஸ்பர நல்லிணக்க சகோதரத்துவப் பிணைப்பைச் சீர்குலைத்திட தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் பாலா பிஷப், கத்தோலிக்க தேவாலயங்களின் ஒரு பகுதியாக விளங்கும் சைரோ-மலபார் தேவாலயத்தைச் சேர்ந்த ஜோசப் கல்லரங்கத், ஆற்றிய உரையை ஒருவர் பார்த்திட வேண்டும். அவர் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தில் உரையாற்றும்போது, முஸ்லீம் தீவிரவாத நபர்களால் மேற்கொள்ளப்படும் ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’) மற்றும் ‘ஜிகாத் போதை’ (‘narcotic jihad’) ஆகியவற்றுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஜிகாத் காதல்’ குறித்து கத்தோலிக்க தேவாலயங்கள் இதற்கு முன்பு பிரச்சனைகள் எழுப்பியுள்ள அதே சமயத்தில், ‘ஜிகாத் போதை’ அச்சுறுத்தல் என்று கூறியிருப்பது புதிய ஒன்றாகும்.
இவரது கூற்றின்படி, ஜிகாத்துகள் போதை மருந்துகளைப் பயன்படுத்தி, முஸ்லீம் அல்லாதவர்களை அழிக்கிறார்களாம். இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு, இயற்கையாகவே, கேரள சமூகத்தில் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நாட்டில் இதர பகுதிகளில் இயங்கிவருவதுபோல கேரளாவிலும் போதை மஃபியாக்கள் இயங்கி வருகிறார்கள். ஆனாலும் இந்த மஃபியாக்களை எந்தவொரு தீவிரவாத மதக் குழுவுடனும் பிணைத்துக் கூறுவது முற்றிலும் தவறான ஒன்றாகும். இத்தகைய தொடர்பு இருப்பதாக எந்தவித சாட்சியமும் இல்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டியிருந்தது. “எந்த மதமும் இத்தகைய போதை மருந்துகளைப் பயன்படுத்தவில்லை. அதன் நிறம் சமூக-விரோதம்.” என்று அவர் கூறியுள்ளார். “சமூக இழிவுகள் மீது மதச்சாயம் பூசப்படக் கூடாது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு அரசியல் வானில் “ஜிகாதிஸ்ட் சதி”யைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கும் அதேசமயத்தில், பாஜக, பிஷப்பின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், ஜிகாதிஸ்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருக்கிறது. பாஜக-வைப் பொறுத்தவரை, முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே பிளவினை ஏற்படுத்திடவும், கேரளாவிலும் இஸ்லாமோஃபோபியா (Islamophobia) என்னும் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிட இவருடைய பேச்சு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கருதுவது போல் தோன்றுகிறது.
கேரளாவில், ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’)-ஐப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சங்கடமான நிகழ்வு நடைபெற்றது. 21 பேர் தங்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கோராசான் (ISIS-Khorasan) என்னும் அமைப்புடன் தங்களை இணைத்துக்கொள்வதற்காக, அங்கே சென்றனர். இவர்களின் மத்தியில் இரண்டு கிறித்தவப் பெண்களும் இருந்தனர். இவர்கள் அப்போதுதான் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தனர். பின்னர் அவர்களின் கணவர்களுடன் ஆப்கானிஸ்தானத்திற்குச் சென்றனர். உண்மையில் இவர்களில் ஒருவர் ஒரு கிறித்தவரைத்தான் திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களிருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். ஜிகாதிஸ்ட்டுகளின் வலைப்பின்னல் இவர்களைத் தேர்வு செய்தபின்னணியில் இவர்களுக்குத் தீவிரவாத சித்தாந்தத்தையும் போதித்தது.
இவ்வாறு இரு கிறித்தவப் பெண்கள் மதம் மாறியது தொடர்பாகவும், அவர்கள் தீவிரவாதத்தின் செல்வாக்கிற்குச் சென்றிருப்பது தொடர்பாகவும், கத்தோலிக்க தேவாலயம் கவலைப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தங்களுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் இவ்வாறு தீவிரவாத செல்வாக்கிற்கு யாரும் இரையாகக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதும் சரியானதேயாகும். எனினும், இவையெல்லாம் தனிப்பட்ட நிகழ்வுகளேயாகும். மாநிலக் காவல்துறையினரும், தேசியக் குற்றப்புலனாய்வு முகமையும் இவை தொடர்பாக மேற்கொண்ட புலன் விசாரணைகளிலிருந்து முஸ்லீம் அல்லாத பெண்களைக் கவர்ந்திட ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’) போன்ற முயற்சிகள் திட்டமிட்டு எதுவும் நடைபெறவில்லை என்றே காட்டியிருக்கின்றன.
‘ஜிகாத் காதல்’ மீதான விவாதத்தில் பல்வேறு மதத் தலைவர்களும், சாதி அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் மத அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும், ஆணாதிக்க மனப்பான்மையுடனும், பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்ற அடிப்படையிலும் பேசி வருவது இவ்விஷயத்தை மேலும் குழப்புகின்றன. காதல் மற்றும் திருமணம் போன்ற விஷயங்களில் பெண்களுக்கும் கருத்துக்கள் இருக்கும் என்றோ, அவர்கள் தாங்கள் விரும்பிய ஆடவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றோ இவர்கள் மறைமுகமாக மறுக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிடும் தங்கள் இழிநோக்கத்திற்காக, இத்தகைய கிறித்துவ மதவெறிப் பாதிரியார்களையும் தந்திரோபயத்துடன் அணி சேர்த்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பல்வேறு கிறித்தவ தேவாலயங்களின் தலைவர்களை, பிரதமர் மோடி சந்தித்ததை நாம் பார்த்தோம்.

கேரளாவில் கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயங்கள், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள வேண்டும். மதச்சிறுபான்மையினருக்கு எதிராக-அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, அல்லது கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கிக்கொண்டு வருகின்றன. ‘துன்புறுத்தல் நிவாரணம்’ (‘Persecution Relief’) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, 2016இலிருந்து 2019வரையிலும் நாடு முழுவதும் கிறித்தவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வெறுப்புக் குற்றங்கள் (hate crimes) 1,774 ஆகும். 2016இலிருநது கிறித்தவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 59.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் துணை அமைப்புகள் செப்டம்பர் 25 அன்று ‘மலபார் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம்’ (‘Malabar Hindu Genocide Day’) அனுசரித்துக் கொண்டிருக்கிறது. 1921இல் நடைபெற்ற ‘மாப்ளா கலகம்’ (‘Malabar rebellion’) என்பதைத்தான் இவ்வாறு இவர்கள் திரித்து அனுசரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாப்ளா கலகம் என்பது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கு எதிராகவும் நடைபெற்றதாகும். பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அந்தக் கலகத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் மிகவும் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டார்கள். அதுதான் அந்தக் கலகத்தின் பிரதானமான அம்சமாகும். அக்கலகத்தின் கடைசிக் கட்டத்தில் இந்துக்கள் மீதும் சில தாக்குதல்கள் நடந்தன. ஆயினும் பிரதானமாக மிக அதிக அளவில் ஒடுக்கப்பட்டவர்கள் முஸ்லீம்களாகும்.
ஆர்எஸ்எஸ், தற்போது கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கு இரக்கம் காட்டத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, இப்போது ‘மாப்ளா கலக’த்தை, இந்துக்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல, கிறித்தவர்களுக்கு எதிரானதாகவும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
கத்தோலிக்க தேவாலயங்களுக்குள்ளும் பல்வேறு மட்டங்களில் செயல்பட்டுவரும் பாதிரியார்களும் மற்றும் இதர பிரிவு கிறித்தவ அமைப்புகளும் இந்தத்துவா சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் இஸ்லாமோபோபியா (Islamophobia)-வின் ஆபத்துக்களையும், மக்களை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு எச்சரித்திருப்பவர்களில் முதலாவதாக யுஹனான் மோர் மெலெடியஸ் (Yuhanon Mor Meletius) என்னும் மாலங்காரா ஆர்தோடாக்ஸ் சிரியன் சர்ச்சின் திருச்சூர் மறைமாவட்டத்தின் பாதிரியார் (metropolitan) வருகிறார். அவர், “மதச்சிறுபான்மையினருக்கு இடையே பிளவினை ஏற்படுத்திட சங் பரிவாரங்கள் மேற்கொண்டுள்ள சூழ்ச்சிகளுக்கு தேவாலயங்களில் உள்ள தலைவர்கள் இரையாவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக” எச்சரித்திருக்கிறார்.
இந்துத்துவாவாதிகள் அள்ளித்தெளித்திடும் பெரும்பான்மை மதவெறியின் ஆபத்துக்களை கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் அது ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் எதிர்த்து முறியடித்திட அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. அவ்வாறு நடவடிக்கைகளில் இறங்கும்போது, முஸ்லீம்களுக்கு மத்தியில் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் அவற்றின் சித்தாந்தங்களால் ஏற்படும் அச்சுறுத்தலையும் கட்சி நன்கு அறிந்திருக்கிறது. இக்குழுக்களில் சில வெளிநாடுகளில் இயங்கிவரும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப் பட்டவைகளாகும்.
கிறித்துவர்கள் மத்தியிலும் தீவிரவாதக் கருத்துக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. ஆயினும் இவை மிகவும் சிறிய அளவிலானதாகும். மதவெறியர்களின் பிரச்சாரம் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், சமூகத்தில் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து எழும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்கள் மத்தியில் நிலவும் மதச்சார்பின்மை மாண்பை சீர்குலைத்திடுவதற்கும், பல்வேறு மதத்தினருக்கிடையே பதற்றத்தை அதிகப்படுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பிஷப் ஒருவர் முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமாகப் பேசிய நிகழ்வு குறித்து சமூக ஊடகங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறுப் பதிவுகள் வந்திருப்பதைப் பார்க்கிறோம். சமூக ஊடகங்களில் மதவெறி நஞ்சு உமிழப்படுவதைக் கட்டுப்படுத்திட மாநில அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அதே சமயத்தில், மதவெறி மற்றும் பிளவுவாத சக்திகளின் வெறிப்பிரச்சாரத்தை முறியடித்து, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையே சாரும். இதனை அவர்கள் சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்குப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டிட வேண்டும்.
நன்றி: People’s Democracy
தமிழில்: ச.வீரமணி