Posted inPoetry
கசடற கற்றிடு மகளே.. !! கவிதை – ஜெயஸ்ரீ
உயிர் மெய் கற்ற பள்ளியில்
ஆய்த எழுத்தோடு சேர்த்து
ஆயுதமும் கற்றுக் கொள் மகளே..
கல்விக் கூடமாக இருந்தது
கலவிக் கூடமாக மாறுவது
கண்டு பயந்திடாதே மகளே..
பாரதி கண்ட புதுமைப்பெண் நீ
பாரதியை தான் காணவில்லை
துணிந்து எழு மகளே..
தாய் தந்தையின் உழைப்பும்
அவர்களின் கனவும் நீ தானே
தளர்வுறாதே மகளே..
இறக்கையை விரித்திடு
பட்டாம்பூச்சியாய் அல்ல
கழுகினைப் போல மகளே..
நீ இன்று ஒடுங்கினால்
உன் சந்ததியும் நாளை ஒடுங்குமே
முன்னேற வா மகளே..
தவறுகளைத் தவிடு பொடியாக்க
கயவர்களைத் தட்டிக்கேட்க
கசடற கற்றிடு மகளே..