இலவசங்கள் குறித்த பாசாங்குத்தனம் – தமிழில்: ச.வீரமணி
தமிழில்: ச.வீரமணி
ஆகஸ்ட் 26 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதியரசர் ரமணா, தன்னுடைய பதவிக்காலத்தின் கடைசி நாளன்று, அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்கள் அளிப்பது தொடர்பாக அளித்துள்ள உறுதிமொழிகள் மீதான வழக்குகள் புதிய தலைமை நீதிபதியின் தலைமையில் மூவரடங்கிய அமர்வாயத்தால் தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார். உச்சநீதிமன்றம், இலவசங்கள் பிரச்சனை எடுத்துக்கொண்டிருப்பதன்மூலம், அது தவறான முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேவையற்ற ஒரு பகுதிக்குள் நுழைந்திருப்பதற்கு ஓர் உதாரணமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது இலவசங்கள் கலாச்சாரத்தைக் கேலி செய்தும், எதிர்க்கட்சிகளைச் சாடியும், இப்பிரச்சனைக் கிளப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து தில்லி பாஜக தலைவர் ஒருவரால் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், தேர்தல்களுக்கு முன் அரசியல் கட்சிகள் உறுதிமொழிகள் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123ஆவது பிரிவின்கீழ் ஊழல் நடைமுறை (corrupt practice) வரையறைக்குள் கொண்டுவர முடியாது என்று உச்சநீதிமன்றம் முன்பு அளித்துள்ள தீர்வறிக்கையை மறு ஆய்வு செய்திட வேண்டும் என்று கோரியுள்ளார்.
தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வாயம் உடனடியாக இந்த வழக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் தரப்புகளில் அளிக்கப்பட்ட வாதங்களைக் கேட்டது. அப்போது தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு அளிக்கப்படும் உறுதிமொழிகள் குறித்த ஒரு குழப்பமான சிந்தனையோட்டம் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, நீதியரசர் ரமணா உதிர்த்திட்ட வார்த்தைகளில் சில இதனைப் பிரதிபலித்தன. ஒரு பக்கத்தில், நீதியரசர் ரமணா இலவசங்களை, நியாயமான நலத்திட்ட நடவடிக்கைகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்றார். மேலும் அவர், என்னென்ன நலத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்களின் தனியுரிமை என்றும் கூறினார். மறுபக்கத்தில், “பகுத்தறிவற்ற இலவசங்கள்” (“irrational freebies”) குறித்தும் பேசியுள்ளார். “பகுத்தறிவற்ற இலவசங்கள்” என்று எதனை அவர் வரையறுக்கின்றார் என்பது குறித்து அவர் எதுவும் விளக்கிடவில்லை.
ஒரு கட்டத்தில் அமர்வாயம் இந்த விஷயம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கலாமா என்பது குறித்துக்கூடப் பேசியது. ஆனாலும் இதுபோன்றதொரு குழு அமைத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் குறித்துக் கேட்டபின்னர், அந்த முடிவை நிறுத்தி வைத்தது.
இலவசப் பிரச்சனை குறித்து நரேந்திர மோடி எழுப்பியதற்குப் பின்னேயுள்ள பாசாங்குத்தனமான நோக்கம் மிகவும் தெளிவானது. பல்வேறு மாநில அரசாங்கங்களும் மேற்கொண்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கு நேரடி ரொக்க மாற்று அளித்தல் போன்றவற்றையே அது குறி வைத்திருக்கிறது. நரேந்திர மோடியால் ஒன்றிய அரசாங்கத்தின் திட்டங்கள் எல்லாம் நேர்மையான நலத்திட்டங்களாகக் கருதப்படும் அதே சமயத்தில், அதேபோன்று எதிர்க்கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் இலவசங் களாகக் கருதப்பட்டுக் கண்டிக்கப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.
‘பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா’ (‘PM Kisan Samman Nidhi Yojana’) என்னும் திட்டத்தின் கீழ் ஒவ்வோராண்டும் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. இது அவர்களுக்கு இலவசம் அல்ல. ஆனால் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் அல்லது ஒடிசா மாநில அரசாங்கங்கள் அமல்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் இலவசங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. பிரதமர் மோடி அனைத்து நலத் திட்டங்களும் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஏகபோகமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறார். ஒன்றிய அரசாங்கம் அறிவித்திடும் திட்டங்களை, அப்படியே பணிந்து ஏற்றுக்கொண்டு அமல்படுத்துவது மட்டுமே மாநில அரசாங்கங்களின் வேலையாக இருக்க வேண்டும் என்றே ஒன்றிய அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் பயனடைவோர் ஒன்றிய அரசாங்கத்திற்கு மட்டுமே நன்றியுடையவர்களாக, கடப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.
ஆனால் இதே பிரதமர், கார்ப்பரேட்டுகளுக்கு அளித்துள்ள வரி வெட்டுகளையோ, கடன் தள்ளுபடிகளையோ அல்லது பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் மான்யங்களையோ இலவசங்களாகக் கருதிடவில்லை. திமுக நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துபூர்வமான மனுவில், மோடி ஆட்சியின் முதல் மூன்றாண்டு காலத்தில் (2014-17 ஆண்டுகளில்) அதானி குழுமத்திற்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்றும், கடந்த ஐந்தாண்டுகளில் (2017-22 ஆண்டுகளில்) பொதுத்துறை வங்கிகள் 7.27 லட்சம் கோடி ரூபாய் கடன்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தள்ளுபடி செய்திருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது. “இவைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கான இலவசங்கள் இல்லையா?” என்றும், “இவ்வாறு இவர்களின் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கான வரிச் சலுகைகளைத் தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் ஏழைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் அளித்திடும் உணவு, கல்வி மற்றும் போக்குவரத்து மான்யங்கள் போன்ற நலத்திட்டங்களை மட்டும் தடுத்திட விரும்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்றும் அது கேட்டிருக்கிறது.
இத்தகைய சிந்தனையோட்டம் என்பது நவீன தாராளமயவாதிகளின் சிந்தனையோட்டமேயாகும். இவர்களைப் பொறுத்தவரை உணவு, உரம், மின்சாரம் மற்றும் இதுபோன்றவற்றிற்கு அளித்திடும் மான்யங்கள் அனைத்தும் பொது வள ஆதாரங்களை வீணடிக்கும் நடவடிக்கைகளாகும், இவற்றையெல்லாம் இலவசங்கள் என்றே கருதிட வேண்டும் என்பது நவீன தாராளமயவாதிகளின் மத்தியில் இருந்துவரும் சிந்தனையோட்டமாகும். இவ்வாறு உழைக்கும் மக்களுக்கு இவற்றை அளிப்பதற்குப் பதிலாக, இவற்றையெல்லாம் பெரும் முதலாளிகள் வளர்ச்சி அடைவதற்காகத் திருப்பிவிட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இலவசங்கள் மீதான தாக்குதலின் மற்றுமொரு கோணம் என்பது இது ‘நிதிப் பொறுப்பின்மை’ (‘fiscally irresponsible’) என்று கூறப்படுவதாகும். இதே பார்வைதான் நீதிபதி ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வாயத்தின் ஆணையிலும் பிரதிபலித்திருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேர் அடங்கிய அமர்வாயம் “நலத்திட்டங்கள் என்ற பெயரில் நிதிப் பொறுப்பு கைவிடப்பட்டிருக்கிறது என்று மனுதாரரால் எழுப்பப்பட்டிருக்கும் கவலைகள் (worries) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது, இலவசமாகப் புடவைகள் அல்லது இதர நுகர்வுப் பொருள்களை அளிப்பதுடன் தேர்தல் அறிக்கைகளில் அரசியல் கட்சிகள் அளித்திடும் நலத்திட்டங்களும் வேண்டும் என்றே குழப்பப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகளால் அளிக்கப்படும் தேர்தல் உறுதிமொழிகள் இலவசங்கள் என்றோ இல்லை என்றோ உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய தேவையே இல்லை. இந்தப் பிரச்சனை முழுமையாக அரசியல் அரங்கத்துடன் தொடர்புடையதாகும். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய மேடையை அமைத்துக்கொள்வதற்கும், தேர்தல் அறிக்கையில் உறுதிமொழிகள் அளிப்பதற்கும் சுதந்திரம் உடையவைகளாகும். இவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து இவற்றை ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா என்பது மக்களைச் சார்ந்ததாகும். நலத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை அமல்படுத்துவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திடும் அரசியல் கட்சியின் தனியுரிமையாகும்.
இலவசங்கள் மீதான தாக்குதல் என்பது உண்மையில் மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வகைகளில் அளிக்கப்பட்டுவரும் பொதுப் பொருள்கள் மீதான தாக்குதலேயாகும். இவற்றை மக்களுக்கு அளித்திட மாநில அரசாங்கங்கள் பொறுப்பேற்றிருப்பவைகளாகும். இவற்றின் மீதே இவ்வாறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
(ஆகஸ்ட் 31, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி