இசை வாழ்க்கை 79: காற்றில் மிதக்கும் இசை போலே … – எஸ் வி வேணுகோபாலன்
நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் வந்துசென்ற பின்னும் வீடெங்கும் அவர்கள் பேச்சும் சிரிப்பும் சூழ்ந்திருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்த சில பாடல்கள் இன்னும் நெஞ்சில் சுழன்ற வண்ணம் உள்ளன. அதே போலவே, எப்போதோ கேட்ட சில பாடல்களும்! அப்படியான இசைப்பாடல் ஒன்றை எதிர்பாராத நேரத்தில் யாரோ இசைத்தட்டு சுழலவிட்டுக் காந்த ஊசியைப் பொருத்த நேருமானால்…ஆஹா…
எழுபதுகளில் வானொலியில் அதிகம் ஈர்த்த பாடல்களில் ஒன்று அது. யூ டியூபில் போய்ப் பார்த்தால், 1973இல் வந்த படத்தின் பாடலை 2 லட்சம் பேர் அண்மைக் காலத்தில் கேட்டிருக்கின்றனர். பாடலைக் கேட்டுவருவோரின் பதிவுகளைப் பார்த்தால் ‘இது எனது கதை, எனது பாடல்’ என்கிறார் ஒருவர். அவரைப் போலவே இன்னும் சிலர். மறக்க முடியாத தங்களது இளமைக் காலத்தின் காதல் தீயை இந்தப் பாடலை வைத்து மீண்டும் மீண்டும் பற்ற வைத்துக் கொண்டு பலரும் படும் பாடுகள் பார்க்க முடிகிறது.
சொல்லாமல் இருப்பதே காதலுக்குப் பெருமை என்று தங்களுக்குள் எழுதியெழுதி வைத்துக் கொண்டு தங்களது கண்ணீரால் தாங்களே அதை அழித்துக் கொண்டவர்கள், பாடலின் தூண்டலில் இன்னும் அணையாத நெருப்பின் கங்கு இப்போதும் ஒளிர்வதில் அதே கண்ணீரில் கன்னங்களின் பளபளப்பதைப் பார்த்துக் கொள்கின்றனர். அது மெல்லிசை மன்னரின் மாயமா, கவிஞர் வாலியின் மந்திரமா தெரியாது…
எளிய சொற்களில் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளத்தைச் சென்றடைய முடியும் என்பது மட்டுமல்ல, அவர்கள் மனத்தில் நினைப்பதெல்லாம் பாடலில் ஒலிப்பது தான் அந்த மாயமும் மந்திரமும். காதலைச் சொல்ல முடியாது என்பதை எத்தனையோ விதங்களில் ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அதைவிடவும் காதல் அவஸ்தையை வேறு எப்படி விளக்கி விட முடியும்….எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அதைச் சொல்வதற்கு ஒரு வாய் இருந்தபோதும் சொல்லாமலே நினைப்பதும் துடிப்பதும் தவிப்பதும் தான் அந்தப் பாடல்….
பாடலைத் தானே பாடுவது என்றும், பெண் குரல் ஜானகியாக இருக்கட்டும் என்றும் எந்த முக்கிய தருணத்தில் முடிவெடுத்தாரோ எம் எஸ் வி, எத்தனை அம்சமான பாடல் வாய்த்தது ரசிகர்களுக்கு !
விஸ்வநாதன் அவர்களது மேதைமையை எண்ணியெண்ணி வியக்க வைக்கும் கம்போசிங் வரிசையில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும். கதைக் களத்தில் குறிப்பிட்ட காட்சிக்கான பாடல்கள் ஒரு விதம், பாத்திரங்களின் மனச் சலனங்கள் குறித்த பாடல்கள் வேறு விதம். இந்தப் பாடல் அந்த ரகம். அப்படியானால் பாடலின் உள்ளடக்கம் பேசுவதை இசையும் சேர்ந்து பேசவேண்டும். இசை எடுத்துக் கொடுக்கப் பாடல் சொல்லும் கதையை மீண்டும் வாங்கிக் கொண்டு அடுத்த செய்திக்கு, இசை, பாடலை முன்னகர்த்த வேண்டும். பாடல் வரிகளில் ஆழும் ரசிகரை அவரது மனநிலைக்குப் பக்கத்திலிருந்து அதே உணர்வுகளில் மேற்கொண்டு உலவுவதற்கு ஏற்ற இசை கொண்டு பாடல் வழங்கப் படவேண்டும்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அதனால் தான் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் விரும்பிக் கேட்கும் பாடல் வரிசையில் இருக்கிறது. கவிஞர் வாலியின் எழுத்து. வேறென்ன வேண்டும்…
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும்
சொல்வதற்கு
வார்த்தையின்றித் தவிக்கிறேன்
என்ற இந்தக் கட்டமைப்பு, எந்த விதத்தில் இசைக்கப்பட்டால் நாயகனின் பரிதவிப்பை அப்படியே கடத்த முடியும் என்பதைத் தன்னியல்பாகச் சென்றடையும் இடத்தில் சிறக்கிறது இசையமைப்பாளர் பங்களிப்பு. கிடார், வயலின், புல்லாங்குழல், தாளக்கருவிகள் ….என்று இசைக்கருவிகள் தேர்வும், தேர்ச்சியான பயன்பாடும் !
பல்லவி வரிகளை அப்படியே பாடிக்கொண்டு செல்வதில்லை எம் எஸ் வி…. தொடக்கச் சிற்றிசைக்குப் பின் சட்டென்று தொடங்கும் அவரது குரலே தனித்துவமான உணர்வுகளின் வார்ப்பாக அமைந்துவிடுவது. ஒவ்வொரு வரியாக ஒவ்வோர் உணர்வாக ஒவ்வொரு தளமாக இந்தப் பாடலை எடுத்துச் செல்லும் அவரது நடை, ஒற்றைப் படகில் மிக மெதுவாக ஒற்றைத் துடுப்பு போட்டுக் கொண்டு நீர்ப்பரப்பைக் கடக்கும் ஒற்றை மனிதர் போன்ற பயணமாக இருக்கும். வாயிருந்தும் …. சொல்வதற்கு …. என்ற அடுத்தடுத்த துடுப்புகளை அடுத்து, வார்த்தையின்றி என்ற இடத்தில் சற்று ஆழமாக நீரையள்ளி எடுத்துக் கொள்கிறது அவரது துடுப்பு ..அத்தனை சுயகழிவிரக்கம் அந்தச் சொல்லுக்குக் கூட்டுகிறார் எம் எஸ் வி. ‘தவிக்கிறேன்’ என்பது அடுத்த துடுப்பு. அந்தத் தனிமை போக்கிக் கொள்ளச் சுருக்கமான ஹம்மிங் சேர்த்து ஆற்றுப் படுத்திக் கொள்ளும் உணர்வு மேலிடச் செய்கிறார்.
முதல் சரணத்தை நோக்கிய இசை இந்த ஆற்றுப் பயணத்தின் நீரலைகளின் நெளிவே தான்….அழுத்தமான மென்குரலில் வயலின் உள்ளோடிக் கொண்டிருக்க, புல்லாங்குழல் தாபத்தைப் பரவவிடுகிறது. அருகே தட்டுப்படுகிறது இப்போது மற்றுமொரு ஒற்றைப் படகு, சற்று வேகமான துடுப்பு வலித்து வருபவளின் குரலைப் பளீர் என்று எடுக்கிறார் எஸ் ஜானகி. ‘காற்றில் மிதக்கும் புகை போலே …’ என்று தொடங்கும் வரிகளில், நினைவுகளே… என்பது காற்றில் அலைமோதி எதிரொலிக்கிறது. தபேலா அம்சமாக வாங்கி நிறைத்துத் திருப்பிக் கொடுத்து நடத்துகிறது பாடல் வரிகளை. ‘மன வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ என்றும் நிறைந்தானோ..’ என்று வேகத் துடுப்புகளில் கேள்வியெழுப்பி வேறு யாரும் வேறு பதிலேதும் தந்து விட இடமின்றி, ‘அதில் புகுந்தானே என்றும் நிறைந்தானே’ என்று பதிலும் சொல்லப்பட்டு விடுகிறது. சரணங்கள் நான்கிலும் இதே பாணியைப் பயன்படுத்தி இருப்பார்கள். சரணத்தின் முடிவில் அதே ஹம்மிங் எடுக்கும் ஜானகி, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பல்லவியை மிகவும் ஒயிலாக எடுக்கிறார்.
இரண்டாம் சரணத்தை நோக்கிய பயணத்தில் அந்த ஒற்றை வயலின் இசை…ஆஹா…ஆஹா… அதன் தாக்கத்தில் எம் எஸ் வி எடுக்கும், ‘காதல் என்பது மழையானால்’ என்ற வரிகள் எழுபதுகளில் மிகவும் கொண்டாடிக் கேட்டு ரசிகர்கள் பாடிக்கொண்டே இருந்ததுண்டு. ‘காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்’ என்பதை வாலியை விடவும் ரசித்து லயித்துக் குரலில் கொண்டுவந்திருப்பார் மெல்லிசை மன்னர். ‘நீராட்ட நான் பாராட்ட…’ என்ற இடத்தில் அந்த சந்தம் என்னமாகக் கொஞ்சல் நடை பயில்கிறது! ‘அவள் வருவாளே சுகம் தருவாளே ‘ என்ற ஆசுவாசம் சரணத்தை நேர்த்தியாக்குகிறது.
‘ஆசை பொங்குது பால் போலே’ என்ற மூன்றாவது சரணத்திலும் ஜானகியின் குரலினிமை சிறப்பானது. ‘அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே’ வரிகளில் எத்தனை காதலும் சேர்ந்து பாலோடு பொங்குகிறது! ‘கொதித்த மனம்…கொஞ்சம் குளிரும் விதம்’ என்றவரிகளில் இயைபு அபாரம், வாலியின் முத்திரை அது. ‘அவன் அணைப்பானோ இல்லை மாட்டானோ’ என்ற கேள்வி காதலிசைப் பாடல்களில் பெண் மனத்தின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் மிகச் சில வரிகளில் ஒன்று.
நான்காம் சரணத்தை நோக்கிய வேகத்தில் விசில் இசையைக் கொண்டுவந்திருப்பது எழுப்பப்படும் உணர்வுகளின் உல்லாசத்தை பிரதிபலிக்கிறது. ஒற்றை வயலின் அதைப் பற்றிக் கொள்கிறது. அதன் தொடர்ச்சியில், ‘நேரில் நின்றாள் ஓவியமாய்’ என்ற கடைசி சரணத்தில் எம் எஸ் வி இன்னும் நெருக்கத்திற்கு எடுத்துச் செல்கிறார் தாபத்தை! இரண்டாம் முறை பாடுகையில், ‘ஓவியமாய்’ என்ற சொல்லை இன்னும் அழகாகத் தீட்டுவார்! ‘நான் பாதி அவள் தான் பாதி’ என்பதை அவர் இசைக்கும் விதம் சுவாரசியமானது. சரணத்தின் நிறைவில் ‘நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே’ என்ற உளநிறைவு அபாரமாக இருக்கும்.
பாடலின் நிறைவில் படகுகள் இரண்டும் அருகருகே சம வேகத்தில் துடுப்பு போட்டபடி நகர்ந்து கண்ணிலிருந்து மறையுமிடத்தில் நிறைவு பெறுகிறது பாடல். ஆனாலும் நீரலைகளின் மீது தெறிக்கும் ஒளியும், அவற்றின் மென் அதிர்வுகளும் ரசிகர் நெஞ்சில் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் கடந்த ஒருவாரமாக உள்ளே ஓடிக் கொண்டே இருக்கிறது, சுழன்ற வண்ணம் இம்சை செய்து கொண்டிருக்கிறது…அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டுச் சொல்லுங்களேன் என்று அதைத் தெரிந்து கொண்டே வாட்ஸ் அப்பில் கேட்கத் தோன்றுகிறது ஒற்றியூர் சந்திரசேகரன் அவர்களுக்கு!
கதைகளையும் சேர்த்து அசைபோட வைக்கின்றன பாடல்கள். பாடலை அசைபோடுகின்றன மனங்கள். காலத்தின் முன்னும் பின்னும் மனத்தை வழி நடத்துவதில் இசை ஓர் உளவியல் பயிற்சியாளர் போல் இயங்குகிறது. ஒரு மனத்திலிருந்து எண்ணற்ற உள்ளங்களையும் ஒருமிக்கிறது. அந்தப் பரவசத்தை வாரண்டி கியாரண்டி குறிப்பிடத் தேவையே இல்லாத அளவு உறுதிப்படுத்துகிறது. பொய்யாமொழி தான் இசையும்.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]