ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் – தமிழில்: சிறுகதை வடிவில் தங்கேஸ்
ரோமியோ ஜுலியட்டின் தமிழ் மொழியில்
வெரோனாவின் முக்கிய வீதி . அது அந்த மாலைப்பொழுதில் பேரெழிலில் திளைத்துக் கொண்டிருந்தது.. ஒரு வீதி தன்னைத்தானே ரசித்துக் கொண்டாடுவதை அன்று தான் ஒவ்வொரு கண்களும் ஆச்சரியத்தோடு பார்த்துச் சென்றன.
‘ இருக்காதா பின்னே ! இன்ப ஒளி வீசும் ஜுலியட் என்னும் அழகுத்தாரகை அன்று தானே விண்ணிலிருந்து இறங்கி வந்து மண்மீது கால் பதிக்கப் போகிறது.
ஆம் ஜுலியட் என்னும் அழகு தேவதை அன்று இரவு நடக்கும் நடன விருந்தில் தான் விருந்தினர்களுக்கு முன் தோன்றி தரிசனம் தரப் போகிறாள். இது தான் சில நாட்களாக அந்த நகரத்தின் பேச்சாகவே இருந்து வந்தது.
அரசனுக்கு இணையான செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்த குடும்பங்கள் இந்த நகரத்தில் இரண்டே இரண்டு தான். ஒன்று மாண்டேக் குடும்பம் மற்றொன்று கேபுலட் குடும்பம். மாண்டேக் குடும்பத்தின் இளைய சூரியன் ரோமியோ என்றால் கேபுலட் குடும்பத்தின் அழகுத் தாரகை ஜுலியட் தான் எழில் என்றால் வெறும் எழில் அல்ல பேரெழில் கொண்டவள் அவள் . அதற்கு மேலும் அவளது அழகை வர்ணிக்க முடியாது. நம்மால் முடியாது.
‘’ இன்றிரவு கேபுலட்டின் வீட்டில் நடைபெறப் போகும் நடனவிருந்தில் முதல் முறையாக ஜுலியட் கலந்து கொண்டு நடனமாடப் போகிறாள். அது மட்டுமா அவளது மனதுக்குப் பிடித்த மன்மதனை கணவனாகத் தேர்ந்தெடுக்கப் போகிறாள் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ ஒரு வேளை காதல் கடவுள் மன்மதனே ( குபிட் ) அவளது கரம் பிடிக்க அங்கே வந்தாலும் வரலாம் ‘’ என்று பேசிக் கொண்டார்கள்.
முன்னிருளில் கேபுலட்டின் அரண்மனை தேவலோகம் போல சொலி சொலித்துக் கொண்டிருந்தது. . விருந்து அறை நடன அறை வரவேற்பு அறை கணப்பு அறை என்று எங்கு பார்த்தாலும் பரபரப்பு தொற்றிக் கொண்டு பணியாளர்கள் சுறு சுறுப்பாக பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக விருந்து பரிமாறும் அறையில் மேசை விரிப்புகள் பாத்திரங்கள் நாற்காலிகள் என்று ஒழுங்குபடுத்துவதில் பணியாட்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்கள். அத்தனை வேலைகளும் தலைமைப் பணியாள் பீட்டரின் மேல் தான் அன்று வந்து விழுந்திருந்தன. முதலாளி முதிய கேபுலட்டின் மனது நோகாமல் இந்த விருந்தை அற்புதமாக நடத்தி முடிக்க வேண்டும். எனற எண்ணம் அவனை பம்பரமாக சுழற்றி வேலை வாங்கிக் கொண்டிருற்தது.
முதிய கேபுலட்டிற்கு இந்த நிமிடத்தில் ஒரே ஒரு லட்சியம் தான் பிரதானமாக இருந்தது. ..இந்த விருந்து இந்த நகரத்திலேயே ஒரு பேர் சொல்லும் விருந்தாக அமைய வேண்டும். தனது மகள் ஜுலியட் தனது மனம் கவர்ந்தவனை தேர்ந்தெடுக்கப் போகிறாள். அது மிகவும் இனிமையான தருணமாக மாற வேண்டும்
விண்ணிலிருந்து இறங்கி வந்த நட்சத்திரப் பட்டாளம் போல நடனமாடக் காத்திருக்கும் அழகான இளம் பெண்கள் ஒரு புறம் , நகரத்தின் மரியாகைகுரிய முக்கிய விருந்தினர்கள் அதோ கேபுலட் வகையறாக்களின் பாசத்திற்குரிய உறவுகள் எதிர்புறம் இன்னும் எதிர்பாராமல் இங்கே வர இருக்கும் விருந்தாளிகள் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் இந்த விருந்து திருப்திப் படுத்த வேண்டுமே என்ற எண்ணம் முதிய கேபுலட்டிற்குள் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருந்தது..
தன் உறவினர் இளைய கேபுலட்டோடு தானே சென்று ஒவ்வொருவரையும் வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தடபுடலான விருந்து நடக்கும் இடத்தையும் அவ்வப்போது பார்வையிடத் தவறவில்லை..
நடன அறை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது- கணப்பு அடுப்புகள் தேவைக்கு அதிகமான வெப்பத்தை தருவது போல் அவருக்குப்பட்டது.
‘’பீட்டர் இங்கே வா ‘’என்றார் அடுத்த கணம் அவருக்கு முன்னால் பீட்டர் பவ்யமாகத் தோன்றினான்.
‘’ பாரு கணப்பு அடுப்புகள் தேவைக்கு அதிகமாகவே வெப்பத்தை தருதுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் நெருப்பை கம்மி பண்ணு ‘’ என்று சொல்லி விட்டு அந்த அறையை நன்றாகப் பார்த்தார். கதவுப் பக்கத்தில் பார்வை சென்றது . அங்கே மேசை நாற்காலிகள் கொத்தாக கிடந்தன. .
‘’ பீட்டர் அங்க பாரு கதவுக்கப் பக்கத்தில கிடக்கிற நாற்காலிகளை உடனே அப்புறப் படுத்தனும் இல்லேன்னா நிச்சயமாக நடனத்துக்கு இடையூறாகத்தான் இருக்கும் ‘’என்று சொல்லி விட்டு அவர் வேகமாக வாசலுக்கு விரைந்தார்.
வந்திருந்த விருந்தினர்கள் வாசலில் நின்றபடி ஆளாளுக்கு அரட்டையடித்துக் கொண்டிருப்பது காதில் கேட்டது-
யார் அந்த அதிர்ஷ்டசாலி ஜுலியட்டை மனைவியாக அடையப் போவது பாரி’ஸ் தானா ? அல்லது வேறு யாருமா ? சொல் என்று கேட்டாள் நவ நாகரீகப் பெண்ணொருத்தி
‘’ விண்ணிலிருக்கும் அந்த காதல் கடவுள் குபீட்டுக்கு ( மன்மதன் ) மட்டுமே தெரிந்த ரகசியம் ..’’ என்று கண்ணடித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள் மற்றொருத்தி.
உண்மை தான் யார் மனதில் யார் நுழைவார்கள் என்பது அந்த காதல் கடவுளுக்கு மட்டும் தானே தெரியும் ? என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு அடுத்த அறைக்கு நகர்ந்து சென்றார். முதிய கேபுலட்
பாரிஸ் கூட அவர் பார்வைக்கு தென்படும் படி அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
பாரிஸ் கட்டழகன். கோமான். செல்வச் செழிப்பான சீமான் .அரசில் உயர் பதவி வகிப்பவன். அவனுக்கு ஜுலியட்டை மனைவியாக அடைய வேண்டுமென்று கட்டுக்கு அடங்காத ஆவல். உள்ளது.
இன்று அவரிடம் வந்து பாரிஸ் முறைப்படி மிகவும் பவ்யமாக ‘’ நீங்கள் சம்மதித்தால் நான் உங்கள் பெண் ஜுலியட்டை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் ‘’ என்று கேட்ட போது அவனுக்கும் அவர் அதே பதிலைத்தான் பட்டும் படாமலும் சொல்லியிருந்தார்.
‘’ பாரீஸ் நீ என் மகளுக்கு மணமகனாக வந்தால் அது எனக்கும் மகிழ்ச்சி தான் ஆனால் அதற்காக நான் அவளை கட்டாயப்படுத்த மாட்டேன். எங்களுக்கோ அவள் இன்னும் பதினான்கு வயதுகூட நிரம்பாத குழந்தை தான். உனக்கு அவளைப் பிடித்திருந்தால் இன்று இரவு எனது வீட்டில் நடக்கும் விருந்துக்கு வா ‘’ .என்றார் பாரிஸ் ஏன் என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவர் தொடர்ந்தார்.
இந்த நகரத்திலிருக்கும் பேரழகுப் பெண்களெல்லாம் வருகை தர இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?
வானத்திலிருந்து இறங்கி வந்த நட்சத்திரங்கள் போல் இருப்பார்கள். அவர்களோடு என் மகள் ஜுலியட்டும் கலந்து கொள்ளப் போகிறாள். அவள் கலந்து கொண்டால் ஒரு வேளை உன் கண்களுக்கு அவள் பேரழகியாகத் தெரியலாம் அல்லது பத்தொடு பதினொன்றாகவும் தெரியலாம். அப்போது நீ அவளை கடந்து போனாலும் போகலாம் அப்படி நீ சென்றால் கூட அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை..
ஆனால் உனக்கு ஜுலியட் தான் மனைவியாக வரவேண்டுமென்று நீ விரும்பினால் முதலில் நீ அவளது மனதில் இடம் பிடிக்க வேண்டும் அவள் மனதில் நீ இடம் பிடித்து விட்டால் நீ என் மருமகனாவது உறுதி நீ என் மருமகனாவது எனக்குச் சம்மதமே ‘’என்றார். மகிழ்ச்சியோடு
ஜுலியட்டின் தந்தையே இவ்வளவு சொல்லி விட்டால் போதாதா பாரிஸ் போன்ற துடிப்பான இளைஞனுக்கு ?
காலையிலிருந்தே நடன விருந்து எப்போது வரும் எப்போது வரும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டான். நடன விருந்தும் நடைபெறும் நேரமும் இதோ வந்து விட்டது.
.பாரிஸ் சிறந்த உடைகளை அணிந்து கொண்டு மிக உயர்ந்த பரிசுப்பொருட்களோடு ஜுலியட்டின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறான். அவன் இதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டிருக்கிறது. ‘’ எப்படி ஜுலியட்டிடம் தன் காதலை அவள் ஏற்றுக் கொள்ளும் படி வெளியிடுவது ?’’ ஏற்றுக் கொள்வாளா அல்லது மறுத்து விடுவாளா ? மன்மதனே ( குபீட் கடவுள் ) நீ தான் மனது வைக்க வேண்டும்.
அந்த விருந்தில் அவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் சிறு புன்னகையோடு தான் அவனை கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். முதிய கேபுலட் முகத்திலும் கூட ஒரு புன்னகை மலர்ந்து. மலர்ந்து. மறைந்து கொண்டிருந்தது.
தன் மனைவியை மனதுக்குள் மற்றுமொரு முறை கடிந்து கொண்டார். ஏன் ஒரு பெண்ணை அலங்கரித்து அழைத்து வருவதற்கு இவ்வளவு தாமதப்படுத்துகிறாள். இவள் ? விருந்தினர்கள் வந்ததிலிருந்தே வைத்த கண் வாங்காமல் ஜுலியட்டின் வருகையை அல்லவா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ? பீட்டரை அழைத்து தனது மனைவியிடம் சொல்லி மகள் ஜுலியட்டை உடனே கீழே அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டார்
‘’ அப்பப்பா இந்தப் பெண்களுக்குத் தான் எத்தனை அலங்காரம் செய்தாலும் போதாது போல இருக்கிறது. . இவள் எப்பொழுது ஜுலியட்டை அழைத்துக் கொண்டு கீழே வருவது. ? எப்போது பெண்ணை இந்த விருந்தினர்களுக்கு முன்னால் நாம் அறிமுகப்படுத்துவது ‘’ ?
மனதிற்குள் பல வித எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க அங்கே காத்துக் கிடக்கும் அத்தனை கண்களையும் போலவே முதிய கேபுலட்டின் கண்களும் தனது மகளின் வரவை எதிர்பார்த்து மாடியை நோக்கியே தவம் கிடந்தன.’’
அதிசயங்கள் நிகழ்வதை சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்கிறோம். என்று சொல்வார்கள். வரவேற்பறையில் சல சலவென்ற பேச்சுக்கள் சட்டென்று அமைதியாகிறது. ஒரு கணம். அதோ மாடி வாசலில் முதலில் ஒரு உருவம் தோன்றுகிறது. . கேபுலட் அங்கே பார்க்கிறார்.
அது அவரின் மனைவி திருமதி கேபுலட். அடுத்ததாக ஒரு உருவம் அது ஜூலியட்டின் தாதி. .இதோ இப்போது வாசலில் வெளிச்சம் படருகிறது. சர்வ நாடியும் உலகில் அடங்கி விட்டது போல பேரமைதி. அப்படியென்றால் ஜுலியட் அங்கே தோன்றுகிறாள். என்று அர்த்தம்
அவள் தோன்றிய கணம் நிலவு பொறாமையில் வெந்து மேகத்திற்குள் போய் தன்னை மறைத்துக் கொண்டது. விண்ணகத்து நட்சத்திரங்கள் பொறாமையில் வெந்து பொத்து பொத்தென்று கீழே விழுந்து கொண்டிருக்கின்றன.
மெல்ல காலடி எடுத்து வைத்து வா ஒளித்தாரகையே ! இந்த உலகம் ஓர் ஒப்பற்ற அழகியை இன்று தான் கண்கூசாமல் கண்டு களிக்கப் போகிறது.
திருமதி கேபுலட் மாடிப்படிகளின் வழியே இறங்கி வரும் போது மகளின் காதில் ஏதேதோ அறிவுரைகள் சொல்லிய படியே வருகிறாள்
அவரது மனைவி என்ன சொல்லிகக் கொண்டு வருகிறாள் என்று இவருக்கு நன்றாகவே தெரியும் .
ஜுலியட்டின் தாய்க்கு பாரிஸ் தான் தன் மகளுக்கு கணவானாக வரவேண்டுமென்று விருப்பம் உண்டு .அவள் ஏற்கனவே ஜுலியட்டிடம் இதைப்பற்றி சொல்லியும் விட்டாள்.
‘’ அவனோடு பழகிப் பார் பெண்ணே ! அவனை உனக்குப் பிடித்திருந்தால் அவனையே நீ கணவானாக தேர்ந்தெடுத்துக் கொள் ஒருவேளை அவனை உனக்குப் பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை அவனையே கணவனாக தேர்ந்தெடுத்து விடு . ஏனென்றால் பேரதிர்ஷ்டம் ஒவ்வொரு முறையும் வந்து நம் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்காது
அதுமட்டுமல்ல நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்களைப் போல பொருத்தமான ஜோடியை இந்த வெரோனோ நகரத்திலேயே வேறு எங்குமே பார்க்க முடியாது ‘’ என்றாள்.
செவிலியும் அவள் பங்கிற்கு ‘’சீக்கிரமாகவே ஒரு குழந்தையைப் பெத்துக்கோ பெண்ணே ‘ என்றாள். அதை அவள் பெரிய நகைச்சுவையென்று நினைத்துக்கொண்டு தானாகவே சிரித்துக்கொண்டிருந்தது தான் பெரிய அபத்தமாக இருந்தது –
ஆனால் ஜுலியட் என்னும் அழகின் தேவதை தன் தாயிடம் என்ன சொன்னாள் தெரியுமா ? ஒரு வேளை பேரழகிகள் எல்லோரும் அப்படித்தான் பேசுவார்களோ ?
‘’ அம்மா நீ சொல்றதுக்காக அந்தப் பாரிஸைப் போய் பார்க்குறேன். அவ்வளவு தான் .எனக்கு அவர் மேல தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவரை நேசிக்க வேண்டுமென்று தான் அவரை போய் பார்க்கப் போகிறேன். பிடித்திருந்தால் நேசிப்பேன் . பிடிக்கா விட்டால் காயப்படுத்தாமல் விலகி விடுவேன் அதற்கு மேலும் நான் அந்த சம்பவத்தை வளர்த்தெடுக்க மாட்டேன் ‘’ இதை நீ புரிந்து கொள்ள வேண்டுமென்றாள்..
தாய் அவளை விநோதமாகப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது எப்படி அவனை இவளால் நேசிக்க முடியாமல் போகும் என்று நினைக்க கூட முடியவில்லை.
ஜுலியட்டை தந்தை கேபுலட் கர்வமாகப் பார்த்தார். பிறகு தனக்குள்ளேயே ‘’ எப்போதுமே என் பெண் புத்தியசாலி தான் ‘’ என்று தனக்குள் பூரிப்பாக கூறிக்கொண்டார்.
அழகு நிலா இறங்கி வருகிறது. அங்கே குழுமியிருந்த இளம் பெண்கள் ஆச்சரியத்தில் மூர்ச்சையாகி பேச்சற்று நிற்கிறார்கள். ஓஓஓ என்ற ஒட்டு மொத்த குரலில் எல்லோரும் உற்சாகத்துடன் கூச்சலிடுகிறார்கள். பாரிஸ் கையில் விலை உயர்ந்த பரிசுப் பொருளோடு அவளை நெருங்கிப் போகிறான்.
அப்போது அங்கே வாசலில் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. அதை கேட்டு முதிய கேபுலட் வாசலுக்கு விரைகிறார்.
ஏற்கனவே இருள் பரவ ஆரம்பித்து விட்டது. ஆட்களை அடையாளம் தெரியவில்லை முகத்திற்கு முகமூடி அணிந்த படி ரோமியோ தன் நண்பர்களு குழுவோடு அங்கே நிற்கிறான்.
அவனோடு அவனைப்போலவே முகமூடி அணிந்த பென்வாலியோ மெர்குஷியோ இன்னும் ஐந்து இளைஞர்கள். கையில் டார்ச் விளக்கோடு நடன விருந்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள்.
கேபுலட் ஒரு கணம் திகைத்து விட்டு பிறகு சுதாரித்துக் கொண்டு அவர்களை உற்சாகத்தோடு வரவேற்கிறார்.
‘’ வாருங்கள் இளைஞர்களே உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களது தோற்றம் என்னை என் இளமைக்காலத்திற்கு கடத்திக் கொண்டு போகிறது. நினைவுகளின் வழியே நான் என் இளமைக்குள் ஒரு கணம் போய் மீண்டு வந்து விட்டேன்.** என்று வரவேற்று விட்டு நடன அறைக்குள் சென்றார்.
நடன அறைக்குள் சென்று ‘’ம்மம் ‘’ தட் தட் நடனம் ஆரம்பிக்கட்டும். இசைக்க ஆரம்பியுங்கள் இசைக்கலைஞர்களே இன்று மகத்தான நாள். இசை இன்னும் போதாது ம்ம்ம்ம் சூடு பிடிக்கட்டும்.
கன்னிப் பெண்கள் எல்லோரும் வாருங்கள் உங்களில் யாராவது நடனம் ஆடாமல் இருந்தால் உங்கள் கால்களில் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம் அதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் ‘’ என்று சொல்லவே அங்கே ஒரே சிரிப்பு.. சத்தமாகக் கேட்கிறது.
‘’ நடனமாடாத நங்கைகளுக்கு காலில் கொப்புளம் இருக்கலாம்
இந்த விருந்தை உங்களில் நளினமான நடனத்தால் சிறப்பியுங்கள் தேவதைகளே ‘ ‘ என்று சொல்லி விட்டு தன் உறவினன் இளைய கேபுலட்டிடம் கொஞ்சம் வம்பிழுக்கிறார்.
‘’ நாம ரெண்டு பேரும் இது மாதிரி முகமூடி போட்டுகிட்டு நடனமாடி எவ்வளவு காலம் இருக்கும் தம்பி ?‘’
‘’ம்ம் ஒரு முப்பது வருடம் இருக்கும்’’ என்று பதிலளித்தார் உறவினர்
‘’ம்ம் அதெல்லாம் அவ்வளவு காலம் ஆகாது ஆமா அவ்வளவு ஆகாது அதிகபட்சம் ஒரு இருபத்தைந்து வருடம் ஆகியிருக்கலாம். அவ்வளவு தான் அதாவது லூசெண்டியா திருமணத்துக்குத்தானே நாம கடைசியா நடனமாடியது ‘’
‘’ லூசெண்டியா மகனுக்கே இப்ப முப்பது வயதுக்கு மேல ஆகுது ‘உங்களுக்கு தெரியமா என்று கேட்டார் அவர்
‘’ பொய் பொய் சொல்லாத ரெண்டு வருசத்துக்கு முன்னால கூட அவன் சின்னப் பையனாத்தான் இருந்தான் அதவாது மைனர் ‘’
அப்போது தான் விண் வெளியில் ஒரு தேவ வேளை ஆரம்பிக்கிறது. ரோமியோ ஜுலியட்டை முதன் முதலாகப் பார்க்கிறான். அந்தக் கணம் சகலமும் அவனை விட்டுப் போனது போல் இருந்தது. அதாவது சகலமும் போய் விட்டது. அவனே அவனை விட்டுப் போனது போல
திடீரென்று ஒரு வெற்றிடம் அவன் இதயத்தில் உருவாகி விட்டது. இந்தப் பூமி காலடியில நழுவிப் போய்கொண்டே இருந்தது. தான் இந்தப் பூமியில் பிறந்து இத்தனை காலம் வளர்ந்ததே இவளைப் பார்ப்பதற்காக மட்டும தானோ என்று என்னவோ என்று பலபல கட்டற்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடி மறைந்து கொண்டிருந்தது.
ஒரு கணம் அவனுக்குள் ரோசலின் மின்னலென வந்து போனாள். ஆனால் அவளைத்தான் எங்கேயும் காணவில்லையே. அவள் இங்கே வருவாளென்று தானே ரோமியோ இந்த நடன விருந்திற்கு வருவதற்கே சம்மதித்திருந்தான்.
ஆம் ரோமியோ ரோசலினை ஒரு தலையாக காதலித்து வந்தான் .ரோசலினும் ஒரு கேபுலட் குடும்பத்துப் பெண் தான்.
ஆனால் அவள் ரோமியோவை ஏறெடுத்தும் பார்ககவில்லை. அவன் மனம் கனத்து வெந்து போனது தான் மிச்சம் .
உண்மையை சொன்னால் ரோமியோ எத்தனை நாட்கள் அந்த ரோசலின் பின்னால் சோறு தண்ணியில்லாமல் அலைந்திருக்கிறான். எவ்வளவு கண்ணீர் ? எவ்வளவு சோகம் ? ம் ஹூம் அவள் மனம் இரங்கவேயில்லையே ‘’
ஆனாலும் அவளையே மனம் சுற்றி வந்தது. அவளது அலட்சியம் அவளை அடைய வேண்டுமென்ற எண்ணத்தை அவனிடம் உக்கிரமாகத் தோற்றுவித்துக் கொண்டேயிருந்தது.
தாய் தந்தை நண்பர்கள் உறவினர்கள் என யாரிடமும் அவனால் முகம் கொடுத்துப் பேச முடியவில்லை . பல கவிதைகளைப் படித்து படித்து சுவைத்த இளைஞனான ரோமியோ தனது நிறைவேறாத காதலை கண்ணீர் கவிதைகளாக மாற்றி தனது நண்பன் மெர்குஷியோவிடம் புலம்பித் தள்ளினான்.
அடடா என்னே விதியின் விசித்திரம் . ரோமியோவைப் போன்ற ஒரு கட்டழகனை ரோசலின் நிராகரிக்கிறாள் என்றாள் அவனை ஆதியந்தமாய் நேசிப்பதற்கென்றே இந்த பூமியில் ஏற்கனவே ஒருத்தி படைக்கப்பட்டிருக்கிறாள் என்று தானே அர்த்தம்
அந்த இன்னொருத்தி தான் ஜுலியட்டா ?
ஆனால் மெர்குஷியோ இளைஞனானாலும் ரோமியோவை விட உலக ஞானம் அதிகம் உள்ளவன். அவன் ரோமியோவுக்கு முள்ளைப்போல சுருக்கென்று தைக்கும் அறிவுரை தான் வழங்கினான்.
‘’ நண்பா
காதல் உன்னிடம் கரடு முரடாக நடந்து கொண்டால்
நீயும் அதனிடம் அவ்வாறே நடந்து கொள்.
காதல் உன்னை முள்ளைப்போல குத்தினால்
நீயும் பதிலுக்கு அதை முள்ளைப்போல் குத்து.
காதல் உன்னைத் தாக்கினால்
நீயும் அதைத் தாக்கி வீழ்த்து.’’
ஆனால் ரோமியோவால் அப்படி இருக்க முடியவில்லை. அவனது நண்பன் பென்வாலியோ இந்த விழாவுக்கு அழைத்த போது முதலில் வர முடியாது என்று தான் மறுத்தான்.
அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதில் முக்கியமான காரணம் கேபுலட் அவர்களது சென்ம விரோதி. என்பது தான். அங்கே தான் சென்றால் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம் என்று நினைத்தான்
ஆனால் பென்வாலியோவுக்கு நண்பனை அங்கே எப்படி அழைத்துச் செல்ல வேண்டுமென்று தெரியும் அவன் ரோமியோவிடம் வேறு உபாயங்களை உபயோகித்துப் பார்த்தான்.
‘’ கேபுலட்டின் விருந்து நடனத்திற்கு நீயும் வரவேண்டும் நண்பா. அங்கே நீ உன் ஆளைப் பார்க்கலாம் ஆம் ரோசலினும் அங்கே வருகிறாள் தெரியுமா ? அவளும் கேபுலட் குடும்பத்துப் பெண் தானே ?
ரோமியோவின் இமைகள் அதைக்கேட்டதும் ஆச்சரியத்தால் அசைந்தன.
‘’ ஆனால் நான் அங்கே உன்னை அழைப்பது ரோசலினைப்பார்ப்பதற்கு அல்ல . அங்கே ஏராளமான அழகிகள் இன்று வரப் போகிறார்கள். அங்கே உன்னுடைய அழகியும் வருவாள். தனியாகப் பார்க்கும் போது உன்னவள் பேரழகியாகக்கூட உனக்குத் தெரியலாம். ஆனால் மற்ற அழகிகளோடு சேர்த்து வைத்து அவளைப் பார்க்கும் போது அவள் காக்கை குஞ்சு போல் தெரிவாள் என்பது தான என் கருத்து ‘’ ‘’என சீண்டி வேறு விட்டான் .
ரோமியோவுக்கு அவனது அலட்சியமான பேச்சு உண்மையிலேயே கோபத்தை எற்படுத்தி விட்டது.
சவாலை தைரியமாக ஏற்றுக்கொண்டான்.
‘’ நண்பா நான் உன் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உன்னிடம் சொல்வதற்கு உண்மை ஒன்று உண்டு. என்னவளை விட பேரழகி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அப்படி வேறொருத்தியை பார்த்தால் அந்த நிமிடமே என் கண்கள் தீச்சுவாலையாகி என்னை எரித்துவிடும்.
எனக்கு உண்மையிலே அங்கே வருவதற்கு விருப்பமில்லையென்றாலும் என்னவளைப் பார்ப்பதற்காகவாவது அங்கே வருகிறேன். ‘’ என்று கூறி விட்டு முகமூடியை வீம்பாக எடுத்து மாட்டிக் கொண்டு இங்கே வந்தான்.
ஆனால் என்ன நடந்தது ? இப்போது . பென்வாலியாவின் வாய் நிறைய சர்க்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும் போல இருக்கிறது.
ஜுலியட்டைப் பார்த்த நொடி சகலமும் சகலமும் மறந்து விட்டது. ரோசலின் பெயரே கூட மறந்து விட்டது. இந்த பேரழகிக்கு முன்னால் ரோசலினின் பெயரே அவனுக்கு மறந்து விட்டது. அவன் தன்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.
‘’ இவளைப்பார்க்கும் இரவின் இந்த நொடி வரையில் இவளைப் போல ஒரு பேரழகியை என் கண்கள் கண்டதேயில்லை.
அடடா அறியாமையில் நண்பர்களிடம் காதலைப்பற்றி என்னவெல்லாம் பினாத்தி விட்டே.ன். ‘’ என்ற வருந்தினான் ரோமியோ.
உண்மையிலேயே கடந்த காலத்தில் நான் காதலித்தேனா ? தன்னையே கேட்டுப் பார்த்தான் ம்ஹும் சத்தியமாக இல்லை …
‘’ இதோ என் முன்னால் நிற்கிறாளே இந்த தேவதை இவள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் இவளை நான் நீங்கினால் எனக்கு வாழ்வில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அடடா என்ன மாயம் செய்கிறாள். இந்த மங்கை அசையக்கூட முடியவில்லை. ‘ ரோமியோ நீயாக நீயில்லையடா..’
பணியாளரை நெருங்கி ஜுலியட்டை பற்றி கை நீட்டி விபரம் கேட்டான்.
‘’ அதோ அந்த முதியவரின் மார்பில் சாய்ந்திருக்கிறாளே முல்லை போன்ற இளம் பெண் யார் அவள் என்று சொல்வாயா ?
பணியாள் சரியாகப் பாராமல்கூட ‘’ எனக்குத் தெரியாது ‘’ என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டான்.
ரோமியாவால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. விருந்துக்கு தான் மாறு வேடத்தில் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து வாய்விட்டே புலம்ப ஆரம்பித்து விட்டான்.
‘’ அடப்பாவி விளக்குகளுக்கே எப்படி ஒளி வீசுவது என்று வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறாள். அவளையா தெரியாது என்கிறாய். ?
அவளைப் பார் இரவின் கன்னங் கருமையான கன்னத்தின் சொலி சொலிக்கும் வைர ஆபரணமாக தக தகத்துக் கொண்டிருக்கிறாள் அவளையா தெரியாது என்கிறாய்?
அவளுடைய அழகெல்லாம் இந்தப் பூமிக்கு ரொம்ப ரொம்ப அதிகம் தெரியுமா ?
இந்தப் பூமியால் அவளோட அழகை தாங்கவே முடியாது.
அது தெய்வீகத்திலும் தெய்வீகம் தேவ உலகத்துக்கு சொந்தமானது.
அவள் மற்ற பெண்களோடு நிற்கும் போது அவளுடைய அழகைப் பாரேன்.
காக்கா கூட்டத்திற்குள் ஒரு வெண்புறா வந்து நிற்கிற மாதிரி இல்லையா ?.
வேணா பாரு இந்த நடன விருந்து முடியும் போது அவள் தான் அழகின் தேவதையாய் உயர்ந்த சீமாட்டியா சொலிக்கப் போறா. ‘’
ரோமியோவின் ஆவல் அளவில்லாமல் எகிறிக் கொண்டிருந்தது-
நான் அவளுடைய அருகில் போய் என்னுடைய கரடு முரடான கைகளால் அவளுக்கு கை குலுக்குவது மாதிரி அவளுடைய புனிதமான கரங்களை கொஞ்சம் தொட்டுப் பார்ப்பேன்.
ஆனால் அப்போது என்னுடைய கைகளில் படர்ந்திருக்கும் கரடு முரடுகள் எல்லாம் அவளோட புனிதமான கரங்கள்ல ஒட்டிக் கொள்ளுமே நான் என்ன செய்வேன். ?
அதற்கும் ஒரு வழி இருக்கிறது… என்னுடைய உதடுகளால முத்தம் என்ற ஒத்தடம் கொடுத்து அந்த கரடு முரடுகளை கரைத்து விட மாட்டேனா ?
என் வாழ்க்கையிலே எந்தக் காதலும் இதுவரை வந்ததில்லை வந்ததா ? ( அட பாவிப்பயலே ! ) இனியும் வரவே வராது ஆனால் இவளிடம் தவிர ‘’ என்று அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் போதே கேபுலட்டின் உறவினன் டைபால்ட் அதை ஒட்டுகேட்டு விடுகிறான்.
அவனுடைய குரலை வைத்து அது ரோமியோ தான் என்று கண்டு கொள்கிறான்.
டைபால்டின் ரத்தம் கொதிக்கிறது- முகம் சிவக்கிறது.
‘’என்ன தைரியம் இருந்தால் எதிரி எங்கள் வீட்டுப் படியேறி வந்து எங்கள் வீட்டுப் பெண்ணை பற்றி இப்படிப் பேசிக் கொண்டிருப்பான். ? இவனை உயிரோடு விட்டு விட்டால் அது எங்களுக்குத்தான் அவமானம் என்று பணியாளைப் பார்த்து கத்துகிறான்.
‘ டேய் என் உடைவாளை உடனே நீ எடுத்து வா இப்போதே எதிரியின் தலையை சீவி இந்த இரவுக்கு காணிக்கையாக்கி விடுகிறேன். ‘’
அவன் பதட்டமாக கத்துவதைப்பார்த்து முதிய கேபுலட் வேகமாக வந்து அவன் கைகளைப்பிடித்துக் கொண்டு என்ன நடந்ததென்று விசாரிக்கிறார்.
டைபால்ட் கொதித்துப் போய் இருக்கிறான். ‘’
மாமா அதோ நமது சென்ம எதிரி மாண்டேக்
நம் விருந்துக்கு திருட்டுத்தனமாக வந்திருக்கிறான்.
என்ன தைரியம் இருந்தால் அவன் இங்கேயே நுழைந்திருப்பான். ?
நமது விருந்தை எள்ளி நகையாடவும் சீர்குலைக்கவும் தான்
அவன் இங்கே வந்திருக்க வேண்டும்..’
முதிய கேபுலட்டுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘’ யாரைச் சொல்கிறாய் அதாவது ரோமியோவா இங்கே நம் விருந்துக்கு வந்திருக்கிறான் என்கிறாய் ‘’ ?
‘’ ஆம் மாமா அவனே தான் அவன் குரலை வைத்தே அவனை
அடையாளம் கண்டு கொண்டேன்.
‘ அவன் ஏன் நமது விருந்துக்கு வரவேண்டும் ? ‘’
‘’ நமது விருந்தின் மாண்பை சீர்குலைப்பதற்குத்தான் வந்திருக்கிறான் வேறு எதற்கு ?’’
‘’ ஆனால் இந்த நகரத்தில் எல்லோரும் அவன் மிகவும் நல்லவன் பண்பாடுள்ளவன் என்றல்லவா சான்றிதழ் தருகிறார்கள் ‘’
‘’ மாமா அவனை அதிகம் புகழவேண்டாம் அவன் நமது எதிரி ‘’
‘’சரி அவனை என்ன செய்யலாம் என்கிறாய் ‘’
‘’சற்றுப் பொறுங்கள் அவனை என் வாளுக்கு இரையாக்கி விடுகிறேன் ‘
‘’ அதை நான் ஒருக்காலும் இங்கே அனுமதிக்க மாட்டேன் ‘’ என்று உறுதியாகச் சொன்னார் முதிய கேபுலட்.
‘’ மாமா அவன் நமது எதிரி அவன் நமது விருந்தை எள்ளி நகையாட இங்கே வந்திருக்கிறான் .அவனை உயிருடன் விட்டு விட்டால் அது நமக்கு தீராத அவமானம் ‘’ என்று கொதித்தான் டைபால்ட்
முதிய கேபுலட் நிதானமாகச் சொன்னார் ‘’ அவனை இங்கே இந்த விருந்தில் கொன்று போட்டால் அதை விட நமக்கு அவமானம்.
உன்னைப்போல் கோபத்தை அடக்க முடியாத முரட்டு இளைஞனுக்கெல்லாம் இங்கே இடமில்லை. உன்னால் உன்னை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் நீ இந்த விருந்தில் இருந்தே வெளியேறி விடு இது என் மீது ஆணை ‘ என்று சொல்லிட்டு விட்டு விருந்தினர்களை கவனிக்க சென்று விட்டார் முதிய கேபுலட்.
டைபால்டிற்கு கோபத்தில் கை கால்கள் ஆடின. அவன் நிலை கொள்ளாமல் தவித்தான். ரோமியோவை கொல்லாமல் இங்கிருந்து போவதில்லையென்று அங்கேயே ஓரிடத்தில் கறுவிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
இதற்கிடையே பேராவலை அடக்க முடியாத ரோமியோ ஜுலியட்டின் அருகிலேயே சென்று விட்டான். முதன் முதலில் ஒரு தேவதையோடு எப்படி உரையாட வேண்டும் என்று அவன் ஒத்திகை பார்த்தது கிடையாது. ஆனால் வார்த்தைகள் எல்லாம் றெக்கை கட்டி வரிசையாக அவனிடம் வந்தன.
ரோமியோ ஜுலியட்டின் அவள் கரங்களை தன் கரங்களால் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்
‘’ கோவிலைப் போன்ற புனிதமான உங்களின் கரங்களை கரடுமுரடான என் கரங்கள் அசுத்தப்படுத்தியிருந்தால் சொல்லி விடுங்கள்,கடவுளை தரிசிக்க வந்த இரண்டு பக்தர்களைப் போல பரவசத்திலிருக்கும்
என் இதழ்களால் அவைகளை மீண்டும் புனிதமாக்கி விடுகிறேன்.. என்றான்
ஜுலியட்டின் மனதிற்குள் மழைக்கால தும்பிகள் பறக்க ஆரம்பிதது விட்டன.
‘’ ஜுலியட் அவனைப் பார்த்து ‘’ :எப்படி புனிதப்படுத்துவாய் பக்தனே ‘’ ? என்று கிண்டலாக கேட்டாள்.
ரோமியோ :’’ முத்தங்களால் மென்மையான முத்தங்களால் ‘’ என்று பரவசமாக பதில் சொன்னான்
ஜுலியட் :‘’ பரிவுள்ள பக்தனே ! உன் கரங்கள் அளவுக்கு அதிகமான
பக்தியை காட்டுகின்றன. ஆனால் புனிதர்களைத் தேடி வரும் பக்தர்கள்
இப்படி இதழ்களால் பக்தியை காட்டுவதில்லை.
புனிதர்களின் கரங்களை தங்களின் கரங்களால் தொட்டுத்தான் தங்கள் பக்தியை தெரிவிப்பார்கள். உள்ளங்கைகளை உள்ளங்கைகளோடு சேர்த்து
தான் உறவாட வைப்பார்களே தவிர நீ சொல்வதைப்போல உதடுகளால் அல்ல ’ என்று சொன்னாள்.
ரோமியோ உண்மையிலேயே புனிதரின் முன் நிற்கும் பக்தனாய் பரவசம் கொண்டான்.ஏன் புனிதர்களுக்கும் பக்தர்களுக்கும் உதடுகள் இல்லையா?
என்று ஹார்மோன்கள் துள்ளிக் குதிக்க கேட்டான்.
ஜுலியட் பரிகாசமாக ‘’ போலி பக்தனே அதை அவர்கள் பக்திக்கு
மட்டும் தான் பயன்படுத்துவார்கள் ‘’ என்றாள்.
ரோமியோவுக்கு பித்து உச்சத்தை தொட்டு விட்டது போல .,காதலின் ஒரு படி மேலே சென்று ஜுலியட்டைப் பார்த்து சொன்னான்
‘’ புனிதரே ! அப்படி என்றால் உங்களிடம் ஒரு வேண்டுதல்
எனக்கு பக்தி அதிகம் என் கரங்கள் செய்கின்ற வேலையை
என் உதடுகள் செய்யட்டும். என் நம்பிக்கை பொய்த்துப்போனால்
நான் அவநம்பிக்கைக்கு ஆளாகி விடுவேன்
தெரியுமா ? ‘’ என்று கடைசி அம்பைத் தொடுத்தான்.
ஜுலியட் வெட்கத்தில் சிவந்து நாணத்தில் மிதந்தபடியே சொன்னாள் ‘புனிதர்கள் இந்த போலி பக்திக்கெல்லாம் அசைவதில்லை
அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதோடு சரி’
ரோமியோவும் விடுவதாயில்லை’ அப்படியென்றால் என் பிரார்த்னைகள் நிறைவேறும் வரை நீங்கள் நகராதீர்கள் புனிதரே ‘’ என்று சொல்லியபடி ஜுலியட்டை முத்தமிடத் தொடங்கினான். அவள் அவன் சொன்னபடியே அந்த இடத்தை விட்டு நகரவுமில்லை. .முத்தமிடும் அவனை தடுக்கமில்லை.
ரோமியோ தைரியம் பெற்றவனாக ஜுலியட்டிடம்
‘’ இப்போது என்னுடிடய உதடுகளிலிருந்த பாவத்தை எல்லாம்
உன்னுடைய உதடுகள் எடுத்துக் கொண்டன
அதனால் என்னுடைய உதடுகள் பாவத்திலிருந்து மீட்சிமை பெற்று விட்டன.ஆனால் இப்பொழுது உன்னுடைய உதடுகளில்
என்னுடைய பாவங்கள் எல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
பரிகாரம் தான் என்ன ? என்று கிண்டலாக கேட்டான்.
ஜுலியட் :பொய் கோபத்துடன் ‘’ அடப் பாவி அப்படியானால் என்னுடை உதடுகளில் ஒட்டியிருக்கும் உன்னுடைய பாவங்களை உடனே நீ எடுத்து விடு ‘’ என்று அனுமதி கொடுத்தாள்.
ரோமியோ:’ ’என்னுடைய உதடுகளிலிருந்து புறப்பட்டு
உன்னுதட்டில் ஒட்டிக்கொண்டனவா பாவங்கள்
அதை என்னுதட்டிற்கே மறுபடியும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால்
மறுபடியும் முத்தமிட்டே எடுக்க வேண்டும்.
புனிதரே என்னை மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட பாவங்களையே செய்யத் தூண்டினால் நான் சளைக்காமல் பாவங்களை செய்து கொண்டேயிருப்பேன்.என்று சொல்லி விட்டு ஆவல் தீராமல் முத்த மழை
பொழிகிறான்
ஜுலியட் டிற்குள் பரவசமும் நாணமும் ஒரு சேர குடிகொள்கின்றன.
‘’புனித புத்தகத்தில் சொல்லிய படி மென்மையாக முத்தமிடு
அத்து மீறாதே ‘’ அவனை அழகாகக் கண்டிக்கிறாள்.
அந்த வார்த்தைகள் ரோமியோவின் காதில் விழுந்தன. ஆனால் இதயத்தில் விழவில்லை.
முத்தம் தான் காதலின் தொடக்கம் என்பதை அப்போது தான் காதலர்கள் இருவரும் அறிந்து கொண்டார்கள். கண்ணோடு கண்இணை நோக்கினால் வாய்ச் சொற்களால் எந்தப் பயனும் இல்லை என்றார் வள்ளுவர் . ஆனால் இங்கே இதழோடு இதழ் சேர்ந்து விட்டால் கண்களால் கூட எந்தப்பயனும் இல்லை என்றாகி விட்டது. உலகம் மறந்து விட்டது. ஒரு கார்காலத்தில் விண்வெளி திறந்து விட்டால் என்னவாகும் ?
ஒரு அடைமேகம் குளிர்காற்றிடம் விலாசம் கேட்டால் எப்படி இருக்கும் ?
திடீரென்று ‘’ஜுலியட் அம்மா அழைக்கிறார்கள் வா ‘’என்று ஒரு குரல் அவளை அழைக்கிறது.
இருவரின் இதழ்களும் பிரிகின்றன. புதிய ஜென்மம் எடுத்தது போல் இருக்கிறது இருவருக்கும். ‘அடடா அம்மா ஏன் அழைக்கிறாள் ‘’ என்று நினைத்தபடி செல்கிறாள்.
ரோமியோவைப் பார்த்து இரு என்றும் சொல்லவில்லை.. போ என்றும் ஒரு வார்த்தை சொல்லவில்லை
இப்பொழுது தான் இவளுக்கு ஞாபகம் வருகிறது. அடடா அவன் பெயரையே கேட்கவில்லையே. ஞாபகம் வந்தால் தானே ?
ரோமியோ செவிலியிடம் சென்று இவளுடைய தாய் யார் ? என்று கேட்கிறான்.
செவிலி ‘’ இவளுடைய தாய் தான் இந்த வீட்டின் எசமானி நீ இவ்வளவு நேரம் ஒரு அழகுப் பொக்கிஷத்துடன் பேசிக்கொண்டிருந்தாயே அந்த ஜுலியட்டின் தாய் திருமதி கேபுலட் ‘’ என்றாள்.
ரோமியோ இதைக் கேட்டதும் சிலையாகி விட்டான். அடடா எங்கள் எதிரியின் மகளா இவள்.
தேவதைகள் எதிரிகளின் மகள்களாக இருப்பது எவ்வளவு துயரம் ?
செவிலி மீண்டும் அழுத்தமாகச் சொன்னாள் ‘’ இதையும் கேட்டுச் செல் இளைஞனே ஜுலியட்டிற்கு மணம் பேசி முடித்தாயிற்று. அழகும் அறிவும் செல்வமும் செல்வாக்கும் பெற்ற பாரிஸ் கோமானுக்கு அவள் விரைவில் மனைவியாகப் போகிறாள் ‘’
ரோமியோவுக்கு இதைக் கேட்டதும் காலடியில் பூமி நழுவ ஆரம்பித்து விட்டது. தனக்குள்ளேயே அதிர்ச்சியாகி அவள் கேபுலட்டா !….
என்னுடைய வாழ்க்கை என் எதிரியின் கரங்களிலா இனி ?
என் செய்வேன் நான் !. என்று புலம்ப ஆரம்பித்து விட்டான்.
விதியின் விளையாட்டை யார் கணிக்க முடியும். பென்வாலியா ரோமியோவின் அருகே வந்து ‘’ வா ரோமியோ எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது கிளம்பலாம் ‘’ என்றான்
ரோமியோ ‘’நண்பா இது வரை எல்லாம் சிறப்பாக முடிந்து விட்டது.
என்கிறாய் இனி முடியவேண்டியது அப்படி இருக்காது . ‘ என்ற படி அவன் பின்னாலேயே செல்கிறான்.
அவன் மட்டும் தான் போகிறான். அவன் மனது அங்கேயே தான் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.’’
ஜுலியட் மறுபடியும் அவசர அவசரமாகத் ஓடோடி வருகிறாள். அங்கே ரோமியோ அவ்விடத்தை விட்டு அகன்று கொண்டிருக்கிறான் .உயிரே தன்னை விட்டுப் பிரிந்து போவது போல் வலிக்கிறது அவளுக்கு. .செவிலியை அனுப்பி அவன் யார் ? பெயர் என்ன ? விலாசம் என்ன? என்ற விவரங்களையெல்லாம் உடனே விசாரித்து வா என்று அனுப்புகிறாள்.
செவிலி வரும் வரையில் அவள் கால்கள் தரையிலேயே படர்ந்திருக்கவில்லை.
செவிலி மிகப் பெரிய அதிர்ச்சியை அவளுக்கு கொண்டு வந்து சேர்க்கிறாள். ‘’ .பாப்பா அவன் பெயர் ரோமியோ அவன் உங்களின் பரம்பரை எதிரியான மாண்டேக் குடும்பத்தை சேர்ந்தவன்’’ என்று முடித்துக் கொண்டாள்….
தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது. ஜுலியட்டிற்கு . சற்று முன் தானே அவள் வானில் சிறகடித்துப் பறந்த பட்டாம் பூச்சியாகத் வலம் வந்தாள். அதற்குள்ளாகவா விதி அவளின் சிறகுகளை முறித்து சின்னாபின்னமாக்க வேண்டும் ?
ஏன் ஜுலியட்டே உனக்கு முன்பே எதுவும் தோன்றாமல் போய் விட்டது. ?. அத்தனை கேள்விகள் அவனை கேட்டாய் அல்லவா ? ஒரு வார்த்தை ஒரே வார்த்தையில் அவன் பெயர் என்ன என்று கேட்டிருக்க கூடாதா? அது ஏன் மறந்து விட்டது ?
காதல் என்பதே மறதி தானோ ? காதலே காதலே என்னை என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாய் ?
இந்தக் கணம் அவளை உயிரோடு புதைத்தால் கூட சந்தோசமாக செத்துப் போய் விடலாம் போல் இருந்தது.
‘’ விதியோ எதிரியோடு அல்லவா என் இதயத்தை இணைத்து வைத்திருக்கிறாய் காதலே எவ்வளவு கொடியவன் நீ ?’’ என்று அவள் தன்னையே நொந்து கொண்டாள்.
‘’ என்னுடைய எதிரியின் மகனை என்னை நேசிக்க வைத்து
என் வாழ்வை எள்ளி நனகையாடி விளையாடுகிறாய் நீ ’’ யாரையோ பார்த்து இருளில் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஆனால் யாருமே அவள் முன்னால் நின்றிருக்கவில்லை..
அவன் பெயர் என்ன ரோமியோவா ? நல்ல பெயர் தான் வைத்திருக்காய் நீ ? ரோமியோ ரோமியோ உடனே ஓடிப் போய் விடு என்று சத்தமிட்டுச் சொன்னாள். உடனே அந்தப் பெயர் சட்டென்று அவளது .இதயத்தில் ஒட்டிக் கொண்டது .
அவள் தனியாக நின்று புலம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் செவிலி பதை பதைத்த படியே அவள் பக்கத்தில் வந்து ‘’ பெண்ணே உனக்கு என்ன ஆகி விட்டது நீ என்ன பினாத்துகிறாய் ? ‘’ என்று கேட்டாள்.
ஜுலியட் ‘’ நீ ஒன்றும் கவலைப்படாதே என்னுடன் நடனமாடியவரிடமிருந்து நான் இப்பொழுது தான் ஒரு பாடலை கற்றுக் கொண்டேன் ,அதை தான் பாடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாள்.
‘
அப்போது அரண்மனைக்குள் இருந்து ஜுலியட்டை யாரோ அழைப்பது கேட்டது. . அவளுக்கு குரல் மட்டும் தான் கேட்டது பொருள் எதுவும் புரியவில்லை .. அடடா மொழியும் மறந்து போய்விட்டதா கடவுளே ?. .
ஆனால் செவிலிக்கு யார் அழைக்கிறார்கள் என்ற விவரம் புரிந்து விட்டது ’ ‘’இதோ வருகிறோம் இதோ வருகிறோம் ‘’’ என்று சொல்லிய படியே ஜுலியட்டின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ‘’ வா ஜுலியட் கிளம்பலாம் ‘’ என்றபடி முன்னாள் நகர்ந்தாள். ..
ஜுலியட் புத்தி சுவாதீனமற்ற ஒரு சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டி போல அவளை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறாள். ஏதோ .சட்டென்று ஏதோ ஞாபகத்திற்கு வந்தவளாக செவிலி ’ ஆமா பாப்பா இப்போ நீ பாடுன பாடலை நானும் ஒரு தடவை கேட்கலாமா ? என்றாள்
ஜூலியட் பதறிப்போய் ‘’ இல்லை இல்லை உன்னால் அதைக் கேட்க முடியாது. அது எப்போதுமே நான் மட்டுமே பாடவேண்டிய பாடல் ‘’ என்று சொல்லி விட்டு ‘’ ரோமியோ ரோமியோ ரோமியோ ‘’ என்று மனதுக்குள்ளேயே அரற்றத் தொடங்கி விட்டாள்.
சுற்றிலும் கன்னங்கரிய இருள் அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தது. முகம் தெரியாத . அந்த இருளிலும் தன்னைச்சுற்றிலும் நிறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவதைகளைப் பார்த்து அவளது இதயம் ஒரே கேள்வியைத் தான் கேட்டபடி சென்று கொண்டிருந்தது ‘
’ தேவதைகளே உண்மையை சொல்வி விடுங்கள் ரோமியோ என்ற பெயர் இந்த ஜுலியட்டின் வாழ்வில் கடவுள் அளித்த ஒரு வரமா அல்லது பிசாசு அளித்த சாபாமா ? ஒரு வேளை அது சாபம் தான் என்றால் அந்த சாபமே தான் என் மரணமா ?
தொடர்ந்து அவள் தேவதைகளிடம் அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் எந்த தேவதைகளும் அப்போது அவளுக்கு பதில் சொல்லவேயில்லை.
மூலம் ஷேக்ஸ்பியர்
தமிழில் சிறுகதை வடிவில் தங்கேஸ்