வித்தியாசமானதொரு நூல் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒளிப்படக் கலை மீது காதல் கொண்ட இளைஞர் ஒருவர் அந்தக் கலை மீதான தீராக் காதலுடன் 36
ஆண்டுகள் அளவில் நிகழ்த்தியிருக்கும் நெடும் பயணத்தில் அடைந்த அரிய அனுபவங்களை, வாசிக்கும் நெஞ்சம் வியப்புற அளவற்ற தரவுகள்-தகவல்களுடன் சுய
வரலாறாகச் சொல்கிறது இந்த நூல்.
பிறந்தது சேலம் மேச்சேரி அருகில் ‘அமரம்’ என்னும் சிறிய கிராமத்தில். வாழ்க்கைத் துவக்கம் பொறியாளத் தந்தை (சுரங்க நகரம்-நூலாசிரியர் நடேசன்) மற்றும் தாயுடன் ஆறுமாதக் குழந்தையாக நெய்வேலியில். பள்ளிக் கல்விக் காலத்திலேயே தெரிந்தவரின் பழைய கேமராவில் படமெடுத்துக் கழுவிய பிலிம்களில் காட்சிகளில்லா உண்மையில் துவளாத இளைஞர், கும்பகோணம் நுண்கலை ஓவியக் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் 1984ல்-தந்தையிடம் வலியுறுத்தி 750 ரூபாய் விலையில் பழைய 100 /. Manual ZENITH கேமராவைச் சொந்தம் கொள்கிறார்.
‘இவ்வுலகை ஒவ்வொருவரும் வெவ்வேறு பார்வையில் பார்க்கிறார்கள். பெரும்பாலோர் வெறும் பார்வையாளராகவே இருந்து விடுகின்றனர். அதில் இவ்வுலகைப் பார்த்து, இரசித்து, உள்வாங்கி அதைக் கலைவடிவமாக எவன் வெளிப்படுத்துகிறானோ அவனே கலைஞனாகிறான்.’ என்னும் எண்ணத்துடன் கலைஞரின் கலைப் பயணம் துவங்குகிறது.
கல்லூரிக் காலத்தில் தீபாவளி, பொங்கலுக்கு ஆடைகள் வாங்கிக் கொள்ள அப்பா அனுப்பும் பணம் பிலிம் ரோல்களாக மாறுகிறது. மேட்டூர் அருகே கொண்டலாம்பட்டியில் கல்லூரி நண்பனின் அண்ணன் திருமணத்தைப் படமாக்கி பிலிமைக் கழுவிப் பார்க்கையில் காட்சிகளற்றுப் போகும் அவலம் கலைஞருக்கு வாழ்க்கையில் இரண்டாம் முறை நேர்கிறது. திருமண நேரத்துக் காட்சிகளைப் பதிவாக்க இயலாமல் போன குறையில் சில நாட்கள் கழித்து அந்தத் தம்பதியரை இயற்கை வெளியில் அற்புதமாகப் படமாக்கி அவர்களுக்கு வழங்குகிறார். (1988- ல் திருமணம் செய்து கொண்ட அந்தத் தம்பதியரின் மகள் நிச்சயதார்த்த நிகழ்வை 18 ஆண்டுகள் கழித்து விசித்திரத்திலும் விசித்திரம் என்னும் வகையில் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி 2020 ஆம் ஆண்டில் படமாக்கிப் பரவசப்படுகிறார்.) அதன் பிறகு அரங்கக் காட்சிகளிலும் புறவெளிக் காட்சிப் பதிவுகளில் அதிகம் ஆர்வம் கொள்கிறார்.
ஐந்தாண்டு கல்லூரிக் கல்விக்குப் பிறகு நெய்வேலி தனியார்ப் பள்ளியில் ஓவிய ஆசிரியப் பணி கிடைக்கிறது. வேதாரண்யம் ஆற்காட்டுத் துறை அருகே தேத்தாக்குடியில் பெண் அமையத் திருமணம் நிகழ்கிறது. ஓவிய ஆசிரியப் பணியுடன் மனைவி, இரு மகள்கள் ஆன குடும்ப வாழ்க்கையுடன் திருமண நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்ச்சிப் பதிவுகளெனக் கலைஞரின் ஒளிப் படப் பயணம் தொடர்கிறது. விதம் விதமாக கேமராக்கள் மாறுகின்றன. இந்த நூலாக்க நேரத்தில் கலைஞர், ‘இப்பொழுது தன் கைவசத்தில் இருக்கும் கேமராவின் விலை 1.5 லட்சம்’ என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தனியார்ப் பள்ளியில் அரிதாகக் கிடைக்கும் ஓரிரு விடுமுறை நாட்களில் மேச்சேரி அருகிலிருக்கும் தாய்மாமனின் அமரம் கிராமத் திருவிழாவில் பங்கேற்று அழகு மிகும் கிராமத்துத் திருவிழாக் காட்சிகளைப் பதிவு செய்யும் கலைஞர், புதிய முயற்சியாகப் பள்ளி முதல்வர் அனுமதியுடன் 175 ஆவது உலக ஒளிப்படத் தினத்தில் எம். திவாகரன் என்னும் பள்ளி மாணவனை இயக்குபவராக நின்று காலை முதல் மாலை வரை மாணவன் பதிவு செய்த நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களின் அழகை, மக்களின் வாழ்வியலை நூற்றுக் கணக்கான காட்சிகள் என்னும் அளவில் தொகுப்பாக்க்கியிருக்கிறார்; தொகுப்பாக்கிய அந்த அரிய படங்களைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கு, மாணவ- மாணவியருக்குக் கலை விருந்தாக்க்கியிருக்கிறார்; தொடர்ச்சியில் 2013 கால கட்டத்தில் நெய்வேலியில் ஒளிப்படப் பயிற்சிப் பட்டறையையும் நடத்தியிருக்கிறார்.
ஆண்டுதோறும் கிடைக்கும் கோடை விடுமுறை நாட்களில் மனைவியின் பிறந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஆற்காட்டுத்துறையின் அழகிய கடற்கரை, கோடியக்கரை, வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி உப்பளங்கள் ஆகியவையும் மலை வேம்பு மரங்களால் ஆன கட்டுமரங்களுடன் கூடிய கடற்கரைக் கிராம மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களின் உழைப்பு மிகு வாழ்க்கையும், ‘நிஜத்தைப் பிரதியெடுக்கும் வேலையல்ல புகைப்படக்கலை’ என்னும் தெளிவுடன் கலைஞரின் காட்சிக் கூர்மையில் அவரது கேமரா வழியில் செழுமை கொள்கின்றன.
‘தமிழகத்தின் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பது வேதாரண்யம் (திருமறைக்காடு). திருமறைக் காட்டின் கடற்கரையை ஒட்டியுள்ள சுமார் 11,000 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள உப்பு வயல்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி, கடுநெல்வயல் போன்ற கடற்கரைக் கிராமங்களில் பெரும்பாலான உப்பு வயல்கள் அமைந்துள்ளன. / சுமார் 25,000 தொழிலாளர்கள்
உப்பள வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். ஓர் ஆண்டின் அதிகப்படியான உப்பு உற்பத்தி, வேதாரண்யத்தில் 4.5 லட்சம் டன், குறைந்தது 3.5 லட்சம் டன்னாகும். / பரந்து விரிந்து கிடக்கும் இந்த 11,000 ஏக்கர் உப்பளத்தில்300 ஏக்கர் நிலம் 700 விவசாயிகளுக்குச் சொந்தமானது. மீதம் உள்ள நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.’
‘1930- ஏப்ரல் 30-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக உப்புச் சத்தியாகிரகம் என்னும் பேரில் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட காலத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் உப்புச் சத்தியாகிரகம் நிகழ்ந்தது.’
‘நெய்வேலி நகரம் 35 சகிமீ பரப்பு கொண்டது. இதில் 30 வட்டங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு ச.கிமீக்கும் சற்றுக் குறைவு. மொத்தம் 365 சாலைகள். ஒவ்வொன்றுக்கும் ஊசி முதல் பல உலக நாடுகள் வரை பெயர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு சாலையைப் பார்க்க வேண்டுமென்று வைத்துக் கொண்டாலும் எல்லா சாலைகளையும் பார்க்க ஒரு வருடம் ஆகிவிடும். இங்குள்ள இரட்டை வழிச் சாலைகளின் மொத்த நீளத்தை அளந்தால் 130 கிலோ மீட்டரும்
உட்சாலைகள் அல்லது கிளைச் சாலைகளின் நீளம் 320 கி.மீ நீளத்திற்கு வரும்.
1950- களின் பிற்பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தின் கட்டமைப்பைப் பார்வையிட ஜெர்மன் சென்ற நெய்வேலி அதிகாரிகள், அங்கே அமைக்கப்பட்டிருந்த நகர அமைப்பை மாதிரியாகக் கொண்டு சீனிவாசன் (Civil Engineer- Tech & Works) தலைமையில் 1957-ல் நெய்வேலி நகரம் அமைக்கப்பட்டது. நெய்வேலியில்
திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரங்களில் நெய்வேலியும் ஒன்று. (பக்கம் – 117, அத்தியாயம்- ‘மழைக்கால நெய்வேலி நகரம்’)
இப்படி நூலின் அத்தியாயத் தலைப்புகளின் அவசியத்திற்கேற்ப குறிப்பிட வேண்டியவற்றைப் பதிவு செய்திருக்கும் பாங்கு, நேற்றும் இன்றுமாகக் கலைஞர்களுக்கு ஒளிப்படக் கலையில் உதவும் கேமராக்கள் குறித்த தகவல்கள், ஒளிப்படமாக்கலைக் குறித்து உலகப் புகழ் பெற்ற பல அறிஞர்கள் கூறியிருக்கும் அரிய கருத்துகள், தனது மனம் கவர்ந்த காட்சிகள் குறித்து கவித்துவமான வர்ணனைகள் எனப் பன்முக முனைப்பில் வாசிப்பவரை நூலாசிரியர் மிகவும் வியப்பிலாழ்த்துகிறார்.
மனவெளிப் பயணங்கள் எனத் துவங்கி, பெருந்தொற்று (கோவிட்19) இரண்டாம் அலையும் ஒளிப்படக் கலையும் என 28 அத்தியாயங்களைக் கொண்டிருக்கும் நூலில் அத்தியாயங்களின் தலைப்புக்கேற்ப ஆசிரியரின் ஒளிப்படக் கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில் 82-பக்கங்களில் அரிய- அழகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
நூலுக்கு அழகு சேர்க்கும் அந்த அரிய படங்களில் அகரம் திருவிழாவில் ஆசிரியர் பதிவு செய்துள்ள பல காட்சிகளில், இரு சின்னஞ் சிறு மகள்கள் கேட்கும் மிக மலிவான பொருளையும் வாங்கிக் கொடுக்க முடியாமல் பரிதவித்து நிற்கும் ஏழைத் தாய் குறித்த ஆசிரியரின் விளக்கத்துடன் கூடிய காட்சிப் பதிவு, களத்தில் ஊடாடி, காட்சிகளை உள்வாங்கிப் படைப்புகள் வழங்குவதில் புகழ் பெற்ற ராஜம் கிருஷ்ணன் அவர்களின் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்த ‘கரிப்பு மணிகள்’ (இந்த வார்த்தையை நூலாசிரியர் செல்வன் உப்பளத் தொழிலாளரின் வாழ்வியலை விளக்கும் பகுதியில் ஓரிடத்தில் பொருத்தமுறக் கையாண்டிருப்பது மிகவும் கவனம் கொள்ளத் தக்கதாக உள்ளது) புதினத்தை நினைவுபடுத்தும் வகையில் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் கொளுத்தும் வெய்யிலில் உப்பளங்கள் மற்றும் உப்புக் குவியல்களுடன் வாழ்க்கையை சுழற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் குறித்த பதிவுகள், நெய்வேலி நகரத்தின் மெயின் பசாரில் ஆலமரத்தின் கீழ், மழை நாள் ஒன்றில் சுற்றுப்புறத்தை மறந்தவராகக் குடை தைப்பதில் கவனத்தைச் செலுத்தியிருப்பவரின் காட்சிப் பதிவு போன்றவற்றுடன் ஆற்காட்டுத் துறைப் பகுதியில் பட்டா பட்டி அரைக்கால் சட்டை, தலைப்பாகையுடன் வற்றி வாடிய தேகத்துடன் சக்கரம் சுழற்றும் ஏழைக் குயவர், கோவணம், தலைப்பாகைக் கோலத்துடன் சேற்று வெளியில் கலப்பை- நுகத்தடியைச் சுமந்து செல்லும் விவசாயி, கதவற்ற ஓலைக் குடிசையின்
உள்ளமர்ந்து படுத்த வாக்கில் முகமுயர்த்தித் தன்னைக் கூர்ந்து நோக்கும் நாயைக் கனிவுடன் நோக்கும் எளிய மனிதர் எனக் கலைஞர் செல்வனின் கூர்ந்த கவனத்தில் உருவாகியிருக்கும் ஒளிப்படக் கலைக் கொடையை வரிசைப்படுத்தி நிறையச் சொல்லலாம்.
நூலாசிரியரின் ஒளிப்படக் கலை முன்னோடியான நெய்வேலி ஆழ்வார், ஒளிப்படக் கலைப்பயணத்தில் உடன் பயணித்த-பயணிக்கும், உடன் நின்று உதவிய-உதவும் நண்பர்கள் குறித்த தகவல்கள் கும்பகோணம் நுண்கலைக் கல்லூரியில் படிக்கும் நாட்களில் திரைப்படங்களில் சாதிக்கும் மோகத்துடன் நண்பருடன் திரைக் கலைஞர் பாக்யராஜ் அவர்களைச் சந்திக்கக் காத்திருந்து (பாக்யராஜ் அறையிலிருந்த நிலையிலும்) அவரைப் பார்க்காமலே திரும்பியது குறித்த தகவல், நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் வெளியீடு செய்யும் நிகழ்வின் வழியில் ஒளிக்கலைஞர் மற்றும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களுடன் தனது குறும்படங்கள், ஆவணப்படங்கள் குறித்து அளவளாவியது – பாலு மகேந்திரா பாராட்டியது பற்றிய தகவல் என நூலில் ஆசிரியரின் கலைப்பயண அனுபவங்களாக ஏராளம் செய்திகள் விரவிக் கிடக்கின்றன.
நூலில் வகுப்புத் தோழர் நெய்வேலி மருத்துவர் அ.செந்தில் அவர்களின் உதவியுடன் தமிழறிஞர் இரா.இளங்குமரனார் குறித்து 82 நிமிடங்கள் நீட்சி கொண்ட ஆவணப்படத் தயாரிப்பைத் தமிழறிஞரின் வாழ்விடத்தில் ( திருச்சி கரூர் சாலையில் முக்கொம்பு அருகில் அல்லூர்) ஏழு – ஏழு மாதங்கள் இடைவெளியில் மூன்று சந்திப்புகள் மூலம் இயக்கி முடித்த தகவல் பதிவை வாசிக்கையில் வியப்பேற்படுகிறது. தொடர்ச்சியில் நூலாசிரியர் இதுவரை இயக்கியிருக்கும் குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களின் பெயர்கள்- நிழல் சலனங்கள் (2005) குறும்படம் 10 நிமிடங்கள், வானவில் நாட்கள் (2006) 20 நிமிடங்கள், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் வாழ்வும் பணியும் (2007) ஆவணப்படம் 82 நிமிடங்கள், இருட்டறை வெளிச்சங்கள் (2008) ஆவணப்படம் 20 நிமிடங்கள், ஆசிரியைக்கு அன்புடன் (2009) ஆவணப்படம் 46 நிமிடங்கள், ஒரு சிற்பத்தின் கதை (2010) ஆவணப்படம் 15 நிமிடங்கள், திரு குறிஞ்சி வேலன் குறித்த ஆவணப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தொகுப்பாகக் காத்துள்ளது-என்று நூலாசிரியரின் ஒளிப்படத் துறை சார்ந்த உழைப்பை வெளிச்சப்படுத்தும் வகையில் வரிசை கண்டுள்ளன.
ஆங்கிலக் கலை இதழ் மிரர், ஜூவி, விகடன் மற்றும் பல பத்திரிகைகளில் ஒளிப்படப் பங்களிப்புச் செய்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றிருக்கும் கலைஞர் ந.செல்வன், ‘ஒளிப்படக்கலை சிறப்புற கலைஞர்களுக்கு காத்திருத்தல் தவம் மிகவும் அவசியம்’ என்கிறார். கூடவே, இன்றைய காலச் சூழலில் ஒளிப்படத் துறையில் தமிழக அளவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான அளவில் செயல்படும் கலைஞர்களின் நிறை-குறைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல்-பொருளாதார நிலை குறித்தும் அரிய கருத்துகளை வழங்குகிறார்.
304 பக்கங்கள் அளவில் விரிவு கொண்டிருக்கும் நூலில் நூலின் கருப்பொருளுக்கு இசைந்து சேர்க்க வேண்டிய அவசியத்தில் ஊருணி நீர் நிறைந்தற்றே, இருட்டறை வெளிச்சங்கள், கற்றது கையளவு, யாதுமாகிய ஒளி, உப்பள ஓவியங்கள் போன்ற கவித்துவமான தலைப்புகள் வாசகரின் கவனத்தைக் கூர் தீட்டும் வகையில் அழகுற அமைந்துள்ளன. ‘ஒளிப்படக் கலையும் கலைஞனும் மனசாட்சியும்’ என்னும் அத்தியாயத்தின் வழியில் ஒளிப்படக்கலையில் உழைப்பால்
உயர்ந்துள்ள கலைஞர் வசந்த குமாரை முன் வைத்து, ‘சமூக அக்கறையுடன் இயங்கும் ஒளிப்படக் கலைஞன் தன் காலத்தை மீறி நிற்கும் சக்தியைப் பெற்று விடுகிறான்’ என்று நூலாசிரியர் சொல்லும் கருத்து அவருக்கும் நூற்றுக்கு நூறும் பொருந்தும் என்பதைத் தெள்ளென உணர முடிகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகியில் நண்பருடன் சேர்ந்து செய்த சேட்டு வீட்டுத் திருமணப் பதிவு நிகழ்வு உட்பட நூலாக்கக் காலம் வரையில் 300 சுப நிகழ்வுகளை மற்றும் 1250 க்கும் அதிகமாக ‘விஷுவல்’ படங்களைக் கேமரா வசமாக்கி மக்களுக்குக் கலை விருந்தாக்கியிருக்கும் கலைஞர் ந. செல்வன், இந்த நூலின் வழியில் தன்னைப் போல் தமிழக அளவில் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கும் ஒளிப்படக் கலைஞர்கள் பலரை வாசகர் நமக்கு அடையாளப்படுத்துகிறார்; நூலாக்கக் கால அளவிலும் தன்னையொத்த அந்தக் கலைஞர்களுக்கென நல வாரியம் ஒன்றில்லாத குறை குறித்துக் கவலைப்படுகிறார்.
குஜராத் கலவரத்தின் போது உறவினர்களை இழந்த இஸ்லாமிய இளைஞன் கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டு அழும் காட்சி, சுனாமியின் சீற்றத்தால் மடிந்த உறவின் முன் தலை விரித்தபடி அழும் தாயின் கதறல், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்து போன 94 இளம் பிஞ்சுகள் குறித்து நூலில் பதிவாகியுள்ள கலைஞரின் வார்த்தைச் சித்திரத்தை வாசிக்கையில் கலைஞருடன் சேர்ந்ததாக வாசகர் நமது நெஞ்சமும் கலங்குகிறது; கரைந்துருகுகிறது.
தமிழக அளவில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் மற்றும் கும்பகோணம் தாராசுரம் கோயில் ஆகியவற்றின் அழகை ஆராதிப்பவராக இருக்கும் கலைஞர் ந. செல்வன் சாகித்திய அகாதமி விருதாளர் குறிஞ்சி வேலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இருபது ஆண்டுகளாகத் தொய்வின்றித் தொடர்ந்து வெளிவரும் – நல்லி திசை எட்டும்- மொழியாக்கக் காலாண்டிதழின் அட்டைப் படங்கள் மற்றும் அதன் அழகியல் கூறுகளில் செய்துள்ள-செய்து வரும் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.
இலக்கிய ஆர்வலர் வேர்கள் மு.இராமலிங்கம் மற்றும் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் இருவரும் வழங்கியிருக்கும் முன்னுரை நூலுக்குப் பெருமை சேர்க்கும் பான்மை கொண்டுள்ளன.
அரிய கருப்பொருள், அழகிய படங்கள் கொண்டதாகத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வித்தியாசமான வரவாகியிருக்கும் இந்த ஒளிப்படக் கலையும் கலைஞனும் நூல், ஏற்கனவேம் ஓவியனின் ஒளிப் பயணங்கள், அறியப்பட வேண்டிய ஆளுமைகள் ஆகியவற்றின் ஆசிரியராக அடையாளம் கொண்டிருக்கும் கலைஞர் ந. செல்வன் ஒளிப்படக் கலை மீது கொண்ட காதலின் நல் விளைவு என்பதும் இந்த நூல் வாசகர்களுக்குள் ஒளிப்படக் கலை குறித்து புதிய வெளிச்சங்களைப் புகுத்தும் என்பதும் மிகையற்ற உண்மை.
நூல் மதிப்புரை – ப.ஜீவகாருண்யன்
ஒளிப்படக் கலையும் கலைஞனும்
ந. செல்வன்
பக்கங்கள்: 304,
விலை: ரூ.300/-
வெளியீடு: உயிர் பதிப்பகம்,
4, 5-வது தெரு, சக்தி கணபதி நகர்,
திருவொற்றியூர், சென்னை–600019.
பேசி: 98403 64783,
மின்னஞ்சல்:[email protected].