புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கு. சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கியத்தின் முகம் – பாரதீபாலன்

புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கு. சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கியத்தின் முகம் – பாரதீபாலன்




உலகம் முழுவதுவும் உரைநடை இலக்கியங்களுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. சில தனித்த பண்புகளும் பார்வைகளும் இருக்கின்றன. குறிப்பாக புனைகதை இலக்கியத்திற்கென்று சில தனித்த அடையாளம் உள்ளது. இந்தப் பண்புகள் நிலவியல் கூறுகள், மக்களின் வாழ்வியல் சூழல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டு நிலைகளின் அடிப்படையில் மாறுபடுகிறது; வேறுபடுகிறது அல்லது சில பொது இயல்புகளை உள்வாங்கிக் கொண்டு உள்ளது எனலாம். அந்த வகையில் உலக இலக்கியக் கோட்பாடுகளில் யதார்த்தவாதத்தின் இயல்புகளையும் சோசலிச யதார்த்த வாதத்தின் கட்டமைப்பையும் உலகம் முழுவதுவும் நிலை பெறச் செய்ததில் ருஷ்ய இலக்கியம் மிகப் பெரிய பங்களிப்பினைச் செய்துள்ளது எனலாம்.

இலக்கியம் என்பது மக்களுக்கானது; மக்களிடம் இருந்து பெறப்படுவது என்பதுதான் இதன் உள்ளார்ந்த கோட்பாடு. மார்க்சிய சிந்தனை கொண்ட மாக்சிம் கார்க்கி, அலெக்ஸீ டால்ஸ்டாய், மைக்கேல் ஷோலக் கோவ் சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாஸு அலியெவா போன்ற படைப்பாளிகளும் ஆன்டன் செகாவ், லியோடால்ஸ்டாய் போன்ற ஜனநாயகச் சிந்தனை கொண்ட படைப்பாளிகளும் யதார்த்த வாத எழுத்தின் தனித்தன்மையாக கொண்டவர்களாக அறியப்பட்டார்கள்.

அந்த வகையில் ருஷ்ய இலக்கியம் உலகம் முழுவதுவும் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அப்படியான ஒரு தனி இலக்கிய வகைமை உருவாகி, அது வளர்த்தெடுக்கப்பட்டது. இன்றளவும் அப் போக்குகளின் தேவை உணரப்பட்டு, தொடரப்பட்டு வருகிறது என்பதுதான் அதன் தனிச் சிறப்பாகும்.

தமிழ் இலக்கியப் பரப்பில் சோசலிச யதார்த்த வாத இலக்கியத்தினை வளர்த்தெடுத்தவர்கள் பலர். இவர்களில் தனித்த இலக்கிய முகமாக அறியப்படுபவர் கு. சின்னப்ப பாரதி (1935-2022) இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஏழு புதினங்கள் இவருடைய முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. கு. சின்னப்ப பாரதி; கவிதைகள், குட்டிக் கதைகள், கட்டுரைகளும் படைத்துத் தந்துள்ளார். இருப்பினும் இவருடைய புனைவு மொழியும், எடுத்துரைப்பும், கூர்மையான தெளிவான பார்வையும், விவரிப்பும் புனைகதைகளில் வெளிப்படுவதனை அறியலாம்; இது மிக முக்கியமானதாகப்படுகிறது. வாழ்வின் நுட்பமான பகுதியின் வெளிப்பாடாக, மண்ணுக்கும், விவசாயிக்குமான உணர்வுப் பூர்வமான உணர்வு வெளிப்பாடாகவும் உழைப்பிற்கும் சுரண்டலுக்கும் இடைப்பட்ட மனித வாழ்வின் வெளிப்பாடாகவும் இவருடைய படைப்புகள் அமைந்துள்ளன. வட்டாரத் தன்மையில் எழுதப்பட்டிருந்தாலும் அது வெளிப்படுத்தும் உணர்வும் குரலும் மானுடம் முழுமைக்குமானதாக இருக்கிறது. அந்தவகையில் அதற்கு ஒரு பொதுத்தன்மை அமைந்துவிடுவது தான், இப்படைப்புகளின் ஒரு தனித்த இயல்பாகும். தனிதக் குரலாக எழும்பி அது ஒட்டுமொத்தக் குரலாக இணைந்து இறுகும் இடம் கவனம் பெறுகிறது. இதற்குக் காரணம்
கு. சின்னப்ப பாரதி விவசாய, தொழிற்சங்க ஊழியராகவும் படைப்பாளியாகவும் இயங்கியவர்! தன்னுடைய நேரடி அனுபவங்களை மட்டுமே எழுத்துகளாக்குபவர்.

“நான் எழுதுவதெல்லாம் வாழ்க்கையில் நான் காணும் யதார்த்தங்களைத்தான். எழுத்தின் நோக்கம் சமூகத்தின் கடை நிலையில் வாழ்க்கைக்காகப் போராடும் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை அறிந்து கொண்டு ஏற்றத் தாழ்வுக்கு எதிராகப் போராட ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும்” என்கிறார் கு. சின்னப்ப பாரதி.

கு. சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, ‘சங்கம்’, சர்க்கரை’, பவளாயி’, ‘தலைமுறை மாற்றம்’ ‘சுரங்கம்’ ‘பாலை நில ரோஜா’ ஆகிய ஏழு நாவல்களும் வெவ்வேறு வாழ்க்கைக் களங்களை, சூழல்களைக் கொண்டவை என்றாலும் அவை வெளிப்படும் மையப்புள்ளி ஒன்றுதான். ஒடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், விளிம்பு நிலையில் தத்தளிப்பவர்கள் இவர்களுக்கான குரலாகவும், இவர்களின் மீதான கரிசனமாகவும் வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தப் படைப்புகளை ஒட்டுமொத்த மானுடத்திற்குமான குரலாக மாற்றிவிடுவதுதான் கு. சின்னப்ப பாரதியின் வெற்றி; இதுதான் இதன் சிறப்பு.

திருவாரூர் மாவட்டம் வெண்மணி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் நிலச் சுவான்தாரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த சூழலை ‘தாகம்’ நாவல் பேசுகிறது. இது இரண்டு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. கு. சின்னப்ப பாரதி திருவாரூர் மாவட்டத்தில் தங்கி, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று களப்பணி செய்து அப்பகுதிமக்களின் துயரங்களை, வாழ்வை, உள்வாங்கிக் கொண்டு உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்ட நாவல்தான் ‘தாகம்’.

‘தாகம்’ கொண்ட மனிதர்களின் வாழ்வும் வலியும் நுட்பமாகப் பதிவாகியுள்ளது இந்த நாவலில்! இதன் மையமும் கதைக் கட்டமைப்பும் எடுத்துரைப்பும், முன்னும் பின்னுமான அதன் நகர்வும் அந்த நகர்வின் ஊடாக வெளிப்படும் வாழ்வும் சிறப்புற அமைந்துள்ளது. இந்த நாவலின் மையம் என்பது விவசாய உற்பத்தியில் ஈடுபடும் விளிம்பு நிலை மக்கள் பெரு நிலக்கிழார்களிடம் சிக்கி வதைபடுவதையும் துயரம் நிறைந்த அவர்களின் வாழ்வையும் நம் கண்முன் காட்சிப்படுத்தி விடுகிறார். அந்தக் காட்சிகளின் ஊடாக நாம் காணும் சித்திரம் குறிப்பாக விவசாயப் பண்பாட்டுச் சூழல் இந்த நாவலில் ஆழமாகவும் விரிவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரப்பன், மாரக்காள், கந்தன், பழனியம்மாள், முத்தம்மாள், பாப்பாயி, சேனாதிபதிக் கவுண்டர் என்று உயிரோட்டமான ஒரு சமூகம் நம் கண்முன்னே விரிந்து செல்கிறது. அது எழுப்பும் குரலும் அதிர்வும்தான் இந்த நாவலுக்கு கலைத்தன்மையைத் தருகிறது

‘சங்கம்’ முக்கியமான நாவல் மட்டுமல்ல, தனித்தன்மை கொண்டதும்கூட! இது கொல்லிமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி விவசாயக் கூலிகளின் வாழ்வு பற்றியது. தமிழ்ப் பழங்குடி இன மக்களைப் பற்றியதான பல நாவல்கள் வெளிவந்துள்ளன. அவர்களின் வாழ்க்கைச் சூழலைப் பேசுவனவாக, அரசு, அதிகாரம், தொழில் துறை நிறுவனங்களால் அவர்கள் வாழ்வு சிதைவுறுவதை குறித்துப் பேசும் நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘சங்கம்’ நாவல் முன் வைக்கும் பார்வை நுட்பமானது, மாறுபட்டது. மலைவாழ் மக்கள் விவசாயக் கூலிகளாக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள், அவர்களின் நிலமும் வாழ்வும் எவ்வாறு கை மாற்றப்பட்டு அவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள் என்பதனை மிக இயல்பாக அதே வேளை அழுத்தமாகப் பதிவு செய்கிறது!

கு. சின்னப்ப பாரதியின் இந்த இரண்டு நாவல்களும் மிகுந்த கவனம் பெற்றதுடன் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளிலும் இந்தி, வங்காளம், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி என இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகளாவிய நிலையில் கவனம் பெற்றவை.

தமிழில் பல்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிகவும் பேராபத்தான தொழிலாகக் கருதப்படும் ‘சுரங்க’த் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பணிச் சூழலையும், அவர்களின் ஆபத்தான தொழில் சூழலையும், வாழ்வையும் மையப்படுத்தி எழுதப்பட்ட முதல் நாவல் ‘சுரங்கம்’. இது ஓர் தனித்துவமான நாவல்! நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர் பற்றி எழுதுவதற்காக கு.சின்னப்ப பாரதி மேற்கு வங்காளம் அசன்சரிவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி, சுரங்கப் பணிகளை நேரடியாகப் பார்த்து, அவர்கள் வேலை செய்யும் சூழலைக் கவனித்து விரிவாக எழுதப்பட்ட நாவல். இந்தப் புதினம் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. மொழி பெயர்த்தவர் உபாலி நாணயக்காரர். பிரெஞ்சு எழுத்தாளர் எமிலிஜோஸ், சுரங்கத் தொழிலாளியின் வர்க்கப் போராட்டம் குறித்து ஒரு புதினம் எழுதியுள்ளார் என்றாலும் அது கற்பனை கலந்திருக்கும். ‘தாகம்’ நேரடியான உண்மைகளை மட்டும் விவரிக்கிறது என்பது தான் தனித்தன்மை. அந்த வகையில் இந்த நாவல் முன்னோடி நாவலாகப் கவனிக்கப்படுகிறது எனலாம்

உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வு, எவ்வளவு அவலம் நிறைந்ததாக உள்ளது என்பதையும், அவர்கள் எவ்விதம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் மிக இயல்பாக அதே சமயம் மிக வலிமையாக இந்த நாவல் ஒரு உரையாடல் நிகழ்த்துகிறது!அந்த உரையாடல் பல கேள்விகளை எழுப்புகிறது

‘சர்க்கரை’ என்ற நாவல் சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் வாழ்வின் அவலத்தைப் பேசுகிறது. சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகளும் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதனை மிக யதார்த்தமாகப் பதிவு செய்கிறது. இதில் கு. சின்னப்ப பாரதி தன் அனுபவங்களையும் இணைத்து பதிவு செய்திருப்பது நாவலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. இந்திய அளவில் கரும்பு விவசாயிகள் படும் துயரம், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள், அதனை அடக்க முதலாளிகள் எடுக்கும் அடக்குமுறைகள் ஒரு பக்கம், நசுக்கப்படும் ஆலைத் தொழிலாளிகள் ஒரு பக்கம் என்று நாவல் நகர்கிறது. மிகவும் அழுத்தமான பதிவு. இந்த நாவல் உருவாக அடித்தளமிட்டது கு.சின்னப்பபாரதியின் சொந்த ஊரில் அமைந்துள்ள மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் நேரடியான வாழ்வியல் அனுபவங்கள் தாம்!

‘பவளாயி’ நாவல் ஒரு காதல் கதையாக அறியப்பட்டாலும் அதன் பின்புலம் பெண்ணடிமை எதிர்ப்பு! பெண் தொழிலாளிகள் படும் துயரமும் விதவைப் பெண்ணின் வாழ்வும்தான். இந்த நாவல் ஆறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் போன்று கு.சின்னப்ப பாரதியும் கவிதை நடையில் 1964-1965 இல் ‘தெய்வமாய் நின்றான். ‘கிணற்றோரம்’ எனும் காவியங்களைப் படைத்துத் தந்துள்ளார். இந்த இரண்டு காவியங்களும் விளிம்பு நிலை மக்களின் அவல வாழ்வைத்தான் சித்தரித்துக் காட்டுகின்றன.

கு. சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கிய முன்னோடியாக அறியப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தினை உருவாக்கியவர். ‘செம்மலர்’ இதழின் முதல் ஆசிரியர்; இவருடைய ‘தாகம்’ நாவல் தலை சிறந்த தமிழ்நாவலாக மதிப்பிடப்படுகிறது. க.நா.சுப்பிரமண்யம், வெங்கட்சாமிநாதன் போன்ற திறனாய்வாளர்கள் இவருடைய இளக்கிய வளமையை புகழ்ந்து எழுதியுள்ளனர் என்பதனை நாம் கருதிப்பார்க்க வேண்டும்.

‘ஓர் எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்புணர்வு என்பது முக்கியமானது. சமூகத்தைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என்பவன் பெற்ற தாய் எனக்குப் பொருட்டல்ல என்பதற்கு ஒப்பாகும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்கிற பொழுதே சமூகத்தின் பொதுக் கடமையையும் செய்து முடிக்கிறான். அப் பொறுப்புணர்ச்சியின் அனுபவ ஞானத்தின் வெளிப்பாடுதான் மகத்தான இலக்கியங்கள், என்பதுதான் கு.சின்னப்ப பாரதியின் நம்பிக்கை. இதனை அவருடைய இலக்கியக் கோட்பாடு என்றே சொல்லலாம்.

– பாரதிபாலன்