Even will this pass short story by Shanthi Saravanan சாந்தி சரவணனின் இதுவும் கடந்து போகும் சிறுகதை

இதுவும் கடந்து போகும் சிறுகதை – சாந்தி சரவணன்



ஜன்னலின் ஊடே புகுந்த சூரிய வெளிச்சம் அவள் மேல் பட்டவுடன் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் ஷீபா. ஏதோ அசதியில் தூங்கி விட்டாள். ஸூம் வகுப்பு துவங்க போகிறது வலது புறம் கைமேல் படுத்துக் கொண்டு இருந்த மகள் தர்ஷினியை மெதுவாக ஒருக்களித்துப் படுக்க வைத்தாள்.
மெதுவாக மகன் ஷரத்தை, “செல்லம் ஷரத், எழுந்துருங்க. ஸூம் கிளாஸ் ஸ்டார்ட் ஆகப் போகுது. தர்ஷினி எழந்துக்க போறா” என்றாள் மெதுவாக.
ஷரத், “மம்மி ஃபைவ் மினிட்ஸ் பிளிஸ்” என்றான்.

“சரி, மம்மி போய் பிரஷ் செய்து விட்டு வருகிறேன். சீக்கிரம் எழுந்திரு” என சொல்லிவிட்டு கடகடவென பல் விளக்கி, குளித்து முடித்துப் பாலை அடுப்பில் வைத்து விட்டு, கணவன் சிவாவை எழுப்பினாள்.

“என்னங்க லாக் இன் செய்யுங்க. 8 மணி ஆகப் போகிறது”.

மறுபடியும் “ஷரத் எழுந்திருபா. தங்கை எழுந்திருக்க போறா. பிளிஸ்…. “
சொல்லி வைத்தாற்போல் தர்ஷினி டபக்கென எழுந்து “மம்மி குட் மார்னிங்” என்றாள்.

ஷீபா, “எழுந்துடிங்களா செல்லம். படுத்துக்கோ மா. மம்மி அண்ணாவை ரெடி செய்து ஸூம் கிளாஸில் உட்கார வைத்து விட்டு உங்களை வந்து எழுப்புறேன்” என சொல்லி கொண்டு இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அண்ணன் ஷரத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.

ஷரத், “விடுடி என பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டான்”.
பொறுமை இழந்தாள் ஷீபா. எழுந்திருடா என அவனை அதட்டிக் கொண்டிருந்தாள்.

சிவா குளித்து முடித்து “ஷீபா காபி” என்று கேட்டான்.
“இங்க கொஞ்சம் வந்து இவனை எழுப்பி விடுங்க. நான் காபி கொண்டு வரேன்” என்றாள்.

‘டாடி’ என தர்ஷினி சிவாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “வாங்க கீழே பார்க் போகலாம்” என ஆரம்பித்தாள்.

இதுவெல்லாம் சென்னை கோல்டன் ஜூபிலி பிளாட், அண்ணாநகர் குடியிருப்பில் குடியிருக்கும் சிவா, ஷீபா தம்பதியர் விட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. சிவா கணினி பொறியாளர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவன் ஷரத் முதலாம் வகுப்பு, வித்யாலயா பள்ளியில் படிக்கிறான். மகள் தர்ஷினி இப்போது தான் 3 வயது. இந்த வருடம் தான் பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் கொரானா ஊரடங்கு என்பதால் அடுத்த வருடம் சேர்க்கலாம் என முடிவு செய்துள்ளார்கள்.
சிவாவிற்கு ஆன்லைனில் பணி வீட்டிலிருந்து. ஷரத்துக்கு ஆன்லைன் வகுப்பு. ஷீபா படித்தது எல்லாம் வடநாட்டில். இரண்டாவது மொழியாக இந்தி படித்ததால் அவளுக்கு தமிழ் தெரியாது.

பள்ளி இருந்த போது இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் இப்போது இது மிகவும் கடினமாக உள்ளது.
இன்று முதல் வகுப்பு தமிழ். ஷீபா அவளுக்கு ஒரு நோட்டு, மகன் ஷரத்துக்கு ஒரு நோட்டு என இருவரும் கற்றுக் கொள்ள தயார் செய்து கொண்டிருந்தாள். அவளின் இன்றைய படபடப்பிற்கு இது தான் முக்கிய காரணம்.

அதுவும் இல்லாமல் ஷரத் கேட்கும் கேள்விகளுக்கு இவளால் பதில் சொல்ல முடியாது.
“சுற்று” என்ற சொல்லை அவன் “சூர்ரு” என சொல்லுவான். ஷீபா இல்லை என்றால் . ஏன் இல்லை. அது பிரோனொன்ஷேஷன் “சூர்ரு” தான் வரும் என்பான்.
ஷீபா உடனே character நாம் (cha) “கே” என ஒலி எழுப்புகிறோம் அதே change நாம் (cha) “சே” என ஒலி எழுப்புகிறோம் ஆனால் இரண்டும் ஆரம்பிப்பது “cha” என அவனுக்கு சொல்லி தர வேண்டியுள்ளது. அதற்கு அவள் யூ டியூபில் அதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள விருப்பம் தான், ஆனால் அதற்கு நேரமில்லை. காரணம் சிவா ஆன்லைனில் பிஸியாக இருப்பான்.

இவள் சமைக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். வாஷிங் மிஷினாக இருந்தாலும் அதை செட் செய்து மிஷின் போட்டு நேற்றைய துணிகளை மடித்து வைத்து பாத்திரம் சுத்தம் செய்து, வீட்டை சுத்தம் செய்து என பல பணிகள் அவளின் தோளின்மேல்.
முக்கியமாக சின்னது இருக்கே, ஷரத்துக்கு பிரஷ் செய்து குளிப்பாட்டினால் எனக்கு முதலில் செய்யுங்கள் மம்மி என வந்து விடுவாள். டாடியிடம் போய் பிரஷ் செய்துக்கோ என்றால் பாப்பாவிற்கு மம்மி தான் பிடிக்கும். என் செல்லமில்லை என முத்தம் கொடுப்பாள். அம்மாவாக மழலையின் கொஞ்சலை எப்படி மறுக்க முடியும்.

ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் போதும் ஊடாக வந்து ஜானி ஜானி எஸ் பாப்பா என பாடி விட்டு ஓடுவாள். ஒரு நாள் இப்படித்தான் தாளிக்கும் கடாயை எடுத்து அதில் சுச்சு போய்விட்டாள். நல்ல வேலை ஷரத் பார்த்தான். தர்ஷினியை சமாளிப்பது தான் பெரிய டாஸ்க். சிவா குடும்பத்திற்காக உழைக்கிறான் ஆனால் ஷீபா சக்கரமாக சுழல்கிறாள்….
அதே அடுக்ககத்தில் மற்றொரு பிளாக். சார்லி ஆன்லைனில் வேலை. மனைவி சாரா அரசு நிறுவனத்தில் வேலை சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை நித்தம் பயணம்.

சமைப்பது துவைப்பது உளர்த்துவது சாமான்கள சுத்தம் செய்தல், வீடு பெருக்கல், கடைக்கு செல்லுவது மகளை குளிப்பாட்டி உடை மாற்றி தலை வாரி ஸூம் கிளாஸ் உடனிருந்து, மனைவியை டிராப் செய்து பின் பிக்கப் செய்து, ஆன்லைனில் வேலையும் செய்து மனைவி வரும் போது சுடச்சுட டிபன் காபி தருவது என மிகவும் பிஸியாக சார்லி. மகள் யாழிசை தந்தையின் தோளில்.

கேர் டேக்கர் பார்த்துக் கொள்ளும் வீடு. கணவன் ராம், மனைவி சிநேகா இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். எல்.கே.ஜீ படிக்கும் குழந்தை. கேர் டேக்கருக்கு கணினி பற்றி தெரியாது. குழந்தை லியாவிற்கு தெரியும். ம்யூட் போட்டுவிட்டு, சோப்பு வைத்து விளையாடும்.
“சூழலில் சீக்கிய மனிதர்கள், அனைத்தையும் எதிர் கொண்டு வாழத் தானே வேண்டும்.”
இதுவும் கடந்து போகும்.