Theerpu Short Story by Bama Synopsis 73 Written by Ramachandra Vaidyanath. பாமாவின் தீர்ப்பு சிறுகதை

சிறுகதைச் சுருக்கம் 73: பாமாவின் தீர்ப்பு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




சாதீய வன்மமும். ஒடுக்குமுறையும் இண்டு இடுக்குகளிலெல்லாம் நிரவி நியாயப்படுத்துவது தொடர்கிறது.

தீர்ப்பு
பாமா

மூனு நாலு அஞ்சாங் கிளாம் பிள்ளைகளுக்கு ரொம்பாக்கும் மரச்சமா இருந்துச்சு. அவுகள மட்டும் நாளைக்கு பக்கத்து ஊர்ல இருக்குற சினிமா தியட்டருக்குப் படம் பார்க்கக் கூட்டிட்டுப் போப்போறாங்க. அந்த சந்தோசத்துல பாடங்கூட படிக்க முடியாமெ எப்படா நாளைக்கு வரும்னு எதிர்பாத்துக்கிட்டு இருந்தாக. ஆள் ஒன்னுக்கு அஞ்சு ரூவா கொண்டு வரனும்னு ஹெட்மாஸ்டரு சொல்லி உட்டாரு. எல்லாரும் யூனிபார்ம் போடனும், செருப்பு இருக்கறவுக செருப்புப் போட்டுட்டு வரனும், வாட்டர் பாட்டில் இருந்தா தண்ணி கொண்டாரனும், இப்பிடி நெறைய விஷயங்ளைச் சொல்லி அனுப்புனாரு. பிள்ளைக ரொம்பா உற்சாகமாயிட்டாக.

காட்டூர் தொடக்கப் பள்ளி தொடங்கி ஐம்பது வருஷத்துக்கு மேல ஆகி இருந்தாலும், ஊருல ஒரு முன்னேற்றமும் வரல. ஒரு பஸ் வசதியோ, குடிதண்ணீர் வசதியோ, ஆஸ்பத்திரி வசதியோ ஒன்னுங் கெடையாது. ஒரு டீக்கடையோ மளிகைக் கடையோ கெடையாது. தவுச்ச வாய்க்கு ஒரு சோடா கீடா குடிக்க பேருக்கு ஒரு பெட்டிக்கட கூட கெடையாது. எதுக்குனாலும் மூனு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஊத்துக்கோட்டைக்குத்தான் போகனும். அங்கதான் ஒன்னுக்கு ரெண்டு சினிமா தியட்டர் இருக்குது. அதுல ஒரு தியட்டர்லதான் பிள்ளைங்க கொழந்தைகளுக்கான ஒரு படம் பாக்கப் போறாங்க.

மறுநாளு காலைல எல்லாரும் வழக்கத்துக்கு மாறா ஏழு மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு வந்துட்டாங்க. அசெம்பிளி முடுஞ்ச பெறகு எல்லாரையும் வருசயா நிக்க வச்சு டீச்சர்களோட அனுப்பிட்டு ஹெட்மாஸ்டரு அவரோட வண்டில ஏறி முன்னால போனாரு. கிட்டத்தட்ட மூனு கிலோ மீட்டர் தூரம் ஓட்டமும் நடையுமா வந்து சேந்துட்டாக. எங்க ஸ்கூல் பிள்ளைகள எண்ணி எண்ணி உள்ள உட்டாக. தியட்டருக்குள்ள பயங்கரமான ஆரவாரமும் கூச்சலும். படம் தொடங்கவும் எல்லாரும் கப்சிப்புன்னு ஆகிட்டாங்க. அது த பேபீஸ் டே அவுட் ங்ற இங்கிலீசு படமா இருந்தாலும், பிள்ளைங்க நல்லா ரசுச்சு லயிச்சுப் போயிப் பாத்தாங்க. எடயிலே உட்ட இடைவேளைல கச்சாம்புச்சாம்னு கைல இருந்த காசு கரைர வரைக்கும் இஷ்டப்படி கண்ணுல கண்டதயெல்லாம் வாங்கி வாங்கித் தின்னாங்க.

படம் முடியவும், மறுபடியும் வருசயில நின்னு வேணாப்பறந்த வெயிலுக்குள்ள நடக்க மாட்டாமெ நடந்து வந்தோம். உச்சி வெயிலாங்காட்டி காலு பொசுக்குது. நெறய்யாப் பிள்ளைகளுக்குச் செருப்பே கெடையாது. தண்ணித் தாகம் வேற நாக்கச் சுருட்டுது. எப்பிடியோ உழுந்தடுச்சு ஓடியாந்தோம். கொண்டு போன பாட்டில் தண்ணியப் பூராம் சினிமாக் கொட்டைகையிலயே காலி பண்ணிட்டாங்க. வேர்க்க விறுவிறுக்க ஓடியாந்து எப்படா ஸ்கூல்ல போயித் தண்ணி குடிப்போம்னு ஆவலா ஓடியாந்தாங்க.

வார வழில பள்ளத்தூர்னு ஒரு ஊரு வரும். அங்னக்குள்ள வரவும் பிள்ளைக பூராம் அங்ன தெருவுல இருந்த அடிகுழாயில தண்ணி அடிச்சுக் குடிச்சாக. அம்புட்டுத் தாகம். அஞ்சாங்கெளாஸ்லருந்து ஒரு பெரிய பையன் எல்லாருக்குத் தண்ணி அடுச்சு உட்டான். அவுகள வருசப்படுத்தி குடிக்க வைக்கிறதுக்கே பெரும்பாடாப் போச்சு. மூனாங் கெளாஸ் மகாலச்சுமி அவளோட பாட்டுல நீட்டி ஆவலாத் தண்ணி புடிச்சுக் குடிக்கப் போனா. ஆனா அஞ்சாங் கெளாஸ் படுச்சுக்குட்டு இருந்த அவுகக்கா விஜயலச்சுமி அவளத் தண்ணி குடிக்க உடாமெ பாட்டுல புடுச்சு இழுத்து மகாலச்சுமி முதுகுல ஒரு அடி வச்சுட்டு கோவமாச் சொன்னா.
“சேரித் தெருவுல இருக்கிற கொழாயில போயித் தண்ணி குடிக்கப் போறீயா! வா ஒனிய அப்பாட்ட சொல்லி நல்லா அடி வாங்கித் தாரேன்” சொல்லிக்கிட்டே பாட்டுல்ல இருந்த தண்ணி தரைல கொட்டுனா.

“ரொம்பாத் தாகமா இருக்குக்கா. அப்பாட்ட சொல்லாதக்கா, கொஞ்சூண்டு குடுச்சுக்குறேன்” மகாலச்சுமி கெஞ்சிப் பத்தா.

மகாலச்சுமி அழுதுகிட்டே வரதப் பாத்த மேரி டீச்சர் கேட்டாக “என்ன மகாலட்ச்சுமி எதுக்கு அழுற? நடக்க முடியலியா, இன்னங் கொஞ்ச தூரந்தான். இந்தா வந்துச்சு பாரு ஸ்கூலு அந்தா பாரு ஒங்க கெளாஸ் கூட தெரிது பாரு.”

கூட வந்துக்கிட்டு இருந்த சாந்தி சொன்னா “அதுல்ல டீச்சர், மகாவுக்குத் தண்ணித் தாகம் எடுக்குதுன்னு அழுகுறா.”

“இப்பத்தான எல்லாரும் அடிகுழாய்ல தண்ணி அடுச்சு குடுச்சாக. அதுக்குள்ள மறுபடியும் தண்ணித் தாகம் எப்பிடி வரும்?”

“கொழாய்ல மகா தண்ணி குடிக்கல டீச்சர். அவுகக்கா குடிக்கக்கூடாதுன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்துட்டா.”

“ஏ குடிக்க உடமாட்டம்னா”

“அது சேரிக் குழாயாஞ் டீச்சர், அதுல தண்ணி குடிச்சா அவுக அப்பா அடிப்பாராம்”.

“அப்பிடி யாரு சொன்னது?”

“மகாலச்சுமியோட அக்கா டீச்சர்.”

இதக் கேக்கவும் டீச்சருக்கு தூக்கிவாரிப் போட்டது கணக்கா ஆயிருச்சு. இந்த வயசுல இப்பிடி எல்லாம் வித்தியாசம் பாக்குதுகளே. மனசுக்குள்ளே கோவமும் வலியும் கொஞ்ச நஞ்சமில்ல. கிளாசுல எல்லாம் ஒன்னாமன்னாத்தான இருக்காக. பழகுறாக இந்த ஸ்கூல்ல கூட ஒரே குழாய்லதான அம்புட்டுப் பேரும் தண்ணி குடிக்காங்க. இப்ப இது மட்டும் என்ன சேரிக்கொழாயாம். ஆனாலும் அடிமனசுல இப்பிடி ஒரு அசிங்கமான எண்ணம் எப்பிடி வந்துச்சு? அவுகப்பா அடிப்பார்னா அப்ப வீட்லதான் இப்பிடிச் சொல்லிக் குடுத்துருக்காங்க. அப்பறம் விஜயலச்சுமிய கூப்டு கேட்டாங்க.

“அந்தக் குழயில தண்ணி குடுச்சா என்ன ஆகும் விஜயலச்சுமி? அதுல வர்ரதும்ம நல்ல தண்ணிதான? அங்க குடிக்கக்கூடாதுன்னு சொன்னியாமே?”

“ஆமா டீச்சர், எங்க வீட்டுல சொல்லி இருக்காங்க டீச்சர். சேரிப்பசங்ககூடச் சேரக்கூடாது. அவுங்ககிட்ட இருந்து எதுவும் வாங்கித் திங்கக்கூடாது, சேரித்தெருப் பக்கம் போகக்கூடாதுன்னு சொன்னாங்க டீச்சர்.”

மேரி டீச்சருக்கு வழில பேசிக்கிட்டு வந்த விசயம் ரொம்ப வேதனையா இருந்துச்சு. சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்ன இம்புட்டு நாளு சொல்லிக்குடுத்ததெல்லாம் வேஸ்ட்டுத்தான். இந்த விஜயலச்சுமி போன வருஷம் ஏங்கிட்டத்தான் நாலாங் கிளாஸ் படுச்சா. அப்பங்கூட தமிழ் பாடத்துல வந்த பாரதியாரோட முரசு பாடல எப்பிடி விளக்கமாச் சொல்லி பூனைக்குட்டிய வச்சு மனுசரெல்லாம் ஒன்னுதான்னு தொண்டத்தண்ணி வத்தக் கத்துனேன். அம்புட்டும் வேஸ்டு ஹெட்மாஸ்டர் வரவும் அந்தப் பிள்ளையைக் கூப்புட்டுக் கேக்கச் சொல்லனும். ஹெட் மாஸ்டர் வீட்டுல போயிச் சாப்புட்டுட்டு ரெண்டு மணியப் போல வந்தார். டீச்சர் மெதுவாச் சொல்ல ஆரம்பிச்சாச்சு “சார் வரும்போது பிள்ளைங்கள்ளாம் ரொம்பக் கஸ்டப்பட்டுப் போனாக சார். இந்த வெயிலுக்குள்ள தண்ணித் தாகம் வேற, நல்ல வேளையா இங்ன பள்ளத்தூர் வந்த அடிகுழாய்ல வந்து தண்ணியக் குடிக்கவும் அதுக்குப் பெறகு கொஞ்சம் தெம்பா நடந்தாக சார். ஆனா அந்தத் தாகத்துலயும் சில பிள்ளைக அந்தக் குழாயில தண்ணி குடிக்க மாட்டேனுட்டாக சார்.”

“ஏ என்ன ஆச்சு?”

மேரி டீச்சர் வழில நடந்த விசயத்த விவரமாச் சொல்லி “அந்தப் பிள்ளையக் கூப்புட்டு கேக்கனும் சார்”னு சொல்லி முடுச்சாச்சு, ஒரு பிள்ளைய ஒடனே அனுப்பி அந்த ரெண்டு பிள்ளைகளையும் கூட்டிட்டு வரவும் சொன்னாக.

ரெண்டு பேரும் வந்தப் பெறகு ஹெட்மாஸ்டரு ரொம்பச் சாதாரணமாக் கேட்டாரு

“தெருக்குழாயில தண்ணி குடுச்சா என்ன தப்பு? சேரி ஆளுகளோட வீட்லதாங் குடிக்கக்கூடாது, ஒங்க வீட்ல அந்தத் தெருக் கொழாயிலயே குடிக்கக்கூடாதுன்னுட்டாங்களா. சரி, சரி, கிளாசுக்குப் போங்க.” வீட்டுலதாங்கற வார்த்தய மட்டும் ரொம்பா அழுத்தமாச் சொல்லிட்டு கிளாசக்குப் போயிட்டாரு ஹெட்மாஸ்டரு வரதராஜுலு.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.