இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் – எஸ். வி. வேணுகோபாலன்
கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம்
எஸ் வி வேணுகோபாலன்
“எங்கே, உங்கள் குரல் நாண்களைக் கொஞ்சம் நான் தொட்டுத் தடவிப் பார்க்கவேண்டும், எப்பேற்பட்ட குரல்…என்ன இசை அது!” என்று ஒரு பாடகி, தன்னின் மூத்த பாடகி ஒருவரின் அசாத்திய குரலினிமை, இசை ஞானம் கண்டு உளப்பூர்வமாக உருகிப் பாராட்டுவது எத்தனை அருமையான விஷயம்.
அண்மையில் மறைந்த தேனிசைக் குரலரசி லதா மங்கேஷ்கர் தான் அப்படிக் கரைந்துருகி நின்றது. அவரை அசத்திய மூத்த இசைக்கலைஞர் கே பி சுந்தராம்பாள். சென்னை வந்தபோது ஜெமினி நிறுவனத்தின் புகழ் பெற்ற அவ்வை திரைப்படம் பார்த்திருக்கிறார் லதா. அதில் கேபிஎஸ் அபாரமாக வழங்கி இருந்த நடிப்பும், அற்புதமான பாடல்களும் அவரை ஓடோடிப் போய் நேரில் சந்தித்துத் தமது மரியாதையைத் தெரிவிக்க வைத்திருக்கிறது. அந்த சந்திப்பு ஓர் அரிய புகைப்படமாக வரலாற்றில் நிலைத்து விட்டதற்கு மவுண்ட் ரோடு – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் ஸ்டூடியோ வைத்திருந்த வைத்தி என்பவர் காரணம்.
https://www.thehindu.com/entertainment/music/lata-mangeshkars-connect-with-the-carnatic-world/article38407828.ece
“என்னவோர் அழகான குரல்…நான் மட்டும் கணேசக் கடவுளாக இருந்தால், என் மீது இத்தனை பக்தி கீதங்கள் பொழியும் குரலுக்குரிய பக்தை மீது நான் காலமெல்லாம் துதி பாடிக்கொண்டிருப்பேன்” என்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அவர் நெகிழ்ந்ததை எழுத்தாளர் சோழநாடன் கொடுமுடி கோகிலம் கேபி சுந்தராம்பாள் வரலாறு (ரிஷபம் பதிப்பகம்) எனும் புத்தகத்தில் பதிவு செய்திருப்பதை இசை விமர்சகர், ஆய்வாளர் வி ஸ்ரீராம் தி இந்து ஆங்கில நாளிதழில் வெள்ளிக்கிழமை சிறப்பு இணைப்பில் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கான புகழஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
லதா அவர்களுக்கும் தென்னக இசைக்கலைஞர்களுக்குமான நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. எம் எஸ் சுப்புலட்சுமி, லால்குடி ஜெயராமன் என கர்நாடக இசையுலக முக்கிய கலைஞர்களை நேரில் வந்து சிறப்பித்திருக்கிறார் லதா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது அன்னை இல்லம், லதாவுக்கு ஓர் அண்ணன் இல்லம், அத்தனை அன்பு கொண்டாடி இருக்கும் நேயமிக்க இதயங்கள்.
அவரது இந்தி, மராத்தி மொழி திரைப் பாடல்கள், பக்தி கீதங்களுக்கு இங்கே தமிழகத்திலும் எண்ணற்ற ரசிகர்கள் எப்போதும் உண்டு. அவரது மறைவு பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது பலரையும்! நாதஸ்வர கலைஞர்கள் உள்பட, ஸ்வரங்களை, பாவங்களை எத்தனை நுட்பமாக இசைக்கவேண்டும் என்பதற்கு லதாவை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கச் சொல்வார்கள் என்பதெல்லாம் வாசிக்கையில் அத்தனை பெருமையாக உணர முடிகிறது.
இசையும் ஓவியமும் பின்னிப் பிணைந்திருப்பதை, மும்பை கோகுல் ஆர்ட் ஸ்கூல் மாணவர்கள், மறைந்த இசைக் கலைஞருக்கு ஓவிய அஞ்சலி செலுத்தியதில் காணமுடிந்தது.
1950களிலேயே இந்தியிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள் சிலவற்றில் தமிழ்ப் பாடல்கள் பாடி இருந்த லதாவை, எண்பதுகளில் இளையராஜா மீண்டும் இங்கே பாடவைத்திருக்கிறார். நவுஷத் கம்பதாசன் எழுதி இசையமைத்த பாடல்கள் முதலில் பாடியவர், இரண்டாம் வருகையில், கங்கை அமரன் எழுதிய பாடலை இளையராஜா இசையில் பாடிய ஆராரோ ஆராரோ ஒரு மென் காதல் தாலாட்டு. சத்யா படத்திற்காக வாலி எழுதிய வளையோசை கலகல கலகல ..ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு.
ஹம்மிங் எப்போதும் லதாவின் சிறப்பம்சம் என்பதை ராஜா அம்சமாகக் கொணர்ந்திருப்பார். லதா அவர்கள் மறைவு அடுத்து யூ டியூபில் அவரது பாடல்களை ஏராளமான ரசிகர்கள் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்பதைக் காண முடிகிறது. ஆராரோ ஆராரோ பாடலை, அதன் சரணத்தின் நிறைவுச் சொல்லில் அவர் அசாத்தியமாக வழங்கும் சுவாரசியமான திருப்பத்திற்காக, இரண்டு சரணங்களிலும் வரிகளின் ஊடே வரும் ஹம்மிங் இசைக்காக, தத்தகாரத்தின் துள்ளல் சொற்களை ஒரு குழந்தைமைக் கொஞ்சலோடு பாடும் குரலுக்காக, பாடல் நிறைவுபெறும்போது பல்லவியில் எதிரொலிக்கும் மேல் ஸ்தாயி – கீழ் ஸ்தாயி ஆராரரோ எதிரொலிக்காக, பாடலின் அருமையான தபேலா தாளக்கட்டில் பயணம் செய்யும் அந்தக் குரலினிமைக்காக, வயலின்களும் குழலும் இழைக்கும் சுகத்திற்காக விரும்பிக் கேட்பதுண்டு.
ஆராரோ ஆராரோ பாடலை லதாவின் குரலில் பல்லவியின் முதல் வரி கொண்டு திறக்கிறார் ராஜா. பிறகு குரலை விடுவித்துப் புல்லாங்குழலை ஒலிக்கவைக்கும் அந்தச் சிறிய இடைவெளியில் லதா பின்னர் குரலில் கொண்டுவரவிருக்கும் முத்திரை இடங்களை, அதற்கான தமது கற்பனையை அந்த இசையால் நிரப்பி இருப்பார் இசை ஞானி.
ஆராரோ ஆராரோ என்று லதா இசைக்கும் ஒவ்வொரு முறையும் அவரது குரலோடு இயைந்து, குரலைத் தொடர்ந்து அதே கதியில் ஒலிக்கும் ஒரு சிற்றிசையை எப்படி வருணிக்க! அந்த ஆராரோ, நான் வேறோ …அந்த ரோ ரோ ரோ வைத் தொடரும் ஓ ஓ ஓ ..வை எப்படி விவரிக்க!
முதல் சரணத்தை நோக்கிய இசை விரிப்பில் வயலின்களும், குழலும் பாடலின் திசைக்கான இசையின் வரைபடம். இரண்டாம் சரணத்தை நோக்கிய நடையில் மெல்லிய காதல் உணர்வுகளை மேலும் மென்மையாக்கி இழைக்கும் இசைக்கருவிகள்.
இப்போது கேட்கும்போதும், ஆராரோ பாடலின் ஒவ்வொரு சரணத்தின் நிறைவிலும், கங்கை அமரனின் சந்த நயத்தில் உருண்டோடும் சொற்களை ‘அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான்…அன்னத்தை எண்ணம் போல் வாழ வைத்தான்’ என்று முதல் சரணத்திலும், ‘எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க மெத்தைக்குள் தத்தை தான் விருந்து வைக்க’ என்று இரண்டாம் சரணத்திலும் என்னமாக இசைத்திருக்கிறார் லதா என்று தோன்றும். முழு பாடலும், அந்த இதமான தாளக்கட்டும், வயலின்களும் உள்ளே யாரோ அமர்ந்து இழைத்துக்கொண்டே இருப்பது போல் கேட்டுக் கொண்டே இருக்கும்.
வேறொரு பாடல் பதிவுக்காக லதா மங்கேஷ்கர் சென்னை வந்திருக்கிறார் என்பதறிந்து, அப்போது சத்யா படத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், இந்தப் படத்திலும் அவரைப் பாடவைக்கலாம் என்று இளையராஜா கேட்க, இயக்குநர் கிருஷ்ணா, கமல் இருவரும் ஆர்வத்தோடு அணுக, நமக்கு கிடைக்கப்பெற்ற அருமையான காதல் கீதம் தான் வளையோசை.
புல்லாங்குழல் திறந்து கொடுக்கிறது அந்தக் காதல் சிறகடிப்பை! குழலில் மலரும் இசையில் மென் பாதங்களின் ஜதியைப் போலும் தாளக்கட்டில் சட்டென்று ஒத்தி ஒத்தி எடுக்கும் பஞ்சுக் குரலில் ‘வளையோசை கலகல….’ என்று பல்லவியை எஸ் பி பாலசுப்பிரமணியன் எடுக்கும் இடம் அபாரம்.
படத்தில், கமல் பேருந்தில் எப்படி ஓடோடிப் போய்ப் படிகளில் தொற்றிக் கொள்வாரோ அப்படியான மெட்டு எப்படி ராஜா உருவாக்கினார் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. முரட்டு வாலிபனின் மென்மையான காதல் இதயத்தின் இதமான அரவணைப்பில் சிறகடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி நாயகி என்ற ஒற்றை வரியில் எடுத்திருப்பாரா இந்த இசைக்கோவையை!
பல்லவி தொடங்கவும் இரண்டாம் வரியில் ‘சில நேரம் சிலு சிலு என..’ என்று லதா இணைகிறார். இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் எல்லாம் கலந்து பறக்கும் வேக சந்தங்களில் புகுந்து கலந்து எழுந்து வருமாறு வாலி படைத்த பாடலை அத்தனை அழகோடு பாடி இருப்பார். பல்லவியின் கடைசி வரியில் ‘காதல் தேரோட்டம்’ என்ற சொற்களை ஒவ்வொருமுறையும் அப்படி ஒரு போதை முகவரியோடு வழங்கி இருப்பார் லதா.
முதல் சரணத்தில் ‘ஒரு காதல் கடிதம் விழி போடும்’ என்று அப்பாவி போல் தொடங்கும் பாலு, ‘உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்’ என்பதில் சிந்தும் காதல் சிரிப்பு.. ஆஹா..அதைத் தொடரும் ‘நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்’ என்ற வாலியின் அபாரக் காதல் முரண்பாட்டு நயவரிகளை லதா இசைக்கும் பாங்கில் ஒரு பாசாங்கு புகார் குரலின்வழி பதிவேறும்.
அதற்கடுத்த வரிகளில் காதலன் பரிந்துரைக்கும் காதல் நிவாரணமும், அதை வேண்டாததுபோல் காட்டிக்கொண்டு ஏற்றுக் கொள்ளும் காதலியின் தோரணையுமாக நகர்கிறது பாடல். ‘கண்ணே என் கண் பட்ட காயம்’ என்றதும் இழைக்கும் வயலின் இசைக்கீற்று, ‘கை வைக்க தானாக ஆறும்’ என்ற இடத்திலும் ஒரு மின்னல் கீற்றாக வந்து போகிறது.
இரண்டாம் சரணத்தை நோக்கிய திசை ஓர் இசைச் சோலை.! காதல் அவஸ்தையின் பரஸ்பர தாபங்களும், மோகங்களும் பொங்கித் ததும்பும் குரல்களின் இடையே, வாலியின் சொற்கள் கொண்டு, ‘ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜாவின் பேர் சொல்லும் பாரு’ என்று லதாவே வாழ்த்திச் சென்றிருக்கிறார் இசை ஞானியை! காதல் மிதவையின் ஒவ்வொரு வரியும் கொட்டட்டும் மேளம் தான் என்ற காதல் தேரோட்டம் தான்!
பாலுவின் துள்ளாட்டக் குரலும், இடையே சிரிப்பு ஸ்வரங்களும், சங்கதிகளும், சாகசமுமாக வளர்கிற பாடலின் இரண்டாம் சரணத்தில் இசைவழி ஒரு தியானம் போல நீள் ஹம்மிங் எடுப்பார் லதா. அதில் சன்னமான எதிரொலியாக எஸ் பி பி யின் ஹம்மிங். . வயலின்களும், புல்லாங்குழலும், இடையே கிடாரின் இசை மீட்டலுமாக உள்ளத்தினுள் தந்திகளை மீட்டிக் கொண்டே இருக்கும் பாடலாக நிலைத்து விட்டது வளையோசை.
தமிழ் உச்சரிப்பு ஒழுங்காக வரவேண்டும் என்ற அக்கறையோடு, லதா மங்கேஷ்கர், வளையோசை பாடல் வரிகளை யாரேனும் பாடிய ஆடியோ பதிவை அனுப்புமாறு முதலிலேயே சொல்லி இருக்கிறார், ராஜாவே பாடி அந்த ஆடியோ பதிவை அவருக்குச் சேர்த்திருக்கிறார். அதன் பிறகு பாடல் வரிகளை இந்தியில் எழுதிப் பாடிப் பார்த்து, ஏற்கெனவே ஏக் துஜே கேலியே படத்தின் ‘தேரே மேரே பீச் மெய்ன்’ பாடலில் வரும் தமிழ் சொற்களை அவருக்கு எடுத்துச் சொல்லித் தந்த எஸ் பி பி இந்தப் பாடல் முழுவதுக்கும் அவர் கேட்ட உதவியைச் செய்தார், பாடல் முழுவதும் பாடி முடித்ததும் அங்கிருந்த அத்தனை கலைஞர்களும் மற்றவர்களும் ஒன்றுபோல் கரவொலி எழுப்பி அவரைக் கொண்டாடினார்களாம், இருந்தாலும், லதா விடாமல், உங்களுக்கு முழு நிறைவு ஏற்பட்டதா, திரும்ப ஒரு முறை நான் பாட வேண்டி இருக்குமா என்று ராஜாவை அத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு கேட்டார் என்று இயக்குநர் கிருஷ்ணா நாற்பதாண்டுக்கு முந்தைய நினைவுகளோடு அஞ்சலி செலுத்தி உள்ளார் லதாவுக்கு.
தமது காலத்தின் இசையை லதா மேலும் பரிமளிக்கச் செய்தார், சம காலத்தின் பாடகர்களில் அவர் இன்றும் பேசப்படுவதன் காரணம், இசையில் ஒன்றிய இதயமும், இசைக்காகத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட உணர்வுகளும் தான் என்று எழுதுகின்றனர் இசையறிஞர்கள். இந்திப் பாடல்களில் பரிச்சயம் அற்றுப் போனோமே என்று ஒவ்வொரு முறை எஸ் பி பி அவர்களின் பதிவுகளில் முகமது ரபி பற்றி கேட்கும் போதும், இசை ஆர்வலர்கள் சில முக்கியமான பாடல்கள் குறித்துப் பேசும் போதும் தோன்றிக்கொண்டே இருக்கும். லதாவின் அபாரமான பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போதும் அப்படியான உணர்வு மேலிடவே செய்கிறது.
மொழி கடந்து பேசிக்கொண்டே இருக்கிறது இசை. மொழி கடந்தும் மௌனத்தில் ஆழ்த்துகிறது இசை. மொழிக்கு அப்பால் உயரே பறக்கிறது இசையின் கொடி. பேச்சற்ற வேளைகளிலும் கூடப் பார்வைகளால் பரிமாறப்படும் மொழியைப் போலவே, எத்தனையோ உணர்வுகளை இசையும் கடத்தி விடுகிறது. இசைக் குயில் மறைந்தாலும், இசை அவரது உயிலாக வந்தடைந்து விட்டது இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ! இசை வாழ்க்கை என்றால் வேறென்ன!
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
முந்தைய தொடர்களை வாசிக்க:
இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்