யதார்த்தம் கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி
காரணங்கள் பல இருக்கலாம்
இப்போது தான் தோன்றுகிறது
அவர் இறக்கும் போது
தாடியை ஆண்களுக்கும்
தடியைப் பெண்களுக்கும்
கண்ணாடியைச் சமுதாயத்திற்கும்
கொடுத்து விட்டுச் சென்றிருக்கலாம்
வைக்கோம் வீரர் உழைத்தது போதவில்லை
அதற்கு இன்றளவும் சமூகம்
சாட்சியாகத் தான் நிற்கிறது
ஊடகத்தைப் பார்த்து கருத்து பேசியே
காலத்தைத் தீர்ப்பதும்
பொருட்காட்சியைப் போலவே
கடந்து செல்வதும்
இயல்பாகி விட்டது
ஜெயஸ்ரீ பாலாஜி கவிதைகள்
1) மழலை பொக்கிஷம்
****************************
மழலை பொக்கிஷம்
மடை திறந்தது
தெற்குப் புறமாய்த் திரும்பி நின்றது
மேளக்கருவி தொலைத்த யானை
வாசலில் படுத்து கிடந்தது
குட்டிகளோடு மஞ்சள் வாத்து
காய்ந்து போன பருக்கைச் சோறுடன்
பழுப்பு நிற நாய்க்குட்டி
திக்குத் திசை தெரியாமல்
உருண்டோடிய வண்ணப் பந்துகள்
கட்டிலுக்கு அடியில்
கவிழ்ந்து கிடக்கும் பேருந்து
வீடெங்கும் பரப்பிக் கிடக்கும்
கட்டடத் தொகுப்புகள்
ஒரு காது காணாமல் போன
கறுப்பு வெள்ளைப் பாண்டா கரடி
வாலறுந்த ஒட்டகச்சிவிங்கி
என அத்தனையும்
தனிமையில் தவித்தன
நீ மண்ணில் விளையாடச்
சென்றதில்…
2) வழிப்போக்கர்கள் தேவை..
***********************************
மதத்திற்கும்
மனதிற்கும்
இடையே ஒரு வனம்
அதில் ஒரு மனித குரங்கு
குரங்கின் வாலில் சாதீ
அது மரத்திற்கு
மரம் என தாவி
தீயைப் பரப்பியது
பரப்பிய தீயில்
புகை சூழ்ந்து
சமத்துவம் மூச்சு
முட்டித் திணறியது
சுயபுத்திச் சருகுகள்
தீயில் கருகத் தொடங்கின
காட்டின் இடது புறமாக
வழிப்போக்கன்
ஒருவன்
தனது எழுத்தால்
தீயைத் தணித்தான்
அனல் குறைந்து
சமத்துவம் பெருமூச்சு விட்டது
குரங்கின் வாலில்
தீ மிச்சம் உள்ளது
மரம் தாவிக் கொண்டே இருக்கிறது
இன்னும் கொஞ்சம்
வழிப்போக்கர்கள்
தேவைப்படுகிறார்கள்