ஜேசு ஞானராஜின் கவிதைகள்
1
உணவு!
அந்தி மயங்கியது!
மேற்குத் தொடர்ச்சி மலை
மஞ்சளும் சிவப்புமாய் ஒளிரத் தொடங்கியது!
கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்க
மாடுகள் வீடு நோக்கி நடைபயின்றன!
ஆட்டுப் பட்டிக்குள்
ஏழு சுரங்களும்
ஏப்ரலின் அடுத்த மாதத்தைப்
பாடத் தொடங்கின!
ஓடையிலிருந்து வெளிவந்த
வாத்துக்கூட்டம்
வீட்டைப் பார்த்து விரைந்தன!
அம்பு வடிவில் பறக்கும் கொக்குகள்
கூடுநோக்கி போய்க்கொண்டிருந்தன!
வேப்பமர உச்சி
காக்கைக் கூட்டில் குஞ்சுகள்
கீச் கீச் சென
தாயைத் தேடிக் கொண்டிருந்தன!
வேகமாய் வீடு நோக்கி நடக்கும்
வேடனின் முகத்தில்
கொள்ளை சந்தோஷம்!
2
சுழற்சி!
சூரியனின் காந்தப் பார்வையில்
மோகம் கொண்டு மயங்கிய கடல்
கருமேகக் குழந்தை உருவாகிறது!
கடல் பால் கொண்ட
காதல் தோல்வியால்
கோபமான பெருங்காற்று
மழை மேகத்தை அலைக்கழிக்கிறது!
மிரண்டு போன கார்மேகம்
அழுது தீர்க்க நதி உருவாகிறது!
தன் குழந்தையை
உடனே கூப்பிட்டு
அடைக்கலம் கொடுக்கிறது கடல்!
3
கடன் கொடுத்த பணம்!
இரவு சாப்பாடு முடிந்து
முற்றத்திலிருந்த நார்க்கட்டிலில்
அமர்ந்திருந்தார் அப்பா!
வாசல் படியில் உட்கார்ந்து
வாகாக கால் நீட்டினாள் அம்மா!
வெற்றிலைப் பெட்டியைத் திறந்து
தோதான கொட்டைப்பாக்கை
அப்பாவுக்குத் தந்தாள்!
சுண்ணாம்பு பாக்கெட்டை
மெதுவாகப் பிதுக்கி
நுனி கிள்ளிய வெற்றிலையில்
வைத்து நீட்டினாள்!
பாக்கை கடித்துக் கொண்டே
விரித்த வெற்றிலையில்
சுண்ணாம்பைத் தடவி
வாயில் குதப்பினார் அப்பா!
திருவிழாவுக்கு வாங்கிய
தேன் குழல் மிட்டாய்
ஓலைப் பெட்டியில்
பாதி நிரப்பிய அடுப்பு குப்பை
துப்பட்டியாக மாறி இருந்தது!
கடைத்தெரு குப்புசாமி என்று
ஆரம்பித்தாள் அம்மா!
‘ம்’ கொட்ட ஆரம்பித்தார் அப்பா!
மேகத்துள் மறைந்திருந்த முழு நிலவு
அம்மாவின் கதையைக் கேட்க
மெதுவாக எட்டிப் பார்த்தது!
வானத்து நட்சத்திரத்தில் ஒன்று
கீழ்த்திசையில் ‘சர்ர்ர்’ரென்று இறங்கி மறைந்து போனது!
பக்கத்து கோவிலில்
மணி ஒன்பது அடித்தது!
இலங்கை வானொலியில்
ராக தீபம் முடிந்து
செய்தி பேசிக்கொண்டிருந்தது!
எதிர்வீட்டு ஆள் உயர மண் சுவரில்
வெள்ளை நிறப் பூனை யொன்று
பதுங்கிப் பாயத் தயாராகிக் கொண்டிருந்தது!
ஓட்டுக் கூரைக்குள்
ஒளிந்திருக்கும் சுண்டெலிக்கு
அதிர்ஷ்டம் இருந்தால்
பூனையின் பசியைத் தின்று
உடனடியாக கடவுளிடம்
பேச வாய்ப்பிருக்கிறது!
தெருவில் பால்காரரின் சத்தம்
தேய்ந்து மறைந்து போனது!
அம்மாவின் பேச்சில்
குப்புசாமி இறந்து போயிருந்தார்!
அப்பாவின் நாளைய சட்டையில்
ஆயிரம் ரூபாய்
காணாமல் போயிருந்தது!
4
இரவும் பகலும்!
இரவைத் தின்று கொண்டிருந்த
காலத்துக்கு அகோர பசி!
கதவைத் திறந்து
எட்டிப் பார்த்த சுக்கிரன்
பட்டென்று சாத்திக் கொண்டான்!
மீந்து போன இரவுகளை
கையில் எடுத்த நிலவன்
செய்வதறியாது திகைத்தான்!
நட்சத்திரங்களை ஊசியாக்கி
இரவைத் தைத்துக் கொடுத்தேன்!
என் கடவுள் நீதான்
என்ற சந்திரனை
மெதுவாகத் தின்று கொண்டிருந்தான் சூரியன்!
செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன் நான்!
5
கடவுளைக் காணும் ஆவலில் கடவுள்!
உலகம் முடியப் போகிறது!
கடவுள் வருகிறார்!
அந்த நபரின் குரல்
ஆகாயம் வரை கேட்டது!
உண்டியல்கள் வேகமாய் நிறைந்தன!
பண நோட்டுகளில்
காணிக்கைப் பெட்டிகள்
மூழ்கிக் கொண்டிருந்தன!
இதோ வந்து கொண்டிருக்கிறார்!
வந்தே விட்டார்!
குரலின் டெசிபல் கூடியது!
அனைவரும் வாசலைப் பார்த்தனர்!
கடவுளும் தான்!
6
தோட்டா சொன்ன ரகசியம்!
பட்ட்ட்ட்…………..
காது வரை வந்த ரகசியம்
அதோடு நின்று விட்டது!
எதுவும் புரியாது குழம்பிய மனம்
கண்களைப் படம் வரையச் சொன்னது!
கண்களின் கேள்விகளுக்கு
காது மௌனம் சாதித்தது!
நிலை அறியா மூளையோ
மதுவில் ஊறிய ஆப்பிள் காயாய்
கனத்துக் கிடந்தது!
சரக்…..சரக்…..சரக்!
வேகமாக நடக்கும் வேடுவனின்
தோள் பையில்
முயலின் சூடான ரத்தம்
இப்போது படம் வரைய ஆரம்பித்தது!
7
பால்!
நாற்காலியில் அமர்ந்து
பாட்டிலில் பால் குடித்தான் பேரன்!
பாட்டி படுக்கையில்
மேசைக்கரண்டியில் பால் குடித்தாள்!
முன்னது உள்ளே இறங்கியது!
8
தாரமும் தாசியும்!
தரையை மேயும் நிழலுக்கு
சூரியனும் விளக்கொளியும் ஒன்றுதான்
இருளைத் தொடும் வரை!
9
புதுக் கல்வி ஆண்டு!
எல்லா குழந்தைகளும்
தேர்ச்சி பெற்றனர்
கற்றுத் தந்த ஆசிரியரைத் தவிர!
10
நல்லாட்சி!
ஆணவப் படுகொலையை
ஆவணப் படுத்திய கடைசி தேதி
யாருக்கும் ஞாபகம் இல்லை!
11
மதம்!
அசோகரின் வாளால்
வெட்டுண்ட கிளியோபாட்ராவின் வீட்டில்
பௌத்தம் தூக்கிலிட்டுக் கொண்டது!
12
வாசலில் வாழைமரம் கட்டி
பந்தல் போட்டு மின்விளக்கு அலங்காரங்கள் செய்து
காய்கறிகள் வெட்டி
பதினாறு வகை
கூட்டுப் பொரியலுடன்
கறிசோறும் சாம்பார் ரசமும்
ரெடி பண்ணி
மாப்பிள்ளை பொண்ணுக்கான
மேடை அலங்காரமும் முடிச்சு
அரிசி பெட்டியுடன்
வாழைக்குலையும் ஏந்தி
மாமா மாமி சித்தப்பா சித்தி
பெரியம்மா பெரியப்பா
எல்லோரும் வந்திருக்க
செல்லக் குழந்தைகளின் உற்சாகத்துள்ளல்களில்
புத்தாடைகள் சரசரக்க
பாட்டியின் கைத்தடி மட்டும்
மூலையில் தனியாகக் கிடக்கிறது!
13
நிசப்தமான அந்த முன்னிரவில்
கொலுசு கட்டிய நீரோடை
சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது!
போட்டிக்கு மெட்டு கட்டிக்கொண்டிருந்தது
மாக்கிரி தவளை!
ஆயுள் முடியப் போகும்
தெருவோர ட்யூப் லைட் போல
விட்டு விட்டு
சத்தமிட்டுக் கொண்டிருந்தது
துள்ளிக் குதிக்கும்
கருப்பு நிற பாச்சான்!
விடாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
சீமை உடையில் குடியிருக்கும்
மிரியான் வண்டு!
இந்நிலையில்-
அமைதியான சத்தத்துடன்
ஓடைக் கரையில் அமர்ந்து
தண்ணீரில் நனைந்து விளையாடும்
நான்கு கால்களில்
இரண்டு மட்டும் என்னுடையது!
14
இரவைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்து
நடந்து கொண்டிருந்தேன்!
கோட்டானும் அரவமும்
உணவு தேட தோதான நேரமான
இரவைத் திரும்பத் தர சொன்னது!
கல்லறைக்குள்ளிருந்து
வெளிவந்த ரத்த காட்டாரி
மக்களை பயமுறுத்த
இரவு தான் சரியென கேட்டது!
எரிந்து கொண்டிருந்த பிணம்
எழும்பி வந்து
இரவில் தான் சரியாக எரிய
முடியுமென யாசித்தது!
தர முடியாதென வேகமாக நடந்தேன்!
இரவு இல்லையேல்
என் வருமானம் கிடையாதென
ஏக்கமாய் வந்து நின்றான்
இரவுக் காவலாளி!
கக்கத்தில் இருந்த இரவை எடுத்து
சந்தோஷமாய் அவனிடம் தந்தேன்!
15
எல்லோரையும் காப்பாற்ற
வேண்டுபவனின் கையில்
குளித்து மாலை சூடிய பெரிய ஆடு!
அரிவாளுடன் வந்து கொண்டிருக்கிறார் கடவுள்!
16
ஜாஸ் இசையில் மிதந்த வெள்ளைக்காரனை
தமிழ்ப் பாவால்
மிரட்டி வெளுத்த
கருப்பு மீசைக்காரன்!
17
கை நிறைய பணம் இருந்தும்
செலவழிக்க முடியவில்லை
வங்கியில் பணம்
பட்டுவாடா செய்பவர்!
18
விதை நெல்லை மட்டும்
விட்டு சென்ற அப்பாவுக்கு
வாய்க்கரிசி போடக் கூட வழி இல்லை!
– இப்படிக்கு
வங்கியால் வீடு பூட்டி
சீல் வைக்கப்பட்டு
நடுத்தெருவில் நிற்கும்
விவசாயி குடும்பம்!
29
பீடை யென
ஒதுக்கப்பட்டவளுக்கு
நடு வீட்டில்
தடபுடல் விருந்து!
அன்று பாட்டியின் நினைவு நாள்!
20
பத்தி புகையும்
அப்பாவின் புகைப்படத்தின் முன்
உணவு படைக்கப்பட்டது!
தினமும் விரட்டப்படும்
பிச்சைக்காரனுக்கு
இன்று சிவப்புக் கம்பள வரவேற்பு!
-ஜேசு ஞானராஜ்,
ஜெர்மனி