“ஹெர்மன் ஹஸ்ஸி”- கவிதை மொழிபெயர்ப்பு -பேரா மு விஜயகுமார்

“ஹெர்மன் ஹஸ்ஸி”- கவிதை மொழிபெயர்ப்பு -பேரா மு விஜயகுமார்




ஹெர்மன் ஹஸ்ஸி

ஜெர்மன் எழுத்தாளர்.
நோபல் பரிசு பெற்றவர்.
தலைப்பு – -die gedichte- Hesse poems 1970).

கொசுக்௯ட்டம்
*******************

மின்னுகின்ற தூசுபடலத்தில்
பேராசையுடன் ஒரு ௯ட்டம் முன்னேறுகிறது
நடுங்குகின்ற வட்டங்களாக.
ஆடம்பரமாக ஒரு பெருங்௯ட்டம் போகிறது
சிறிதுநேரத்தில் காணாமல் மறைகிறது.
அவைகள் மயக்கமும், வெறியையும் சுழற்றி அடிக்கிறது.
மகிழ்ச்சியில் குதிக்கிறது மரணத்தை எதிர்த்து
ராஐ்யம் முடிவில் அழிந்து போனது
தங்கத்தை போன்ற வலிமையான ௯ட்டம் சிதறியது.
இரவு புராணத்தில் ஒரு தடையமும் இன்றி நிகழும்
கொடூர நடனத்தை ஒருபோதும் அறிந்ததில்லை…

A SWAM OF GNATS
**********************
Many thousand glittering motes
Crowd forward greedily together
In trembling circles.
Extravagantly carousing away
For a whole hour rapidly vanishing,
They rave, delirious, a shrill whir,
Shivering with joy against death.
While kingdoms, sunk into ruin,
Whose thrones, heavy with gold, instantly scattered
Into night and legend, without leaving a trace,
Have never known so fierce a dancing.

மொழிபெயர்ப்பு -பேராசிரியர் மு விஜயகுமார்
saimgoms2017@gmail.com

………………………………………………………………………………………………..

ஹெர்மன் ஹஸ்ஸி
ஜெர்மன் எழுத்தாளர்.
நோபல் பரிசு பெற்றவர்.
தலைப்பு -die gedichte- Hesse poems 1970).

பயணம்‌‌
***********
வருத்தபடாதே இரவு மிக அருகில்
நாம் குளிர்ந்த நிலவின் இரகசிய சிரிப்பைக் காண்போம்.
மங்கலான கிராமங்களுக்கு இடையே கைகோர்த்து ஓய்வெடுப்போம்.

வருத்தப்படாதே காலம் விரைவில் கனியும்
நாம் ஓய்வு எடுப்போம் நம் சிறிய சிலுவை பிரகாசமான பாதை பக்கமாக நிற்கிறது
புயலே? பனியோ? வந்துபோ..

ON A JOURNEYJ
******************
Don’t be downcast, soon the night will come,
When we can see the cool moon laughing in secret
Over the faint countryside,
And we rest, hand in hand.

Don’t be downcast, the time will soon come
When we can have rest. Our small crosses will stand
On the bright edge of the road together,
And rain fall, and snow fall,
And the winds come and go.

மொழிபெயர்ப்பு -பேராசிரியர் மு விஜயகுமார்
saimgoms2017@gmail.com

நூல் அறிமுகம்: ஜெயமோகனின் ”புறப்பாடு” – அ.ம.அங்கவை யாழிசை

நூல் அறிமுகம்: ஜெயமோகனின் ”புறப்பாடு” – அ.ம.அங்கவை யாழிசை



பயணங்களும் படிப்பினைகளும்.

நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த ‘யானை டாக்டர்’ எனும் கதையைப் படித்தபோதுதான் ‘ஜெயமோகன்’ எனும் எழுத்தாளர் பெயர் அறிமுகமானது. ஜெயமோகன் எழுதிய கதைகளையும் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது இருந்தது. இதைக் குறித்து எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் இருப்பதாகக் கூறினார். இரண்டொரு நாளிலேயே எங்களது ‘செம்பச்சை’ நூலகத்திற்கு ஜெயமோகன் நூல்கள் பலவற்றை வாங்கிவிட்டார் அப்பா.

எந்தப் புத்தகத்தையும் மாதக்கணக்கில் சிறுகச் சிறுகப் படிக்கும் என் அம்மாவை, ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்த முதல் புத்தகம் ஜெயமோகனின் ‘எழுதுக’ எனும் புத்தகம்தான். அவரின் எழுதுக எனும் நூல் அவருக்கு மிக முக்கியமான நூல் என்பார். அந்தப் புத்தகத்தை அவர் படித்து முடித்த கையோடு, ஜெயமோகன் எழுதிய ‘புறப்பாடு’ எனும் நூலையும் படிக்கத் தொடங்கினார். எந்நேரமும் அந்தப் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார். புறப்பாட்டைப் படித்து முடித்த பிறகு ஜெயமோகனின் மிகத் தீவிர ரசிகையாக ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயமோகனின் பேச்சுகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருப்பார்.

புறப்பாடு புத்தகத்தைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அந்த நூலைப் பற்றி விரிவாக ஏதும் கூற மறுத்து விட்டார். “அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள். மனுஷன் போய்க்கிட்டே இருப்பாரு… போய்க்கிட்டே இருந்திருக்காரு…” என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டார். அப்போதிருந்தே ஜெயமோகனும் புறப்பாடும் எனக்கு நன்றாகவே அறிமுகம்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான காத்திருப்புக்கு இடையில் கிடைத்த விடுமுறை நாட்களில் நிறைய நூல்களை வாசித்திட வேண்டும் என, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நூல்களைச் சொல்லியிருந்தார் அப்பா.

போன மாதம் கிட்டத்தட்ட இதே நாளில்தான் புறப்பாடு வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பாதான் ‘இதை உன் அடுத்த இலக்காக வை. பெரும்பாலும் வரலாற்று நாவல்களையே வாசித்து உலவிய உனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும்’ என்றார்.

புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலின் கால்வாசிப் பக்கங்களை வாசித்த பின்பு நிறுத்திவிட்டேன். இதுவரை வாசித்தவற்றை நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு முயன்றாலும் அவரது சித்திரத்தை இந்தப் பயணத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.

அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.

இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார். எங்கும் நிலையில்லாத ஆற்று நீர் போல அலைந்து திரிந்து கடலில் கலந்திருப்பாரா? என்று தோன்றும். இல்லை, அவர் இன்னும் அலைந்து கொண்டிருப்பார் காற்றைப் போல.

முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. அவர் சம்பவங்களை விவரிப்பதால் இப்படிக் கூறவில்லை. சம்பவங்களின் பின்னணியை விவரிப்பதன் நுணுக்கத்தை வாசிப்பில் உணர்ந்ததால் கூறுகிறேன். மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான். அப்படிப்பட்டவர்களை நான் எப்போதும் ரசிப்பதுண்டு.

அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை.

இந்தப் புத்தகத்தை முக்கால்வாசியளவு வாசித்து முடித்திருந்தபோது, எனக்குக் கவலையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நான் எனது புத்தக வாசிப்புப் பயணத்தை மிகத் தாமதமாக ஆரம்பித்து விட்டதாக ஒரு தவிப்பு தோன்றியது. இன்னும் முன்னரே வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்மேல் நானே கோபப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அப்போதுதான் அவரைப்போல நானும் சுற்ற வாய்ப்புகள் கிட்டும் என எண்ணி இருக்கலாம்.

இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். எப்படி அப்படி எழுதினார்? எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது. நான் அதைப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் இன்னும் பக்குவப்படவில்லையோ என எனக்குப் பட்டது. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.

இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில், என் அப்பா தினமும் கேட்பார் “புறப்பாடு எப்படிப் போகுது?” என்று. எனது ஒரே பதில், வழக்கமான பதில் “போய்க்கிட்டே இருக்குப்பா”. ஆம், போய்க்கொண்டே, நீண்டு கொண்டே, விரிந்து கொண்டே சென்றது முடிவில்லாதது போல. எனக்கு ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது. எனக்கும்தான் அலைந்து திரிய ஆசை. ஆனால், முடியவில்லை. ஒரு கணம் அப்படியே கிளம்பினால் என்ன? என்று தோன்றும். அந்த எண்ணம் மறுகணம் செத்துப் போகும்.

இவர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்தும். அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது. ஆங்கிலத்தில் அதை அனாலஜி என்கிறார்கள். எதையெதையோ எதனுடனும் ஒப்பிடுவார். அவ்விரண்டையும் வைத்து நான் கற்பனைகூட செய்திருக்க மாட்டேன். ஆனால், படித்த பிறகு சரிதானே என்று தோன்றும். அந்த ஒப்புமையைக் கண்டு நானே சிரிப்பேன். நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார். ரயிலில் பயணம் செய்யும் பொழுது போடுகின்ற பாடல்கள் பயணிப்பவர்களின் பல உணர்வுகள் கொண்டாட்டங்கள் நிறைந்தது என்று கூறிவிட்டு, அதை ஓட்டல் தட்டுகள் என்பார். யார் யாரோ வந்து எதையெதையோ வைத்துத் தின்ற தட்டு என்று கூறுவார். இப்படி, சிறு பொருளையாவது ஒப்பிட்டுத்தான் எந்தவொரு காட்சியையும் நகர்த்துவார்.

சரம் சரமாகப் பேராசிரியர் பொழிந்து கொண்டிருந்த வகுப்பில் மதிய நேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்கு மேலேதான் என்பார். இந்த வரியைத் தாமதமாகவே நான் புரிந்து கொண்டேன். உணவிற்குப்பின் பாடம் நடத்தப்படுகிறது என்று பிறகு புரிந்தது. புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் அப்பா இந்தப் புத்தகத்தை என்னிடம் தரும்போதே ‘படித்து முடித்தபின் அதைப்பற்றி எழுத வேண்டும்’ என்று கூறிவிட்டார். அதற்காகப் படிக்கும்போதே குறிப்பு எடுக்கவும் சொன்னார். ஆனால், எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்படி எழுதுவது? அவர் இங்கு இருந்து அங்கு சென்றார். பிறகு அங்கிருந்து வேறு எங்கோ சென்றார். அங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்றார் என்பதையா எழுதுவது? சட்டென்று நான் ஒரு உதவாக்காரியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த விசாலமான பயணத்தையும், படைப்பாளரின் அந்த அறிவையும் எழுத்தாக்க என் அறிவு போதாது என்ற இயலாமையின் வெளிப்பாடு அது.

உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.

உலாவுதலில் கிடைக்கும் நிம்மதி வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் என்னவோ, நான் ஒரு சிறு தூரமேனும் உலாவுவேன். புதிதாய் ஒன்றைப் பார்ப்பேன். அதன் நினைப்பே கிளர்ச்சியூட்டும். இந்த எதிர்பார்ப்போடு புறப்பாடு என்னை மிகக் கவனமாக அந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றது. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பயணம். ஆனாலும், நான் காணாத பலவற்றை அந்தப் பயணத்தில் கண்டேன்; உணர்ந்தேன்.

ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.

புறப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, “அவர் பிழைப்பிற்காக ஓடினாரா? இலக்கியத்திற்காக ஓடினாரா? என்றே தெரியாது” என அம்மா கூறினார். ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.

ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக – பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன்.

சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சேரியில் இரவில் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக மொய்க்கும். சேரியில் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள். அவற்றைக் கூறுகையில், அக்குழந்தை பிறப்பதற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்குச் சில லிட்டர் ரத்தத்தை உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான் என்பார். மழைக் காலங்களில் சாக்கடைகளை அடித்தளமாகக் கொண்ட குடிசைகள், சாக்கடைகள் பெருகி ஓடும்போது கட்டைகளில் பிணங்கள் முட்டி நின்ற சம்பவங்களையும் பதிவு செய்திருப்பார். இந்த வாழ்வெல்லாம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு.

அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் என்னை வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு, “இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்” என்று பட்டது. அந்தவகையில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் புறப்பாடு எனக்குக் காண்பித்திருக்கிறது.

காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில் என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.

ஜெயமோகன் ஓர் ஆணாக இருந்ததால் கிளம்பிவிட்டார்; ஓடிவிட்டார். பெண்ணாகிய நான் ஓட நினைத்தால், ஊர் சுற்ற நினைத்தால், உலாவ நினைத்தால் என்னாவது? என்னவெல்லாம் நடக்கும்? என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சமூகம் என்ன மாதிரியான படிப்பினைகள் தந்திருக்கும்? பெண்களை இந்தச் சமூகம் நடத்துவதும், பெண்களுக்கு இந்தச் சமூக மனிதர்களும் ஆண்களும் தருகின்ற மோசமான படிப்பினைகளை நினைக்கும்போதும் எனக்குப் பீதியூட்டுகிறது; பயமாய் இருக்கிறது. அதனாலேயே நான் ஓடிப் போகவும் ஊர் சுற்றவும் நினைத்த எண்ணம் செத்துப் போனது. ஆண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறு; பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறுதானே.

ஆனாலும், புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அ.ம.அங்கவை யாழிசை

நூல் : புறப்பாடு (பயணங்களும் படிப்பினைகளும்) 
ஆசிரியர் :  ஜெயமோகன்
விலை : ரூ.₹ 380/-
பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

கொடுங் கனவு சிறுகதை தமிழில்: கதிரேசன்

கொடுங் கனவு சிறுகதை தமிழில்: கதிரேசன்




குஜராத்தி எழுத்தாளர்
மினாள் தேவ்
(Minal Daev)

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ரீட்டா கோத்தாரி

தமிழில்: கதிரேசன்

எனது விரல்கள் கணினியின் விசைப் பலகையின் மீது பறந்து பறந்து இயங்கின. ஆனாலும் எனது கண்கள் என்னவோ கடிகாரத்தின் மீதே இருந்தது. என்னால் இன்று முதல் மெமோ மின்சார ரயிலை பிடிக்க முடியாது. திருமதி. தேவ் நம்மை பைத்தியம் பிடிக்கச் செய்து விடுவார். அலுவலகத்தை விட்டு வெளியே கிளம்பும் கடைசி நிமிடத்தில் தான் ஒரு வேலையைக் கொடுப்பார். பத்து பதினைந்து நாட்களுக்குப் பின் இப்போதுதான் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. அவர் செய்வது சரிதான். ஆனால், எனது அருமை பெண்மணியே, நீங்கள் பைக்கில் உங்கள் கணவரின் பின்னால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு போனால் போதுமானது. வீடு போய்ச் சேர்ந்து விடலாம். வீட்டில் சூடான இட்டிலி, சாம்பார் டிபன், காபி தயாராக இருக்கும். ஆனால் நான்? நான் ரயிலை தவற விட்டால் அடுத்த ரயிலுக்கு மணி கணக்கில் காத்திருக்க வேண்டும். வேறு ஒரு நகரத்திற்கு, அதுவும் ஆளில்லாத பெட்டியில் பயந்து கொண்டும், நடுங்கிக் கொண்டும் இரண்டு மணி நேரம் பயணம்
செய்ய வேண்டும். அதை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும்?

அப்பாடா! கடவுளே! வேலை முடிந்தது. ஆகா! இங்கேயே ஒரு ஆட்டோ நிற்பது மிகவும் நல்லதாகிவிட்டது.

ஓ தம்பி, வேகம், வேகம் தயவு செய்து வேகமா போ தம்பி! பல நாட்களுக்குப் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு திறந்து விடப்பட்டவர்களைப் போல மனிதர்கள் படு வேகமாக வீட்டை விட்டு வெளியேறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! அவர்கள் கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் எடுத்துக் கொண்டு பறக்கின்றனர்.

ஆனால் ஒரே ஒரு வெடிச்சத்தம் கேட்டால் போதும்! உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் தங்களை அடைத்துக் கொள்வார்கள். ஐயோ கடவுளே! இந்த சிவப்பு சிக்னல் கடைசி நிமிடத்தில் தான் விழ வேண்டுமா?

ஓ ரயில் நிலையத்தை அடைந்தாகிவிட்டது. பயணச்சீட்டு வாங்குவதற்கு என்னிடம் மிகச் சரியாகச் சில்லறை இருந்தது. எனவே சில்லரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஐயோ! எல்லோரும் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தை விட்டு மொத்தமாக வெளியே வருகிறார்களே! தயவுசெய்து கொஞ்சம் வழி விட மாட்டீர்களா? இந்த ரயில்வே ஊழியர்கள் இருக்கிறார்களே, இவர்களை திருத்தவே முடியாது! ச்சே! இந்த நீண்ட பிளாட்பாரத்தில் கடைசி முனையில் தான் படிக்கட்டு வைக்க வேண்டுமா என்ன? நான் போக வேண்டிய ரயில் நான்காவது நடைமேடையில் இருக்கிறது. ஓ! ரயில் புறப்பட போகிறதே! ஓடு! ஓடு! இன்னும் இரண்டே படிக்கட்டுகள் தான்! ஆ! பாழாய்போச்சு! ரயிலை விட்டு விட்டேன்!

டீ விற்பவர் சொல்கிறார்.”என்னம்மா ரயிலே தவற விட்டு விட்டீர்களே! இன்னும் ஒரு மணி நேரம் அல்லவா காத்திருக்க வேண்டும்!”

என்னை விசித்திரமாக பார்க்கிறார். நடைமேடையில் ஒருவரும் இல்லை. ஒரு பயணி கூட கிடையாது. இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைப் போல பயணிகள் இருந்தார்கள். ஒரு கல்லை விட்டு எறிந்ததும் கூட்டமாக பறந்து விடும் பறவைகளைப் போல அவர்களை எல்லாரும் பறந்து விட்டார்கள்.

ஒருவேளை நான் ஸ்மிதா வீட்டிற்கு போய் இருக்கலாமோ! இன்னும் ஒரு மணி நேரம் காத்திருந்து ரயிலைப் பிடித்தாலும் அதில் என் கூட சேர்ந்து பயணம் செய்வதற்கு ஒரு ஆள் இருக்காது. எங்கும் அச்சம் வியாபித்திருக்கிறது. டீ விற்பவர் என்னைப் பார்த்ததும் பயப்படுகிறேன். ஏதாவது ஒன்றை என்மீது எறியலாம், யார் கண்டது?

அவர் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும். எங்களைப் போன்றவர்கள் சாதி மத நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அவனுக்கு என்னைப் பற்றி தெரியாதல்லவா? அவர் எனது உடைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இல்லை, இல்லை, எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்! ஓ நரகமாக இருக்கிறது!

கைப்பையில் தான் தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தேன்! எங்கே போய்விட்டது! இதோ இங்குதான் வைத்திருந்தேன்! ஓ! தண்ணீர் காலியாகிவிட்டது!

சரி! போன் பூத்தில் இருந்து வீட்டுக்கு ஒரு போன் செய்யலாம். ஒரு தண்ணீர் பாட்டில் ஒரு வார இதழையும் வாங்கலாம். கணவர் விக்ரம் பேசுகிறார். நான் ரயிலைப் பிடிக்க முடியவில்லை என்று சொன்னதும் மிகவும் மன சோர்வு அடைந்து விட்டார்.
ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே போனை கட் செய்து விட்டேன்.

அவரது எரிச்சலை நான் அனுமதிக்க விரும்பவில்லை. போன் பூத்துக்காரர் இலவசமாக அறிவுரைகள் வழங்குகிறார்.
“இவ்வளவு நேரம் கழித்து ரயில் மூலமாக வீட்டுக்கு போக வேண்டாம். முன்பு இருந்த நிலைமை ஒரு மாதிரி! இப்போது அப்படி இல்லை. துணிகரம் வேண்டாம்” என்றெல்லாம் சொல்கிறார். இந்த பத்து நாளில் அப்படி என்ன மாறிவிட்டது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் யாரையும் நேசிப்பதில்லையா? கண்ணீர் சிந்துவதில்லையா? மலரும் முன்னே பூக்கள் எல்லாம் வாடி விடுகின்றனவா? எங்கே பார்த்தாலும் சந்தேகம்! இந்த அச்சத்திற்கான காரணம் தான் என்ன?

புத்தகக் கடையில் ஏதாவது புத்தகம் பார்ப்போம்! அங்கேயும் இதே மாதிரி தான் இருக்கும்! நாளிதழ்களில் மரண தேவர்களின் நடனம், நெருப்பு விளையாட்டு, சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகள்…. இரண்டு இதழ்களைப் பொறுக்கி எடுத்தேன். ஒரு பெஞ்சில் அமர்ந்தேன்.

நடைமேடை வெறிச்சோடிக் கிடந்தது. தேநீர்க் கடைகளில் நெருப்பு அணைக்கப்பட்டு விட்டது. காரமான நொறுக்கு தீனிகளை பொரிப்பதற்கான எண்ணெய் சில்லிட்டுப் போயிருந்தது. கடையில் வேலை செய்யும் பையன்கள் அரைத் தூக்கத்தில் இருந்தனர்.

கார்பன் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மறுபடியும் தங்கள் கிரேட்டுகளுக்கு திரும்பி இருந்தன. ஷூ பாலிஷ் போடும் கால்
ஊனமான பையன் ஷூ ஸ்டான்டையே தலையணையாக மாற்றி தூங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் நான் உட்கார்ந்து இருந்த பெஞ்ச் அருகில் படுத்திருந்த நாய் அமைதியற்று இருந்தது. அது சுற்றி சுற்றி பார்ப்பதும், எழுந்திருப்பதும், கழுத்தை நெரிப்பதும், காதுகளை விடைத்துக் கொண்டு எதையோ உன்னிப்பாக கவனிப்பதும் பின்னர் சுருண்டு படுப்பதுமாக இருந்தது. எங்கள் நடைமேடையைத் தாண்டி, அடுத்த நடைமேடையில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன. அவைகளைப் பார்த்து இந்த நாய் பயந்து விட்டதோ என்னவோ!

நான் உட்கார்ந்திருந்த பெஞ்சில் எனக்கு அடுத்து ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவள் கருப்பு நிற புர்க்கா அணிந்திருந்தாள். அவளது கைகள் மட்டுமே வெளியே தெரிந்தன. பெரிய துணிப் பையை வைத்திருந்தாள். புர்க்காவின் முகத்திரை அவளது கண்களை மறைத்திருந்தன. அவளது கண்கள் என்னையே ஊடுருவிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.

நடைமேடையில் அத்தனை காலியான பெஞ்சுகள் எல்லாம் இருக்கும்போது அவள் ஏன் என் பெஞ்சில் வந்து , என்னருகே அமர வேண்டும்? அவள் மனதில் என்ன நினைக்கிறாள்? அவளது பையில் வெடிகுண்டு வைத்திருப்பாளோ! அவள் திடீரென அந்தப் பையை விட்டு விட்டு சென்றால் – வெடிகுண்டு வெடித்தால் எனக்கு என்ன ஆகும்?

பாவப்பட்ட எனது கணவனுக்கும், எனது குழந்தைக்கும் அது பேரழிவை ஏற்படுத்தும்! ச்சே! இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாமே! பாவம் அவள் பாட்டுக்கு அமைதியாகத்தானே உட்கார்ந்திருக்கிறாள்! ஆனாலும் …..அவள் உண்மையிலேயே ஆபத்தில்லாதவள் தானா! இந்த இடத்தை விட்டுக் காலி செய்து விடுவோமா? வேறு எங்காவது போய் உட்காருவோமா? ஐயோ, எனது நாக்கு மேல் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டதே!

நாக்கு அசைய மறுக்கிறது. எனது விரல்கள் பையை இறுக்கிப்பிடிக்கின்றன. குளிர்ந்த காற்று வீசும் மாலை நேரம்! இருந்த போதிலும் எனக்கு வியர்த்து கொட்டுகிறது. நெற்றியில் இருந்து வியர்வை கைகளில் வழிகிறது.

அந்த நேரத்தில் விண்ணில் இருந்து இறங்கவரும் மீட்பராக, ஆபத்பாந்தவனாக மசால் வடை விற்பவர் வந்தார். இப்போது எனது நரம்புகளில் மறுபடியும் ரத்த ஓட்டம் ஆரம்பமானது. மீண்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது போலத் தெரிந்தது.

“நீங்கள் மிகவும் தாமதம்! முதல் ரயில் தான் போய்விட்டதே” என்றார்.

நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். ஏதாவது திக்கித் திணறி பேசி விடுவேனோ என்று பயந்துவாயை திறக்க பயந்து கொண்டு ஒன்றும் பேசவில்லை.

“ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இந்த மாதிரி நேரங்களில் இங்கே எல்லாம் உட்கார்ந்து இருக்க கூடாது” என்று என்னை எழுந்திருக்க சொல்லி சமிக்ஞை செய்கிறார். ஆனால் எனது கால்கள் அசைய மறுக்கின்றன.

அவர் எனது முட்டாள்தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டே கடந்து சென்றார். நான் இங்கே இருந்து போயாக வேண்டும். ஆனாலும் இந்த பெண் என்ன செய்வார் என்று தெரியாது. அவள் பையில் இருந்து கத்தியை எடுத்து என்னை குத்தி விட முடியும். அதை யாரும் பார்க்க மாட்டார்கள். அவள் என்னை ஒரு உதை விட்டாலே போதும்! சுருண்டு விழுந்து விடுவேன்.

அவள் கைகளைப் பாருங்கள்! அவைகள் ஆண்களின் கைகளைப் போல இருக்கின்றன. அந்த புர்க்காவுக்கு பின்னால் ஒரு மோசமான குற்றவாளி ஒளிந்திருப்பானோ! எப்படி இந்த இடத்தை விட்டுக் காலி செய்வது? ஏன்தான் இந்த நேரத்தில் பயணம் செய்தேனோ!

ஐயோ ராமா! நான் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர அருள் புரிவாயாக! அவள் மட்டும் என்னை ஏதாவது செய்ய முயற்சித்தால், இதோ பார் பெண்ணே! என்னிடம் இருக்கும் எதையும் எடுத்துக் கொள். ஆனால் என்னை மட்டும் கொன்று விடாதே என்று சொல்லி
விடுவேன். எனது தொண்டை வறண்டு விட்டது. யாராவது ஒருவர் வருவதை பார்த்து விட்டால் உடனடியாக அப்போது எழுந்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். இன்னொருவர் வருகிறாரா என்று கண்களை அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பினேன். ஒரு சுடுகுஞ்சு கூட இல்லை! அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

ரயில் எல்லா நேரங்களிலும் வருவதும் போவதுமாக இருக்கும். மக்கள் இங்கும் அங்கும் பரபரப்பாக இயங்குவார்கள். நடைமேடை உயிரோட்டத்துடன் இயங்கும். நிற்பதற்கு கூட இடம் இருக்காது. அவ்வளவு கூட்டமாக இருக்கும். நான் தினமும் பயணிக்கும் பெண்கள் பெட்டியில் கதிரடிக்கும் போது விழும் தானியங்கள் போல மக்கள் திமுதிமுவென குவிவார்கள்‌. ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது சிலர் மட்டுமே இறங்குவார்கள். காலியான இடத்தில் உட்கார இடம் கிடைத்ததுமே கைப்பைகளும், கூடைகளும் திறக்கப்படும். அவற்றிலிருந்து பீன்ஸ், பட்டாணி, பூண்டு போன்றவற்றை வெளியில் எடுப்பார்கள். பீன்ஸ், பட்டாணி பூண்டுகளை பிரிப்பார்கள். அவைகளின் தோல்களை உரிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில் ஊசிகளும் வண்ண வண்ண நூல்களும் வெளித் தோன்றும். வண்ண நூல்கள் சேலைகள், குர்தா, கம்பளி ஸ்வெட்டர் ஆடைகளில் பூக்களாக உருமாறும். பப்படம், ஊறுகாய் சட்டினி, மசாலா விற்பனையாகும். மாமியார், கணவன்மார்களால் துன்புறுத்தப்படும் பெண்களின் கண்ணீர் ஆறுதலாக துடைக்கப்படும். எப்போதாவது அடியும் வசவும் கூட பரிமாறிக் கொள்ளப்படுவது உண்டு.

ராமரக்ஷகாவத் பாடல்களும், காயத்ரி மந்திரங்களும் ஒலிக்கும். நமாஸ் தொழுகை செய்ய ஒரு பகுதி ஒதுக்கி தரப்படும். ரயில் நிலையங்கள் வரவர காலியான இருக்கைகள் மீண்டும் நிரம்பும்? அந்த முகங்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டன? பீன்ஸ் பட்டாணி, பூண்டு, பப்படம், மசாலா – இவைகள் எல்லாம் எங்கே? அவற்றை எல்லாம் பயங்கரமான முகங்களும், சந்தேகம் நிரம்பிய பைகளும் அப்புறப்படுத்தி விட்டன போலும்! இந்த இடத்தை விட்டு எப்படித்தான் எழுந்திருப்பது?

அப்பாடா! ரயில் வந்துவிட்டது! அது ரயில் நிலையத்திற்கு வந்ததைக் கூட நான் கவனிக்கவில்லை. சரி… சரி… நான் உடனடியாக பெண்கள் பெட்டியில் ஏற வேண்டும்.ஓ! எனதருமை புர்க்கா பெண்ணும் அல்லவா என் பின்னாலேயே ஏறுகிறாள்! என்னை தனியே விட மாட்டேன் என்கிறாளே!

பெட்டி கிட்டத்தட்ட காலியாக கிடந்தது. இரண்டு மூன்று பெண்களே இருந்தனர். காலிக் கூடையை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு மீன்காரப் பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். மீன்கூடை நாறுகிறது. பரவாயில்லை. பெட்டியில் மனித இருப்பு இருப்பதே எனக்கு போதுமானது. அந்தப் புர்க்கா பெண்ணும் எனக்கு எதிரிலேயே அமர்கிறாள்.

அவள் அணிந்திருக்கும் புர்க்கா போன்றே ரயிலுக்கு வெளியேயும் கும்மிருட்டாக இருக்கிறது. இருண்ட பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு ஒரு வெளிச்ச ரேகையும் கிடைக்கவில்லை. ஐயோ! என்ன செய்வேன்! என் மீது நிலைகுத்தி இருக்கும் அந்தக் கண்களிடமிருந்து தப்பிக்கலாம் என்று நம்பி என் கண்களை இறுக்க மூடினேன். இருட்டு தொலைந்து விடும் என்ற நம்பினேன். இப்போது அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ? அவர்களை நம்பக் கூடாது என்று மக்கள் சொல்கின்றனர். எப்போது அவர்கள் கத்தியை உருவி உங்களை கசாப்பு செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியாது. என் கூட படித்த ஹசீனாவின் தம்பி அவள் மனைவியை குத்திக் கொலை செய்து விட்டானாம்! இந்தப் பெண்ணும் அதே மாதிரி என்னைக் கொலை செய்து விடுவாளோ என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

ஐயோ கடவுளே! யாரோ என்னை உலுக்குகிறார்கள்! கண்களைத் திறக்கிறேன். ஆ! அது புர்க்காவில் இருக்கும் பெண்தான்! ஓ! கூடாது! என்னை என்ன செய்யப் போகிறாள்? உதவி கேட்டு சத்தம் போடலாமா? மீன்காரப் பெண்ணோ அயர்ந்து தூங்குகிறாள். என்னைக் கொன்று போட்டாலும் அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடலாமா? கடவுளே என்னை காப்பாற்று!
சத்தியமாக இனிமேல் ரயிலிலேயே வரமாட்டேன். என் வேலையைக் கூட விட்டு விடுகிறேன். கணினியில் தட்டச்சு செய்வதை விட்டொழிக்கிறேன். இந்த கொடுங்கனவில் துயர படுவதை விட பட்டினி கிடப்பது எவ்வளவோ மேல்!

“சகோதரி! சகோதரி!”

ஓ! அந்தப் பெண்பேசுகிறாள்.

“நான் வரும் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். நீங்கள் என் பக்கத்தில் இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இந்த மாதிரி சமயங்களில் தனியாகப் பயணம் செய்வது பற்றி உங்களுக்கு தெரியுமா? நான் மிகவும் பயந்து விட்டேன். அது ரொம்ப கஷ்டமானது. என்னால் நம்ப முடியவில்லை!”

ஓ! அவளும் என்னைப் போலவே பயந்து கொண்டே இருந்திருக்கிறாள். நான் வெடிச்சிரிப்பு சிரித்தேன்.

” இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? நானும் தான் தினமும் ரயிலில் போய் வருகிறேன்”.

திடீரென எனது குரல் ரயிலின் விசில் சத்தத்தை விட அதிக வலிமை கொண்டதாக மாறியது.

அவள் தனது கைகளை எனது கைகளுக்குள் வைத்து ” கடவுள் உங்களை காப்பாராக” என்றாள்.

அவளது கைகள் வியர்வையில் ஈரமாக இருக்கின்றன. அவள் என்னைத் தொட்டதுமே எனது வியர்வை அவளது வியர்வையுடன் ஒன்று கலக்கிறது. ரயில் நிற்கிறது. அவளது பைகளை இறக்கி உதவி செய்கிறேன். திடீரென அந்தப் பைகள் லேசாகவும், தீங்கற்றதாகவும் தெரிகின்றன. ரயில் நிலையத்தின் மங்கிய வெளிச்சத்தில் அவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்.

மீன்காரப் பெண் கொட்டாவி விடுகிறாள். கை கால்களை நீட்டி நெட்டி முறிக்கிறாள். கூடையில் இருந்து ஒரு பையை எடுக்கிறாள். உள்ளே பச்சைப் பசேல் என்ற பீன்ஸ். அந்தப் பசுமை சுற்றியுள்ள எல்லாவற்றிலும் வியாபிக்கிறது. இருட்டில் கண் சிமிட்டுகின்ற நட்சத்திரங்கள் எனது வீட்டுக்குச் செல்லும் வழியை வெளிச்சமாக்குகின்றன.

நன்றி: ஃப்ரண்ட் லைன், ஜூலை,29,2022
தமிழில் ம.கதிரேசன்

பயணம் கவிதை – ரவி வெங்கடேசன்

பயணம் கவிதை – ரவி வெங்கடேசன்




மாய நதியின் ஈர அலையில்
தங்கப்படகொன்று தன்னந்தனியாய்
ஆழ்கடலின் சங்குகளை சேகரிக்க
நிலவின் கங்குகளில் குளிர் காய்ந்தது
துடுப்பு

இலட்சியம் இல்லா பறவைகளுக்குத்
தேடல் குறைவதில்லை
எதைத் தேடிச் சென்று எங்கு தொலைந்தாய் மனிதா
சிதை நாடி வரும் முன்னே – உன் கதை அறிவாய்

ஒற்றையடிப் பாதையின் நீண்ட பாதத் தடங்கள்
மிக நீண்ட தேடல் கொண்டவை

அவற்றின் கதகதப்பை உணரும் பாதங்களுக்கு

அவை ஆகாய வீதியின் கம்பளங்கள்

பாழடைந்த மனங்கள்
பொதுவெளியில் புது ஒளி பெறும்

ரகசியம் உடைத்திடும் இளங்காற்றில்
பேரண்ட உண்மைகள் வெளிவரும்

அறிமுகம் இல்லாத சிறகுகளில்
மனம் பற்றி கொண்டு போக
அரவமற்ற வனமாக வாழ்க்கை
அழைத்துச் செல்லும் தூரம் வரை செல்ல
பயணம் அங்கே தொடங்குகிறது

– ரவி வெங்கடேசன்
9962741696
ravivenkatesan2022@gmail.com

நூல் அறிமுகம்: வே.குமரவேலின் சிகரம் செந்தில்நாதன் – பாதை-பயணம்-படைப்புலகம் – சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: வே.குமரவேலின் சிகரம் செந்தில்நாதன் – பாதை-பயணம்-படைப்புலகம் – சு.பொ.அகத்தியலிங்கம்




மாபெரும் ஆளுமைகளை வாழும் காலத்தில் வாழ்த்துவதும் பாராட்டுவதும் கொண்டாடுவதும் பெருமைக்கு உரிய வாய்ப்பு. சிகரம் செந்தில்நாதனின் எண்பதாவது அகவையைக் கொண்டாட விழா எடுத்ததும் ; அவரை போற்றும் இந்நூலைக் கொண்டுவந்ததும் பெருநிகழ்வே !

இந்நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்க எனக்கு வாய்ப்பு அமையவில்லை . இருந்த இடத்திலிருந்தே என் அன்பைப் பகிர்ந்து கொள்கிறேன். நூலைப் புரட்டிய போது நான் எழுதிய ஓர் நூல் மதிப்புரையும் இடம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். என் நினைவுகள் சற்று பின்னோக்கி குமிழியிட்டன .

நூலறிமுகத்தில் சுயபுராணம் கூடாதுதான் ; ஆயினும் அடக்க முடியா ஆர்வத்தால் சில வரிகளை எழுதிவிட்டு நூலுக்குள் செல்கிறேன்.

அவசரகாலத்தில் என் அண்ணன் தோழர் சு.பொ.நாராயணன் தட்டச்சராக  ச.செந்தில்நாதனிடம் பணியாற்றினார் . அப்போதுதான் ‘சிகரம் ‘ வெளியிடப்பட்டது. சு.பொ.அலி என்கிற பெயரில் நான் கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருந்தேன். என் கவிதை ஒன்றை என் அண்ணன் எடுதும் போய் செந்தில் நாதனிடம் கொடுக்க சிகரம் முதல் இதழில் அது வெளியானது மறக்க முடியாத நினைவு. அதைத் தொடர்ந்து சிகரத்தோடு என் பிணைப்பு அதிகமானது . சில கவிதைகள் வெளிவந்தன. அதோடு உ.ரா.வரதராசன், நான் எல்லோரும் பழவந்தங்கலில் இலக்கிய நிகழ்வுகள் நடத்தத் துவங்கியதும் மேலும் நெருங்கினோம். நான் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியாய் செயல்படத் துவங்கும் முன் எழுத்தாளர் சங்கமே என் முதல் அடிவைப்பாக இருந்தது .

அவசரகாலத்தில் நாமக்கல்லில் நடந்த தமுஎச [ அப்போது தமுஎசதான் தமுஎகச அல்ல] பயிற்சி முகாமில் பங்கேற்க என்னை அழைத்துப் போனார். செலவை அவரும் உ.ரா.வரதராசனும் பங்கிட்டு அளித்தனர். முகாம் முடிந்தபின் செந்தில்நாதன் சேலத்தில் இருநாள் தங்க திட்டமிட்டார். அவர் மனைவி சேலத்தில் பணியாற்றி வந்ததால். ‘சேலத்தில் ஒரு கால், சென்னையில் ஒரு கால்’ என அவர் வேடிக்கையாகச் சொல்வார். என்னை தோழர் கே.முத்தையாவுடன் அன்ரிச்ர்வ்ட் கோச்சில் அனுப்பி வைத்தார். தலைமறைவாய் இருப்பதால் டிக்கெட் ரிசர்வ் செய்யவில்லை அவருக்கு . அவரோடு போக வேண்டும் ஆயின் அவரோடு பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் . போலீஸ் மோப்பம் பிடிப்பதால் அந்த கண்டிசன். இது ஓர் வித்தியாசமான அனுபவம்.

ச.செந்தில்நாதன் தமுஎச மாவட்ட செயலாளர் நான் துணைச் செயலாளர் என பணியாற்றினோம். அக்கால கட்டத்தில் முனைவர் கோ.கேசவன் பல அரிய கட்டுரைகளை மாதாந்திர நிகழவில் வாசித்ததும் அவை “மண்ணும் மனித உறவுகளும்” எனும் நூலாய் வெளிவந்ததும் நினைவில் இருக்கிறது.

வாலிபர் சங்கம், கட்சி, தீக்கதிர் என் என் பயணம் தொடர்ந்த போதும் அவரோடு தோழமை பூண்டிருந்தேன்.அது குடும்ப நட்பாகவே நீடித்தது.

தோழர்கள் செந்தில்நாதன், முகம் மாமணி, சமுத்திரம், தயானந்தன் பிரான்ஸிஸ், தி.க.சி, போன்றோருடன் நானும் கிறுத்துவ இலக்கியக் கழக அறையில் / செந்தில்நாதன் அறையில் /சமுத்திரம் அலுவலத்தில் என மாறிமாறி சந்தித்து இலக்கிய உரையாடியதும், பலவேறு இலக்கியம் சார்ந்த போராட்டங்களை கூரேற்றியதும் பசுமையாய் உள்ளன .

சு.சமுத்திரத்தின் படைப்புலகைத் தொகுக்கும் பணியை என்னிடம் பேசி ஒப்படைத்தது ச.செந்தில்நாதனே . அவ்வப்போது வழிகாட்டி நூல் சிறப்பாக அமைய வழிகாட்டினார். சமுத்திரத்தின் மறைவு செந்தில்நாதனுக்கும் எனக்கும் பேரிழப்பே !

நான் ‘தேடல் வெளி’ என ஓர் ஆய்வு வட்டத்தை சொற்பகாலம் நடத்திவந்தேன். மாதந்தோறும் பத்து பன்னிரெண்டு இளம் ஆய்வாளர்கள் யாரேனும் ஓர் வீட்டில் சந்திப்பது ; ஏதேனும் ஒரு பொருளில் ஒருவர் ஆயுவு கட்டுரை வாசிப்பது ;
விவாதிப்பது என்பதே அதன் செயல்பாடு. சி.இளங்கோவன் எழுதிய “ தமிழ்நாட்டில் வேதக் கல்வி” எனும் அரிய நூல் இங்கு பிறந்ததே. அதற்கான கூட்டமும் செவ்வாப்பேட்டையில் என் வீட்டில் நடந்ததே. செந்தில்நாதன் வீட்டில் நடந்த தேடல்வெளி கூட்டத்தில்தான் நான் அவரை கடைசியாக நேரில் சந்தித்தேன். அன்று சோஷலிச யதார்த்த வாதம் குறித்து அண்ணாதுரை கட்டுரை வாசித்தார். அதில் செந்தில்நாதன் குறுக்கிட்டு பொருள் பொதிந்த கருத்துகளை கிராம்ஷியோடு இணைத்து சுட்டிக்காட்டினார்.

சொல்லச் சொல்ல நீளும் .இடம் கருதி ஒரு செய்தியோடு நிறுத்துகிறேன் .ஒரு கட்டத்தில் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் பேசி அ.குமரேசன், மயிலை பாலு இருவரும் தமுஎகச பணியில் ஈடுபடட்டும் என முடிவெடுத்து நான் ஒதுங்கிக் கொண்டபின் தமுஎகச தொடர்பு நடைமுறையில் மொத்தமாக அறுந்துவிட்டது. செந்தில்நாதனோடு தொடர்பும் எழுத்துவழி என்பதாகிவிட்டது. வாழ்க்கைச் சூழல் நான் பெங்களூருக்கு குடிபோய் விட்டேன். இனி நூலுக்குள் போவோம்…

முதல் பகுதி வாழ்த்துச் செய்திகள். அதைத் தொடர்ந்து பல ஆளுமைகளின் கட்டுரைகள், அதன் பின் நூலின் இதயமான சிறப்பு நேர்காணல், சுவடுகள் என்கிற தலைப்பில் செந்தில்நாதன் பதித்த பல்வேறு முத்திரைகளை அவ்வப்போது பல ஆளுமைகள் நினைவுகூர்ந்தவை, நூல் மதிப்புரைகள், சுருக்கமான சொந்த வாழ்க்கைக் குறிப்பு, செந்தில்நாதனின் இதுவரையிலான படைப்புகள் பட்டியல் [இன்னும் தொடரும் ] என ஏழு பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது.

செந்தில்நாதன் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் பலரின் வாக்குமூலமாகவே இந்நூல் தொகுப்பு அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. அதிலும் தனிநபர் துதியாக இல்லாமல் படைப்பு சார்ந்தும் கருத்து சார்ந்துமே அவை பெரிதும் அமைந்திருப்பது தற்செயலானது அல்ல ; செந்தில்நாதனின் வாழ்க்கைப் பாதையும் பயணமும் அத்தகையதே !

நூலின் இதயமாக அமைந்துள்ள சிறப்பு நேர்முகத்தை வாசிக்கும் முன் நேர்காணல் செய்த வே.குமரவேல் ஆரம்பத்தில் சொல்லிய வரிகள் முக்கியமானவை .

“இந்த நேர்முகத்தை – கலந்துரையாடலை படிக்கும் நண்பர்களும் புதிய வாசகர்களும், திரு .சிகரம் செந்தில்நாதன் அவர்கள் முருகவேள் அவர்களுக்கு வழங்கிய நேர்காணல் புத்தகத்தை படித்த பிறகு இதனை வாசித்தால் ஓர் தெளிவான சித்திரம் கிடைக்கும். கூடவே சமகாலப் பிரச்சனைகள் பற்றி ச.செந்தில்நாதன் அவர்கள் பல இதழ்களில் பல நேரங்களில் வரைந்துள்ள கட்டுரைகள் ‘இலங்கை முருகனும் மலேசிய முருகனும்’ எனும்தலைப்பில் சந்தியா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. மேலும் ‘ நீதிமன்றமும் நானும்’ என்ற நூலும் இருக்கிறது. இந்த மூன்று நூல்களையும் படித்துவிட்டு பிறகு இந்த விரிவான நேர்காணலைப் படித்தால் அந்த வரிசைக் கிரமம் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்துகொள்ள உதவும்.”

ஆம். இந்த சிறப்பு நேர்காணல் முழுக்க முழுக்க கருத்துத் தளத்தில் பயணிக்கிறது எனவே அதனை ஒட்டி முழு புரிதலுக்கு மேற்கண்ட வழிக்காட்டல் நியாயமானதே !

“ நான் சொல்வது மண்ணுக்கேற்ற மார்க்சியம் அல்ல ; மண்ணைப் புரிந்து கொண்ட , மண் சார்ந்த மார்க்சியம்” என் இந்நேர்காணலிலும் அழுத்திச் சொல்கிறார். நேர்காணலின் அழுத்தமும் அதை நோக்கியே அவர் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது .

திராவிட இயக்கம் குறித்த பார்வை, தமிழில் வழிபாடு குறித்த பார்வை, ஈழத் தமிழர் போராட்டம் குறித்த பார்வை , அரசியல் சாசனம் குறித்த பார்வை, மாநில உரிமை தமிழ் தேசியம் குறித்த பார்வை என நீளும் இந்த நேர்காணல். இது அவரின் தொடர் எழுத்துகள், போராட்டங்கள் இவற்றின் தொடர்ச்சியே என்பதை அவரை தொடர்ந்து அவதானிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும். இதில் உடன்படவும் முரண்படவும் நிறைய இடம் உண்டு. அது குறித்து சுட்டத் துவங்கினால் நூல் மதிப்புரை வேறு அரசியல் விவாத தளத்துக்கு நகர்ந்துவிடும் எனவே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

“ உரிமை வழக்கும் /குற்ற வழக்கும் போலவே /உலக வழக்கும் செய்யுள் வழக்கும்/முறையாய்க் கற்றவர்/சிக்கல் அற்றவர்” …. எனவும் ,”நீதிமன்றத்துக்கு உள்ளேயும் /நீதிமன்றத்துக்கு வெளியேயும் வாதாடும் / ‘ புதிய மன்றாடி போலும்’ என்று /சேக்கிழார் தொடரை சிறிது மாற்றி /சிகரம் செந்தில்நாதனை / வாழ்த்தி மகிழ்கிறேன்.” என செந்தில்நாதனின் உயிர்நண்பர் கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் வாழ்த்தியிருப்பது மிகை அல்ல . சு.சமுத்திரம் உயிரோடு இருந்திருந்தால் செந்தில்நாதனின் எண்பதாவது அகவை விழாவை எப்படி கொண்டாடித் தீர்த்திருப்பார் ?

தாம் தொடங்கிய ‘சிகரம்’ ஏட்டின் பெயராலேயே இன்றுவரை அறியப்படும் ச.செந்தில்நாதன் எனும் மாபெரும் ஆளுமையை தனிநபர் துதியின்றி கருத்துச் செறிவால் சித்தரித்துக் காட்டும் “சிகரம் செந்தில்நாதன் -பாதை-பயணம்-படைப்புலகம்” இந்நூலை ஊன்றி வாசிப்பீர் ! விவாதிப்பீர் ! தமிழ்நாடு முற்போக்கு திசைவழியில் தொடர்ந்து பயணிக்க தோள் கொடுப்பீர் .

தோழர் சிகரம் செந்தில்நாதன் வாழும் இக்காலத்தில் அவரோடு கை இணைந்து பயணித்தேன் எனும் பெருமிதத்தோடு அவர் நூற்றாண்டு காண வாழ்த்துகிறேன்.

நூல்: சிகரம் செந்தில்நாதன் – பாதை-பயணம்-படைப்புலகம்,
தொகுப்பாசிரியர் : வே.குமரவேல் ,
வெளியீடு : சந்தியா பதிப்பகம் ,
பக்கங்கள் : 428 ,
விலை : ரூ.450/
சென்னை -600040,
தொடர்புக்கு : 24896979 / 944471515,
சு.பொ.அகத்தியலிங்கம்.
15/11/2022.

நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி




நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்)
விலை: ரூ.170/-

ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : பிப்ரவரி-2022
Email : bharathiputhakalayam@gmail.com
www.thamizhbooks.com

ரயிலை நேசிக்காத குழந்தைகள் உண்டா. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ரயிலை பார்த்தால் அவர்களின் மனம் சிறிய குழந்தைகளின் உயரத்திற்கேச் சென்று உயர பறக்கும். அந்தளவிற்கு ரயிலை நேசிக்காதவர்களே இல்லை எனலாம்.

ரயிலின் வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அதன் முழுத் தகவலும் கிடைத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தானே செய்யும்.

ஆம் இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும், பள்ளி ஆசிரியரும், அவருடைய பள்ளி மாணவர் ஒருவரும் அம்மாணவனின் வீரதிர செயலுக்காக விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க கோவையிலிருந்து இரண்டு நாள் ரயில் பயணத்தில் டெல்லி செல்லும் வழியில் உரையாடல் நடத்துவது போன்று மிக இயல்பாக எழுதப்பட்ட நூல் இது என்றால் மிகையல்ல.

நானெல்லாம் ஆரம்பத்தில் ரயிலில் உட்கார்ந்து செல்லும் சீட் மட்டுமே இருக்கும் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தை நொறுக்கும் விதமாக இந்தியன் வங்கி ஊழியர் தோழர் ஜெ.மனோகர் அவர்கள் ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வரும் ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளோடு செல்வதற்கான வாய்ப்பாக நாகர்கோயில் மாநாட்டுக்காக என்னையும் பல நண்பர்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். “ம் சரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து போகப் போறோமோ” என்று நினைத்து ரயிலில் ஏறினேன். எனக்கு ஒரு சீட்டை காண்பித்தார். நானும் உட்கார்ந்துவிட்டு என்னோடு இன்னும் மூன்று நான்கு பேர் உட்கார வருவார்கள் என்று சீட்டின் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். ‘என்ன ஓரமா உட்கார்ந்திருக்கீங்க இந்த சீட் முழுவதும் உங்களுக்குத்தான். இரவில் நன்றாக தூங்கலாம் இது ‘படுக்கை சீட்’ என்று கூறினார். அப்படியே ஆச்சரியத்தில் “என்னது தூங்கிகிட்டு போற சீட்டா, இப்படி ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றே இவ்வளவு நாளா தெரியாமல் இருந்திருக்கேனே” என்று ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக பயணம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தூரமும் ரயிலையே தேர்ந்தெடுத்தேன். இப்போது வரை ரயில் பயணம் என்றால் அது எவ்வளவு தொகையா இருந்தாலும் செல்போனில் டிக்கெட்டை எடுத்து விடுவேன். அப்படித்தான் ஒருமுறை ஏல முறையில் ரயிலில் நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் விலை எகிறிடும் வகையில் இருந்த முறையில் சாதாரண நாளில் ரூ.1300 இருக்கும் டிக்கெட் அன்று இணைய ஏலத்தில் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு ஏசி கோச்சில் ரூ.5,000 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். ரயில் பயணம் அவ்வளவு ஈர்ப்பு என்றால் பார்த்துக்குங்களேன்.

இப்போ டிக்கெட் எடுத்தாலும் GST, கேன்சல் செய்தாலும் GST என்று அடுத்த ஏலச்சீட்டு நடத்த ஆட்சியாளர்கள் தயாராகி விட்டார்கள்.

சரி சரி நம்ம புராணத்தை அப்புறம் வச்சிக்குவோம். விஷியத்துக்கு வர்றேன்.

ரயில் எப்படி இயங்குகிறது;
தண்டவாளங்களில் கோளாறு இருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்; சிக்னல்கள் ஒரு மஞ்சள் விளக்கு, இரண்டு மஞ்சள் விளக்கு, சிவப்பு இதெல்லாம் எதைக் குறிக்கிறது; தண்டவாளம் வளைவா இருக்கிற பகுதிகளில் ரயில் கவிழாமல் செல்வது எப்படி; ஒற்றை தண்டவாளத்தில் ரயில்கள் எதிரேயும், பின்னாடியும் வரும் ரயில்கள் எப்படி ஒழுங்கு குலையாமல், எதிரே வரும் ரயிலுக்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரம் ஒதுங்கி நின்று செல்கிறது; ரயில்வே ஓட்டுநர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்; சரியான பிளாட்பாரத்தில் எப்படி ரயிலை நிறுத்துகிறார்கள்; ரயில் எஞ்சினில் பிரேக் பிடித்தால் எல்லா பெட்டிகளும் எப்படி ஒரே நேரத்தில் நிற்கிறது;
(ரயிலில் பிரேக் சிஸ்டம் என்பது எஞ்சினுக்கு எதிர்புற மின்சாரத்தை கொடுத்தால் சக்கரம் முன்னோக்கி சுற்றுவதற்குப் பதில் ரீஜெனரேட் முறையில் பின்னோக்கி சுற்றுவது போன்று அமைத்து ரயிலில் பிரேக் பிடிக்கிறார்கள் என்று இப்போதுதான் புதியதாக கற்றுக்கொண்டேன்); ரயில்வே ஊழியர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்; ரயிலின் வேகம் எப்படி மாறுபடுகிறது; பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று ரயில் நிற்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளை பள்ளி மாணவன் கேட்பது போல் அமைந்த உரையாடல் வழியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

ஒரே ஒரு தகவல் மட்டும்
ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிவிட்ட பின்பு சற்று ஓய்வு கிடைக்கும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்நூலை படித்தவுடன் மிகவும் அதிர்ந்தே போனேன். ஆமாம் ரயில் செல்லும்போது ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் எஞ்சினில் இருக்கும் ரயில் இயக்கும் கணினி தொழில்நுட்பத் திறையில் அது கேட்கும் தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் ரயிலில் ஓட்டுநர் இல்லையென்று ரயில் சந்தேகப்பட்டு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கும் பதில் இல்லையெனில் தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்றுவிடும். எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இது என்று ஆச்சரியப்பட்டேன். ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) அவ்வளவு தூரம் கண்ணுறங்காமல் ரயிலை இயக்கும் ரயில் எஞ்சினில் ஓட்டுநர்களுக்கு என்று ஒரு கழிவறை இல்லையேயென்பது எவ்வளவு வேதனை. அவசரமாக வந்துவிட்டால் அடக்கிக்கொண்டு அடுத்த ரயில் நிலையம் வரை பொறுத்திருக்கனும். அதுவும் ஒருநிமிடம், ரெண்டு நிமிடத்திற்குள் ஓடிவந்துவிட வேண்டும். இவ்வளவு கொடுமையான சூழலிலும் ரயில் ஓட்டுநர்கள் பயணிகளை மிகவும் பத்திரமாக பயணிக்க உதவுகின்றனர்.
இன்னும் இன்னும் நிறைய பொக்கிஷங்களை தென்னக ரயில்வே முதன்மை லோகோ ஆய்வாளர் தோழர் சு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், இஸ்ரோ விஞ்ஞானி தோழர் பெ.சசிகுமார் அவர்களும் மிக எளிய மொழியில் நமக்கு வழங்கியிருக்கின்றனர்.

அத் தோழர்களுக்கும், நூலை மிகச்சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கும், இந்நூலை எழுத வழிகாட்டிய தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.
அனைவரும் இன்றே மேற்கண்ட முகவரியில் நூலை புக் செய்து வாசித்து உள்ளம் மகிழுங்கள் தோழர்களே!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
செல் : 9443534321.

அமீபாவின் கவிதைகள்

அமீபாவின் கவிதைகள்




நீ சொல்வது
எனக்குப் புரியாமல் போனால்
ஒரு பிரச்சனையும் இல்லை.

நீ சொல்வது
எனக்கு புரிந்தால் கூட
எந்தப் பிரச்சினையும் இல்லை.

நீ சொல்வதைக் கடந்து
சொல்லாத சொல்லும்
எனக்குப் புரிந்து விடுவதே பிரச்சனையாகி விடுகிறது.

*******************************************

காலை நேர தாமதம்
பதட்டமான இருசக்கர  பயணம்
சாலையின் குறுக்கில் இருந்து
ஒரு குட்டி பிராணி போல்
உருண்டு உருண்டு வந்து
சக்கரத்தின் அடியில்
சிக்கி நசுங்கியது
நெகிழிப்பை ஒன்று
 சட்டென தோன்றியது

அதற்கு வலித்திருக்குமோ…

– அமீபா

பயணங்கள்  கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

பயணங்கள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




தாஜ்மஹால் காண
ரயிலில் சென்றேன்
கும்பத்துடன் கூச்சல் துணையொடு
தஞ்சாவூர் முதலே தரையில் ஒருவர்
வெயிலை பொருட்படுத்தாது
எதுவுமில்லாமல்
அவ்வளவு இனிமை தனிமையில்
பயணம் அனைவருக்கும் பொது வல்ல
பணயம் மனிதனுக்கு புதிதல்ல

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140

இருண்ட வீடு சிறுகதை – சுதா

இருண்ட வீடு சிறுகதை – சுதா




சென்னையில் இருந்து விழுப்புரம் பயணமானோம். எப்போதும் போல இன்றும் என் செவிகளுக்குள் காற்று நுழையும் சத்தம் கூட கேட்கவில்லை. காரில் ஏதோ பாடல் பாடுதுணு நினைக்கிறேன். என் அண்ணன் பாடலுக்கு ஆடுகிறான். என் அம்மா கோபப்பட்டு ஏதோ சொல்கிறார் உடனே டிரைவர் சீட்டில் இருந்த என் அப்பா ரேடியோ சத்தத்தை குறைக்கிறார். ஆனால் எனக்கு எதுவும் கேட்கவில்லை.

நான் இப்போது மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்கிறேன். என் அண்ணன் ஆறு முடித்து 7 செல்கிறான்.நாங்கள் சென்னையில் உள்ள வீட்டை காலி செய்து விழுப்புரத்தில் தங்க உள்ளோம். விழுப்புரத்தில் என் அம்மாச்சி வீடு உள்ளது. அது இன்னும் என்னை சந்தோஷப்படுத்துகிறது.நான் காது கேளாதவர் பள்ளியில் பயில வில்லை. என் அண்ணன் படித்த அதே பள்ளியில் தான் படித்தேன். அங்கு எல்லா பிள்ளைகளுக்கும் காது கேட்கும் போல. எல்லோரும் ஏதேதோ பேசுவார்கள். என்னைப் பார்த்துப் பார்த்து சிரிப்பார்கள். டீச்சரும் சிரிக்க சிரிக்க பேசுவாங்க எனக்கு சிரிக்கவே தெரியாது. என்னோட ஒரே ஃபிரண்ட் அமைதி மட்டும்தான்.

கொஞ்ச நாள் கழிச்சு என்னோட காதல ஒரு மெஷின் மாட்டினாங்க. அப்ப எனக்கு சின்ன சின்ன சத்தம் கூட பெருசா கேட்கும். காக்கா கத்துவது கூட பெரிய சத்தமா கேட்கும் அப்ப வகுப்பறையில் பிள்ளைங்க கத்துறது எனக்கு எவ்வளவு சத்தமா கேட்கும் என நீங்களே நெனச்சு பாருங்க. பரவால்ல எந்த சத்தமும் கேட்காம இருந்த என் காதுக்கு இந்த சத்தம் இசையாதான் இருக்குது.

நாங்க நாலு பேரும் அம்மாச்சி வீட்டிற்கு போயிட்டோம் அம்மாச்சி நல்லா சமைப்பாங்க. நான் சொல்லவே தேவையில்லை எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சாப்பிடுவதை வச்சு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அன்னைக்கு அம்மாச்சி வீட்டுக்கு போயி நல்லா சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன். தூங்கி எழுந்ததும் காது மிஷின தான் தேடினேன். எடுத்து மாட்டிகிட்டு வெளியில போனேன். என்னோட அம்மா பக்கத்து வீட்டு அத்தை கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னும் இல்லையாம் சின்ன குறை தானாம் சீக்கிரம் சரி ஆயிடுமாம் எல்லாரும் படிக்கிற ஸ்கூல்ல நானும் படிக்கலாம் அப்படின்னு அம்மா அத்தைகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா எனக்கு மட்டும் இல்ல அம்மாவுக்கும் தெரியும் நான் எல்லோரும் படிக்கக்கூடிய பள்ளியில் படிக்கிறதுக்கு சரியான பையன் இல்ல அப்படின்னு. எதனால அம்மா இப்படி சொல்றாங்கன்னு எனக்கு தெரியல ஒரு வேளை நான் குறையா இருக்குறத மத்தவங்க கிட்ட சொல்ல கஷ்டப்படுறாங்கலோ என்னவோ..

காது கேட்காமல் வாய் பேச முடியாத நான் எப்படி ஆரோக்கியமா இருக்கக்கூடிய குழந்தைங்க கூட போட்டி போட முடியும். என்னால முடியுமா அப்படின்னு யோசிக்கும்போதே பக்கத்து வீட்டு அத்தைகிட்ட அம்மா சொன்னாங்க நாளைக்கு ஒரு ஸ்கூல என்றன்ஸ் எழுத போறோம் அப்படின்னு.எனக்கு மனசுக்குள்ள கொஞ்சம் பயம் வந்துடுச்சு.

மறுநாள் காலையில நான் தூங்கி எழும்போதே எல்லோரும் கிளம்பிட்டாங்க ஒருவேளை என்ட்ரன்ஸ் க்கு அண்ணன் மட்டும் தானு நினைச்சேன்.ஆனா நானும் கிளம்பி அந்த ஸ்கூலுக்குப் போனேன்.எனக்கும் எழுதறதுக்கு பேப்பர் கொடுத்தாங்க. நானும் எழுத முயற்சி பண்ணினேன். ஆனா என்னால எழுத முடியல.

எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு எதுவுமே தெரியல. உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன் நான் சிறப்பு குழந்தை. என்னைச் சிறப்பு பள்ளியில் சேர்த்துருங்கன்னு. எழுதவும் பேசவும் முடியாத நான் என்னுடைய எண்ணங்களை எப்படித்தான் வெளிப்படுத்த. இதை வாசிக்கிற நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த குழந்தை இப்படி இருந்தா நான் சொல்றதை கொஞ்சம் நினைத்து பாருங்க. உறவுக்காரங்க என்ன சொல்வாங்கன்னு யோசிக்காதீங்க. எங்கள மாதிரி குழந்தைகளுடைய எண்ணங்களை யோசிங்க.

இதையெல்லாம் யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்தேன். வீடு இருண்டு தெரிஞ்சுச்சு. இருண்ட வீட்டில் செவிகள் அற்ற ஓர் அமைதி. கொஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கலந்தது…உங்களுக்கு தெரியாது…