அறிவியல் தின சிறப்புக் கட்டுரை – 1
இராமன் விளைவு – அறிவியலில் ஒரு மந்திரக்கோல்
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் தேசிய அறிவியல் தினமான கொண்டாடுகிறோம். 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் சர். சி.வி. ராமனும் அவரது ஆராய்ச்சி உதவியாளர் கே.எஸ்.கிருஷ்ணனும் சேர்ந்து இயற்கையின் ஒரு முக்கியமான அறிவியல் உண்மையைக் கண்டறிந்தனர். அதாவது ஒரு குறிப்பிட்ட நிறமுடைய ஒளியை ஒரு பொருளின் மீது விழச் செய்தால் அப்பொருளில் இருக்கும் மூலக்கூறுகள் அவ்வொளியை வேறு நிறங்களில் சிதறடிக்கிறது என்பதே அது. இதைத்தான் நாம் “இராமன் விளைவு” அல்லது “இராமன் கிருஷ்ணன் விளைவு”என்று அழைக்கிறோம். இந்தக்கண்டுபிடிப்புக்காக இராமனுக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. கே.எஸ். கிருஷ்ணன் பின்னாளில் தேசிய அறிவியல் ஆய்வகத்துக்கு இயக்குனர் ஆனார். சுதந்திரம் அடைந்த உடன் இந்தியா மேற்கொண்ட அறிவியல் திட்டங்களுக்கு கே.எஸ். கிருஷ்ணன் நேருவுக்கு பக்கபலமாக விளங்கினார்.
இன்றைய தேதிக்கு இராமன் விளைவை பயன்படுத்தாத அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளே இல்லை எனலாம். இந்தக் கண்டுபிடிப்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் 1986 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு இனி ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 ஆம் நாளை தேசிய அறிவியல் நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது.
இராமன் விளைவு என்றால் என்ன?
நாம் பார்க்கும் ஒவ்வொரு நிற ஒளிக்கும் ஒரு குறிப்பிட்ட அலைநீளம், அதிர்வெண் மற்றும் ஆற்றல் உண்டு. ஒரு குறிப்பிட்ட நிற ஒளிக்கு அலைநீளம் அதிகமென்றால் அதிர்வெண் குறைவாக இருக்கும். அதிர்வெண் குறைவாக இருந்தால் அவ்வொளியின் ஆற்றலும் குறைவாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு சிவப்பு நிற ஒளி அதிக அலைநீளம் உடையது. ஆனால் குறைவான அதிர்வெண் கொண்டது. நீல நிற ஒளி சிவப்பு ஒளியை விட குறைவான அலைநீளம் கொண்டது. எனவே அதன் அதிர்வெண் சிவப்பை விட அதிகம். எனவே நீல நிற ஒளிக்கு சிவப்பு நிற ஒளியை விட ஆற்றல் அதிகம். அதாவது ஒளியின் அதிர்வெண் அதிகமாக அதிகமாக ஆற்றலும் அதிகமாகும். இருப்பதிலேயே மிகக்குறைவான ஆற்றல் கொண்டது ரேடியோ அலைகள். அதிகமான ஆற்றல் கொண்டது காமா கதிர்கள். நம் கண்ணால் காணக்கூடிய ஏழு நிற ஒளியும் இதற்கு நடுவில்தான் வருகிறது.
இராமன் ஒரு குறிப்பிட்ட நிற ஒளியை ஒரு பொருளின் மீது விழச்செய்து பார்த்த போது அது மூன்று விதமான ஒளிக்கதிர்களை சிதறடிப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த மூன்று ஒளிக்கதிர்களில் ஒன்று எந்த நிற ஒளி அப்பொருளின் மீது விழுந்ததோ அதே நிறத்திலும், இரண்டாவது ஒளி விழுந்த ஒளியை விட அதிக அலைநீளம் கொண்டதாகவும், மூன்றாவது ஒளியானது அப்பொருளின் மீது விழுந்த ஒளியின் அலைநீளத்தை விட குறைந்த அலைநீளம் கொண்டதாகவும் இருந்தது. இப்படி சிதறி வரும் ஒளிக்கதிர்களை “இராமன் நிறமாலை” என்றழைக்கலாம்.
எடுத்துக்காட்டாக பச்சை நிற ஒளியை பொருளின் மீது விழச்செய்தால் மீண்டும் பச்சை நிற ஒளியோடு அதைவிட அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிற ஒளியும், அதை விட குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிற ஒளியும் சேர்ந்து வந்தது. இராமனுக்கு முன்பு வரை ஒரு பொருளின் மீது எந்த நிற ஒளி விழுந்ததோ அதே நிற ஒளிதான் சிதறடிக்கப்படும் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். இராமன் ஒரு புதிய வகை ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தார். எதனால் இப்படி வருகிறது? காரணம் ஒளி எப்பொருளில் விழுந்ததோ அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள்தான் தன்மைதான். ஒவ்வொரு பொருளின் மூலக்கூறுகளும் வெவ்வேறு விதமான கட்டமைப்பிலும், அதிர்விலும், வேதிப்பிணைப்பிலும் இருக்கும். சிதறி வரும் ஒளி அதாவது இராமன் நிறமாலை இந்த மூலக்கூறுகளின் கட்டமைப்பையும், வேதிப்பிணைப்பையும், அதிர்வுத்தன்மையையும் பொறுத்தது. ஒளியானது இம்மூலக்கூறுகளில் விழும்போது சில மூலக்கூறுகள் விழுந்த ஒளியை அப்படியே சிதறடிக்கும்.
சில மூலக்கூறுகள் விழுந்த ஒளியிலிருந்து கொஞ்சம் ஆற்றலை கவர்ந்து கொண்டு குறைந்த ஆற்றல் உள்ள(அதிக அலைநீளம் உள்ள) ஒளிக்கதிராக சிதறடிக்கும். இன்னும் சில மூலக்கூறுகள் விழுந்த ஒளிக்கு கொஞ்சம் ஆற்றலை கொடுப்பதால் கொஞ்சம் அதிக ஆற்றலோடு(குறைந்த அலைநீளம்) வெளிவருகிறது. அப்படிஎன்றால் இந்த சிதறி வரும் இரண்டு வெவ்வேறு நிற ஒளிக்கதிர்களையும் ஆராய்வதன் மூலம் அப்பொருளில் என்னன்ன வகையான மூலக்கூறுகள் இருக்கின்றன, என்ன விதமான வேதிக்கட்டமைப்பில் இருக்கின்றன என பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இது அறிவியலில் ஒரு புதிய வாசலை திறந்து விட்டது. எப்படி ஒவ்வொருவருக்கும் கைரேகை வித்தியாசமானதோ அதே போல் ஒவ்வொரு பொருளின் இராமன் நிறமாலையும் வித்தியாசமானது. நமக்கு கை ரேகை போல இராமன் நிறமாலை என்பது பொருட்களின் “மூலக்கூறு ரேகை”.
லேசர் ஒளியின் வருகைக்கு பிறகு
இராமன் சிதறலில் என்ன ஒரு இடர்பாடு என்றால் சிதறி வரும் மூன்று விதமான நிற ஒளியில், விழுந்த ஒளியின் நிறத்தில் இருக்கும் ஒளி அதிக பிரகாசமானதாகவும், மற்ற இரண்டு நிற ஒளிகளும் மிகவும் மங்கலாகவும் இருந்தன. இந்த மங்கலான ஒளியை கருவி கொண்டு ஆராய்வது பல்வேறு வகையில் சிக்கலாக இருந்தது. ஆனால் 1960 களில் லேசர் ஒளி பயன்பாட்டுக்கு வந்த பிறகு இராமன் நிறமாலையின் பயன்பாடு நாலு கால் பாய்ச்சலில் வளர்ந்தது. லேசர் ஒளியை வைத்து இராமன் நிறமாலைமானியை அறிவியல் அறிஞர்கள் உருவாக்கினர். இராமன் நிறமாலை குறித்த ஆராய்ச்சியை “இராமன் நிறமாலையியல்” என்றழைக்கிறார்கள்.
இராமன் நிறமாலையியலின் பயன்பாடுகள்
இராமன் நிறமாலைமானி இல்லாமல் மருந்தியல் துறை இயங்காது. இராமன் நிறமாலையை வைத்துத்தான் ஒரு குறிப்பிட்ட மருந்தில் என்னென்ன மூலக்கூறுகள் இருக்கின்றன, எவ்வளவு சதவிகிதம் இருக்கின்றன என்று தீர்மானிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் போலி மருந்துக்கும், உண்மையான மருந்துக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய இரண்டின் இராமன் நிறமாலையின் வேறுபாட்டை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறார்கள். அதே போல் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை தயாரிக்கும்போது அதோடு சேர்த்து என்னென்ன வேதிப்பொருள்கள் உருவாகின்றன, எவ்வளவு வேகத்தில் உருவாகின்றன என்று கண்டறிகிறது. அதன் மூலம் மருந்து தயாரிப்பு நடைமுறையை பாதுகாப்பானதாக மாற்ற உதவுகிறது. மருந்தியல் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கும் இராமன் நிறமாலைமானி பயன்படுகிறது.
புவியியல் மற்றும் கனிமவியல் துறையிலும் இராமன் நிறமாலையின் பயன்பாடு இருக்கிறது. ஒரு பாறையில் என்னென்ன கனிமங்கள் இருக்கின்றன, என்ன அளவில் இருக்கின்றன, ஏதேனும் திரவங்கள் உள் நுழைந்துள்ளதா, எவ்வளவு ஆழம் வரை நுழைந்துள்ளது என கண்டறிகிறது. கடந்த ஆண்டு செவ்வாய்க்கோளில் நாசாவால் தரையிறக்கப்பட்ட பெர்சிவரன்ஸ் என்ற கருவியில் இரண்டு சிறிய இராமன் நிறமாலை மானிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் மூலம் செவ்வாய் தரையில் உள்ள பாறைகளின் தன்மைகளை, கனிமங்களின் வகைகளைக் கண்டறியலாம்.
வேதியியலில் ஒரு குறிப்பிட்ட வேதிவினை எவ்வளவு வேகத்தில் நடைபெறுகிறது, வேதிவினையில் என்னென்ன வேதிப்பொருள்கள் உருவாகின்றன என்று கண்டறிகிறது. வெவ்வேறு மூலக்கூறுகளின் கட்டமைப்பையும், அதன் வேதிப்பிணைப்பின் தன்மையையும் குறித்த தெளிவான பார்வையை அளிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடைந்த பானை ஓடுகள் கிடைத்தன. ஆச்சரியமான வகையில் இப்பானை ஓடுகளின் உள்ள வண்ணங்கள் பளபளப்பாக இருந்தன.
இப்பானை ஓடுகளின் இராமன் நிறமாலையை ஆராய்ந்த போது அதற்கான காரணம் தெரிந்தது. அப்பானை ஓடுகளில் கார்பன் நானோ குழாய்கள் இருந்தன. கார்பன் நானோ குழாய்களின் சிறப்புத்தன்மையால் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் பளபளப்புத்தன்மை குறையவில்லை. அக்காலத்திலேயே தமிழர்கள் பானை சுடுவதில் வல்லவர்கள். அந்த சுடும் முறையால் இந்த கார்பன் நானோ குழாய்கள் உருவாகி இருக்கிறது. அவர்களின் அனுபவத்தால் உருவான சுடும் முறையில் இருக்கும் சிறப்புத்தன்மையை இன்று அறிவியலின் துணைகொண்டு அறிந்து கொண்டிருக்கிறோம். பின்னாளில் இது நேச்சர் ரிப்போர்ட் ஆய்விதழில் வெளிவந்தது. பழங்கால ஓவியங்கள், கலைப்பொருட்களில் இருக்கும் வேதிக்கலவைகளைக் கண்டறிந்து அதன் மூலம் இப்பொருட்களை மறுசீரமைக்க உதவுகிறது.
இயற்பியலிலும் இராமன் நிறமாலையின் பல்வேறு வகையில் பயன்படுகிறது. ஒரு பொருள் படிகமாக உள்ளதா, படிகமற்ற நிலையில் உள்ளதா, அல்லது இரண்டும் கலந்த நிலையில் உள்ளதா என்று இராமன் நிறமாலைமானி எளிதாகக் கண்டறிகிறது. பொருட்கள் அறிவியல் துறையில் இராமன் நிறமாலை ஆய்வு அடிப்படையான ஒன்று.
தடயவியல் துறையிலும் இராமன் நிறமாலைமானி முக்கிய பங்கு வகிக்கிறது. குற்றம் நடத்த இடத்தில் இருக்கும் வெவ்வேறு வகையான இரத்தக்கறைகளை வைத்து அது ஆணா,பெண்ணா, எந்த மரபினம் என பல்வேறு தகவல்களை தடயங்களை அழிக்காமல் அறிய உதவுகிறது. முக்கியமான ஆவணங்களில் ஏதேனும் போர்ஜரி இருந்தால் கண்டறிகிறது. சர்வதேச அளவில் போதைப்பொருள் தடுப்புத்துறைக்கு இராமன் நிறமாலை மானி மிகப்பெரிய பயன்பாட்டைக்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்துபவர்கள் நாம் நடைமுறையில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களோடு போதைப்பொருளை கலந்து கடத்துவார்கள். ஆனால் இராமன் நிறமாலை மானி இதை எளிதில் மிக விரைவாக எந்த வித சேதாரமும் இல்லாமல் கண்டறிகிறது. இதுதான் இராமன் நிறமாலைமானிக்கும் மற்ற ஆராய்ச்சிக்கருவிகளுக்கும் உள்ள வித்தியாசம்.
உயிரியலில் இராமன் நிறமாலை மானி புரோட்டின், செல், நியுக்ளிக் அமிலம் போன்றவற்றில் உள்ள மூலக்கூறுகளின் பல்வேறு வகைகளை கண்டறிகிறது. அதே போல் புற்று நோய்த்துறையில் உடலின் பல்வேறு உள்ள செல்களின் இராமன் நிறமாலையை ஆய்வதன் மூலம் அது என்ன வகையான புற்று நோய் என்றும் அறிய உதவுகிறது. அகச்சிவப்பு நிறமாலைமானியை நீர் மூலக்கூறுகள் உள்ள திசுக்கள், உயிர் பாகங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் இராமன் நிறமாலையை பயன்படுத்த முடியும். உயிரியியலில் இது மிகப்பெரிய வரப்பிரசாதம். அதே போல் இராமன் நிற மாலைமானியைக்கொண்டு திட,திரவ மற்றும் வாயு பொருட்கள் என அனைத்தையும் ஆராயலாம். மற்ற நிறமாலையியலில் இது சாத்தியமில்லை.
உணவுப்பொருளில் இருக்கும் வேதிக்கலப்படங்களை கண்டறிகிறது. உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு இராமன் நிறமாலைமானி ஒரு அத்தியாவசியக் கருவி. வளிமண்டலத்தில் இருக்கும் மாசு மூலக்கூறுகளைக் கண்டறியவும், தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுத்திரவங்களை, நச்சு வாயுக்களை இனம் காணவும் பெருமளவில் பயன்படுகிறது. விவசாயத்துறையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை தன்மையை ஆராய்கிறது. தடை செய்யப்பட்ட மூலக்கூறுகள் இப்பூச்சிக்கொல்லிகளில் கலந்திருக்கிறதா என எளிதில் இதன் மூலம் கண்டறிய முடியும். இப்படி இன்னும் பல துறைகளில் இராமன் கண்டுபிடிப்பின் பயன்பாடுகள் நிறைந்துள்ளது. இன்று இராமன் நிறமாலையியல் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத அங்கம்.
கடல் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?
சர்.சி.வி இராமனுக்கு முன்பு வரை “வானத்தின் நீல நிறத்தை கடல் பிரதிபலிப்பதால்தான், கடல் நீல நிறமாக இருக்கிறது என்று” அறிவியல் உலகம் கருதி வந்தது. வானம் நீல நிறமாக இருப்பதற்குக் காரணம் வளிமண்டலத்தில் உள்ள காற்று மூலக்கூறுகள் சூரிய ஒளிக்கதிரில் உள்ள நீல நிறத்தை அதிக அளவில் சிதறடிக்கிறது. இதைக் கண்டறிந்தவர் ராலே என்ற இயற்பியல் அறிஞர். அவர்தான் கடல் நீர் நீல நிறமாக இருப்பதற்கு காரணம் வானத்தின் நீல நிறத்தை அது பிரதிபலிக்கிறது என்று கூறினார். இராமன்தான் இதைத் தவறு என்றும் அதற்கான சரியான காரணத்தை உலகுக்கு முதன்முதலில் உணர்த்தினார்.
இராமன் எங்கு சென்றாலும் தன்னோடு கையடக்க நிறமாலைமானி, முப்பட்டகம் போன்ற பொருட்களை எடுத்துச்செல்வதுண்டு. அப்படி ஒரு தடவை நீண்ட கடல் பிரயாணம் செல்லும்போது கடல் நீரை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவரது ஆய்வின் படி “கடல் நீரிலுள்ள நீர் மூலக்கூறுகள் சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தை அதிக அளவில் சிதறடிக்கிறது. மற்ற ஒளிக்கதிர்கள் நீர் மூலக்கூறுகளால் உறிஞ்சப்படுகிறது. இதனால் தான் கடல் நீர் நீல நிறமாக இருக்கிறது என்று நிரூபித்தார். பின்னாளில் இதை நேச்சர் ஆய்விதழில் கட்டுரையாகவும் வெளியிட்டார்.
இராமனின் வாழ்க்கையும், அறிவியல் மீதான அவரது தீராக்காதலும்
திருச்சி அருகே உள்ள திருவானைக்கோவிலில் பிறந்து சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ இயற்பியல் படித்தார். அவர் இளங்கலை மாணவராக இருக்கும்போதே தனது முதல் ஆய்வுக்கட்டுரையை உலக அளவில் வெளிவரும் ஆராய்ச்சி இதழில் வெளியிட்டார். சென்னை மாநிலக்கல்லூரியின் உலக அளவிலான ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட முதல் ஆராய்ச்சிக்கட்டுரை அதுதான். அதுவும் பி.ஏ படிக்கும் ஒரு மாணவனின் கட்டுரை.
மாநிலக்கல்லூரியில் படிப்பை முடித்த இராமன் குடும்ப அழுத்தத்தின் காரணமாக கல்கத்தாவில் அரசு வேலைக்கு சென்ற அவர் தனது அறிவியல் மீது கொண்ட தீரா ஆர்வத்தால் பகல் முழுதும் அரசுப்பணிக்கு சென்றுவிட்டு மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து அறிவியல் ஆய்வுகளை செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அவரது அறிவியல் ஆய்வுகள், அறிவியல் உரைகள் மிகவும் புகழடைந்ததால் கல்கத்தாவிலுள்ள கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு இயற்பியல் பேராசிரியர் பணியை கொடுக்க முன்வந்தது. ஆனால் இந்த புதிய பேராசிரியர் பணியின் சம்பளம் அவர் ஏற்கெனவே பார்த்து வந்த அரசு வேலையின் சம்பளத்தில் பாதிதான். சாதாரணமாக யாரும் செய்யத்தயங்கும் முடிவை எடுத்தார். அந்த அரசு வேலையைத்துறந்து இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். பிறகு அவரது இயற்பியல் ஆய்வுகள் மிகவும் வேகமடைந்தது. அக்காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர்கள் மத்தியில் அவருக்கு மிக நல்ல பேர் உண்டானது. அவருக்கு நோபல் பரிசு வாங்கித்தந்த இராமன் விளைவையும் அவர் கல்கத்தாவில் இருக்கும்போதுதான் கண்டுபிடித்தார். மேக் நாட் சாகா, சுபாஷ் சந்திர போஸ், சத்யேந்திர போஸ் போன்ற பல பெரிய ஆளுமைகள் இராமனின் மாணவர்கள்.
கல்கத்தாவில் சில காலம் பணியாற்றிய பிறகு பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். அதுவரை அடிப்படை அறிவியலில் பெரிய அளவில் புகழ்பெறாத அந்நிறுவனத்தை இராமன் தனது கடின உழைப்பால் மிகச்சிறந்த அளவில் உயர்த்திக்காட்டினார். அவரது பணி ஓய்வுக்காலத்தில் இந்திய அறிவியல் கழகத்தையும், இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிறுவினார். பணி ஓய்வுக்கு பிறகும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது வாழ்க்கையின் வழிகாட்டியாக புத்தரை அடிக்கடி மேற்கோள் காட்டுவார். அவரது நோபல் பரிசு விழாவிலும் புத்தரைப்பற்றி பேசியிருக்கிறார்.
அறிவியல் இந்தியாவில் வளர அரசியல் தலையீடு அதிகம் இருக்கக்கூடாது வேண்டும் என்று நேருவிடம் வலியுறுத்தினார். “இந்தியாவின் பொருளாதார பிரச்சினைகளை மூன்று வழிகளில் தீர்க்கலாம். அதாவது அறிவியல்!, இன்னும் அறிவியல்!!, மேலும் அறிவியல்!!! என்ற மூன்று வழிகள்” என்றும் வலியுறுத்தி வந்தார்.
அறிவியல் தவிர்த்து மரங்கள், பூச்செடிகள் மீது ஆர்வம் கொண்டவர். இராமன் ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான மரங்களையும், பூச்செடிகளையும் நட்டார். அவர் நட்ட மரச்செடிகள் இன்று பரந்து விரிந்த மரங்களாக அங்கே இருக்கின்றன. தனது இறப்பில் எந்த மத சடங்குகளும் செய்யாமல் இராமன் ஆராய்ச்சி நிலையத்தில் அவர் வைத்த மரத்தடியில் புதைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் இறந்த அன்று அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர் விருப்பப்பட்ட மாதிரியே இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்பு உள்ள மைதானத்தில் மையத்தில் உள்ள அவருக்கு பிடித்த மரத்தடியில் அவரது உடல் புதைக்கப்பட்டது. இன்றும் கூட நாம் அந்த மரத்தை அங்கே காணலாம்.
தன் வாழ்நாளெல்லாம் அறிவியலை உயிர் மூச்சாக கொண்டு இந்திய அறிவியலை உலக அளவுக்கு கொண்டு சென்ற மாபெரும் அறிவியல் ஆளுமை அந்த மரத்தடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். பல தலைமுறை மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்கிக்கொண்டிருக்கிறார். தன் மறைவிற்கு பிறக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் எந்த வித தடையும் இல்லாமல் அறிவியல் ஆராய்ச்சியை தொடர்ந்து உலக அளவில் ஒரு சிறந்த அறிவியல் ஆய்வு நிறுவனமாக மாற வேண்டும் என்று விரும்பினார். இன்று இராமன் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் ஒரு முக்கிய ஆராய்ச்சி நிறுவனம் என்பது யாருக்கும் சந்தேகமில்லை.
இராமன் ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்பவர்கள் அவர் புதைக்கப்பட்ட அந்த மரத்தடியை பார்க்காமல் செல்வதில்லை. அவரது விருப்பப்படி அவருக்கு எந்த நினைவிடமும் அங்கே எழுப்பப்படவில்லை. கடவுள் பற்றி உரையாடல் வரும்போதெல்லாம் மனிதனை பற்றியும், மனிதனின் பிரச்சினைகள் குறித்தும் தெரிந்து கொள்ள நிறைய இருக்கும்போது ஏன் கடவுளைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று சொல்லுவார் உண்மையில் தன் சொந்த வாழ்க்கையிலும் அறிவியல் தன்மையோடும், அறிவியல் மனப்பான்மையோடும் வாழ்ந்தார் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு என்ன இருக்க முடியும்!!!!!
இந்தியாவில் அறிவியலுக்கு ஒதுக்கப்படும் குறைந்த நிதி
அறிவியலுக்கு மிக அதிகம் நிதி ஒதுக்கிய நாடுகள் எல்லா வகையிலும் வளர்ந்திருக்கிறது என்பது வரலாறு. ஆனால் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்துக்கு ஒதுக்கிய தொகை மொத்த பட்ஜெட்டில் வெறும் 0.36 %. அதே போல் ஒன்றிய அரசு கல்விக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கிய தொகை மொத்த உள் நாட்டு உற்பத்தி வருவாயில் 2.507% மட்டுமே. ஆனால் சீனாவோ அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே தனது மொத்த உள் நாட்டு உற்பத்தி வருவாயில் 2.5% ஐ ஒதுக்குகிறது. அதே போல் கல்விக்கு தனது ஜி.டி.பி யில் பத்து சதவிகிதத்துக்கு மேல் சீனா ஒதுக்குகிறது. ஆனால் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. கோத்தாரி கமிஷன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு குறைந்த பட்சம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 6% வது ஒதுக்க வேண்டும் என்று கூறியது. இன்றும் இந்திய அரசு அதில் பாதி கூட ஒதுக்க வில்லை. இன்றைய மக்கள் தொகைக்கு நாம் குறைந்த பட்சம் நமது உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிகிதமாவது கல்விக்கு ஒதுக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிக்கு மூன்று சதவிகிதம் ஒதுக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சி என்பது மனித குல வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த வருட அறிவியல் தினத்துக்கான மையக்கருத்தாக “உலகளாவிய நலனுக்கான உலகளாவிய அறிவியல்” என்று அறிவித்துள்ளார். உண்மையாக நாம் அறிவியலை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல வெண்டுமென்றால் அதற்கேற்ப அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும். அதுதான் ஒன்றிய அரசு இராமனுக்கு இந்த அறிவியல் தினத்தில் செய்யும் உச்சபட்ச மரியாதை, நன்றிக்கடன்.
ஜோசப் பிரபாகர்,
இயற்பியல் விரிவுரையாளர்,
அறிவியல் எழுத்தாளர்,
“நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள்” புத்தகத்தின் ஆசிரியர்