நூல் அறிமுகம்: ’வேலூர்ப் புரட்சி 1806’ இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த பேரா.கா.அ.மணிக்குமாரின் அரிய ஆவண நூல் – பெ.விஜயகுமார்
புத்தகம்: வேலூர்ப் புரட்சி 1806
பேரா.கா.அ. மணிக்குமார்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கம்: 112
விலை: ரூ. 325.0
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vellore-puratchi-1806/
வட இந்தியாவில் கான்பூர், லக்னோ, ஆக்ரா, டில்லி ஆகிய இடங்களில் 1857ஆம் ஆண்டு உருவான சிப்பாய்களின் எழுச்சியே இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றில் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இப்புரட்சிக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1806ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிரான வீரஞ்செறிந்த போர் நிகழ்ந்துள்ளது. அந்த நிகழ்வு வேலூர்ப் படுகொலை, வேலூர் கலகம், வேலூர் எழுச்சி, வேலூர் கிளர்ச்சி, வேலூர்ப் புரட்சி என வரலாற்றறிஞர்களால் பலவாறு வர்ணிக்கப்பட்டுள்ளது. அந்தப் போரில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் இன்னுயிர் ஈந்தனர். வேலூர்ப் புரட்சி குறித்த ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு ஓர் அரிய ஆவணத்தை பேராசிரியர் கா.அ.மணிக்குமார் வெளிக்கொணர்ந்துள்ளார். பிரிட்டிஷ் நூலகம் (லண்டன்), ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் (எடின்பரோ), தமிழ்நாடு ஆவணக்காப்பகம், இந்திய தேசிய ஆவணக்காப்பகம் போன்ற இடங்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வேலூர்ப் புரட்சி குறித்த வராலாற்றின் மீது புதிய வெளிச்சத்தை மணிக்குமார் பாய்ச்சியுள்ளார். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து புதிய சிந்தனையையும், வழிகாட்டுதலையும் வழங்குவதாக அவரது நூல் இருக்கிறது.
பேராசிரியர் மணிக்குமார் ஈரோடு வாசவி கல்லூரியில் பணியாற்றிய போது ஏயூடி எனும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கான பல்வேறு போராட்டங்களையும் முன்னின்று நடத்திய சமூகச் செயற்பாட்டாளர். தமிழ்நாடு பாடநூல் குழுவின் (வரலாறு பிரிவு) தலைவராகவும் செயல்பட்டுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய போது 19,20ஆம் நூற்றாண்டுத் தமிழகச் சமூக, பொருளாதார வரலாற்றில் முக்கிய ஆய்வுகளை மணிக்குமார் மேற்கொண்டுள்ளார். ‘நவீன தமிழகத்தில் சமூக வன்முறைகள்’, ‘1930களில் தமிழகம்: பொருளாதாரப் பெருமந்தத்தின் தாக்கம்’, ‘முதுகுளத்தூரில் கொலை: சாதியும் தேர்தல் அரசியலும்’, ‘வரலாறும் சமூகமும்: கட்டுரைத் தொகுப்பு’ போன்ற நூல்களை எழுதியுள்ள மணிக்குமார் வரலாற்றுத்துறையில் தொடர்ந்து காத்திரமான பணியை ஆற்றி வருகிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு எதிராக வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் போன்றோர் தென்தமிழகத்தில் வீரஞ்செறிந்த போர்களைப் புரிந்துள்ளனர். அதே காலகட்டத்தில் கொங்கு நாட்டில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான கலகக் குரலை தீரன் சின்னமலை எழுப்பியுள்ளார். மைசூரில் ஹைதர் அலியும், அவரின் புதல்வர் திப்பு சுல்தானும் கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்மசொப்பனமாக இருந்துள்ளனர். இவ்வாறாக இருப்பினும் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் 1857ஆம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய்க் கலகமே முதல் சுதந்திரப் போர் என்பதாகக் குறிப்பிடப்படுவது வரலாற்றுப் பிழையன்றி வேறென்ன?
1857இல் நடந்த சிப்பாய் கலகத்தின் முன்னோட்டமே ’வேலூர்ப் புரட்சி 1806’ என்பதை அரிய சான்றுகளுடன் மிகவும் ஆணித்தரமாக மணிக்குமார் முன்வைக்கிறார். வேலூர்ப் புரட்சியின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2007இல் பேரா.மணிக்குமார் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வு நூல் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன் தமிழ் வடிவத்தை காலச்சுவடு பதிப்பகமும், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து தற்போது வெளியிட்டுள்ளன.
இந்த ஆவணம் சிறு அறிமுகவுரை, நான்கு பாகங்கள், இறுதியில் முடிவுரை என்று இருநூறு பக்கங்களுக்கு விரிந்து செல்கிறது. 1806 ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணிக்கு சுமார் ஐநூறு இந்தியப் படைவீரர்கள் திடீரென்று வேலூர் கோட்டையில் போர்கொடியை உயர்த்தினர். கோட்டையில் இருந்த ஐரோப்பியர் குடியிருப்புக்குள் புகுந்து வெள்ளையின அதிகாரிகளையும், படைவீரர்களையும் அவர்கள் சுட்டு வீழ்த்தினர். சிறிது நேரத்திலேயே ஆயுதங்களையும், ஆயுதக்கிடங்குகளையும் அவர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதற்குப் பின்னர் கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து மைசூர் சுல்தானின் கொடியை ஏற்றிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வேலூரிலிருந்து இருபத்தைந்து கி.மீ தொலைவிலுள்ள ஆர்காட்டிலிருந்து கர்னல் கில்லஸ்பி குதிரைப் படையுடன் வரும் வரை வேலூர் கோட்டை இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. கில்லஸ்பி தலைமையில் கோட்டைக்குள் நுழைந்த குதிரைப்படையினர் கிளர்ச்சியாளர்களைக் கொடூரமாகப் பழிதீர்த்தனர். ஆங்கிலேயர்கள் தங்களுடைய அதிகாரத்தை மீட்டெடுத்துக் கொள்வதற்காக சுமார் எழுநூறு இந்திய வீரர்களைப் படுகொலை செய்யதிருக்கலாம் என்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே வேலூர்ப் புரட்சியின் வெற்றி வரலாறு.
1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு ஏற்பட்ட படுதோல்வி என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். மார்க்ஸின் அந்தக் கூற்று வேலூர் புரட்சிக்கும் முற்றிலும் பொருந்துகிறது என்று தன்னுடைய அறிமுகவுரையில் மணிக்குமார் தெளிவாக்குகிறார். வேலூரில் இருந்த படைவீரர்கள் இந்து, முஸ்லீம் என்று மதவேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து போராடி ஒற்றுமையை வெளிப்படுத்தினர் என்பதே அவரது ஆய்வின் முடிவாக இருக்கிறது.
வேலூர் புரட்சி ஆங்கிலேய வரலாற்றறிஞர்களின் கண்ணோட்டத்தில் வேலூர் படுகொலை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ’படுகொலை’ என்று அவர்கள் குறிப்பிடுவது கொல்லப்பட்ட ஆங்கிலேயர்களை மட்டுமே. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமாகப் படுகொலை செய்யப்பட்ட இந்தியப் படைவீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தூக்கிலிடுதல், பீரங்கியின் வாயில் கட்டி வைத்து சுட்டுக் கொல்லுதல், தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல் என்று பலவிதங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. வேலூர்ப் புரட்சிக்குக் காரணம் படைவீரர்களின் சாதி, மத அடையாளங்கள் மீதான தேவையற்ற கட்டுப்பாடுகளே என்று ஒற்றை வரியில் ’ஆக்ஸ்ஃபோர்டு இந்திய வரலாறு’ குறிப்பிடுகிறது. வேலூர் கிளர்ச்சி பற்றிப் பெயருக்குக்கூட ’கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு’ விவாதிக்கவில்லை. வில்லியம் ஃப்ரான்சிஸ் பட்லர் என்ற ஆங்கிலேய வரலாற்றாசிரியர் “ஆங்கிலேயப் படைவீர்ர்களின் நடத்தை நாகரீகமானதாகவும், ஈவிரக்கத்தோடும் இருந்ததாகக் கூறுவதை என்னென்பது? ஆங்கிலேய வரலாற்றறிஞர்கள் பித்தியன் ஆடம்ஸ், ஜான் மால்கம், ஹூவர், ஜான் வில்லியம் கே, டபிள்யூ. ஜெ. வில்சன் போன்றவர்களின் ஆவணங்கள் ஆங்கிலேயர் கண்ணோட்டத்தில் வேலூர் கலகத்தைப் பற்றிக் குறிப்பிடும் தகவல்களையும் பதிவு செய்துள்ளார். ஆர்.சி.மஜும்தார், தமிழ் அறிஞர் ந.சஞ்சீவி, மாயா குப்தா, கே.இராசய்யன் போன்ற இந்திய ஆய்வாளர்கள் இந்தியக் கண்ணோட்டத்தில் வேலூர்ப் புரட்சி பற்றி எழுதியுள்ள கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
கம்பெனி, இராணுவம், கோட்டை
‘கம்பெனி, இராணுவம், கோட்டை’ என்ற தலைப்பில் உள்ள நூலின் முதல் பாகம் ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர் ஆடம் ஸ்மித்தின் கூற்றுடன் தொடங்குகிறது. “இறையாண்மை அரசுகளைக் காட்டிலும் முழுவதும் வணிகர்களாலான அரசு எந்தவொரு நாட்டிற்கும் மோசமானதாகவே இருக்கும்” எனும் ஆடம் ஸ்மித்தின் கூற்றிற்கிணங்க இந்திய நலன்களுக்கு முற்றிலும் எதிராகவே கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அமைந்திருந்தது. அதனாலேயே தங்களின் சாதி, மத வேறுபாடுகளை மறந்து இந்திய மக்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். முதலாவது அத்தியாயத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம், வளர்ச்சி, அதற்கு துணைநின்ற ராணுவம், வேலூர் கோட்டையின் கட்டமைப்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி படையிலிருந்த வீரர்களின் நிலைமைகள் படுமோசமாக இருந்தாலும், இந்தியர்கள் அதில் சேர்ந்தற்குக் காரணம் அவர்களைப் பீடித்திருந்த வறுமையே. கம்பெனியின் படையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், அப்போது புதிதாக கிறித்துவர்களாக மதம் மாறியிருந்த இந்துக்களும் இருந்தனர். இந்துச் சிப்பாய்கள் நாமம், திருநீர், காதணி போன்றவற்றை அணிவதற்கும், இஸ்லாமிய வீரர்கள் தாடி வளர்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் அணிந்து கொள்ள தோலினால் செய்யப்பட்ட தொப்பி வழங்கப்பட்டது. சிலுவை போன்ற ஒரு சின்னம் அதில் காணப்பட்டது. படைவீரர்களின் புரட்சிக்கு இவையே காரணமாக இருந்தன என்று ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் கூறினர். கட்டபொம்மன், பூலித்தேவன், மருது பாண்டியர்கள், திப்பு சுல்தான், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை போன்றோர் நிகழ்த்திய கிளர்ச்சிகளின் தொடர்ச்சியே வேலூர் கிளர்ச்சி என்ற பேரா.இராசய்யன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார் தனிமனிதர்களின் ஆவேசமான போராட்டங்களை நாட்டுப்புறப் பாடல்களில் சித்தரித்த தமிழ்ச் சமூகம் ஏனோ வேலூர் கிளர்ச்சி குறித்து எதுவும் பேசாமல் இருந்து விட்டது. வேலூர் புரட்சியில் தனிமனிதர்கள் முக்கியத்துவம் பெறாததே இதற்கான காரணம் என்று பேரா.இராசய்யன் கூறுகிறார். பாளையக்காரர்களின் படைக்கலைப்பின் போது வேலையிழந்த வீரர்கள் ஆங்கிலேயர்களின் படையில் ஊடுருவியிருந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்ற இராசய்யன், இந்தியாவில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய கடுமையான விவசாய நெருக்கடியும் கிளர்ச்சிக்கான காரணமாக அமைந்தது என்கிறார்.
கம்பெனியின் தோற்றமும் வளர்ச்சியும்
முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அரசவையில் 1609ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைத் தொடங்குவதற்கான அனுமதி கோரி வில்லியம் ஹாக்கின்ஸ் வணங்கி நின்றதில் தொடங்குகிறது கம்பெனியின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பகுதி. அதற்கான அனுமதி முதலில் கிடைக்காமல் போனாலும் தொடர்ந்து முயற்சி செய்த தாமஸ் மன்றோ தலைமையிலான குழு 1615ஆம் ஆண்டில் மொகலாய இளவரசர் குர்ரம் மூலமாக அனுமதி பெறப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி ஆக்ரா, அகமதாபாத், பரூச், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் தொழிற்கூடங்களைக் கட்டி தன்னுடைய வணிகத்தைத் தொடங்கியது. சென்னையில் பாழடைந்து போயிருந்த போர்த்துக்கீசியர் குடியிருப்பான சாந்தோம் அருகில் இருந்த சென்னப்பட்டணத்தை சந்திரகிரி நாயக்கர் மன்னனிடமிருந்து வாங்கி 1639இல் கோட்டையுடன் கூடிய தொழிற்கூடத்தைக் கட்டியது. சாசனத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகளோடு நீதிபரிபாலனம் செய்திடும் அதிகாரத்தையும் 1683ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார்.
”அழகான, செழிப்புமிக்க சமவெளி நடுவில் கம்பீரமான குன்றுகள் சூழ அமைந்திருந்த வேலூர் கோட்டை கீழை நாடுகளில் உள்ள இந்தியக் கட்டுமானத் திறமைக்குச் சரியான எடுத்துக்காட்டாக உள்ளது” என்று வேலூர் கோட்டையை விவரிக்கிறார் ஜேம்ஸ் வெல்ஸ். கோட்டையின் சுவையான வரலாறு குறித்தும் நூலாசிரியர் மணிக்குமார் பதிவு செய்துள்ளார். கோட்டையைக் கட்டிய சின்ன பொம்மநாயக்கன் பற்றி அதிக வரலாற்று விவரங்கள் கிடைக்கவில்லை. பொம்மநாயக்கனின் மகன் லிங்கமநாயக்கர் விஜயநகரப் பேரரசுக்கு எதிராகப் போர் புரிந்து தோற்ற பின்னர் விஜயநகர மன்னர் வெங்கடராயரின் கைவசம் கோட்டை சென்றது. வெங்கடராயர் கோட்டைக்குள் இருந்த பளிங்கு மாளிகையில் குடிபுகுந்தார். எனவே அது ’ராயவேலூர்’ என்றழைக்கப்பட்டது. 1677ஆம் ஆண்டு வரையிலும் கிருஷ்ண தேவராயரின் வழித்தோன்றல்களிடம் இருந்து வந்த அந்தக் கோட்டை பின்னர் மராத்தியர் வசம் கைமாறியது. அதற்குப் பின்னர் ஔரங்கசீப்பின் தூதர் சுல்பிகர்கான் தலைமையிலான மொகலாயர் படை கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டது, அப்பகுதி முழுவதையும் சூறையாடிவிட்டு தன்னுடைய தளபதி தாவூத்கானை கர்நாடக நவாபாக நியமித்து விட்டு சுல்பிகர் தில்லி திரும்பினார். அவரிடமிருந்து ராபர்ட் கிளைவ் துணையுடன் ஆர்க்காடு நவாப் கோட்டையை அபகரித்துக் கொண்டார். 1756ஆம் ஆண்டில் நவாபின் சம்மதத்துடன் கோட்டையை ஆங்கிலேயர் படை ஆக்கிரமித்தது.
கோட்டையின் மூன்று கி.மீ. சுற்றளவிலும் 191 அடி அகலம் 29 அடி ஆழம் கொண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது. அகழியில் பதினெட்டு அடி நீளம் இருந்த முதலைகள் வளர்க்கப்பட்டன. அன்றைய நாளில் அகழியை எளிதில் தாண்டிச் செல்ல முடியாது. கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வர் கோவில் இருந்தது. ஆங்கிலேயர் கைவசம் கோட்டை சென்ற பிறகு கோவில் ஆயுதக் கிடங்காகவும், கோவில் குளம் ராணுவ அணிவகுப்பு மைதானமாகவும் மாறியது. கோட்டை கட்டுவதற்கே முன்பே அங்கே சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
இஸ்லாமியர் கைவசம் கோட்டை இருந்த போது (1687-1700) கோட்டைக்குள் மசூதி கட்டப்பட்டுள்ளது. 1846இல் பிரிட்டிஷ் அரசு 280 பேர் அமரக் கூடிய தேவாலயத்தைக் கட்டியது. 1806இல் கிளர்ச்சி வெடித்த போது வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர் 370 பேர், இந்தியர்கள் 1500 பேர் இருந்தனர். திப்புவின் பன்னிரண்டு மகன்களும், ஆறு மகள்களும் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
கிளர்ச்சி
’கிளர்ச்சி’ என்று தலைப்பிடப்பட்ட இரண்டாம் பகுதியில் கிளர்ச்சி குறித்த முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. 1806 ஜூலை 9 அன்று திப்பு குடும்பத்து இளவரசி நூர்-உல்-நிசும் திருமணம் நடக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகளும், வீரர்களும் இரவு விருந்து முடித்து விட்டு அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். அந்த நாளில் கிளர்ச்சிக்கான அறிகுறி ஏதும் கோட்டைக்குள் தென்படவில்லை.
ஜூலை பத்தாம் நாள் அதிகாலை இரண்டு மணி. அணிவகுப்பு மைதானத்தில் மரங்களின் நிழல்கள் நிலவொளியில் அழகாகக் காட்சியளித்தன. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென்று துப்பாக்கிகள் முழங்கின. ஒரே நேரத்தில் ஐரோப்பியர் குடியிருப்பு, வெள்ளைக்காரக் காவலர்கள், அதிகாரிகள் வசிப்பிடம் என்று அனைத்தையும் இந்திய வீரர்கள் தாக்கினர். கோடைகாலம் என்பதால் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதுவே தாக்குதலுக்கு எளிதாக வழியேற்படுத்திக் கொடுத்தது. படுக்கையில் ஆடைகளின்றி, பாதுகாப்பின்றி படுத்திருந்த ஐரோப்பியர்களை ஜன்னல் வழியாக கிளர்ச்சியாளர்களால் எளிதாகச் சுட முடிந்தது. லேன்ஸ்நாயக் ஒருவர் அதிகாரிகள் வசித்த இடங்களுக்குத் தீ வைத்தார். வீட்டை விட்டு வெளியேறும் அதிகாரிகளை சுட்டுக் கொல்வதற்கென்று தனித்தனியாக படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இன்னொரு பகுதியினர் வெடிமருந்துகளும், இராணுவத் தளவாடங்களும் இருந்த அறையைக் கையகப்படுத்தி வீர்ர்களின் வசம் அளித்தனர். கர்னல் ஃபேன்கோர்ட் அவருடைய மனைவியின் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். கர்னல் மக்கராஸ் இரண்டாவதாகப் பலியானார். சிறிது நேரத்தில் பதினான்கு ஆங்கிலேய அதிகாரிகளும், தொன்னூற்றி ஒன்பது வீரர்களும் மடிந்தனர். அதிகாரிகள், வீரர்கள் என்று பலரும் படுகாயமடைந்தனர்.
கோட்டைக்குள் வசித்த திப்புவின் மூன்றாம் மகன் மொய்தீன் கிளர்ச்சியாளர்களுக்கு மைசூர் கொடியை கொடுத்தான். கோட்டையின் மீது அவர்கள் மைசூர் கொடியை ஏற்றினர். கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த ஆங்கிலேய அதிகாரி மேஜர் கோட்ஸ் கிளர்ச்சி பற்றிய செய்தி அறிந்து கோட்டைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாமல் போனதும் அவர் ஆர்க்காடு குதிரைப்படை முகாமின் பொறுப்பாளர் கர்னல் கில்லஸ்பிக்கு கடிதம் மூலம் செய்தி அனுப்புகிறார். ஜூலை 10ஆம் நாள் காலை ஆறு மணிக்கு செய்தி கிடைத்ததும் குதிரைப்படையுடன் கில்லஸ்பி வேலுர் விரைந்தார். பத்து மணிக்கு வேலூர் வந்தடைந்த குதிரைப்படை சில மணி நேர கடுமையான சண்டைக்குப் பின் கோட்டையை ஆங்கிலேயர் வசமாக்கியாது.
திப்புவின் புதல்வர்கள் கோட்டைக்குள் காவலில் வைக்கப்பட்டனர். கோட்டையினுள் இருந்த 1,700 பேரில் 879 பேர் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்து கர்னல் கில்லஸ்பியின் தாக்குதல் எந்த அளவுக்கு வெறியுடன் இருந்தது என்பதை அறியலாம். கிளர்ச்சி செய்த இந்திய வீரர்கள் 466 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கர்னல் கில்லஸ்பிக்கு மிகப் பெரிய பாராட்டுதல் கிடைத்தது. வாலாஜாபாத், ஐதராபாத், நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம், பெங்களூர், பெல்லாரி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வேலூர் கிளர்ச்சி எதிரொலித்தது. கொடூரத் தண்டனைகள் கொடுத்து அந்தக் கிளர்ச்சிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டாலும் ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்கள் மனதில் பீதி நீடித்தது.
கிளர்ச்சிக்குப் பிறகு
கிளர்ச்சிக்குப் பிறகு என்ற மூன்றாம் பாகத்தில் விசாரணைக் குழு கண்டறிந்த உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளர்ச்சியை ஒடுக்கிய உடனேயே லெப்டினன்ட் கர்னல் தலைமையில் விசாரணைக் குழுவை கர்னல் கில்லஸ்பி நியமித்தார். உயிர் பிழைத்திருந்த ஆங்கிலேய அதிகாரிகள் முதலில் விசாரிக்கப்பட்டனர். அடுத்ததாக கைதாகியிருந்த இந்திய அதிகாரிகளும், வீரர்களும் விசாரிக்கப்பட்டனர். ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய படைத் தளபதிகள் மீது பழிபோடுவதிலேயே கவனமாக இருந்தனர். கிளர்ச்சியில் தாங்கள் சேரவில்லை என்றும், கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நடிக்கவே செய்தோம் என்றும் இந்திய அதிகாரிகளும், வீரர்களும் கூறினர். விசாரணைக் குழு இந்திய வீரர்களுடனான நல்லுறவைப் பொறுத்தே ஆங்கிலப் பேரரசின் பாதுகாப்பு அமையும் என்ற யதார்த்த உண்மையை நன்கு உணர்ந்திருந்தது.
விசாரணைக் குழு கூடுவதற்கு முன்னரே கைதான இந்திய வீரர்களை 1.ஒன்றுமறியாதவர்கள், 2. பயங்கரக் குற்றவாளிகள், 3.குற்றவாளிகள், 4.குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். தீவிர விசாரணைக்குப் பின் 516 கிளர்ச்சியாளர்கள் பணியில் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. ஆறு பேர் பீரங்கி வாயில் வைத்துக் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டுப் பேர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். சிலரை நாடு கடத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. கோட்டைக்குள் இருந்த திப்பு சுல்தான் குடும்பத்தினர் மீது கடுமையான தண்டனை வழங்கும் அளவிற்கு குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிட உத்தரவிடப்பட்டது. கிளர்ச்சியைத் திறமையுடன் ஒடுக்கிய கர்னல் கில்லஸ்பிக்கு நன்றி பாராட்டி 7,000 வராகன் (ரூ.24,500) வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய புதிய ராணுவ ஒழுங்கு முறைகளும், உடை, தொப்பி பற்றிய விதிகளும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
காரணிகளும் விளைவுகளும்
காரணிகளும் விளைவுகளும் என்ற நான்காம் பகுதியில் புரட்சிக்கான காரணங்கள் பற்றி ஆங்கிலேய அதிகாரிகள் மட்டத்தில் நடந்த விவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. 1806ஆம் ஆண்டு புரட்சி இராணுவத்தளங்களில் மட்டுமே நடைபெற்றிருந்தாலும் இராணுவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே அதற்குக் காரணியாக்குவது சரியான புரிதலாகாது என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்த தங்களுடைய குடும்பங்களின் துயரங்களை கோட்டைக்குள் இருந்த வீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அதனால் ஏற்பட்ட கோபமும், ஆற்றாமையும்தான் கிளர்ச்சிக்கான காரணம் என்ற முடிவுக்கும் ஆங்கிலேய அதிகாரிகள் வந்து சேர்ந்தனர். ராணுவத்தைத் தாண்டி வேறு பல காரணங்கள் இருந்ததாலேயே தங்களின் சமய வேறுபாடுகளை எல்லாம் மறந்து பொது எதிரியான ஆங்கிலேயருக்கு எதிராகப் படைவீரர்கள் திரும்பினர். வேலூர் கோட்டையில் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பிற ராணுவத்தளங்களிலும் வீரர்களிடையே அதிருப்தி இருந்து வந்தது அந்தக் கருத்தை நிரூபிக்கிறது என்ற முடிவுக்கு ஆங்கிலேய அதிகாரிகள் வந்தனர்.
இந்தியப் படை வீரரின் சம்பளம் மாதம் ஏழு ரூபாய் மட்டுமே. திப்பு சுல்தான் வழங்கியதை விடவும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுவதையும் கம்பெனி படையில் கழித்தாலும் சுபேதார் பதவிக்குக்கூட வர முடியாத நிலையே இருந்தது. நாற்பது ஆண்டுகளாக படையில் பணிபுரிந்த ஒரு சுபேதாரை அப்போதுதான் படையில் சேர்ந்த இளைய ஆங்கிலேய அதிகாரி மரியாதையின்றி நடத்துகின்ற அவலம் இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை மரியாதையின்றியே நடத்தினர். இந்திய வீரர்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு அடிமைகளைப் போல் வேலை செய்து வந்தனர். வெள்ளைக்கார வீரன் இந்திய அதிகாரியை மரியாதைக்குக்கூட வணங்குவதில்லை. ஆங்கிலேய அதிகாரிகளின் வைப்பாட்டிகள்கூட இந்திய அதிகாரிகளைவிட அதிகப் பணம் ஈட்டினர். எல்லாவற்றிருக்கும் மேலாக ஜெனரல் ஆர்தர் வெல்லெஸ்லி தன்னுடைய படையில் காயமுற்றிருந்த வீரர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாகச் சொல்லப்பட்டது. 1806இல் தமிழகத்தில் நிலவிய பஞ்சமும் ஒரு காரணம். பஞ்ச காலத்தில் சென்னையில் மட்டுமே 17,000 பேர் இறந்துள்ளனர். கால்நடைகளின் இழப்பினால் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். வட ஆர்க்காடு மாவட்ட ஆட்சியர் டேவிட் காக்பர்ன் மோசமான விளைச்சலையும் பொருட்படுத்தாமல் நிலவரியைக் கட்டாயப்படுத்தி வசூலித்ததும் ஒரு காரணமாகியுள்ளது.
முடிவுரையில் ’வேலூர் கிளர்ச்சி’ ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்திய விடுதலைப் போரின் ஓர் அங்கமே என்பது உறுதி செய்யப்படுகிறது. அது சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்ட எழுச்சியாகவும் இருந்துள்ளது. கோட்டைக்குள் அனைத்து சாதியினரும் இருந்துள்ளனர், நிலஉடைமைச் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளை, நாயுடு சமூகத்தினரும் விவசாயத்தில் ஏற்பட்ட துயர்களால் இராணுவப் பணிக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர முக்குலத்தோர், செட்டியார், குறவர், இடையர், வன்னியர் ஆசாரி, முத்தரையர், மராத்தியர், தெலுங்கு ஜங்கமர், பறையர் என்று அனைத்துச் சாதிப்பிரிவினரும் கோட்டைக்குள் வீரர்களாக இருந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மராத்தியர் பகுதியில் பேஷ்வா படையில் மஹர்கள் (தலித்துகள்) சேருவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் தென்தமிழகத்தில் பாளையக்காரர்கள் இராணுவத்தில் பள்ளர்- பறையர் படைப்பிரிவுகள் தனிப்பிரிவாக இருந்துள்ளன. பேஷ்வாக்கள் கடைப்பிடித்த சாதியப் பாகுபாடே பீமா-கோரேகான் போருக்கு இட்டுச் சென்றதை அறிவோம். மஹர்கள் ஆங்கிலேயர் படையுடன் சேர்ந்தது போன்ற சூழல் தமிழகத்தில் இருக்கவில்லை என்பதையும் அறிகிறோம்.
முறையாக, அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து வலிமையுடன் போரிடாததால் வேலூர் கிளர்ச்சி தோல்வியடைந்ததாகப் பல அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் ரயில் வசதி, தந்தி, பத்திரிக்கைகள் ஆகியன இல்லாத காலத்தில் இரகசிய ஆலோசனைகளை மேற்கொண்டு தங்களுக்கே உரிய வழியில் ஆங்கிலேயர்களின் கண்களில் படாது செய்திகளைத் தூரத்து இடங்களுக்கு அனுப்பிய கிளர்ச்சியாளர்களின் திறமைகளைப் பாராட்டியுள்ளனர். வேலூர் கிளர்ச்சி ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய வீரர்களின் ஒன்றுபட்ட போராட்டமே. உணர்ச்சிவசப்பட்டு மட்டுமே அந்த வீரர்கள் செயலில் இறங்கவிடவில்லை. ஏகாதிபத்தியக் கொள்கைகளை எதிர்த்து, மத சாதியத் தடைகளை மீறி ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கி எறிந்திடவே அவர்கள் திட்டமிட்டனர். ”போரிடாமல் இருப்பதைவிட போரிட்டு தோற்பது மேல்,” என்ற ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கூற்றுப்படி நடந்துள்ளனர் என்பது தெரிகிறது. ”ஆக்கிரமிப்பாளர்கள், சுரண்டல்வாதிகளுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராகவே பார்க்க வேண்டும்” என்றே வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கருதுகிறார். அந்த வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகவே ’வேலூர்ப் புரட்சி 1806’ வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டும் என்று சொல்லி மணிக்குமாரின் ஆய்வு நிறைவடைகிறது.
வேலூர்ப் புரட்சியைப் போன்று வரலாற்றின் பக்கங்களில் இடம் பெற்று முக்கியத்துவம் பெறாமல் இன்னும் ஏராளமான விடுதலைப் போராட்டங்கள் இருக்கலாம். பேரா.மணிக்குமார் இதுபோன்று வரலாற்றில் காணாமல் போயுள்ள பக்கங்களைத் தேடி எடுத்து பதிவு செய்திட வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திருத்தியும், திரித்தும் எழுதும் போக்கினை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் ஊக்குவிக்கும் சூழலில் பேரா.மணிக்குமார் போன்ற வரலாற்று அறிஞர்களின் தேவையை உணர்கிறோம்.
மணிக்குமார் தன்னுடைய ஆய்வுத் திறனையும். வரலாற்றியலில் இருக்கும் அறிவையும் பயன்படுத்தி இதுபோன்ற பல அரிய நூல்களையும் கொண்டு வருவார் என்று நம்புவோம்.
பெ.விஜயகுமார்.