மோடி அரசின் அரசியலமைப்பு தினக் கொண்டாட்டமும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒன்பது வழக்குகளும் – ஜானவி சென் | தமிழில்: தா.சந்திரகுரு
எழுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நாளில் (நவம்பர் 26) அரசியலமைப்பு நிர்ணய சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1950 ஜனவரி 26 அன்றிலிருந்து நமது நாட்டின் அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழலில் நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளும், பாதுகாப்புகளும் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விகள் நம்மிடையே எழுந்துள்ளன.
இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான பல வழக்குகள் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வருகின்றன. குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நமது அரசியலமைப்பு தந்திருக்கும் உத்தரவாதத்தை மீறுவதாகக் கருதப்படுகின்ற அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் மீது தொடரப்பட்டுள்ள சில வழக்குகளின் பட்டியல் இங்கே தரப்படுகிறது:
1. 370ஆவது சட்டப்பிரிவு
நரேந்திர மோடி அரசாங்கம் முன்பிருந்த ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சியை வழங்கி வந்த அரசியலமைப்பின் 370 மற்றும் 35A பிரிவுகளை நீக்குவது என்று 2019 ஆகஸ்ட் 5 அன்று ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தது. அதே நேரத்தில் அப்போதிருந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கின்ற ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றிக் கொண்டது.மோடி அரசின் அந்த முடிவு ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி, அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சமீபத்தில் அந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளும் மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான M.Y.தாரிகாமி தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுக்களில் பெரும்பாலானவை ஒன்றிய அரசு தனது நடவடிக்கையை அறிவித்த உடனேயே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்கு பட்டியலிடப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது.
ஜம்மு, காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்தை மாற்றுவதற்கான ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று 2019 ஆகஸ்ட் 28 அன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2020 மார்ச் 2 அன்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பாக அந்த விவகாரம் பட்டியலிடப்பட்டது.
2. குடியுரிமைச் சட்டத் திருத்தம்
நாடு முழுவதும் எழுந்த மிகப்பெரிய அளவிலான எதிர்ப்புகளை மீறி சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2019 டிசம்பர் 11 அன்று பாராளுமன்றம் நிறைவேற்றியது. சுதந்திர இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கு முதன்முறையாக மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்த அந்த சட்டம் மிகக் கடுமையாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
அந்த சட்டத்திருத்தத்தில் 2014 டிசம்பர் 31க்கு முன்பு ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து உரிய ஆவணமில்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றிருந்தது. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் ஹிந்து, சீக்கியர், பார்சி, பௌத்தர் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்றிருந்ததுதான் பிரச்சனையானது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதற்கும் அமல்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்துடன் இணைத்து, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை குறிவைப்பதற்காக அந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்றே பலரும் நம்பினர்.குடிமக்களின் போராட்டங்களுக்கு அப்பால் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட உடனேயே சட்டரீதியாகவும் அது எதிர்கொள்ளப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) முதலாவதாக சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் மேலும் தொடரப்பட்ட 143 மனுக்கள் அந்தச் சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மையை கேள்விக்குள்ளாக்கின. சட்டத்தை விமர்சனம் செய்தவர்களும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாக, பதினான்காவது சட்டப் பிரிவிற்கு (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) எதிரானதாக இருக்கிறது என்ற வாதங்களை முன்வைத்தனர். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையர் மைக்கேல் பாச்லெட் கூட, உச்சநீதிமன்றத்தில் அந்தச் சட்டத்திற்கு எதிராக இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இதுவரையிலும் அந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்தைப் பெறவில்லை. சட்டத் திருத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் 2020 ஜனவரிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நான்கு வார கால அவகாசம் அளித்தது. இருப்பினும் இரண்டரை மாதங்களுக்குப் பிறகுதான் ஒன்றிய அரசின் முதல் பதில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு முழுவதும் மூன்று நாட்களில் மட்டுமே விசாரிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் ஒருமுறை கூட விசாரணை நடைபெறவில்லை.
இதுதவிர அந்தச் சட்டத்திற்கான விதிகள் இன்னும் ஒன்றிய அரசால் இறுதி செய்யப்படவில்லை.
3. தேர்தல் பத்திரங்கள்
2017ஆம் ஆண்டு நிதிச்சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே கொண்டு வரப்பட்ட ஒன்றிய அரசின் 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுவான காரணம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘எந்தவொரு அதிகார மையத்தாலும் சரிபார்க்க இயலாத தெளிவற்ற நிதியமைப்பு’ என்று குறிப்பிட்டு அந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மாநிலங்களவையை முழுமையாகத் தவிர்த்து விட்டு நிதிமசோதாவாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.தேர்தல் பத்திரங்கள் திட்டமானது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னராக முற்றிலும் அநாமதேயமாக நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது. 2017ஆம் ஆண்டிலேயே வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், 2019ஆம் ஆண்டில்தான் நீதிமன்றம் அந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அதற்குள்ளாக தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்திற்கோ, பல சந்தர்ப்பங்களில் – மிக சமீபத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் – தேர்தல் பத்திரங்களின் விற்பனைக்கோ தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் ஆகியவை தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து கடுமையான சந்தேகங்களும், கருத்து வேறுபாடுகளும் கொண்டிருந்த போதிலும், நரேந்திர மோடி அரசாங்கம் அந்த திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பதாக பல அறிக்கைகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களிலிருந்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய அரசாங்கம் தன்னுடைய சொந்த விதிகளையோ அல்லது விதிமுறைகளையோ பின்பற்றவில்லை என்பதுவும் தெரிய வந்துள்ளது.2019 ஏப்ரல் 12 அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முத்திரையிடப்பட்ட உறையில் தேர்தல் பத்திரங்களின் கீழ் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டது. இருப்பினும் அந்த அமர்வு அதற்குப் பிறகு அந்த வழக்கை மீண்டும் பட்டியலிடவில்லை. மிக சமீபத்தில் அவரது ஓய்விற்குப் பிறகு அந்த வழக்கு பற்றி கோகோயிடம் கேட்கப்பட்ட போது, தனக்கு ‘நினைவில் இல்லை’ என்று அவர் பதிலளித்திருந்தார்.
4. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்
தெளிவற்ற விதிமுறைகள், அதன் தவறான பயன்பாட்டிற்காக மிகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ள உபா என்ற சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் என்ற ‘பயங்கரவாத எதிர்ப்பு’ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் அந்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் அரசு ஊழியர்கள் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பியது. மோடி அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் செய்து அதை இன்னும் கடுமையாக்கிய உடனேயே 2019ஆம் ஆண்டில் இந்த விஷயம் குறித்து இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சட்டத்திருத்தம் ஓர் அமைப்பை மட்டுமல்லாது தனிநபர் ஒருவரைக்கூட பயங்கரவாதி என்று அறிவிக்க அரசை அனுமதிக்கின்றது.குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை கிடைப்பதை உபா சட்டத்தில் உள்ள விதிகள் மிகவும் கடினமாக்குவதாலும், விசாரணைகள் பல ஆண்டுகளுக்குத் தொடரலாம் என்பதாலும் வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஒருவருக்கு நீண்ட கால சிறைவாசம் உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்று சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசியலமைப்பின் பதினான்காவது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் சம உரிமை, சட்டப்பிரிவு 19(1)(a)இன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் 21ஆவது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியவற்றை இந்தச் சட்டம் மீறுகிறது என்று மனுதாரர்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர். உபா சட்டத்தின் கீழ் மிகக் குறைந்த தண்டனை விகிதமே – அதாவது 2.19% மட்டுமே – இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். சமீபத்திய அரசு ஊழியர்களின் மனுவில் ‘இந்த மிகக் குறைந்த தண்டனை விகிதம் உபாவின் கீழ் தொடரப்படுகின்ற வழக்குகள் ‘மோசமான நம்பிக்கையின்’ அடிப்படையில் மட்டுமே தொடங்குவதையும், வழக்கிற்கான ஆதாரங்களின் தரம் போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. வேளாண் சட்டங்கள்கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு முன்பாகவே, வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம் – 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தச் சட்டம் – 2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் – 2020 ஆகிய மூன்று சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளாக 2021 ஜனவரியில் இந்த மூன்று சட்டங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த மூன்று சட்டங்கள் மற்றும் பிற அரசாங்கக் கொள்கைகள் மிகப்பெரிய பெருநிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றனவே தவிர, விவசாயிகளுக்கு அல்ல என்றும் கூறி இந்த சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அரசாங்கம் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும், மத்தியஸ்தம் செய்வதற்கும் ஒரு குழுவை நீதிமன்றம் அமைத்தது. ஆனால் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களாகக் காணப்பட்டதால் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அந்தக் குழுவை பலரும் விமர்சிக்கவே செய்தனர்.தன்னிச்சையானவையாக, சட்டப்பிரிவு 14ஐ மீறுவதாக வேளாண் சட்டங்கள் இருப்பதாக அந்தச் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
6. தகவல் தொழில்நுட்ப விதிகள்
ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் – 2021க்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பச் சட்டம் – 2000இன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த விதிகள் ஊடக தளங்கள், ஓடிடி (OTT) ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் சமூக ஊடக இடையீட்டாளர்களை ஒழுங்குபடுத்த முயல்கின்றன. உள்ளடக்கத்தை நீக்குகின்ற உரிமை உட்பட, ஒன்றிய அரசிற்கு விரிவான அதிகாரங்களை அந்த விதிகள் வழங்குகின்றன. செய்தி இணையதளங்கள், பத்திரிக்கையாளர் அமைப்புகள், இணைய சுதந்திரத்திற்கான ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரின் விமர்சனத்திற்கு இந்த விதிகள் ஆளாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக முதன்முதலாக சட்டரீதியாக சவால் விடுத்து தி வயர் இணைய இதழின் நிறுவன ஆசிரியர் எம்.கே.வேணு மற்றும் தி நியூஸ் மினிட் இதழின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தகவல் தொழில்நுட்ப தோற்றுவாய்ச் சட்டத்தை மீறுவதாக அந்த விதிகள் இருக்கின்றன என்று அவர்களுடைய மனுக்களின் மூலம் வாதிடப்பட்டது. அதற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் லைவ் லா, மலையாள மனோரமா, தி குயின்ட், பி.டி.ஐ உள்ளிட்ட பிற ஊடக நிறுவனங்களும் வழக்குகளைத் தாக்கல் செய்தன. தகவல் தொழில்நுட்பச் சட்டம், அரசியலமைப்பு விதிகள் 14 (சட்டத்தின் முன் அனவரும் சமம்) மற்றும் 19(1)(ஜி) (எந்தவொரு தொழிலையும் மேற்கொள்வதற்கான சுதந்திரத்திற்கான உரிமை அல்லது தொழில், வர்த்தகம் அல்லது வணிகத்தை மேற்கொள்வதற்கான உரிமை) ஆகியவற்றை அந்த விதிகள் மீறுவதாக அவர்களுடைய மனுக்களில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப்பும் இந்த விதிகள் அரசியலமைப்பிற்கு, தனியுரிமைக்கான அடிப்படை உரிமைக்கு எதிரானவை என்று குறிப்பிட்டு விதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
7. பெகாசஸ்இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ (NSO) குழுமத்தால் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டுள்ள உளவு மென்பொருள் மூலம் பத்துக்கு மேற்பட்டவர்களின் ஸ்மார்ட் போன்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன, இலக்கு வைக்கப்பட்டன என்பதை தி வயர் மற்றும் உலகளாவிய அதன் ஊடகப் பங்காளிகள் தங்களுடைய பெகாசஸ் திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கண்டறிந்தன. உலகம் முழுவதும் பெகாசஸின் இலக்குகளுக்கு ஆளானதாக தரவுத்தளத்தில் கசிந்த தொலைபேசி எண்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்தனர்.
என்எஸ்ஓ குழுமம் பெகாசஸ் உளவு மென்பொருளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்றிருக்கிறது.
பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் என்று ஐந்து பேர் உள்ளிட்டு மொத்தம் ஒன்பது மனுக்கள் இந்த விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டுமென்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அக்டோபர் 27 அன்று இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்திய அரசாங்கத்திடம் இருந்து உளவு மென்பொருளை வாங்கியதற்கும், பயன்படுத்தியதற்குமான குறிப்பிட்ட மறுப்பு எதுவும் வரவில்லை என்பதால், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுயாதீன நிபுணர் குழு ஒன்றை அமைப்பதாகத் தெரிவித்தனர். குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், குடிமக்களின் தனியுரிமை, பேச்சு சுதந்திரத்திற்காக அரசியலமைப்பு வழங்கியுள்ள உத்தரவாத உரிமைகள் மீது அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
குழு தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு விசாரணை துவங்கிய நாளிலிருந்து எட்டு வாரங்கள் கால அவகாசத்தை அந்த அமர்வு வழங்கியது – அதாவது தற்போது அந்தக் குழு தன்னுடைய பணிக்காலத்தின் பாதியை முடித்து விட்டது.
8. தேசத்துரோகம்
காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசத்துரோகச் சட்டத்தை (இந்திய தண்டனைச் சட்டத்தின் 124Aஆவது பிரிவு) எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. பத்திரிகையாளர்கள் கிஷோர்சந்திர வாங்கெம்சா, கன்னையாலால் சுக்லா, ஒன்றிய முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோரின் ஏழு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுதாரர்கள் தேசத்துரோகச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர். தேசத்துரோகம் என்ற அந்த வார்த்தை தெளிவற்று இருப்பதாகவும், அதனால் போதுமான உறுதியுடன் கிரிமினல் குற்றத்தை வரையறுக்க முடியவில்லை என்றும் அவர்களுடைய வாதம் தொடர்ந்தது. மேலும் கூடுதலாக அந்த 124A ஆவது பிரிவு அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை மீறுவதாகவும் இருக்கிறது.
‘இந்தச் சட்டம் இன்னும் ஏன் தேவைப்படுகிறது’ என்று இந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியது. ‘சட்டம் பற்றிய இந்த சர்ச்சை சுதந்திர இயக்கத்தை நசுக்குவதற்காக இருந்த காலனித்துவ சட்டத்துடன் – மகாத்மா காந்தி, திலகர் போன்றவர்களை மௌனமாக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட சட்டத்துடன் – தொடர்புடையது. சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சட்டம் தேவைதானா?’ என்ற கேள்வியை தலைமை நீதிபதி என்.வி.ரமணா எழுப்பியிருந்தார்.
2010 மற்றும் 2014க்கு இடைப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் – 2014 மற்றும் 2020க்கு இடையிலான காலகட்டத்தில் – உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி தொடுக்கப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் 28% அதிகரித்திருப்பதாக ஆர்ட்டிக்கிள் 14 இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.
9. பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான (EWS) இடஒதுக்கீடு
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதற்காக 103ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு 2018 ஜனவரியில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் இருபது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை பொருளாதார நிலை மூலமாக மட்டுமே வரையறுக்க முடியாது என்றும், இந்த திருத்தம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக இருக்கிறது என்றும் மனுதாரர்களின் வாதங்கள் இருந்தன.இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது என்று 2020 ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் முடிவு செய்தது. தாகக்ல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்ற சட்டத்தின் அடிப்படையிலான கேள்வியை எழுப்பியுள்ளதாக நீதிமன்ற அமர்வு கருதியது. ஆனாலும் அந்தச் சட்டம் இடைநிறுத்தி வைக்கப்படவில்லை.
அரசியல் சாசன அமர்வு முன்பாக இன்னும் விசாரணை தொடங்கவில்லை என்றாலும், பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான மற்ற வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான அளவுகோலாக ஆண்டு வருமானம் எட்டு லட்சம் ரூபாய் என்று ஏன் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று மிக சமீபத்தில் ஒன்றிய அரசிடம் கேள்வியை எழுப்பியது. இந்த வரம்பை மறுபரிசீலனை செய்வதாக இப்போது ஒன்றிய அரசு கூறியுள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு மேலும் தாமதமாகும் நிலைமையே உள்ளது.
https://thewire.in/law/constitution-day-court-challenges-basic-rights
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு