Suyarajyam Yarukku Book By M. Singaravelar Booreview By Kamalalayan நூல் அறிமுகம்: ம. சிங்காரவேலரின் சுயராஜ்யம் யாருக்கு? - கமலாலயன்

நூல் அறிமுகம்: ம. சிங்காரவேலரின் சுயராஜ்யம் யாருக்கு? – தொகுப்பு: க. காமராசன் – கமலாலயன்



ம. சிங்காரவேலர் வாழ்வும் பணியும்
கமலாலயன்

1931ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்க அலை பேரளவில் இருந்தபோது அதன் முன்னோடி ஆதரவாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ம.சிங்காரவேலர் எழுதி வெளியிட்ட ஒரு குறுநூல் “சுயராஜ்யம் யாருக்கு?” என்பது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் இரண்டாவது, மூன்றாவது பகுதிகளையும் அதே குறுநூல் வடிவில் ம.சி. வெளியிட்டுள்ளார். அந்த மூன்று நூல்களையும் ஒரே நூலில் தொகுத்து, ஆசிரியர் குறிப்புகளுடன் செம்மையாகப் பதிப்பித்துள்ளார் இளம் ஆய்வாளர் க.காமராசன்.சீர்மை பதிப்பகம் இதை மிக எளிய, ஆனால் சிறப்பான நூலாக வெளியிட்டுள்ளது.

தோழர் க. காமராசன், தமிழ்நாட்டு ஆய்வுலகில் நம்பிக்கையூட்டும் ஓர் இளைஞர். ஆழ்ந்த படிப்பனுபவத்துடன் மற்றவர்கள் சாதாரணமாகக் கடந்து போய் விடும் செய்திகளைக் கவனமாக அணுகி அவற்றின் பின்னணி அரசியலை அம்பலப்படுத்தி வருபவர். ஆரவாரமில்லாமல் அமைதியாகப் பணி செய்யும் இயல்புடையவர். தனது கருத்துகளில் உறுதியாகக் காலூன்றி நின்று, அவற்றை நிறுவும் தரவுகளை முன்வைத்து வாதிடும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆசிரியர். ஆய்வு நூல்கள் பதிப்பு-ஆசிரியப்பணியிலும், ஆய்விதழ்களின் வெளியீட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர். பேராசிரியர் இரா. சீனிவாசன், பேராசிரியர் வீ. அரசு போன்ற மூத்த ஆய்வாளர்களுடன் இணைந்தும், தனியாகவும் பல்வேறு ஆய்வுகளையும், தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் பதிப்பித்த நூல்தான் இப்போது மேற்கூறியவாறு சீர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

“சுயராஜ்யம் யாருக்கு?” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம், தமிழ்நாட்டில்பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்கொடுமையான அடக்குமுறைக் காலத்திலேயே தானாக முன்வந்து முதலாவதாக கம்யூனிஸ்ட் என்று பிரகடனம் செய்துகொண்ட ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதியது.

இந்த நூலில் அவர் சுயமரியாதை இயக்கத்தின் அடுத்த நகர்வாக பொதுவுடைமை சமூகம் – சிங்காரவேலரின் வார்த்தைகளில் சொன்னால், சமதர்ம ராஜ்யம் – நோக்கி நமது மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். இந்த நோக்கத்தை முன்வைத்து, அன்றைய அரசியல் இயக்கங்களான காங்கிரஸ், நீதிக்கட்சி, கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் சிங்காரவேலர் அலசி ஆராய்கிறார். அதோடு, அன்று ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் ராஜ்யம், அதை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தியாரும், காங்கிரசும் முன்வைத்த சுயராஜ்யம் ஆகிய இரண்டு அரசியல் அதிகார அமைப்புகளின் லட்சணங்களை நுணுக்கமாகப் பட்டியலிட்டு மதிப்பீடு செய்கிறார்.பின், தனது தேர்வு என்ற வகையில் சமதர்ம ராஜ்யம் என்ற கனவை முன்வைக்கிறார். வெறும் கற்பனாவாதக்கனவாக அது இல்லை என்பதே அதன் சிறப்பு.

பிரிட்டிஷ் ராஜ்யம், தனது அரசாதிகாரத்தைக் கொண்டு இந்திய மக்களுக்கு செய்த தீமைகள் எவை, நன்மைகள் என்னென்ன; கூட்டிக்கழித்துப் பார்த்தால்,மக்களுக்கு மிஞ்சுவது என்னவாக இருக்கும் என்பன போன்ற செய்திகளை நூலின் முதல் பகுதியில் 22 சிறு சிறு பத்திகளில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய நாட்டு மக்களின் உழைப்பையும், நாட்டின் அளவற்ற செல்வங்களையும் கொள்ளையடித்து உறிஞ்சி ஆங்கிலநாட்டு மக்களை வளமாக வைத்திருப்பதுதான் அதன் ஒட்டு மொத்தக் குறிக்கோள் என்பது புரிகிறது. இங்கிலாந்து மட்டுமன்றி, உலகம் எங்கும் ஆட்சி செய்கின்ற ஆளும் வர்க்கங்களின் செயல்கள், கொள்கைகள், திட்டங்கள் யாவுமே யாருடைய நலங்களுக்கானவை என ஒப்பிட்டுக்காட்டியிருக்கிறார்.

பிரிட்டிஷ் ராஜ்யத்தை எதிர்த்து, ‘சுயராஜ்யம்’ கோரிப்போராடி வரும் காந்தியாரும், காங்கிரசும் முன்வைத்துள்ள கோரிக்கைகள், கொள்கைகள் யாருக்கானவை என்று சிங்காரவேலர் அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த இரண்டாவது பகுதி யிலும் 21 குறுங்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இறுதிப்பகுதியில், சமதர்ம ராஜ்யம் என்பதன் பொருள் என்ன, அந்த ராஜ்யம் அமைந்தால் அது மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்யும் என்பதை விளக்குகிறார். இதில் மூன்று தலைப்புகளில் 21 குறுங்கட்டுரைகள் உள்ளன. 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற சோஷலிசப் புரட்சியினால், அந்த நாட்டின் மக்கள் சமூகம்,  குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும் அடைந்துள்ள உரிமைகளையும், நலன்களையும் தெளிவுபடுத்துகிறார்.

சுயராஜ்யமும் சமதர்மமும், சமதர்ம ராஜ்யத்தின் இலட்சணங்கள், சமதர்ம ஆட்சி முறை –ஆகிய மூன்று தலைப்புகளின் மூலம்தான் முன்வைக்கிற சமதர்ம சோஷலிஸ்ட் அரசமைப்பின் தன்மைகளை ம.சிங்காரவேலு விளக்கி இருக்கிறார்.முதல் இரண்டு அரசமைப்புகளான பிரிட்டிஷ் ராஜ்யமும்,சுயராஜ்யமும் எப்படி, எந்தெந்த விதங்களில் சமதர்ம ராஜ்யத்திலிருந்து வேறுபட்டவையாக அமையும்; இந்த மூன்றில் எது உலக மக்களில் ஆகப் பெரும்பான்மையோருக்கு உண்மையில் முன்னேற்றங்களைக் கொண்டுவரும் என்பதையெல்லாம் எளிமையாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விளக்கியிருக்கிறார்.

1921-1934-ஆம் ஆண்டுகளில் வெளியான நூல் இது. மூன்று பகுதிகளாக சிறு சிறு துண்டு வெளியீடுகளாக வெளியிடப்பட்டது, கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நூல் இது. அரசியல் குறிக்கோளை முன்வைத்து எழுதப்பட்ட இந்நூலை இப்போது இவ்வாறு செம்பதிப்பாகக் கொண்டுவர வேண்டிய தேவை அல்லது அவசியம் என்ன? இந்தக்கேள்விக்கு பதிப்பு-ஆசிரியர் க. காமராசன் விடையளிக்கும் வகையில் சற்று விரிவாகவே தன் குறிப்புகளை எழுதியுள்ளார். இதில் மிக முக்கியமான பல செய்திகள் உள்ளன:

தமிழக அரசியல் சிந்தனை வரலாற்றில், துண்டுபிபிரசுரங்களாக, குறு நூல்களாக ஏராளமான வெளியீடுகள் வந்துள்ளன. கடந்த நூற்றாண்டில்,இந்திய தேசியவாத இயக்கம், ஒடுக்கப்பட்டோர் (தலித்) இயக்கம், பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகிய பல்வேறு இயக்கங்கள் உருவாகி வளர்ந்து வந்துள்ளன. இவற்றின் அரசியல் நிலைப்பாடுகளை விளக்கவும், பிற அரசியல் இயக்கங்களின் நிலைப்பாடுகளை மறுக்கவும் மேற்கண்ட இயக்கங்கள் எண்ணற்ற துண்டு வெளியீடுகளை வெளியிட்டுள்ளன.

இந்த மரபின் தொடர் விளைவாகவும், நீட்சியாகவும் இன்றளவும் தமிழில் சிறு நூல்கள் வெளியிடுவது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் சிந்தனைகளை சிறு வெளியீடுகளாக திராவிடர் கழகம், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் இன்றளவும் ஏராளமாக வெளியிட்டு வருகின்றன. பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் போன்றவை பொதுவுடைமை இயக்கம் சார்ந்த புத்தகங்களையும், அறிவியல் நூல்களையும், குழந்தை இலக்கியகளையும் வெளியிடுவதோடு சிறுநூல்களையும் நூற்றுக்கணக்கில் வெளியிட்டு வருகின்றன. இவைதவிர, கலைஞன் பதிப்பகம் சிறுநூல் வெளியீடுகளும் கவனத்துக்குரியவையே. இந்த நூல்கள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு ரூபாய் விலையிலிருந்து 15, 20 ரூபாய் வரை விலைகளில் விற்கப்பட்டன. இந்தவகையில் அனைத்துமாகப் பார்த்தால் பல இலட்சம் பிரதிகள் விநியோகமாகியுள்ளன என்பதில் ஐயமில்லை.

இவற்றின் முக்கியத்துவம் குறித்து, க. காமராசன் குறிப்பிடுவது நமது கவனத்தை ஈர்க்கிறது: “இவை அக்காலத்து அரசியல் சிந்தனைகளைத் தம்முள் பிறந்த மேனியாகப் பொதிந்து கொண்டுள்ளன. இந்த அம்சத்தைக் கணக்கில் கொள்வோமானால், இந்தத் துண்டு வெளியீடுகள் தமது காலங்களின் அரசியல் சிந்தனை வரலாற்றின் மூலாதாரங்கள்.”

எனவே, தமிழ்நாட்டு அரசியல் சிந்தனை வரலாற்றை முழுமையாக எழுதுவதற்கு, மேற்கண்ட துண்டு வெளியீடுகளை முறையாகத் தொகுத்து, வகைப்படுத்தி, செம்மையாகப் பதிப்பித்தாக வேண்டுமென்பது காமராசனின் துணிபு.

இதுதொடர்பாக, எனது நினைவுக்கு வரும் ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகஇருக்கும். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரில், பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்த மாற்றுவெளி ஆய்விதழ் எண்15 தமிழ்நாட்டு நூல்பதிப்பு வரலாற்றின் ஒரு பகுதியைப் பற்றி காத்திரமான பல கட்டுரைகளைத் தாங்கி வெளியானது. அதன் தலையங்கம் குறிப்பிடும் ஒரு கருத்தைப் பொருத்தம் கருதி இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்: “அரசு ஆவணங்கள்,துண்டறிக்கைகள், சுவரொட்டிகளைத் தொடர்ந்து குறுநூல்கள் உருவாக்கம் அச்சுப்பண்பாட்டில் மிக முதன்மையான நிகழ்வாகும். இவை முதன்மையாக சமயக் கருத்துப் பரப்புரை சார்ந்து செயல்பட்டன. இவற்றிற்கென குறுநூல் உருவாக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

வளர்ச்சியடைந்த சமூக ஜனநாயக நடைமுறைகள் சார்ந்து, குறுநூல் அச்சிட்டுப் பரப்புதல் என்பது கோட்பாடு சார்ந்த செயல்பாடாகவே உருப்பெற்றது. முரண்பட்ட கருத்துப் போர்கள் (கண்டனக் குறுநூல்கள்) இவ்வகை வடிவத்திலேயே மிகுதியாக மேற்கொள்ளப்பட்டன. நேருக்கு நேர் உரையாடுவதான இடத்தை அச்சிட்ட இவ்வடிவங்கள் கைகளில் எடுத்துக்கொண்டன. பேச்சுமொழி, வினா-விடை பாணி, உருவகக்கதை வடிவம் எனப்பல வடிவங்களில் இந்த வகையான அச்சு நிகழ்ந்தேறியது. இந்த வடிவத்தின் கோட்டோவிய மரபுகள் இதழியலில் கருத்துப்படங்களாக வடிவம் பெற்றன. இவை தொடர்பான பதிவுகள் நம்மிடம் மிக மிகக்குறைவாகவே நம்மிடம் உள்ளன.” (பக்கம்-9, 2-ஆவது பத்தி)

“மேற்குறித்த துண்டறிக்கை, குறுநூல், புத்தகம், இதழ்கள் என்ற துறைகள் சார்ந்து தனித்தனியாகப் பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ள இயலும். இவை இன்றும் நடைமுறையில் வளமாகச் செயல்படுகின்றன. இவை தொடர்பான வலாற்றுப் பூர்வமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட நம்பகமான ஆய்வுகள் தமிழில் வளமாக உருப்பெற வேண்டும்.”(ப. 11, 2-ஆம் பத்தி)

இதே சிறப்பிதழில் கு.அரவிந்தன் எழுதியிருந்த “கிறித்தவ அச்சுப் பண்பாடு:துண்டறிக்கைகள்” கட்டுரையில்(ப.140-155) அன்றைய கிறிஸ்தவ சமயப் பரப்புரையாளர்கள் வெளியிட்ட குறுநூல்களும், துண்டறிக்கைகளும் வெகுசனங்கள் நடுவே சபைகளாலும், இறைப்பணியாளர்களாலும் கொண்டு சேர்க்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இதே ஆய்விதழில் வேறு பல கட்டுரைகளிலும் கும்மிப் பாடல்கள், பாரதக்கதைகள் போன்ற பல்வேறு பொருண்மைகள் தொடர்பான சிறு நூல்களை ஆரம்பகாலப் பதிப்பாளர்கள் ஏராளமாகப் பதிப்பித்து வந்ததைப் பற்றி பேராசிரியர்இரா. சீனிவாசன், அ. கோகிலா போன்றோர் எழுதிய பல குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.இந்தக்குறிப்புகளின் விரிவையும், நீட்சியையும் நாம் இன்னும் முழுமையாக ஆராயவேண்டிய தேவையும்,அவசியமும் உள்ளது. இந்த வகையில்தான் கடந்த ஆண்டு பேராசிரியர் வீ. அரசுஅவர்களுடன் இணைந்து, க. காமராசன் “மொழி சிக்கலும், பொதுவுடைமை இயக்கமும்” என்ற தொகுப்பைப் பதிப்பித்துள்ளார். (சிந்தன் புக்ஸ், 2020)

இப்போது நாம் அறிமுகம் செய்ய முற்படும் “சுயராஜ்யம் யாருக்கு?” என்ற நூலை ஆரம்பகாலப் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த ஓர் ஆவணப்பதிப்பாக நாம் கருத முடியும். இதுஇந்தியத் தேசியவாதத்தை, அந்த இயக்கம் முன்வைத்த கொள்கைத் திட்டங்களை அரசியல் பார்வையில் விமர்சனம் செய்த நூல். அநேகமாக இந்த வகையில் தமிழில் வெளிவந்த முதல் நூல் என்ற வகையிலும் இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு என்கிறார் பதிப்பு-ஆசிரியர்.

இந்தியத் தேச அரசில் இன்று இந்துத்துவப் பாசிசம் ஆட்சி செலுத்திவரும் சூழலில், இந்தியத்தேசியவாதத்தின் தொடக்கமே இந்து தேசியவாதம்தான் என்ற கருத்து வலுவாக மேலெழுந்து வருகிற சூழலில் நாடு இன்று இருக்கிறது. இன்று மக்களுடைய வாழ்வின் சகல தளங்களிலும் பார்ப்பன வகுப்பின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதே இந்திய / இந்துத்தேசியவாதம் என்பது வெளிப்படை. இத்தகைய விமரிசனப்பார்வையை முதலில் தொடங்கி வைத்தவர் அயோத்திதாசர். அவரைத் தொடர்ந்து பார்ப்பனரல்லாதார் இயக்கம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவை அவரவர் அரங்கங்களில் இந்தியத்தேசியவாதத்தை விமரிசனம் செய்து வந்துள்ளனர்.

இந்தப்பின்னணியில்தான், ‘சுயமரியாதை-சமதர்ம இயக்கம்’ என்ற முனைப்புடன் தோழர் சிங்காரவேலர் ‘சுயராஜ்யம்யாருக்கு?’ என்ற சிறுநூலை வெளியீட்டுள்ளார். இதன் முதல்பகுதியை சுயமரியாதைசுடர் : பொறி-1 என வரிசை எண் இட்டு 1931இல் சென்னை கற்பகம் கம்பெனி பதிப்பித்துள்ளது. இரண்டாம் பகுதியை 1933இல் சமதர்ம பிரசுரம் வெளியிட்டுள்ளது. இதன் மூன்றாவது பகுதியான ‘எது வேண்டும்? சுயராஜ்யமா? சமாதர்ம ராஜ்யமா?’ என்ற சிறு நூலை 1934-இல் சமதர்ம பிரசுரம் வெளிக்கொண்டு வந்துள்ளது. இப்போது தேசியவாதம் குறித்த விமரிசன சிந்தனைக்காக இதனைத் திருத்தமான பதிப் பாகக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து, காமராசனும் சீர்மை பதிப்பகத்தாரும் வெளியிட்டுள்ளனர்.

மேற்கண்ட மூன்று நூல்களையும் ஒரே நூலாக இணைத்து 206 பக்கங்களில் செம்மையான பதிப்பாக இப்போது வந்துள்ள ‘சுயராஜ்யம் யாருக்கு?’ அமைந்துள்ளது. பதிப்பு-ஆசிரியர் என்ற முறையில், க. காமராசன் 39 பக்கங்களில் விரிவாகத் தனது குறிப்புகளை எழுதியுள்ளார். தான் பின்பற்றியுள்ள பதிப்பு நியமங்கள், முற்றிலும் வழக்கில் இல்லாத சில சொற்களை மட்டும் இன்றைய வழக்குப்படி மாற்றியுள்ளது, சில தெளிவான சொல்வடிவங்களை அமைத்திருப்பது போன்ற விவரங்களை இறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். தவிர,குறிப்புகளின் இறுதியில் சிங்காரவேலர் எழுதிய நூல்களின் பட்டியலையும், அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதிய நூல்க ளின் பட்டியலையும் கொடுத்திருக்கிறார்.

‘சிந்தனை சிற்பி சிங்காரவேலர்’ என (1866-1946) அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட ம. சிங்காரவேலு அவர்கள் ‘வாழ்வும் எழுத்தும்’ என்ற பகுதி வெறுமனே நிகழ்வுகளின் தொகுப்பாகமட்டும் அமையவில்லை. மாறாக,சில நுணுக்கமான ஒப்பீடுகளின் தொகுப்பாகவும் உள்ளது: ம. சி. அவர்கள், பண்டித அயோத்திதாசரைவிட பதினைந்து வயது இளையவர்; எனினும் அயோத்திதாசரைப் போன்றே இவரும் அன்றைய தமிழகத்தின் பவுத்த மறு மலர்சசி இயக்க முன்னோடிகளில் ஒருவராவார். அதே போல,தந்தை பெரியாரைவிடவும் 19 வயது மூத்தவர்; ஆயினும், பெரியாரைப் போலவே, இந்திய அரசியலில் ‘காந்தி யுகம்’ தொடங்கிய 1917இல் நேரடி அரசியல் களத்தில் நுழைந்தவர். சோவியத் ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை ஏற்று நடத்திய தோழர் லெனின் அவர்களை விட பத்து வயது மூத்தவர்; எனினும் அந்தப்புரட்சியினால் ஈர்க்கப்பட்டு,ஈறக்குறைய அறுபதாம் வயதில்தான் ஒரு ‘கம்யூனிஸ்ட்’ என அறிவித்துக்கொண்டவர்.

அவ்வாறு அன்றைய சூழலில் ஒருவர் தன்னைக் கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்வதற்குப் பெருந்துணிவு தேவையாயிருந்தது. காரணம்,பிரிட்டிஷ் இந்திய அரசு அன்றைய நாள்களில் யாரெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று சந்தேகித்ததோ, அவர்கள் அத்தனைபேர் மீதும் தேசத் துரோக சதி வழக்குகளைப் போட்டு சிறையிலடைத்து, பெரும் கொடுமைகளை இழைத்து வந்தது.இதோடுகூட, அறுபது வயதில் அவர் தனது கருத்து நிலைகளை, அரசியல் நோக்கை மறுபரிசீலனை செய்து தன்னை கம்யூனிஸ்டாக மறுவார்ப்பு செய்துகொள்வதற்கான பெருந்துணிவும், தெளிவும் இருந்தன.

மேற்கண்ட ஒப்பீடுகளை மிகவும் செறிவாகச் சுட்டிக்காட்டுகிறார் காமராசன். தவிர, கடலுடன் அன்றாட வாழ்வுக்குப் போராடும் மீனவர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராயிருப்பினும், பெரும் செல்வம் ஈட்டிய வியாபாரக் குடும்பத்தின் பின்னணியில் வாழ்ந்தவர். படித்து வழக்குரைஞராகவும், வணிகராகவும் விளங்கியவர். மிகப்பெரும் நூல்நிலையத்தைத் தன் இல்லத்தில் பராமரித்து வந்தவர். ஏராளமான நூல்களை ஆங்கிலத்தில் படித்து, உள்வாங்கி எளிய தமிழில் மேலைய நவீன சிந்தனைகளையும், அறிவுத்துறைகளையும், இயற்கை அறிவியல் புலங்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ம. சி.

இவருக்கு பவுத்த நெறியில் ஈடுபாடும் இருந்திருக்கிறது.19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் தோன்றிய பவுத்த மறுமலர்சசியின் போது சிங்காரவேலருக்கு அந்த நெறியில் ஈடுபாடு தொடங்கியிருக்ககலாம் என்பது காமராசனின் அனுமானம்.

மேலையுலகின் அறிவொளி மரபுக்கு இணையானதாக பவுத்தத்தை முன்னிறுத்தி வரித்துக்கொள்ளும் போக்கு அன்றைய உள்ளூர் அறிவாளிகளிடம் நிலவியுள்ளது. அந்தவகையில் சிங்காரவேலரும், அவரது சகபயணியான பேராசிரியர் இலட்சுமி நரசு அவர்களும் பவுத்த நெறியை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்துள்ளனர். இந்த அறிஞர் குழுவிடம் வெளிப்பட்ட மிக முக்கியப் பண்புகளாக சாதிவேறுபாடுகள் எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்மீதான அக்கறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் காமராசன்.

இந்திய அரசியலில் 1917ஆம் ஆண்டுவாக்கில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு பெற்ற சிங்காரவேலர், விரைவிலேயே காங்கிரஸ் கட்சி கோரும் சுயராஜ்யத்தில் தொழிலாளர்கள் – உழவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பத்தொடங்குகிறார். அதன் தொடர்விளைவாக, பொதுவுடைமைக் கொள்கையின்மீது ஆர்வங்கொண்டு, சர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகள், தொழிலாளர் -உழவர் கட்சி தொடங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை மாகாண இந்தியத்தேசியவாதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் மேலாதிக்கம் செலுத்திவந்ததுடன், தொழிலாளர் திரளிடமிருந்து திட்டமிட்ட வகையில் சிங்காரவேலரைத் தனிமைப்படுத்தி வைத்தனர். இவ்வாறு ஒரு பத்தாண்டு கால நேரடி அனுபவங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி முதலாளி வகுப்பினரின் கட்சி என்ற முடிவுக்கு அவர் வந்தார். பின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து, அதன் கொள்கைகள் சமதர்மம் சார்ந்தவையாக அமைய வேண்டும் என்ற முயற்சியை மேற்கொள்கிறார். இந்த நோக்குடன் சிங்காரவேலரும்பெரியாரும் பிற தோழர்களும் உருவாக்கிய சுயமரியாதை சமதர்மக் கட்சி, நாளடைவில் காங்கிரஸ் கட்சியில் கலந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியாக மாறியது. இதன் பிறகு சிங்காரவேலரின் அரசியல் ஈடுபாடு மங்கத் தொடங்கியது. இவ்வாறாக சிங்காரவேலரின் வாழ்க்கை நிகழ்வுகளின் முக்கியக்கூறுகளை காமராசனின் குறிப்புகள் கோடிட்டுக் காட்டியுள்ளன.

தமிழ்நாட்டில் ‘விதிவிலக்கான’ ஒரு கம்யூனிஸ்டாக சிங்காரவேலர் விளங்கினார் என்று ஒரு குறிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. என்ன காரணம்? அன்றைய தமிழக அரசியல் களத்தில் முதன்மை பெற்ற இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களையெல்லாம் ஆதரித்து நின்றவர் அவர். இந்தக்கருத்தாக்கங்களை ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை வளர்த்தெடுக்கவும் செய்த சுயமரியாதை சமதர்மி ம. சி. அவர்கள்.

இந்திய, தமிழக கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுத்துப் போராடிய கொள்கைகள், ஆவணங்கள்,பரப்புரைகள்,அந்த இயக்கத்தின் தலைவர்கள், ஆதரவாளர்கள், ஆய்வாளர்களுடைய எழுத்துகள் ஆகியவற்றையெல்லாம் கவனமாகப் பரிசீலனை செய்தோமெனில், மேற்கண்டவாறு சிங்காரவேலர் எடுத்த நிலைப்பாடுகள் எவ்வளவு வேறுபட்டவை என்பதை நம்மால் உணரமுடிகிறது. இந்திய சமூக வரலாறுகளை எழுதியிருக்கும் பல கம்யூனிஸ்ட் சார்பு ஆய்வாளர்களுடைய நூல்களும், தலைவர்களின் நூல்களும் சாதிய ஆதிக்கம் என்ற அம்சம் இந்திய, குறிப்பாகத் தமிழக மக்களிடையே எவ்வளவு ஆழமாக வேரூன்றிப் போயிருக்கும் விஷ விருட்சம் என்பதற்குப் போதிய அழுத்தம் தந்திருக்கவில்லை என்பதை வாசிப்பவர்கள் எளிதில் உணரமுடியும்.

சாதியக்கட்டுமானங்களைத் தகர்த்து எறியாமல் இங்கு எந்த ஒரு சமூக மாற்றமும் சாத்தியப் படாது அல்லது முழுமை பெறாது என்ற அம்சத்தைத் தெளிவாக விளக்கவும் அவை தவறியிருக்கின்றன. ஒரு சில விதிவிலக்குகளைத்தவிர, ஆகப்பெரும்பான்மையான மரபார்ந்த மார்க்சியவாதிகளின் பார்வை வர்க்கம் என்ற அம்சத்துக்கே முதலிடம் அளித்திருப்பதுடன், சாதிய ஒடுக்குமுறைக் கொடுமைகளின் வேர்களை வேரடி மண்ணுடன் பிடுங்கித் தூர எறியாதவரையில் இந்தியாவில் புரட்சி என்பது தூரத்துக்கனவாகவே இருக்கும் என்ற குரூரமான எதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்கும் பார்வையாக இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கையில், ம.சி. ஒரு விதிவிலக்கான கம்யூனிஸ்டாகவே விளங்கியவர் என்பதை முழுமனதாக ஆமோதிக்க முடியும்.

நூலின் மூன்று பகுதிகளையும் கருத்தூன்றிப் படிக்கையில், தொண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், தன் காலத்து அரசியல் நிலைமைகளைப் பற்றி எவ்வளவு துல்லியமாக மதிப்பீடு செய்திருக்கிறார் இவர் என்ற மலைப்பே நமக்குஏற்படுகிறது.சுயராஜ்யம் யாருக்கு? இந்தக்கேள்விக்கு 1922இல் கயா காங்கிரசில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தந்த பதிலைக் குறிப்பிட்டு முதல் பகுதியின் முன்னுரை தொடங்குகிறது: “இனிவரும் சுயராஜ்யம், இந்திய தேசத்தில் வாழும் மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டுப் பேருக்கு!” என்பது தாசின் வாக்கு.இவர்கள் யார் எனில்,பஞ்சை பனாதிகளாகிய (அன்றைய இந்தியாவின்) முப்பது கோடிப் பாமர மக்களே. மிகுதியுள்ள சிறுபான்மையோருக்கு சுயராஜ்யம் வேண்டாமோவெனில், அவர்கள் உலகில் கிடைக்கக்கூடிய ஆதிக்கம், சம்பத்து முதலிய சுகபோகங்களை ஏற்கெனவே அனுபவித்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு சுதந்திரம் வந்தாலென்ன, வாராவிட்டாலென்ன?” என்று எண்ணினார் போலும்!” என்று ம.சி. குறிப்பிடுகிறார். அந்த முப்பது கோடி மக்களின் சமூக,அரசியல், பொருளாதார நிலைமைகளை சிங்காரவேலர் ‘பிரிட்டிஷ் ராஜ்யம்’ என்ற இந்த முதல் பகுதியில் விரிவாக ஆராய்கிறார்.

பிரிட்டிஷ் அரசின் பயன் பற்றிய கட்டுரையில் அந்த ஆட்சிக்காக இந்திய மக்கள் தலைகளில் சுமத்தப்படும் செலவுகளைத் தொகுத்துத் தருகிறார். அந்த செலவுகளால், கடன்களால் இங்குள்ள மக்கள் சதா இல்லாமையால், தரித்திரத்தில் வாடுகின்றனர்.வருமானக்குறைவால் ஜீவனக்குறைவும், அதனால் பிணிமூப்பு சாக்காடு ஏற்பட்டு அவற்றின் பயனாகப் பலகோடி ஜனங்கள் வருந்திவாழவும்மாளவும் நேரிடுகின்றது.பிரிட்டிஷ் ஆட்சியின் பயன் இதுதான் போலும்!”என்பது ம.சி. வைக்கும் முத்தாய்ப்பு.

உண்பண்டம், திண் பண்டங்களாகிய சர்க்கரை, உப்புஆகியவற்றின் மீது கூட வரிப்போடுவதால் அவற்றை சரிவர வாங்கி உண்பதற்குக்கூட பெரும்பான்மையோருக்கு சக்தி இல்லாமற்போய் விடுவதை இரண்டாவது கட்டுரை சுட்டுகிறது. சுதேசிகள் செய்யும் பொருள்களுக்கு உதவியளிக்காமல், அயல்நாட்டு சரக்குகள் அபரிமிதமாக இங்கு விலையாகின்றன. இங்கு பல்லாயிரக்கணக்காகக் கைத் தொழில் புரிவோருக்கு வேலையின்மையால் வறுமை மேலும் அதிகரிக்கிறது. அதே சமயம், பிரிட்டிஷ் பட்டாளத்துக்கு செலவு ஐம்பது கோடிக்கு மேல்! கிராமவாசிகளின் நிலைமையோ- சொல்லவே வேண்டாம்!”

“இந்தக்குடிகள் அருந்தும் உணவை இதர நாடுகளில் நாய்கள் கூடத்தொடா. இப்படியான உணவை உண்டு,நாம் வாழும் இந்த இந்தியாவில் வசித்து வரும் குடிமக்களுடைய நிலைமையைக் குறித்து எழுதும்போது நெஞ்சம் துடிக்கின்றது… கண்களில் நீர் ஊற்றெடுத்துப் பெருகுகின்றது…!” என சிங்காரவேலர் மனம் நொந்து எழுதுவதைப் படிக்கும் வேளையில், நமக்கு இராமலிங்க வள்ளலாரின் கனிந்த நெஞ்சு பெருக்கிய கண்ணீர்தான் நினைவுக்கு வருகின்றது.ஈடில் மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் என்றாரே அவர்! அதே நிலைமைதான்!

வறுமைக்குக் காரணம், குடிகளுக்கு நிலம் சொந்தமில்லாமை, நிலத்தீர்வை அதிகமாயிருப்பது, மதங்களின் கொடுமை, சாதி வித்தியாசக்கொடுமை, சமூக வாழ்க்கையில் கொடுமை, ஜனங்களின் அற்ப வயது, பெண்களின் நிலைமை, பொதுக்கல்வி இன்மை, மத மாசசரியக்கொடுமை என இந்திய மக்களுடைய அவல நிலைமைகளுக்கான காரணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தனித்தனிக் கட்டுரைகளில் விவரிக்கிறார் சிங்காரவேலர்.

‘சாதி வேற்றுமையால் வருங்கேடு’கட்டுரையில் அவர் முன்வைக்கும் ஒரு வாதம் மனதை உலுக்குகிறது: “ மதங்கள் ஒரு பக்கம் வருத்த,ஜாதி வேற்றுமையாலும்நமது நாடு சிதறுண்டு கிடக்க நேரிட்டது.

மதப்பற்றுடனும், ஜாதி வேற்றுமையுடனும் யாரும் பிறப்பது இல்லை. நடுவில் தோன்றிய தோற்றங்களே இவை இரண்டும். இந்த இரண்டும் மனிதனுடைய அறியாமையையும், அகங்காரத்தையும் வளர்க்க வந்த பழக்க வழக்கங்களே ஆகும். சகோதரத்துவம் என்ற பேசசு ஜாதி உள்ளவரை இந்தியாவில் வெறும் பேசசே. மந்திர தந்திரங்களால் நோயைப் போக்க முடியாதது போலவே, நமது சமூகப் பெருநோயாகிய ஜாதி என்னும் நோயைக் கள்ள நியாயத்தால் போக்க முடியாது என அறிக. பூணூலைத் தரித்துக்கொண்டு,அதற்குரிய ஜாதி சடங்குகளை செய்துகொண்டு, ஜாதியை விட்டு விட்டதாகக் கூறும் நமது பெரியவர்களின் சொற்கள் கள்ள நியாயம் என அறிக. வேதாந்திகளும், காந்தியார் உள்பட காங்கிரஸ்காரர்களும் ஜாதி விஷயமாக சொல்லி வருவது இந்த மோசடி வழக்கே. பிரம்மவாதிக்கு ஜாதி இல்லையாம். ஆனால் அவன் விவகாரத்தில் இருக்கும்வரை ஜாதி அனுசரிக்க வேண்டியதாம் இந்த நியாயம் அபிப்பிராயத்துக்கும், நடக்கைக்கும் முரண்படுகின்றதே என்றால், அது வேத ஒழுக்கமாம்! இந்த “வழுக்கைத் தலை நியாயத்தைக் கொண்டு ஜாதி மாத ஆபாசங்களைத் தழுவி வருவதால் ஜாதி ஒழியாமல் பல்லாண்டுதோறும் இந்தியர் ஒற்றுமையைக் குலைத்துக்கொண்டே வருகின்றது.”

சிங்காரவேலரின் விமரிசனங்களில், போகிறபோக்கில் இப்படியான‘வழுக்கைத்தலை’ நியாயங்களை சாடிக்கொண்டே போவதைக்காண்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியினால் இந்தியாவுக்குக் கிடைத்த நலன்களையுங்கூடப் பட்டியலிட்டுக் கூறுகிறார். தன்னுடைய மதிப்பீட்டுக்கு ஓர் ஆதாரமாக 1930இல் வெளிவந்த ‘இந்தியாவின் நெருக்கடி’ என்ற சிறு பிரசுரத்தையும் குறிப்பிடுகிறார்: “நீர்ப்பாசனங்களுக்காக செய்யப்பட்ட பெருங்கட்டட வேலைகள்; தேசம் முழுமையும் போடப்பட்டுள்ள ரெயில் பாதைகள்; அதே போல நாடு முழுவதிலும் ஆஸ்பத்திரிகளும்,சுகாதார ஸ்தாபனங்களும் ஏற்படுத்தியுள்ளனர்; நான்காவது, நியாய ஸ்தலங்கள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள்,சண்டைகள் முதலியவற்றைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு செய்துள்ள ஏற்பாடுகள்; கடைசியாக வரிகளை வசூலிக்கவும், நாட்டு அமைதியைக் காப்பாற்றவும், நியாயத் தீர்ப்பு செய்யவும் தகுதியான உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்தியது.”

ஆனால், இவற்றுக்கான “செலவுகள் ‘தலை கனத்தவை’. செலவினத்தைத் தாங்க முடியாமையால்தான் ஜன சமூக வாழ்வுக்கு அத்தியாவசியமாகவுள்ள கல்வி, சுகாதாரம், வைத்தியம், விவசாயம் முதலியவற்றுக்குப் பணம் போதாமை ஆகிவிட்டது” என்று விளக்கும் சிங்காரவேலரின் தர்க்கம் நேரடியானது; எந்தப் பாசாங்கும் இல்லாமல், வார்த்தை ஜாலங்களில் மயக்காமல் நேரடியாக இயக்க இயல் சிந்தனைகளோடு இலக்கை நோக்கிப் பாயும் அம்பு போன்ற கூர்மையுடன் தைப்பது.

பொருளாதார அடித்தளத்தைப் பற்றி எவ்வளவு வலிமையான வாதங்களை முன்வைக்கிறாரோ அதேயளவு வலிமையுடன் ஜாதி, மத, சமூகக் கொடுமைகளைக் களைந்தெறியவும் வலியுறுத்துகிறார். இந்த அம்சத்தில்தான் மற்ற சமகாலக் கம்யூனிஸ்டுகளிடமிருந்து சிங்காரவேலர் வேறுபடுகிறார். அதேபோல, காந்தியாரும்காங்கிரசும் முன்வைத்த சுயராஜ்யம் என்ன மாதிரியான நன்மைகளைத் தரும் என்பதிலும் அவருக்கு பிரமைகள் ஏதுமில்லை. அந்த சுயராஜ்யம் பற்றிய அலசலை இரண்டாம் பகுதியில் முன்வைக்கிறார். இரண்டுபக்க முன்னுரையில், அன்றைய இந்திய மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த துன்ப தூயரங்கள் அத்தனையையும் ஒன்று விடாமல் பட்டியலிட்டு விட்டுக்கடைசியில் முத்தாய்ப்பாக அவர் சொல்லுவதைப் பாருங்கள்: “அன்றாடம் வருமானம் ஒரு அணா மூன்று தம்படியான இந்தத் துக்ககரமான வாழ்வை எவ்விதமாக சுயராஜ்யத்தில் தீர்க்கப்போகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.”

காங்கிரஸ் முன்வைத்த திட்டம் பற்றிய விமரிசனம் இது: “ தற்போது நடக்கும் பிரிட்டிஷ் ஆட்சிமுறையே சுயராஜ்யத்திற்கு அடிப்படை ஆகும். அதே மந்திரிகள், அதே கோர்ட்டுகள், அதே சட்டசபைகள், அதே கவர்னர்கள்,அதே தனிவுடைமை, அதே ஜீவனம்.. ஆனால், இந்த வேலைகளைப் பார்ப்போர் தற்போதுள்ள ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக, இந்தியர்களாய் இருப்பார்கள்.இந்த வித்தியாசம் ஒன்றைத்தவிர, மற்ற விஷயங்களில் பெரும்பான்மையும் அதே விகிதமே!” “காங்கிரஸ் அரசியல் திட்டம் புராதன முதலாளித் திட்டமே. வாஸ்தவத்தில் இது ஜனநாயகமே ஆகா” என்று தெளிவுபடுத்தி விடுகிறார் சிங்காரவேலர். “பொதுமக்களைப் பசிப்பிணியிலிருந்து மீட்கும்படியான சுயராஜ்யத்தை காந்தியார் வட்டமேஜையிலும் பேசவில்லை.காங்கிரசின் திட்டத்திலும் இல்லை. மடாதிபதிகளையும்,மடங்களையும் ஒருபக்கம் தழுவிக் கொண்டு, ஜாதிமதவாதிகளையும் இன்னொரு பக்கத்தில் அணைத்துக்கொண்டு, பாங்கி முதலாளிகள், மில் முதலாளிகள், சுரங்க முதலாளிகள், நில முதலாளிகள், வீடுவாசல் முதலாளிகளுடன் கூடிக்கொண்டு தரித்திர நாராயணனுடைய பசித்தீவினையை எப்படி தனது சுயராஜ்யத்தில் காந்தியார் தீர்க்கப் போகிறார் என்றும் கேட்கின்றோம்.”

இதுபோலவே கதர், கைராட்டினம், தர்மகர்த்தா முறை, குடி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட காந்தியாரின் திட்டங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் பரிசீலித்துப் பார்க்கிறார். அவை எப்படி நடைமுறையில் சாத்தியமில்லாதவை என்பதை அடுக்கடுக்கான கேள்விகளாலும் ஆதாரபூர்வமான மறுப்புகளாலும் நிறுவுகிறார். இந்திமொழியை எல்லாரும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுவதை நிராகரிக்கிறார். மொழியில் தெய்வ பாஷை என்றோ, நீச பாஷை என்றோ எதுவுமில்லை என்பதைத் தெளிவாக உரைக்கிறார்.

மற்ற அரசியல் கட்சிகள், ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் இவ்வாறு அன்றைக்குக் களத்திலிருந்த எந்த ஓர் அரசியல் இயக்கத்தையும் விட்டு விடாமல், புறக்கணிக்காமல் அலசி ஆராய்கிறார். மகம்மதிய-இந்து மதங்களுக்கிடையில் நிலவும் பிரசசினைகள், காந்தியாரின் தடுமாற்றம் என்ற அம்சங்களைப் பற்றிய தன் கருத்துகளை விரிவாக முன்வைத்தபின், இறுதிப்பகுதியான சமதர்ம ராஜ்யம் பற்றிய விளக்கங்களுக்கு வருகிறார் சிங்காரவேலர்.

சுயராஜயமும் தேசியமும் என்ற தலைப்பில் எட்டுக் கட்டுரைகள்; சமதர்ம ராஜ்யத்தின் இலட்சணங்கள் என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகள்; சமதர்ம ஆட்சிமுறை என்ற தலைப்பில் பன்னிரண்டு கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் சோஷலிச இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குரிய திட்டங்களைப் பற்றி சிங்காரவேலர் எழுதியிருக்கும் செய்திகளைப் படித்துப் பார்த்தால்தான் அவருடைய சிந்தனைகளின் ஆழத்தையும்,அகலத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.இவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டுவதற்கும், விதந்தோதுவதற்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. ஆயினும் இக்கட்டுரை அந்த நூலைப்பற்றிய அறிமுகமே என்பதாலும்,விரிவஞ்சியும் அதைத் தவிர்த்துள்ளேன்.

பின்னிணைப்புகளில் சமதர்ம பிரசுரங்களுக்காகப் பெறப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை சிங்காரவேலர் தந்துள்ளார். முதல் பதிப்புக்குப் பதிப்பாளரும், குடி அரசு பதிப்பில் பதிப்பாளரும், இரண்டாம் பதிப்பில் வி. சர்க்கரை செட்டியார் ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையும் இடம்பெற்றுள்ளன. அந்தப் பழைய பதிப்புகளின் முகப்பு அட்டைகள் இடம்பெறுகின்றன. இறுதியாக சமதர்ம புத்தகங்கள் கட்டுரையில் சிங்காரவேலரின் மனக்குமுறலைப் பார்க்கிறோம்: “மூடநம்பிக்கைகள் இன்றும் உலகம் எங்கும் பரவி இருத்தலுக்குக் காரணம், பொய் நம்பிக்கைகளை வளர்க்கும் புத்தகங்களே ஆகும்.

மெய்ஞ்ஞ்னமும்,பகுத்தறிவும் உலகில் அதிகமாகப் பரவாததற்கு முக்கியக் காரணம்,அவைகளைப் பற்றிப் பிரசுரிக்கப்படும் புத்தகங்கள் அதிகம் விலை படாமையால் என அறிக.இவ்விதம் நமது வாழ்வின் கவைக்கு உதவாத புத்தகங்களைக் கோடானுகோடி மக்கள் வாங்கிப்படிப்பதால் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்க வழக்கங்களும் அடிமைத்தனமும் அறிவின்மையும் உலகில் நீடித்து வருகின்றன. இந்த நிலையில் என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றவில்லை.படிக்கின்றவர்கள் முன்வந்தால் ஒழிய நமது சமதர்மம் மூலையில்தான் கிடந்து வரும்” என்கிறார் சிங்காரவேலர். இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை.தொண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்னர், உலகெங்கணும் வலதுசாரி,மத அடிப்படைவாதப் பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கிவரும் சூழலில், மேற்கண்ட நிலைமைகள் இன்றளவும்கூட பெரிதும் மாறிவிடவில்லை.

‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என இராமலிங்கர் விரக்தியடைந்தார். இந்த நிலையில் என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றவில்லை என்கிறார் சிங்காரவேலர். இவற்றுக்கு விடையளிக்கும் பொறுப்பையும், கடமையையும் இன்றைய சமூகம் நமது தோள்களில் சுமத்தியிருப்பதாக நாம் உணர்வோமா? நம்பிக்கைதானே நம்மை முன்நகர்த்தும்? நகர்வோம்.

நூல்: சுயராஜ்யம் யாருக்கு? – ம.சிங்காரவேலர் பார்வையில். . .
ஆசிரியர் : க. காமராசன் 
வெளியீடு: சீர்மை வெளியீடு