உண்மை கவிதை – எஸ் வி வேணுகோபாலன்

உண்மை கவிதை – எஸ் வி வேணுகோபாலன்




உன்னை அறிந்தவர்கள் பலரும்
பரிச்சயம் அற்றவர்கள் போல்
விலகிப் போகின்றனர்

உன்னை மறுப்பார்
நெய்து கொண்டே இருக்கின்றனர்
நெருப்பை மூடும் சீலைத் துணியை

அறியாதோர், பாவம்
திரும்பத் திரும்ப
உற்றுப் பார்த்து விட்டு
மன்னிச்சுக்கப்பா என்று
முணுமுணுத்தபடி
கடந்து போய் விடுகின்றனர்

வெயில் காய்ந்து தீய்க்கிறது
மழை பொழிந்து தள்ளுகிறது
விறைக்கிறது குளிர்
வெக்கைப் புழுக்கம் சில போது

அப்போதும் மங்கவில்லை உன் புன்னகை

இப்போது அருகே சத்தம் கேட்கிறது…
மெல்ல நெருங்குகிறது
ஒரு ஜேசிபி எந்திரம்.

– எஸ் வி வேணுகோபாலன்