ச்ஜேஸூ கவிதைகள்

ச்ஜேஸூ கவிதைகள்




எதிர்புதிராய் ஒரு வீடு
**************************
கிழக்குச் சூரியன்
கதவைத் திறந்தான்!
புத்தகப் பை பள்ளிக்கு
கிளம்பிக் கொண்டிருந்தது!
நோட்டுகளும் புத்தகங்களும்
குட்டி ஏறிய கங்காருவாய்
ஐந்து கிலோ கூடின!

மேல்நாட்டுக் காலனி
வீட்டின் அறையெங்கும்
விசிட் செய்தது!
கழுத்து பட்டை இலகுவாகி
இரண்டு இட்லிக்கு
இடைவெளி விட்டது!

நாசா ராக்கெட்டை
மிஞ்சிக் கொண்டிருந்தது
முன் வீட்டு மின்விசிறி!

ஆசை முத்தங்கள் இடம் மாற
காத்திருந்த பள்ளி வாகனம்
காதல் வீட்டின் அன்பை
அள்ளிக் கொண்டது!

அப்பாடா! இனி
மின்விசிறியின்
எருமை வேகமும்
இல்லாள் போலல்லால்
இழுத்த இழுப்புக்கு
மௌனமாய் வரும் நாற்காலியும்
தொலைக்காட்சியை மேய ஆரம்பிக்கும்!

செயற்கை உரம்
********************
முடிச்சுக் கயிற்றின்
முத்த உறவு விடுபட
உற்சாகத் துள்ளலுடன்
தாய்மடி மோதி
பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி!

இடையிடையே
தாயின் நாவருடல்
இதமான சுகம் தர
மீண்டும் மடி கிறக்கம்
தேடியோடுகிறது!

சற்று நேரத்தில்-
இளைத்த வயிறு
ஊதிய பலனாய்
பெருக்கிறது
யூரியா தின்று கொழுத்த
பாலக்கீரை போலவே!

நீர்ப்பிடிப்பு
***************
கத்தரிக்காய் கொஞ்சம்!
அவரைக்காய் அரை கிலோ!
கொத்தவரங்காய் முன்னது போல!
இருமடி காம்பு கணக்கு கேரட்!
காய்கறி கூடை நிரம்பி விட்டது!
நூறு மிளகாய்க்கு இடமில்லை
சீமை உடை மரங்கள் குடியிருக்கும்
சடையனேரி குளம் போல!

******************************

* நஞ்சுக் கொடியுடன் துள்ளியோடும்
தாயாடு மறைந்த பின்னரும்
பாம்பின் சீற்றம் குறையவில்லை!

– ச்ஜேஸூ, ஜெர்மனி