க.பாண்டிச்செல்வியின் கவிதை
பயணக் குறிப்பற்றவளின் துர் கனா
*****************************************
முன் ஜாமப்
பொழுதொன்றில்
வெள்ளை வண்ண
இரட்டைக் குதிரை வண்டியில்
தென்றலாய்த் தவழ்ந்து வருகிறான் .
துளிர்த்த பச்சையம் மாறா காதல் நினைவுகளை ஏந்தியவாறு,
பதின்ம வயதில் அவள் மறுதலித்த
காதலொருவன்
கிழக்கு வாக்கில்.
பின் ஜாமப் பொழுதொன்றில்
செவலை நிறக் குதிரையொன்றில்
இழந்துவிட்ட வலியை
சுமந்து வருகிறான்
குற்றவுணர்வோடு
மித வேகத்தில்
அவள் காதலை நிராகரித்தவன்
மேற்கு வாக்கில்.
நடுச்சாமப் பொழுதொன்றில்
அடர் கருப்பு குதிரையின் மேல்
அழுது சிவந்த கண்களுடன் ஆர்ப்பரித்து வருகிறான்
துர் மரணமடைந்த கணவன்
வடக்குவாக்கில்
விடிகின்ற பொழுதொன்றில்
பழுத்த காயங்களுக்கு
ஒத்தடம் கொடுப்பதாக ஓடி வருகிறான்
சாரட் வண்டியில் தனித்திருப்பதையறிந்தவன்
தெற்குவாக்கில்.
காற்று ஒலிப்பான்களுக்கிடையே
நடத்துனர் உரத்த குரலில் உசுப்பிவிடுகிறார்
அவளை .
கனவிலிருந்து விழித்தவள்
கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்
இறுக பற்றியாவாறு கேட்கிறாள்
இது எந்த ஊர் என….
– க.பாண்டிச்செல்வி