பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பக்கி என்று திட்டியிருப்போம், அதுபோல சில நேரங்களில் திட்டும் வாங்கியிருப்போம். இந்த வார்த்தையை அர்த்தமே தெரியாமல் திட்டுவதற்கு ஏன் பயன்படுத்தினார்களென்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு பறவை இனத்தின் பெயர். பக்கி ஒரு இரவாடிப்பறவை. இந்த இனத்தில் மட்டும் மொத்தம் 97 வகைகள் உள்ளன. இதில் ஐந்து வகை தமிழ் நாட்டில் உள்ளன. இதில் ஒருவகை தான் Jerdon’s Nightjar அறிவியல் பெயர் : Caprimulgus atripennis
Thomas Caverhill Jerdon (12 அக்டோபர் 1811 – 12 ஜூன் 1872) ஒரு விலங்கியலாளர், தாவரவியலாளர், மருத்துவரும் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்தவர். இயற்கை வரலாறு படிக்க 1828 ஆம் ஆண்டு எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் சார்லஸ் டார்வின் அவர்களைப் போன்றே இயற்கையில் ஆர்வமுடைய பேராசிரியர் ராபர்ட் ஜேம்சன் என்பவரிடம் சேர்ந்தார். அதே நேரத்தில் மருத்துவமும் முடித்த இவரை கிழக்கு இந்திய கம்பெனி 1836 ஆம் ஆண்டு சென்னையில் வேளைக்கு அமர்த்தியது.
இவர் இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சேகரிக்கத் துவங்கினார். துவக்கத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு கப்பலில் அனுப்பிவைத்தார். அவரிடம் போய் சேர்வதற்குள் இந்த பதப்படுத்தப்பட்ட பறவை உடல்கள் பூச்சிகளால் சிதைந்துபோனது. இதன் பிறகு வேறுவழியின்றி தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களைத் தானே உற்று நோக்கிக் குறிப்பெடுக்கத் துவங்கினார். இவரின் குறிப்புகளைக் கொண்டு “கேட்லாக் ஆப் த இந்தியன் பெனின்சுலா” என்ற நூலை 1839-1840 காலகட்டத்தில் வெளியிட்டார். இதில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
நீலகிரியில் 1841 ஆம் ஆண்டு பணியாற்றிய போதும் களப்பணியில் ஈடுபட்டு 1847இல் சென்னையில் “இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆப் இந்தியன் ஆர்னிதாலஜி” என்ற புத்தகத்தை வெளியிட்டார். நான்கு வருடங்கள் தக்காண பீடபூமி பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அறுவை சிகிச்சை நிபுணராகத் திரும்பவும் சென்னையில் அக்டோபர் மாதம் 1858 ல் பணியாற்றிய பொழுது உடல் நிலை சரி இல்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு டார்ஜிலிங் சென்றார். ஹிமாலயாவில் உள்ள விலங்குகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். பின்பு பர்மாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார், அங்கிருக்கும் விலங்குகளையும் சேகரித்தார், அந்த பகுதி பற்றித் தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.
ஜெர்டன் பணி ஓய்வுபெற்று 1862இல் இங்கிலாந்து திரும்பினார். அங்கே இரண்டு தொகுதிகளாக “தி பேர்ட்ஸ் ஆப் இந்தியா” என்ற நூலை வெளியிட்டார். இதற்குப் பிறகு இந்தியாவில் பறவைகளைப் பற்றி வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு இந்த நூலே முன்னோடியாக அமைந்தது.
பெர்விக்ஷயர் இயற்கை வரலாற்றுக் கழகம் 1871 இல் உறுப்பினராக இணைந்தார். உடல் நிலை குறைபாடு காரணமாக 1872 ல் இறந்தார். இறப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன் வரை அவருடைய நண்பருடன் பறவைகளைப் பற்றியே பேசியுள்ளார்.
சில பறவைகளுக்கும் கருங்கொண்டை வல்லூறு, பச்சைக்குருவி இனம், வானம்பாடி, கல் குருவி மற்றும் புதர்ச்சிட்டு ஆகிய பறவைகளுக்கும், மூன்று வகையான பல்லிகளுக்கும் மூன்று வகையான பாம்புகளுக்கும் ஜோர்டான் அவர்களின் பெயரை வைத்துக் கவுரவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட பக்கி வகை பறவைகள் பிப்ரவரி முதல் மே மாதம் வரை இலங்கை பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன. சிறு செடிகள் முளைத்துள்ள சிற்றோடைக் கரையில் தரையில் காய்ந்த இலைதழைகளைக் குவித்து 2 முட்டைகள் வரை இடுகின்றன.
பசுமை மாறாக் காடுகளையும், புதர்க் காடுகளையும் சார்ந்து மலைகளில் 2000மீ உயரம் வரையிலும் ஆங்காங்கே காணலாம். பழுத்து உதிர்ந்து கிடக்கும் இலைகளிடையே உருமறை தோற்றத்தோடு எளிதில் பார்வைக்குப் புலப்படாத படியாக சுற்றுச் சூழலோடு ஒன்றிப்போய் பகலெல்லாம் படுத்திருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகப் பத்துப் பன்னிரண்டு பறவைகள் கூடக் குழுவாக இருக்கக் காணலாம். மரக்கிளைகளில் குறுக்காகவும் நெடுக்காகவும் படுத்தபடி சயுங், சயுங் என உரக்கச் சம்மட்டியால் அடிக்கும்போது எழும் ஒலி போல குரல் கொடுக்கும்.
முக்கியமாக இந்த பக்கிகள் இரவாடி பறவைகளாகும். இவை இரவில் சுற்றித்திரியும் புழு பூச்சிகள் மற்றும் பறக்கும் இறக்கையுள்ள பூச்சிகள் ஆகியவற்றை இரையாக உண்டு வாழ்கிறது. பக்கிகள் மட்டுமில்லை இது போல் பல விலங்கினங்களின் பெயர்களை நாம் தவறான உதாரணத்திற்காகவும், மூடநம்பிக்கைகளின் குறியீடாகவும், வெறுப்புக்கான வார்த்தைகளாகவும் சித்தரித்து வைத்துள்ளோம். இனிமேல் இதுபோன்ற செயல்களைத் தவிர்ப்போம். மாறாக இயற்கையைப் புரிந்துகொண்டு இவற்றினை விரும்பி இரசித்துப் பாதுகாப்போம்.
தரவுகள்
Oldham, T. (1873). “Address of the President”. Proceedings of the Asiatic Society of Bengal: 46.
Penny FE (1908). On the Coromandel coast. London: Smith, Elder & Co. pp. 113–115.
Price, Frederick (1908). Ootacamund: A history. Madras Government Press. p. 167.
Paliwal, G. T., & Bhandarkar, S. V. Observations on Habitat Use and Breeding Biology of Indian Nightjar: Caprimulgus asiasticus (Lathum, 1790): Caprimulgidae.
முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி