நூல் அறிமுகம்: டேவிட் எஃப்.நோபில் ’FORCES OF PRODUCTION’ – ஜீவா
அதிநவீன தொழில்நுட்பம் ஏன் வறுமையை இன்னும் ஒழித்த பாடில்லை?
நூல் அறிமுகம்:Forces of Production(1984) by David F Noble
ரிச்சர்ட் லிங்கலேட்டர் என்னும் அமெரிக்க இயக்குனர் எடுத்த Before Sunrise (1995) திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்:
“சில பேர் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எவ்வளவு நேரத்தை சேமிக்கலாம் தெரியுமா என மகிழ்ச்சியுடன் தொழில்நுட்பத்தை சிலாகிக்கின்றனர். ஆனால் சேமித்த நேரத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்கா விட்டால் அந்த தொழில்நுட்பத்தால் என்ன தான் என்ன பயன்? ஒரு வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு சேமித்த நேரத்தை வேறு ஒரு கடினமான வேலையில் செலுத்துவதற்கு எதற்காக அந்த நேரத்தை சேமிக்க வேண்டும்? நான் பயன் படுத்தும் அந்த word processor எனது நேரத்தை சேமித்து கொடுத்தது. சேமித்த நேரத்தை நான் ஒரு ஜென் மடாலயத்தில் ஏகாந்தமாக கழித்தேன் என்று ஒருவருமே சொல்வதில்லையே!”
பிரிட்டன் நாட்டின் முக்கிய பொருளாதார மேதை என அழைக்க பெற்ற ஜான் மாய்னார்ட் கெய்ன்ஸ் சென்ற நூற்றாண்டில் தொழில்நுட்பம் வளரும் வேகத்தை கண்டு மானுடத்தின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார். எதிர்கால மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலைகளை மிகக் குறைந்த நேரத்திற்குள் முடித்து விட்டு மீதமிருக்கும் நேரத்தை தங்களுக்கு மிகப்பிடித்த, தங்கள் ஆன்மாவிற்கு திருப்தி தரக்கூடிய செயல்களில் ஈடுபடுத்தலாம். அதுவே மானுடத்தின் மகத்தான சாதனையாக இருக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அவர் கணித்து கிட்ட தட்ட மூன்று தலைமுறைகளுக்கு பின்னரும் மானுடம் அப்படி எந்த பெரிய முன்னேற்றத்தையும் அடைந்த பாடில்லை.
இன்னமும் இந்திய போன்ற நாட்டின் பசி மற்றும் ஊட்டச்சத்தை பற்றிய தரவுகளில் அதன் மக்களில் கணிசமான பேர் போதுமான அளவிற்கு உணவு உட்கொள்ளுவதில்லை அல்லது போதிய ஊட்டச்சத்தை அவர்களும் அவர்களது பிள்ளைகளும் பெறுவதில்லை என்ற உண்மையை மட்டுமே நம்மால் காணமுடிகிறது. சப்-சஹாரன் ஆப்ரிக்க நாடுகளை விட பசி மிகுந்த நாடாகவே இந்தியா உலகெங்கும் அறியப்படுகின்றது. அத்தனைக்கும் இந்தியாவில் உழைப்பிற்கு எந்த விதத்திலும் குறைபாடில்லை. நமது முந்திய தலைமுறையை விட அதிக நேரம் உழைப்பவர்களாகவும் சட்ட ரீதியாகவே அனுமதிக்கப்பட்ட உழைப்பு சுரண்டலுக்கு ஆளானவர்களாகவும் தான் நமது தொழிலாளர் பட்டாளம் இருப்பதை பல தொழிலார்நல செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
***
இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில் ஜெர்மனியை வீழ்த்த சோவியத் யூனியன் ஆற்றிய நிகரற்ற பங்கின் காரணமாகவும் 1929-33 காலகட்டங்களில் உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சோவியத் யூனியனை கொஞ்சமும் அண்டாத காரணத்தினாலும் உலகமெங்கும் கம்யூனிச கருத்துக்களும் பொதுவுடைமை கொள்கை பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்க துவங்கின. ஏன் முக்கியமாக முதலாளித்துவத்தின் சர்வதேச முகமாக விளங்கிய அமெரிக்காவிலும் கூட தொழிற்சங்கங்கள் பல்கி பெருகின. இதன் காரணமாக அமெரிக்காவின் தொழிலதிபர்கள் வேறு வழியின்றி அடிக்கடி கூலி உயர்வுகள், அதிக விடுப்புகள் போன்ற உரிமைகளை தொழிலாளர்களுக்கு தர வேண்டிய சூழல் ஏற்பட்டது. முன்பை விட அதிகமாக வேலைநிறுத்தங்களும் தொழிலாளர் போராட்டங்களும் நிகழத் தொடங்கின. அதே நேரத்தில் உலக அளவில் சோவியத் யூனியனின் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம்/பாதிப்பு கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் அல்லாது ஆசியா ஆப்பிரிக்கா வை சேர்ந்த நாடுகளிலும் பரவ தொடங்குவதை அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் கொஞ்சமும் ரசிக்கவில்லை.
தொழிலாளர்கள் கை ஓங்குவதை விரும்பாத அமெரிக்க தொழிலதிபர்களும், கம்யூனிச பரவலை தடுக்க திணறிய அமெரிக்க அரசாங்கமும் ஒருவருக்கொருவர் கை கோர்த்து ஒரு புது ஒப்பந்தத்தை நோக்கி நகரத்துவங்கினர். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பொதுவுடைமை சிந்தனை பரவலை தடுத்தாக வேண்டும். அதற்காக புது உத்திகளை கையாள வேண்டும். எனவே இனிமேல் அரசாங்கத்தின் வருடாந்திர செலவில் ஒவ்வொரு வருடமும் ஒரு கணிசமான பகுதியை பாதுகாப்பு குறிக்கோள்களை நோக்கி ஒதுக்க வேண்டும். அதற்கு புதிய தொழில்நுட்பங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் விஞ்ஞான தொழில்நுட்ப துறை முழுவதையும் பாதுகாப்பு துறையின் கண்காணிப்பில் வைத்து பாதுகாப்பு துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே பெருமளவில் ஏற்பவாறு அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது அரசு.
அதே நேரத்தில் தொழில் துறை ஆனது மனித உழைப்பின் தேவையை பெருமளவில் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். அதன் பொருட்டு தானியங்கி சாதனங்களையும் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்க முதலீடு செய்ய வேண்டும் என்று முதலாளி வர்க்கம் முடிவு செய்தது. இதனால் அமெரிக்காவின் பல்வேறு பல்கலை கழகங்களின் நிர்வாக செலவுகளுக்கும், அங்கே ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு தரப்பட வேண்டிய மானியங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பு துறை மற்றும் பெருநிறுவனங்கள் தரும் நிதியே ஆதாரமாக மாற துவங்கின. இதனால் புதிதாக ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் அவர்கள் நாட்டின் தொழில்வளர்ச்சி, குறிப்பாக பெருநிறுவனங்கள் ஈட்டும் லாபத்தை தானியங்கி தொழில்நுட்பங்களின் மூலம் பன்மடங்காக பெருக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு, குறிப்பாக குறுகிய நேரத்தில் அதிக பட்ச அழிவை ஏற்படுத்தும் ராணுவ தளவாடங்களை உருவாக்குதல் மற்றும் எதிரி தேசங்களை நூதன முறைகளில் கண்காணித்தல் ஆகிய குறுகிய வட்டங்களுக்கு வெளியே சிந்திக்காத வாறு பாடத்திட்டங்களும் கொள்கை வரையறைகளும் அப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டன. இவ்விரு வட்டங்களுக்கு வெளியே உதாரணத்திற்கு விவசாய வளர்ச்சிக்கோ அல்லது சமூகத்தின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்கோ ஏற்றவாறு புதிய ஆராய்ச்சிகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு மானியம் கொடுப்பது மற்றும் அறிவுசார் ஆதரவளிப்பது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் உடனடியாக நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டன.
1940களில் தொடங்கிய இந்த போக்கு அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தில் வெளிப்படையான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு தான் எத்தகையது? ஒரு நவீன ஜனநாயக அரசானது தனக்கு நிதி ஆதாரமாய் இருக்க கூடிய தனது மக்கள் தரும் வரிப்பணத்தை வைத்து தான் புதிய பாடசாலைகளையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் உருவாக்குகிறது. அந்த கல்வி நிலையங்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளும் அவை உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்களும் அவற்றை சாத்தியப்படுத்துவதற்கு பணத்தை வாரி இறைத்த பொது மக்களின் வாழ்க்கை மேம்பாடு, வறுமை ஒழித்தல் ஆகிய நோக்கங்களின் பொருட்டு தான் நடைபெறுகின்றனவா?
அப்படி நடக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் சாமானிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு சிறிதும் உதவாத புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் யாருக்கு உதவும் பொருட்டு தான் நடை பெறுகின்றன ? செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), க்ரிப்டோ மற்றும் டிஜிட்டல் கரன்சி. இயந்திர வழி கற்றல்(machine learning), தகவல் அறிவியல் (data science) போன்ற வியக்கத்தக்க புதிய தொழில்நுட்பங்கள் மிகுந்து வளர்ந்து வரும் இதே யுகத்தில் தான் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் கூட தேறாத மக்களின் கைகளில் கிட்டத்தட்ட உலகத்தின் ஐம்பது சதவிகத்திற்கும் அதிகமான செல்வம் சேர்ந்திருப்பதென்பது வெறும் விபத்தா? அல்லது தொழில்நுட்பத்திற்கும் பெருமுதலாளிகள் மேலும் பன்மடங்கு வளர்ச்சியடைவதற்கும் நேரடியான தொடர்பு ஏதும் உண்டா?
ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று அதே தொழில் நுட்பத்தில் பத்து வருடம் வேலை செய்து அதில் செம்மை அடைந்த ஒரு ஐடி ஊழியர் திடீரென சந்தையில் உதித்திருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உடனடியாக கற்று கொண்டு நிபுணத்துவம் அடையவில்லை என்றால் அவர் சட்டென்று பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் எனில் அது யாருடைய குற்றம்? தொழில்நுட்பங்கள் மனித சமூகங்களுக்கு உதவி செய்யவும் அவர்கள் வாழ்வில் மேன்மையுறவும் கண்டுபிடிக்க படுகின்றனவா அல்லது அவர்களை மேலும் வறுமையில் தள்ளத்தான் உருவாக்க படுகின்றனவா?
தொழில்நுட்ப புரட்சிகள் ஒரு பெரிய சமூகத்தின் ஒரு மிகக்குறுகிய சிறுபான்மைக்கே பலன் அளிக்கும் எனில், அந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மீதம் இருக்கும் ஒட்டு மொத்த சமூகமும் தன்னை தானே தகவமைத்து கொண்டு தான் ஆக வேண்டும் எனில், அப்படி செய்யாத பட்சத்தில் அச்சமூகம் வறுமையில் சிக்கி அழியும் எனில் மாற வேண்டியது சமூகத்தின் கடமையா அல்லது தொழில்நுட்ப வளர்ச்சி செல்லும் திசையும் அதனை இயக்கம் சக்திகளுமா ? நண்பர்கள் மூன்று பேர் அடையாரிலும் ஒருவர் ஆவடியிலும் இருக்கிறார் எனில் அவர்கள் நால்வரும் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தார்கள் எனில் அந்த ஆவடிக்காரர் அடையாருக்கு செல்வது சரியா அல்லது அந்த மூவரும் ஆவடிக்கு செல்வது உசிதமா ?
***
1960களின் துவக்கத்திலேயே அமெரிக்காவில் ஆராய்ச்சியும் சோதனை முயற்சிகளும் முடிந்த புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வர துவங்கின. குறிப்பாக இயந்திர கருவிகள் துறை (machine tools industry) சார்ந்த தொழிற்சாலைகளில் புதிய தானியங்கி தொழில்நுட்பங்களை பெரு முதலாளிகள் பயன்படுத்த துவங்கினர். அத்தனை ஆண்டுகள் மனித உழைப்பை சார்ந்திருந்த உற்பத்தி படுவேகமாக இயந்திரம் சார் உற்பத்தியாக மாறத்தொடங்கியது. மனித உழைப்பின் தேவை குறைய ஆரம்பித்த தொழிற்சாலைகளில் நிரந்தர ஊழியர்கள் அவசியமற்றவர்கள் ஆக தொடங்கினர். தற்காலிக தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவ்வளவு ஏன் வழக்கமாக அந்த அந்த துறைக்கு தேவைப்படும் தொழிலாளர் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவான ஊழியர்களே போதும் என்ற நிலை உருவானது. புதிதாகவும் தாற்காலிகமாகவும் சேர்ந்த ஊழியர்களால் தங்களது நிச்சயமற்ற மற்றும் குறுகிய பணிக்காலங்களின் காரணமாக பல ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி வந்த தொழிற்சங்கங்களில் சேர முடியாமல் போனது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று பயிற்சி அளிக்கப்படாததால் அவர்களுக்கு மற்ற இடங்களிலும் வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. பெரு நிறுவனங்களால் புதிய இயந்திரங்களின் வழியாக சந்தையில் பொருள்களை மிக குறைந்த விலைக்கு வியாபாரம் செய்ய முடிந்தது. இதனால் சிறு முதலாளிகளும் பழைய தொழில்நுட்பங்களை தூக்கி எறிந்து மிகவும் விலை உயர்ந்த புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களும் பெருமளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய துவங்கினர்.
இவற்றின் பயனாக எண்ணிக்கை சக்தி மற்றும் அனுபவமிக்க தொழிலாளர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றை இழந்த தொழிற்சங்கங்கள் தங்களது பேரம் பேசும் சக்தியை இழக்க தொடங்கின. வேலை வாய்ப்புகள் பறிபோக ஆரம்பித்த சமயம் குறிப்பாக 1970களில் அமெரிக்கா மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தினால் மக்களின் வாங்கும் சக்தி பெருத்த அடிவாங்கியது. பொருளாதாரத்தில் பண்டங்களின் தேவை குறைந்ததனால் விலை வாசியும் குறைய ஆரம்பித்தது. இதனால் பெரு முதலாளிகளின் லாப விகிதம் மேலும் குறைய ஆரம்பித்தது. நஷ்டத்தில் இருந்து தப்பிப்பதற்கு மேலும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்தன அந்நிறுவனங்கள். பண்டங்களின் தேவை குறைந்ததனால் அவற்றை தயாரிக்க தேவையான ஊழியர்களின் தேவையும் குறைந்தது. பொருளாதார நெருக்கடி தீர்க்க முடியாத நிலையை அடைந்தது. பாதிப்படைந்த முதலாளிகள் அரசாங்கத்தை மிரட்டி நிதி சலுகைகள் மற்றும் தங்களுக்கு அனுகூலம் அளிக்க கூடிய தொழிலாளர் விரோத சட்டங்களையும் நிறைவேற்றி கொள்ளும் நிலை ஏற்பட்டது. அத்தனை வருடங்கள் தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்களினாலும் பெருகி வந்த பொதுவுடைமை கருத்துக்களின் ஆதிக்கத்தினாலும் உழைக்கும் மக்கள் பெற்று வந்த உரிமைகள், சலுகைகள் ஆகிய அனைத்தையும் மீண்டும் முதலாளிகளுக்கே தாரைவாக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நீண்ட நெடுங்கதையை தமது உற்பத்தி சக்திகள் (Forces of Production by David F Noble) என்னும் 1984இல் வெளிவந்த நூலின் மூலம் எக்கச்சக்க தரவுகள், பல தொழிற்சங்க தலைவர்கள், தொழில் வல்லுனர்களின் கட்டுரைகள், செய்தித்தாள் மேற்கோள்கள் ஆகியவற்றின் துணை கொண்டு மிக வீரியமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் டேவிட் நோபல்.
‘விவசாயிக்கு உழைக்க தெரியும், மருத்துவருக்கு மருத்துவம் தெரியும், அரசனுக்கு தானே ஆள தெரியும்?’ என்ற ஒரு வசனம் எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தில் வரும்.
அதே உவமையை கொண்டு என்னிடம் சிலர் இப்படி கூறுவதுண்டு: ‘தொழில்நுட்ப துறை சார்ந்த ஆராய்ச்சிகள் புது கண்டுபிடிப்புகள் செல்லும் போக்கு ஆகியவற்றை அந்த அந்த தொழிலை நடத்தும் பெருமுதலாளிகளே தீர்மானிப்பதில் என்ன தவறு? அவர்களது பட்டறிவுக்கும் நிபுணத்துவத்திற்கும் தெரியாததையா நம் போன்ற சாமானியர்கள் கண்டுபிடித்து விட போகிறோம்?’
நோபல் எழுதிய அந்த புத்தகத்தில் தானியங்கி சாதனங்கள் கோலோச்சும் நிலை வருவதற்கு முன்னால், முதலாளிகள் மற்றும் முதலாளிகளின் அடிவருடியாய் செயல் பட்டு வந்த சில மேலாளர்களின் துணை மற்றும் தலையீடு இல்லாமலேயே ஒரு சில சமயங்களில் தொழிலாளிகள் தங்களை தாங்களே மேற்பார்வை செய்து கொண்டு தங்களது அனுபவ மற்றும் துறை சார்ந்த அறிவைக்கொண்டு கண கச்சிதமாக திட்டமிட்டு முதலாளி நிர்ணயித்த அதே மாதாந்திர உற்பத்தி இலக்கை அதிக பட்ச கடின உழைப்பில்லாமலேயே அடைந்து வெற்றி பெற்ற கதைகளையும் விளக்குகிறார்.
அது மட்டும் அல்லாது புத்தகத்தின் இடையில் வேறொரு முக்கியமான நிகழ்வையும் குறிப்பிடுகிறார் நோபல். இயந்திர கருவிகள் துறையில்(machine tools industry) எண்ணியல் கட்டுப்பாடு (Numerical Control) என்ற புதிய, பின்னாளில் பிரசித்தி பெற்று விளங்கிய ஒரு தானியங்கி தொழில்நுட்பம் முதலாளிகளுக்கும், தொழிற்சாலைகளை நிர்வகித்த மேலாளர்களுக்கும் புரிந்து கொண்டு செயல்படுத்த பெரிய சவாலாக இருந்ததாம். அந்த தொழில்நுட்பத்திற்கு பதில் ரெகார்ட் பிளேபாக் (Record Playback) என்ற மிகவும் கச்சிதமான மற்றும் சுலபமான அதே நேரத்தில் செலவு குறைந்த தொழில்நுட்பம் ஒன்றும் வளர்ந்து வந்ததாம். ஆனால் செலவுகளை குறைத்து லாபத்தை கூட்ட சாத்தியமுள்ள ரெகார்ட் பிளேபாக் தொழில்நுட்பத்தை முதலாளிகள் விரும்பவில்லையாம். காரணம் அதிக லாபத்தைத் தந்தாலும் அதனை கட்டுப்படுத்த தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை எண்ணியல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்திற்கு தேவையான எண்ணிக்கையை விட சற்று அதிகமாம்!
– ஜீவா