பாஜக தேசிய செயற்குழு: மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை – தமிழில்: ச. வீரமணி
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு நவம்பர் 7 அன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இக்கூட்டம் நடைபெற்றுள்ளதால், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை எப்படி மதிப்பீடு செய்திருக்கிறது என்றும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அதன் வேலைகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசின் வேலைகள் குறித்தும் அதன் கொள்கைகள் எப்படி பின்பற்றப்பட்டன என்பது குறித்தும் அறிந்துகொள்ள ஒருவர் எதிர்பார்த்திருந்தார் என்றால் நிச்சயமாக அவர் மிகவும் பரிதாபகரமான முறையில் ஏமாற்றம் அடைந்திருப்பார். செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் உரை, அரசியல் தீர்மானம் மற்றும் மோடியின் நிறைவுரை ஆகிய அனைத்துமே ஒரு சிறிதளவுகூட சுய விமர்சன மதிப்பீட்டைக் காட்டவில்லை.

அரசியல் தீர்மானத்தை ஆராய்வோமானால், அது அனைத்துத் துறைகளிலும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியது, சுகாதாரப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, இலவச உணவு தான்யங்கள் முதலானவற்றை மக்களுக்கு அளித்தது என அனைத்து குறித்தும், பிரதமர் மோடியின் கொள்கைகளையும் சாதனைகளையும் முகத்துதி செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. தீர்மானத்தின் ஒவ்வொரு பத்தியுமே மோடியின் திட்டங்களைப் போற்றிப் பாராட்டிப் புகழ்பாடும் விதத்திலேயே அமைந்திருந்தன. ஒட்டுமொத்தத்தில் மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை.
இவை எதைக்காட்டுகின்றன? கட்சியானது முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை நன்கு காட்டுகிறது. தடுப்பூசிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததன் மூலமாகவும், எட்டு மாதங்களுக்கு எண்பது கோடி ஏழைகளுக்கு உணவு தான்யங்களை இலவசமாக விநியோகித்ததன் மூலமாகவும், சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலமாகவும் மோடி அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள வயதுவந்த மக்கள்தொகையில் வெறும் 30 சதவீதத்தினருக்கு மட்டும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதனைக் குறிப்பிடாமல், நூறு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதாக வெகுவிமரிசையாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது அரசின் தரப்பில் தடுப்பூசிகள் போடப்படும் விகிதத்தின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் 2021க்குள் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்கிற அரசின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகமாகும்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். இவர்களுக்கு இரக்கம் தெரிவித்து ஒரு வார்த்தைகூட இத்தீர்மானத்தில் இல்லை. தடுப்பூசி இருப்பு குறித்து பெரிய அளவில் குளறுபடிகள் இருந்ததுபற்றியும் ஒருவார்த்தைகூட இதில் இல்லை. அதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், பலருக்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது குறித்தும் எதுவும் இதில் கூறப்படவில்லை.
சமாளிக்கப்படவேண்டிய பொருளாதாரப் பிரச்சனைகள் எதுவும் உருப்படியான முறையில் சமாளிக்கப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுமார் ஓராண்டு காலமாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் இதில் எதுவும் கூறப்படவில்லை. அதற்குப் பதிலாக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விவசாய ஆதரவு நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ‘டிஜிடல்’மயம் மற்றும் சுயவேலைவாய்ப்புகளைப் பெருக்குதல் என்ற கொள்கையின்படி, “இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் கோருபவர்களாக இருப்பதற்குப் பதிலாக, கொடுப்பவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பாஜக-வின் அரசியல் தீர்மானத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தபின்னர், பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியில் அங்கே புதியதொரு அத்தியாயம் தொடங்கியிருக்கிறதாம். அங்கே ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலமும், இணைய சேவையை ‘சஸ்பெண்ட்’ செய்திருப்பதன் மூலமும், மக்களின் இயல்பு வாழ்க்கையையே முற்றிலுமாக தடை செய்திருப்பதன் மூலமும் அங்கே ஒரு மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது என்பதை அத்தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.

மோடி தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தொனி மிகவும் அபத்தமான எல்லைக்கே சென்றிருக்கிறது. மோடி, புவி வெப்பமயமாதலை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கும், தன்னுடைய ஆட்சியின் கீழ் அயல்துறைக் கொள்கையை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கும், இந்தியாவை இதர நாடுகளுடன் சமமான அளவிற்கு அல்ல, மாறாக அதற்கும் மேலாக உலகத்தில் ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கும் உலகத்திற்கே வழிகாட்டி இருக்கிறாராம்.
மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கவலைப்படாத இத்தகைய இரக்கமற்ற அரக்கத்தனமான அணுகுமுறையும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் அனைத்துத் தோல்விகளைப் பற்றியும் கவலைப்படாத போக்கும் ஒரு விஷயத்தையே சுட்டிக்காட்டுகிறது. அதாவது, பாஜக-வானது வேலையில்லா இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றியோ, விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியோ, நாளும் உயரும் விலைவாசிகளைப் பற்றியோ, மக்கள் அனுபவித்து வரும் பொருளாதார சிரமங்கள் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதாகும். இவை அனைத்தும் உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இவை தங்களைப் பாதிக்கும் என்பது குறித்தும் அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு மாறாக பாஜக-வானது மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிட்டும், “இந்து” தேசியவாதத்தைத் தூண்டியும் வாக்குகளைக் கவர்ந்துவிடலாம் என்று நினைப்பதாகவே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அதன் அரசியல் தீர்மானத்தின் நிலைப்பாடு காட்டுகிறது.
இவற்றுடன் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சாதிய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு இடங்களில் சாதி-சமூக ரீதியாகப் பதற்றத்தை உருவாக்குவதற்காக மிகப்பெரிய அளவில் பண பலத்தைப் பிரயோகிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர். இதனை யோகி ஆதித்யநாத் இந்த அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது ஆற்றிய உரையே நன்கு வெளிப்படுத்துகிறது. ஆதித்யநாத் ‘அப்பா ஜான்’ (‘Abba Jaan’) என்று கூறுபவர்களுக்குத்தான் முந்தைய ஆட்சியில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன என்று கூறியும், 2017இல் எழுப்பப்பட்ட பிரச்சனையான கைரானா என்னுமிடத்திலிருந்து இந்து குடும்பங்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறியும் ஏற்கனவே முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். (‘அப்பா ஜான்’ என்பது முஸ்லீம்கள் தொழுகையின்போது பயன்படுத்தும் உருது வார்த்தைகள் ஆகும். மேலும் இது தந்தை வழி மகன் என்ற முறையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் கிண்டல் செய்யும் வார்த்தைகளுமாகும்.)
எனினும், சமீபத்தில் மக்களவைக்கும், 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பலத்த அடி வாங்கியபோதும் அதனைப்பற்றி அது எவ்விதமான பரிசீலனையும் மேற்கொள்ளாது, இடைத்தேர்தல்களில் “ஒரு பெரிய வெற்றி” கிடைத்திருப்பதுபோல் கூறியிருக்கிறது. இவற்றிலிருந்து பாஜக தலைமை தங்களுடைய மதவெறி-சாதிவெறி சூழ்ச்சித் திட்டங்களையே முழுமையாகத் தங்கள் வெற்றிக்கு அடிப்படையாக நம்பியிருப்பது நன்கு தெரிகிறது. அஸ்ஸாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அதாவது இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி குறித்து அது கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றைப் பரிசீலனை செய்வதற்குப் பதிலாக, மிகவும் அற்பத்தனமான முறையில் தன்னைப்பற்றித் தானே திருப்திகொள்கிற மனப்பான்மையை, பாஜக தன்னுடைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது.
(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)




