ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – “கேள்வி கேட்டுப் பழகு” – கி.ரமேஷ்
“செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீடு
‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்
தொழிற்சங்க தலைவரும், எழுத்தாளருமான ரமேஷ் அவர்களின் ‘தோழர்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதுவதே பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக அவர் குறிப்பிட்டுள்ள காரணம், மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. கம்யூனிசம் பற்றிய உண்மையான கருத்துக்கள் சென்று சேர்வதற்கு முன்பே, பொய்யான பிரச்சாரங்கள் சென்று மக்களை குழப்பிவிடும். இந்த அனுபவம் மாமேதை காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. இப்போதும் அது தொடர்கிறது. அதனை தன்னுடைய பாணியில் சுட்டிக்காட்டியுள்ள ரமேஷ், தலைவர்களின் வாழ்க்கையை அற்புதமாக விவரிப்பதன் மூலம் அந்த தவறான பிரச்சாரத்தை எதிர்கொள்ள முயற்சிப்பதாக கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் களப்பணிகள் ஒவ்வொன்றுமே, பொய்யான பிரச்சாரங்களுக்கு எழுதப்படும் மறுப்புரைகள்தான். நான் எழுதி இதுவரை 3 தொகுதிகளாக வெளியாகியிருக்கும் ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற தொடர், அதே பணியை வேறு விதத்தில் செய்கிறது. அன்புத்தோழர் ரமேஷின் தந்தையும் அந்த தொகுப்பில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார். வாழையடி வாழையாக மக்களுக்கு உழைப்போம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் மகனும் செயல்படுகிறார்.
இந்தியாவின் முதல் மோதின கொடி ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்த சென்னை மண்ணில், தோழர் சிங்காரவேலர் வாழ்க்கையை விவரிப்பதில் இருந்து தொடங்குகிறது இந்த நூல். தோழர் சிங்காரவேலர், கம்யூனிச கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில், மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். அதன் பிறகு தோழர் அமீர் ஹைதர் கான் பற்றி விவரிக்கிறது. அவர் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், பொட்டல் காட்டை திருத்திப் பயிர் செய்யும் உழவுப் பணிக்கு ஒப்பானவை. அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் புடம்போடப்பட்ட களப்போராளிகளான சுர்ஜித்தும், இன்றும் நம்மோடு வாழும் நூற்றாண்டு கண்ட நாயகர் என்.சங்கரய்யாவும் வருகிறார்கள். இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாழ்க்கையும், பல்வேறு ஒத்த அம்சங்களையும், தனிச்சிறப்பான வரலாற்று பங்களிப்புகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. எல்லோருமே ‘தோழர்கள்’ என்ற சொல்லுக்கு தமது வாழ்க்கையே பொருள் என்ற அளவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களுக்கும் விடுதலையை உறுதி செய்திட வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம். எத்தனையோ நிகரில்லாத தலைவர்களை உருவாக்கியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம், எந்த ஒரு தனிநபர் பிம்பத்தையும் கட்டமைப்பதில்லை. வாழும் காலத்திலேயே தமது தனிப்பட வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை தலைவர்கள் மேற்கொண்டார்கள். தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சிகர இலக்கை நோக்கிய வர்க்கப் போராட்டம், அதற்காக இன்னுயிர் ஈந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களின் வடிவமான செங்கொடி, இதைத்தான் நமது முன்னுதாரண தலைவர்கள் தம் வாழ்நாளெல்லாம் முன்னிருத்தி வாழ்ந்திருக்கிறார்கள். மறைவுக்கு பிறகுதான் ஒருவரின் வரலாற்று பங்களிப்பை மதிப்பிட வேண்டும் என்பதில் சமரசமில்லாத உறுதிகாட்டி வாழ்ந்துள்ளார்கள். அதற்கு நியாயம் சேர்ப்பதாக இந்த நூல் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவரை பல்வேரு மொழியாக்க நூல்களுக்காக விருதுகள் பெற்றும், வாசகர்களின் பாராட்டைப் பெற்றும் வலம் வந்த கி.ரமேஷ், இந்த அற்புதமான கட்டுரைகளின் மூலம் தனது இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து வன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையை சென்றடைய வேண்டும். தமிழ் வாசகர்களின் பரவலான அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தோழர்கள் இன் நூல் முன்னுரையில் இருந்து
– ஜி.ராமகிருஷ்ணன்
நூல் : தோழர்கள்
ஆசிரியர் : கி.ரமேஷ்
விலை : ரூ.₹170/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
வெடித்துச் சிதறிய கனவு கல்லறை நூலகம் – கி.ரமேஷ்
கி.ரமேஷ்
தலிபான் மதவெறியர்களின் பயங்கர வாதச் செயலால் உடல் சிதறி இறந்த இரண்டு இளம் மாணவிகள் இன்று ஒரு குறியீடாக மலர்ந்திருக்கிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி, மதவெறியர்களும், ஆணாதிக்க வெறியர்களும் பெண்கள் கல்வியையோ, அறிவாளிகளாகத் திகழ் வதையோ பொறுத்துக் கொண்டதேயில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. மேலே காணப்படும் இளம் மாணவிகள் ஒன்று விட்ட சகோதரிகள். இருவரும் படிப்பதில் மிகவும் விருப்பமுடையவர்கள். கட்டிட வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் ஆக வேண்டு மென்ற கனவுகளுடன் இருந்தவர்கள். செப்டம் பர் 2022இல் அவர்களுடைய கல்வி மையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவரும் உயிரிழந்து விட்டனர். அவர்களது கனவுகள் சிதறிவிட்டன. கடந்த வருடம் அக்டோபரில் மர்சியா, ஹஜார் முகமதி என்ற அந்த இரண்டு சிறுமிகளின் உடல்களும் காபூலுக்கு வெளியே இருந்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களது புதைகுழியில் ரோஜா மலர்களுடன் பெரும் சோகத்துடன் அவர்களது குடும்பத்தினர் சில புத்தகங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். மர்சியாவும் ஹஜாரும் கடந்த செப்டம்பரில் கஜ் கல்வி மையத்தில் குண்டு வெடிப்பில் கொல்லப் பட்ட 53 மாணவர்களுடன் கொல்லப்பட்டனர். தஷ்ட்-இ-பர்ச்சி என்ற அந்தப் பகுதி ஷியா முஸ்லிம்களும் ஹஜாரா சிறுபான்மையினரும் நிரம்பிய பகுதி. மாணவிகள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காகக் கூடியிருந்த போது ஒரு தற்கொலைப்படை பயங்கரவாதி தன் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் இளம் பெண்கள். இதற்கு முன்பும் இதே இடத்தில் 2018இல் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 மாணவர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அமைப்பான ஐஎஸ்கேபி இதற்குப் பொறுப்பேற்றது.
2021 ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியை பிடித்ததிலிருந்து இந்த அமைப்பு ஹசார சில் 13 தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இவற்றில் சுமார் 700 பேர் காயமடைந்தும், மரணமடைந்தும் இருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சோவியத் உதவியுடன் ஆட்சி செய்த நஜீ புல்லாவின் ஆட்சியை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. நஜீபுல்லாவின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் சிறப்பாக இருந்தன. படித்தனர், வேலை பார்த்தனர், சுதந்திரமாக இருந்தனர். சோவியத்தின் உதவி யைக் கண்டு பொருமிய அமெரிக்கா அதற்கு எதிராக தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை உருவாக்கி, பயிற்சி கொடுத்து ஏவியது. அவர்கள் நஜீபுல்லாவை அகற்றி, அவர் ஐ.நா. குடியிருப்பில் இருக்கும்போதே இழுத்து வந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அதே வளர்த்த கடா மார்பில் பாயவும், துள்ளியெழுந்த அமெரிக்கா இருபது ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து ஏராளமான வீரர்களைப் பலி கொடுத்தும், எதுவும் செய்ய முடியாமல் வெளியேறியது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த தலிபான் தனது வேலையைக் காட்டி வருகிறது. மர்சியா, ஹஜார் ஆகியோரின் சவ அடக்கத்துக்கு ஒரு நாளைக்குப் பிறகு மனதுடைந்த அவர்களது மாமா, அவர்களது பொருள்களில் ஏராளமான டயரிகளையும், பத்திரிகைகளையும் கண்டெடுத்தார். அவர்களது எழுத்துக்களால் ஆழமான தாக்கத்துக்குள்ளான அவர் மர்சியாவின் டயரியிலிருந்து சில பக்கங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அவள் வாழ்க்கையில் விரும்பியவற்றின் பட்டியலையும் அவர் பகிர்ந்தார். “என்னுடைய மர்சியாவும், ஹஜாரும் அதிசயமான சிறுமிகள், அவர்கள் வயதுப் பெண்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். அவர்களது பற்றுறுதி குறித்து மேலும் பல அறிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படு கிறேன்” என்று அவர் எழுதினார். “அவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டியிருக்கலாம், இன்னும் அவர்களால் அதைச் செய்ய முடியுமென்று நான் நம்புகிறேன்.” ஹஜாரின் பெற்றோர் அவளது எழுத்துக்களைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாவிட்டாலும், ஜாஹர் மர்சியாவின் எழுத்தே அவர்கள் இருவரின் ஆவல்களைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். அந்த விருப்பப் பட்டியலில் முதலில் இருப்பது அவர்களுக்கு மிகவும் விருப்பமான துருக்கிய-பிரிட்டிஷ் நாவலாசிரியர் எலிஃப் ஷஃபக். நிறைவேறாத அவர்களது பட்டியலில் அடுத்து இருப்பது பாரீசில் ஈஃபில் டவரைப் பார்க்க வேண்டும், இத்தாலியில் பிசா சாப்பிட வேண்டும் என்பவை. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு புத்தகங்கள் வாங்குவது பற்றிய மர்சியாவின் பதிவை சமூக ஊடகத்தில் ஜாஹர் பகிர்ந்தார். மேலும் மர்சியா, ஹஜாரின் புதைகுழிகளில் அவர்களது சகோதர, சகோதரிகள் புத்தகங்களை வைத்ததையும் பகிர்ந்தார்.
இந்தப் பதிவுகள் சமூக ஊடகத்தில் பரவி, தொடரும் வன்முறையால் தனது இளைஞர்களை இழந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் உயிர்நரம்பைத் தொட்டன. மர்சியா, ஹஜாரின் அடக்கத்துக்குப் பிறகு அவர்களின் 22 சகோதர, சகோதரிகள் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட அமைதியான, புழுதி படிந்த, மலைமேலிருந்த இடுகாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் அங்கு பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். பல பெர்சிய மொழிப் புத்தகங்களும், சில ஆங்கிலப் புத்தகங்களும் பல ஆண்டுகள் படித்துக் கிழிந்த புத்தகங்களும், அறிமுகமற்றவர்களால் அங்கு விட்டுச் செல்லப்பட்டிருந்தன. அடுத்த வாரம், மேலும் இரண்டு டஜன் புத்தகங்கள் – ஷஃபாக் எழுதியவை, அமெரிக்க எழுத்தாளர் ரச்சேல் ஹாலிஸ் எழுதியவை, இராக்கிய யாசிதி மனித உரிமைச் செயல்பாட்டாளர் நதியா முராத் எழுதியவை அவற்றில் இருந்தன. “மர்சியா உண்மையிலேயே புத்தகங்களை விரும்பினாள் என்பது எங்களுக்கு எப்போதுமே தெரியும்” என்று ஹஜாரின் மூத்த சகோதரியும், மர்சியாவின் ஒன்று விட்ட சகோதரியுமான
புதியவர்களின் புத்தகங்கள்
மர்சியா தனது தினக்குறிப்பேட்டில் ஃபார்சியி லும், சில சமயம் ஆங்கிலத்திலும் அழகிய கையெழுத்தில் எழுதியிருந்ததை ஜாஹர் அல்ஜசீராவிடம் பகிர்ந்து கொண்டார். சுமார் அரை டஜன் டயரிகள், சில கிழிந்த நோட்டு புத்தகங்கள், மேலும் சில தோல் அட்டை போட்ட டயரிகளிலெல்லாம் நூற்றுக்கணக்கான குறிப்புக்களை மர்சியா எழுதியிருந்தாள். வரலாற்றில் தண்டிக்கப்பட்ட ஹசாரச் மற்றும் பிற ஷியா முஸ்லிம் சமூகங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையிலும், ஆட்சியில் இருக்கும் தலிபான், பெண்கள் மீது தொடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் தனது வலுவை புத்தகங்களுக்கு இடையில் தேடிய உறுதி மிக்க இளம் பெண்ணை அந்தக் குறிப்புகள் வெளிப்படுத்தின. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, அது உயர்நிலைப் பள்ளிகளை மூடிவிட் டது. அதனால் சுமார் 3 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது சுதந்திரத்தின் மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்தது தலிபான். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஒரு ஆண் உறவினர் கட்டாயம் கூட வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த இளம்பருவப்பெண் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்த ஷஃபாக் எழுதிய ஒரு கட்டிட வடிவமைப்பாளப் பயிலுனர் என்ற புத்தகத்தை வாங்கினார். “நான் எந்த அளவுக்குப் புத்தகங்களை நேசிக்கிறேன் என்பதை இன்று புரிந்து கொண்டேன். மக்கள் புத்தகங்களைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சியைக் காண்பதை விரும்புகிறேன்” என்று அவள் எழுதினாள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் பயன்படுத்தாத ஒரு புத்தக அலமாரியைக் கொண்டு வந்து அதை சுத்தம் செய்து அந்தச் சிறுமிகள் விரும்பிய இளஞ்சிவப்பு வண்ணத்தை அதில் தீட்டினார்.
ஒரு ஆஃப்கானிய வரைகலை நிபுணரான ஃபாத்திமா கைருல்லாஹி அந்தச் சிறுமிகளின் மரணத்துக்குப் பிறகு வலிமை மற்றும் விரிதிறனின் அடையாளமான பைன் மரத்துடன் அவர்கள் இருக்கும்படி ஒரு சித்திரத்தை வடிவமைத்தார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். குடும்பம் அவர்கள் பெயரில் ஒரு நூலகத்தை அமைக்கும் முடிவை எடுத்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டது. அவரும் அந்த நூலக அறையின் நடுவில் அந்தச் சித்திரத்தை அமைக்க ஒப்புக் கொண்டார். அக்டோபர் இறுதியில் அந்த உறுதியான நூலகப் பெட்டி இடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது புதைகுழிக்கு அருகில் வைக்கப்பட்டது. அந்த அலமாரியில் சுமார் இரண்டு டஜன் புத்தகங்கள் கண்ணாடிப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. யாரும் அவற்றை எடுத்துக் கொள்ளும்படி அந்தக் கதவுகள் பூட்டப் படாமல் வைக்கப்பட்டன. மர்சியாவும், ஹஜாரும் ஒரே வீட்டில் பல குடும்பங்களுடன் வசித்தவர்கள். அவர்களது தமது சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்ட அறையில் புத்தகங்கள் நிரம்பிக்கிடந்தன. “அவர்கள் புத்தகங்களை எந்த அளவுக்கு விரும்பினர் என்பது எங்களுக்குத் தெரிந்ததால், நாங்கள் இந்த நூலகத்தை அமைத் தோம்” என்று இன்சியா ஜாஹர், பிற உறவினர் களுடன் அமர்ந்து விளக்குகிறார். பல குடும்பங்கள் பகிர்ந்து கொண்ட அந்த வீட்டின் ஒரு குடும்ப அறையில் அவர் பாரம்பரிய ஆஃப்கானிய தரை மெத்தையில் அமர்ந்து பேசுகிறார். “அவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் இது வைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று விம்மலுடன் அவர் கூறுகிறார். அவர்களது வாழ் வில் அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். “ஹஜார் தனது டயரியில் எழுதி இருக்கிறாள், “நான் படிக்கும் போது மிகவும் நன்றாக உணர்கிறேன். அந்தக் கதையின் ஒரு பாத்திரமாகவே உணர்கிறேன்.”
எப்போதும் கல்வி
மர்சியாவும், ஹஜாரும் ஒன்று விட்ட சகோதரிகள் மட்டுமல்ல – இணை பிரியாத தோழிகள். அவர்கள் இருவரும் மதித்த ஆசிரியர்களைப் போல் வடிவமைப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கனவு கண்டனர். “நாங்கள் பெரும்பாலோரும் எங்கள் பள்ளி புத்தகங்களை மட்டுமே படிப்போம். ஆனால் மர்சியும் ஹஜாரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் ஏராளமான பல்வகை புத்தகங்களை அறிவைத் தேடித் தொடர்ந்து படிப்பார்கள்.” இன்சியா சோகச் சிரிப்புடன் நினைவு கூர்கிறார். “நாங்கள் பள்ளியில் படித்ததைக் காட்டிலும் அவர்கள் அதிகம் கற்க விரும்பினார்கள்.” இருவரும் புனைவுகளை விரும்பினர் என்று 28 வயது அத்தை நூரியா, ஜாஹரின் சகோதரி கூறுகிறார். அவர் மங்கலான இளஞ் சிவப்பு உடையும், அரக்கு நிற தலைமறைப்பும் அணிந்து, இன்சியாவுடன் அமர்ந்து பேசுகிறார். “ஆனால் இருவருக்கும் ஊக்குவிக்கும் புத்தகங்களும் மிகவும் பிடிக்கும். தலிபான், பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை மூடியபோதும் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்ததற்கு காரணம் அந்தப் புத்தகங்கள்தான் என்று நினைக்கிறேன். அவை அவர்களை வலுவான பெண்களாக, உயர்ந்த இலக்குகளை நிர்ணயிக்கவும், தமது இலக்குகளை அடைய வேலை செய்யவும் ஊக்குவித்தன” என்று விளக்குகிறார். “இந்தப் புத்தகங்கள் பாதகமான, கட்டுப்பாடுள்ள நிலையிலும் அவர்களை வலுப்படுத்தின என்பது என் நம்பிக்கை. அவை தமது இலக்குகளை விட்டுவிடாமல் தொடர்ந்து போராடக் கற்றுக் கொடுத்தன” என்று மருத்துவ மாணவியான நூரியா கூறுகிறார். அவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பெண். “அந்தப் பெண்களில் சிலர் இனிப் பள்ளி செல்ல மாட்டார்கள் என்று எங்கள் குடும்பத்துச் சிறுமிகள் அறிந்ததும், அவர்கள் மனமொடிந்தனர்” என்று ஜாஹர் கூறுகிறார். அவரும் நூரியாவும் அவர்களை தலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருநாள் மாலை கூட்டினர். “நான் அவர்களுக்கு ஒரு கேக் வாங்கிக் கொடுத்து, அவர்கள் விட்டுக் கொடுக்காமல் எப்படி இருக்க வேண்டுமென்று நீண்ட நேரம் பேசினேன். அவர்கள் வலுவாக இருக்க வேண்டும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன்” என்றார் அவர். “நான் அந்த நாட்களில் அவர்கள் எழுதிய டயரிக் குறிப்புகளைப் படித்த போது, புதிய கட்டுப்பாடுகளையும், சவால்களையும் தாண்டி எழுச்சி கொள்ள எப்படி ஊக்கம் பெற்றிருந்தனர் என்பதை அறிந்தேன். அவர்கள் தமது கல்வியைத் தொடர விரும்பினர், தமது எதிர் காலத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள நம்பிக்கையுடன் இருந்தனர்” என்று நூரியா கூறினார்.
‘எந்த சாக்குப்போக்கும் இல்லை’
அவர்கள் உயிருடன் இருந்த போது இருவரும் பல்கலைக்கழகம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்களது உயர்நிலைப் பள்ளி முடிவுகள் தாமதமான போது, ‘மர்சியாவும், ஹஜாரும்’ பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது என்று முடிவெடுத்தனர். அதற்கு அவர்களால் அப்போது நேரம் ஒதுக்க முடிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மர்சியா எழுதினாள், ‘நான் நேற்றும், கடந்த வாரமும் கடுமையாக முயல வேண்டியிருந்தது.. நான் எனது எதிர்காலத்தையும், என் வாழ்க்கையையும் மாற்ற ஒரு முடிவை நான் எடுத்தாக வேண்டும். இது போன்ற ஒரு நெருக்கடி நிலைமையில் அதை வெல்ல எடுக்கக் கூடிய ஒரே வழி படிப்பது மட்டும்தான்.” அவள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேற வெளிநாட்டில் உதவித்தொகை பெறுவதற்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதை முதல் படியாக நினைத்தாள். “நான் என்னை நம்ப வேண்டும், கடவுள் எனக்கு உதவுவார்” நேரம்: 12.30 நள்ளிரவு. கடவுளே!! நானும் ஹஜாரும் அடுத்த ஆண்டு இதே நேரம், பிப்ரவரி 4 அன்று ஆஃப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது.” தேதி குறிப்பிடாத ஒரு குறிப்பில், “மின்சாரம் இருக்கிறதோ, இல்லையோ, தனது படிப்பைத் தொடர வேண்டிய தேவை குறித்து எழுதுகிறாள்.
அவர்களது முதல் சோதனைத் தேர்வில் மர்ஜியாவும் ஹஜாரும் 50ம், 51ம் பெற்றனர். மர்சியா வருத்தமடைந்தாள். அடுத்த தேர்வில் 60 மதிப்பெண்ணை இலக்காக நிர்ணயித்தாள். “அருமை, மர்சியா!”. அவள் எழுதிப் பெற்ற மதிப்பெண் 61. ஜாஹர் அவள் 82 மதிப்பெண் பெறும்வரை எப்படி முன்னேறினாள் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
அந்த மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற விரும்பினாள். ஆனால்…” அவரது குரல் கம்முகிறது. “மர்சியாவும் ஹஜாரும் நிலைமை மோசமடைந்த போது தீர்வுக்காகத் தமது கல்வியின் பாலும், புத்தகங்களின் பாலும் திரும்பினர். பல்கலைக் கழகம் செல்லும் நம்பிக்கையே இல்லை என்று தோன்றிய போதும், சிலர் அவர்கள் நுழைவுத் தேர்விலேயே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய போதும், தொடர்ந்து அவர்கள் தாமே படிக்கவும், கற்கவும் செய்தனர் என்று மர்சியாவின் மூத்த சகோதரியான 22 வயது பர்வானா கூறுகிறார். “அவர்கள் எங்களை ஊக்குவித்தனர்”. ஆனால் அவர்கள் படித்த அனைத்தும் உதவிடவில்லை. ஆஃப்கானிஸ்தானில் இருந்த ஸ்திரமற்ற நிலைமையில், யாசிதி செயல்பாட்டாளர் நதியா முராத், ஐஎஸ்ஐஎல்–ஆல் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுப் பிறகு தப்பியது குறித்து எழுதியதில் 50 பக்கங்களைப் படித்த பிறகு, தனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது என்று மர்சியா குறிப்பிட்டாள். பின்னால் அதை முடித்தாலும், இப்போது அதைத் தள்ளி வைத்து விட்டாள். 2022 பிற்பகுதியில், அவர்கள் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு தலிபான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்கத் தடை விதித்தது. வரும் நுழைவுத் தேர்வுகளில் தனியார் கல்லூரிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று அவற்றுக்கு உத்தரவிட்டது.
‘மிகுந்த வலி’
தலிபான் கட்டுப்பாட்டுக்கு முன்பே மர்சியா, ஹஜார் குடும்பத்தில் பெண்கள் கல்வி பெறுவது எளிதாக இருக்கவில்லை. “நாங்கள் அதற்குப் போராட வேண்டியிருந்தது” என்று நூரியா கூறுகிறார். “எங்கள் பெற்றோர் கல்வியறிவற்றவர்கள். அவர்கள் சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சிறுவர்கள் சிறுமிகளுக்கு மேலாக மதிக்கப்பட்டனர். ஒரு வளரிளம் பருவப் பெண்ணான ஹஜாரின் மூத்த சகோதரி தனது திருமணத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்வதிலிருந்து நிறுத்தப்பட்டதைப் பகிர்ந்து கொண்டார். இதை எதிர்த்து அவர்களது குடும்பப் பெண்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். ஜாஹரும், மற்றவர்களும் குடும்பத்திலிருந்து பெண்களைப் படிக்க வைக்கப் பெரிய அளவில் போராடி இருக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் கடினம் என்றாலும், மர்சியாவின் பெற்றோரும், ஹஜாரின் பெற்றோரும் அவர்களுக்கு ஆதரவளித்துப் படிக்க வைத்தனர். இன்று தமது இழப்பைத் தாங்க முடியாமல் துன்புறுகின்றனர். இந்தக் கல்லறை நூலகத்தைக் கட்டுவதன் மூலம் அந்தச் சிறுமிகளின் கனவை எப்படியாவது ஓரளவுக்கு நிறைவேற்ற முடியுமா என்று கண்ணீருடன் அந்தக் குடும்பம் முயல்கிறது. ஆஃப்கானிஸ்தானத்தை விட்டுச் செல்லாமல் அதன் நல்ல, அமைதியான எதிர்காலத்துக்காகப் போராடுவது என்று குடும்பம் முடிவெடுத்துள்ளது. மர்சியா, ஹஜாரின் தியாகம் எதிர்கால மாற்றத்துக்கு வினையூக்கியாக இருக்கும் என்று நம்புகின்றனர். இந்தக் கல்லறை நகரத்தை விட்டுத் தூரத்தில் இருந்தாலும், காரின் மூலமே செல்லக் கூடியதாக இருந்தாலும், அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மர்சியாவும், ஹஜாரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த கற்றல், படித்தலின் முக்கியத்துவத்தை ஏராளமானோர் இன்று பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அந்த நூலகத்துக்குச் சென்று விட்டு ஒரு தன்னம்பிக்கை புத்தகத்துடன் திரும்பினார். பின்னர் வீட்டுக்கு வந்து அது எந்த அளவுக்கு மேலும் படிக்கத் தனக்கு ஊக்கமளித்தது என்று கூறினார். பிப்ரவரியில் இதே போன்ற இன்னொரு நூலகத்தைக் குடும்பம் அமைத்தது. அதில் நன்கொடையாகப் பெற்ற30 நூல்கள் வைக்கப் பட்டன. மர்சியாவும், ஹஜாரும் மிகவும் விரும்பிய நாவல்களும் அதில் அடக்கம். கண்மணிகளே உறங்குங்கள். உங்களது தியாகம் ஒரு பெரிய மாற்றத்தைச் சாதிக்கத் தொடங்கியிருக்கிறது. மடிக மதவெறி. மடிக ஆணாதிக்கம்.
கட்டுரை ஆதாரம்: அல்ஜசீரா
நன்றி: தீக்கதிர்
நூல் அறிமுகம்: மு. இக்பால் அகமதுவின் வள்ளியப்பன் மெஸ்ஸூம் மார்கரீட்டா பிஸ்ஸாவும் – கி. ரமேஷ்
பெயரே வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா?
நேற்றுதான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். இதோ இன்று மதியம் முடித்தாகிவிட்டது. என்ன ஒரு ஓட்டம், என்ன ஒரு எழுத்து, என்ன கருத்துக்கள்! அசத்திவிட்டார் தோழர் இக்பால் அகமது. பல வருடங்களுக்கு முன்னாலேயே அவருடைய விசிறியாக அவர் யாரென்று தெரியாமலேயே மாறி விட்டவன் நான். அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, அதனால் தாக்கம் பெற்று அதைப் பல படிகள் எடுத்து விநியோகித்தேன். அவரது அனுமதி இல்லாமலேயே! பினனால் ஒருமுறை பேசியபோது இதை அவர் நினைவு கூர்ந்து என்னிடம் சொன்னார். இப்போது இந்தப் புத்தகத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். வாங்கினேன், படித்து முடித்தே விட்டேன்.
பல வண்ண மலர்கள் ஒரே தோட்டத்தில் பூத்துக் குலுங்கினால் எப்படி நம்மை மறந்து அனுபவிப்போமோ, அப்படி அனுபவிக்க வைத்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு இந்தப் புத்தகம். இதைப் பூவானம் பூத்துலங்ஙே என்று முன்னுரையிலேயே தோழர் சுப்பாராவ் சுட்டிக் காட்டுகிறார். மதுரையைக் கலக்கிய அவரது முன்னுரையுடன் உள்ளே நுழைய, மேலும் மேலும் கலக்குகிறார் இக்பால்.
கங்கை நீராடலும் மானஸிதேவி கோவிலில் வேண்டுதலும் செய்து கட்டுரைத் தொகுப்பைத் தொடங்கும் இந்த ‘மனிதர்’, இமயமலைச் சாரலில் நம்மை மயக்கி விடுகிறார். ஹரித்வாரின் புராணம் தெரிய வேண்டுமா, இக்பாலின் கட்டுரையைப் படிக்கவும்!. அவரது இந்தப் பயணத்தில் கூடவே எஸ்.பி.பி.யும், ஜேசுதாசும் பாடிக் கொண்டே செல்கிறார்கள். இந்தியாவைக் காப்பாற்று என்று மானசிதேவியிடம் மானசீகமாக வேண்டுகிறார் இந்த மனிதர்.
மனுஷன் அடுத்ததாக மதுரைக்காரர்களை ஏங்க வைக்கும் வேலையில் இறங்கி விடுகிறார். மதுரையின் ஒவ்வொரு தியேட்டராகச் சொல்லிக் கொண்டே வர, நான் அங்கு சிறு வயதில் பார்த்த படங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன. தங்கம் தியேட்டரைப் பற்றிச் சொல்லும்போது, அங்கு மூன் ரேக்கருக்கு டிக்கெட் கிடைக்காமல் திரைக்கு அருகில் நின்று கொண்டே படம் பார்த்ததும், துரதிர்ஷ்டவசமாக, டைரக்டர் பீம்சிங்கின் கடைசிப் படத்துக்குப் போய்விட்டு அதில் மனம் லயிக்காமல் பாதியில் வெளியேறியதும் நினைவுக்கு வந்தது. இன்னும் பல தியேட்டர்களை அவர் குறிப்பிடவில்லை. விளாங்குடி டூரிங் தியேட்டரில் பார்த்த ‘அஞ்சல்பெட்டி 520’ஐ இன்னும் மறக்க முடியவில்லை. எங்கள் பள்ளி மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் சுவரை எகிறிக் குதித்தால் ரீகல் தியேட்டர்.
சொல்வது புரிகிறதா? அப்படியானால் சரி! அங்கேதான் இ.எம்.எஸ்.சின் உரையைக் கூடக் கேட்டிருக்கிறேன். மொழிபெயர்ப்பவர் சொதப்ப, இ.எம்.எஸ். அதைப் புரிந்து கொண்டு மலையாளத்திலேயே பேச, எங்களுக்கு அனைவருக்கும் புரிந்து ரசித்தது நினைவுக்கு வருகிறது. மினிபிரியாவில் என் பாட்டியுடன் போய் 16 வயதினிலே பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. அந்தத் தியேட்டர்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு திருமண மண்டபங்களாகவோ, குடியிருப்பகளாகவோ மாற்றப்படுவதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
யேசுதாசின் குரல் என்று ஒரு கட்டுரை. அதைத் தொடர்ந்து பறவைகள் குறித்து ஒன்று. அதில் இக்பாலின் கவிதை நுட்பம் வெளிவருகிறது. அடுத்து மணிப்பூரின் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறது ஒரு கட்டுரை.
இன்று சிசி டிவியில் பார்த்து விரட்டி வேலை வாம்குவதை நூறாண்டுகளுக்கு முன்பாகவே கணித்து மாடர்ன் டைம்ஸ் என்ற படத்தை எடுத்த பெரும் கலைஞன் சார்லி சாப்ளின் பற்றியும், கார்க்கியின் தாய் என்ற காவியம் பற்றியும் ஒரு கட்டுரை. அந்தப் படமும், தாய் நாவலும் இன்றும் பொருந்துபவையாக உள்ளன என்பது எவ்வளவு பெரிய தொலைநோக்கு!
ரயில் பயணம்? அதில் கடந்து செல்லும் இயற்கைக் காட்சிகள்? அதை ஒட்டிய கவிதை? பயணம் செய்ய அழைக்கிறார் இக்பால்.
ரஷ்கின் பாண்ட் குறித்தும், அவரது ஊரான மிசோரி குறித்தும் எழுதும் போது அடடா, அப்படியே நம்முன் இமாச்சல பிரதேசம் விரிகிறது. ரஷ்கின் பாண்ட் அவரது புத்தகத்தில் இதை விவரித்திருப்பதாக இக்பால் எழுதியதைப் பார்த்ததும் அதை எடுத்துப் படிக்க வைத்துக் கொண்டேன். இக்பாலின் வரிகளைப் பார்ப்போமே:
“மசூரி வாழ்க்கையுடன் பிணைந்த மலைகள், நதிகள், புற்கள், இமயமலைத் தொடர்களுக்கே சொந்தமான பெயர் தெரிந்த, தெரியாத மரங்கள், வண்ணமயமான மலர்கள், காற்றின் ஓசையை உணர முடியாத மலைவெளிகளில் ரகசியமாய் சலசலத்து ஓடும் நீரோடைகளின் மொழி, மழை, பனி, இளங்காலை இமயத்தின் வெயில், அணில்கள், லாங்கூர் குரங்குகள், எப்போதாவது யார் கண்ணிலும் பட்டும் படாமலும் மின்னல் போல் பாய்ந்து எதையாவது கவ்விக் கொண்டு ஓடிவிடும் சிறுத்தைகள், சடை வளர்த்து சோம்பித் திரியும் நாய்கள், லாண்டூரின் வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், நூறாண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய கடைகள், அவ்வூரின் மக்கள், மால் ரோட்டின் வணிகம், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், தான் சந்தித்த, கடந்து செல்கின்ற மனிதர்களின் குணங்கள், மனங்கள் என மலை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பூ மலரும் கவனத்துடன்’ ரஷ்கின் பதிவு செய்ததாக எழுதுகிறார் இக்பால். அட, இமயமலைக்கே போய் விட்டீர்களா? கனவிலிருந்து விடுபடுங்கள்.
ரொட்டியின் கதையும் ரொட்டியை திருடுபவன் கதையும் என்ற தலைப்பில் ஒருபுறம் மேலும் மேலும் தொழிலாளர் நிலை தாழ, அம்பானியும் அதானியும் வளர்ந்த கதை விரிகிறது. “ரொட்டிகளை பசிக்கென திருடுபவர்கள் உலகின் மரியாதைக்கு உரியவர்கள்” என்ற கவிதையுடன் கட்டுரை முடிகிறது.
இன்னும் பல கட்டுரைகள் என் மனதில் தைத்து அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டன. இரண்டே நாளில் ஒரு புத்தகத்தை முடிக்க முடிகிறது என்றால் அது நம்மை ஈர்த்தால் மட்டுமே முடியும். என் மனதில் ஒட்டிக் கொண்டு என்னுள் இருக்கும் வாசகனை மயக்கித் தாலாட்டிய “வள்ளியப்பன் மெஸ்ஸூம், மார்கரீட்டா பிஸ்ஸாவும்” உங்களுக்காகவும் காத்திருக்கின்றன. சமைத்த மு.இக்பால் அகமதுக்கு நன்றியும், வாழ்த்தும்.
நூல்: வள்ளியப்பன் மெஸ்ஸூம் மார்கரீட்டா பிஸ்ஸாவும்
ஆசிரியர்: மு. இக்பால் அகமது
வெளியீடு: நோஷன் பிரஸ்
பக்கங்கள்: 186
அமேசானில் கிடைக்கிறது.
யெஸ்.பாலபாரதியின் *மரப்பாச்சி சொன்ன ரகசியம்* – கி. ரமேஷ்
யெஸ்.பாலபாரதி என்ற பெயர் எனக்கு ஏற்கனவே அறிமுகம் என்றாலும் முன்பு அவரது புத்தகங்களைப் படித்ததில்லை. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற இந்தப் புத்தகத்துக்கு அவருக்கு விருது கிடைத்துள்ளது என்பதை அறிந்ததும் அதைப் படித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
அட, இதென்ன அதிசயம். நான் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைத்தது அந்த மரப்பாச்சிக்கு எப்படியோ தெரிந்து விட்டது போல் இருக்கிறதே! மந்திர மரப்பாச்சி அதற்கேயுரிய மந்திரங்களைப் போட்டு அறிவியல் இயக்கத் தோழர் பிரபாகர் மூலமாக என்னிடம் வந்து சேர்ந்து விட்டது.
முதலில் மரப்பாச்சி என்றால் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமோ தெரியாதோ? இன்றுதான் விதவிதமாக பொம்மைகள் வந்து விட்டனவே. சிறிது காலத்துக்கு முன் ரப்பர் பொம்மைகள், பிறகு பிளாஸ்டிக், பிறகு இன்றைய தொழில்நுட்பத்துக்கேற்ப தானே இயங்கும் பொம்மைகள், ரிமோட் பொம்மைகள். அதையெல்லாம் தாண்டி ப்ளே ஸ்டேஷன், இப்போது செல்பேசியிலேயே மூழ்கும் நிலை வந்து விட்டது.
ஆனாலும், அந்தக் கால மரப்பாச்சியையும், தாமே செய்யும் பொம்மைகளையும் வைத்து கற்பனையுலகில் விளையாடியபோது கிடைக்கும் சந்தோஷம் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
இருக்கட்டும். குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடாதபடி மூலிகை மரங்களாக் செய்யப்பட்ட இந்த மரப்பாச்சி ஒன்று நமது கதாநாயகி குழந்தை ஷாலினியிடம் கிடைத்து விடுகிறது. காலகாலமாக குடும்பத்தில் ‘ஆகி’ வந்த மரப்பாச்சி அல்லவா, அது குழந்தையிடம் ஒட்டிக் கொண்டு விடுகிறது. அதற்கு உயிரும் வந்து விடுகிறது. பிறகு அது குழந்தையின் பிரச்சனையை எப்படித் தீர்த்து வைக்கிறது. பள்ளியில் அவளிடம் வம்பு செய்யும் மற்ற குழந்தைகளை எப்படி ஆட்டி வைக்கிறது என்று கற்பனை விரிந்து கொண்டே செல்கிறது. இந்தக் கதை கற்பனையென்றாலும், அதில் மரப்பாச்சி கையில் எடுக்கும் பிரச்சனைகள் உண்மை. நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் பாலபாரதி. மேலோட்டமாக குட் டச், பேட் டச் பிரச்சனையை சொல்லிச் செல்கிறார். இதைப் படிக்கும் குழந்தைகள் அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணுகிறார்.
மரப்பாச்சி கையில் இருந்தால், அதை வைத்திருப்பவர் பொய் சொல்லவே முடியாது! ஆஹா மகாபாரதத்தில் இத்தகைய ஒரு காட்சியைப் பார்த்திருக்கலாம். சகுனியாக நடிக்கும் நம்பியார் பொய் சொல்ல முடியாமல் திணறும் திரைக் காட்சியைப் பார்த்த நினைவு சிரிக்க வைக்கிறது.
அந்தக் காலத்தில் நான் சிறுவனாக இருந்த போது நிறைய பேய், பூதக் கதைகள் படித்திருக்கிறேன். அம்புலிமாமா, சம்பக் என்றும், பல காமிக்ஸ் புத்தகங்களையும் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். மாண்ட்ரேக்-லொதார் இன்னும் மறக்காத ஒன்று. அனைத்திலும் நன்மை வெற்றி பெறும், தீமை தோல்வியடையும். நான் இன்று படித்த மரப்பாச்சி மீண்டும் அந்த உணர்வைக் கொண்டு வந்தது என்றால் மிகையல்ல.
பாலபாரதி எழுதி முன்பு வெளிவந்த கதைகளிலும் எதோ ஒரு செய்தி இருந்து கோண்டுதான் இருந்திருக்கிறது. இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கீழே ஒவ்வொரு செய்தியை எடுத்து அதைக் குழந்தைகளுக்குப் புரியும்படி விவரித்திருப்பது சிறப்பு. அந்த விவரணை மரப்பாச்சி என்றால் என்ன என்று சொல்வதிலிருந்து தொடங்குகிறது. இன்று நம் வீடுகளில் கொலுவில்தான் மரப்பாச்சியைப் பார்க்க முடிகிறது என்பது சோகம்.
இந்தக் கதையை நாம் சிறுவர், சிறுமியருக்கு அறிமுகம் செய்து படிக்கச் செய்ய வேண்டும். அதில் கூறியிருக்கும் விவரங்களை, செய்திகளை பொறுமையுடன் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். கதை என்றால் வெறும் கதைகள் அல்ல, நற்சிந்தனையை, நற்செயல்களைத் தூண்டுபவையாக இருக்க வேண்டும். இந்த அனைத்தையும் இந்தச் சிறு கதைப்புத்தகம் செய்து முடித்திருக்கிறது. அதற்குக் கிடைத்திருக்கும் விருதுக்கு அவர் பொருத்தமானவர்தான். அவருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு: வானம்
விலை: ரூ.60
பக்கம்: 87
-கி. ரமேஷ்
அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டிய சோசலிச சீனா!
ஒருபுறம் பெரும் கோடீஸ்வரர்கள் விண்வெளிப் பயணம் செய்ய நூற்றுக் கணக்கான கோடிகளைச் செலவு செய்யும் போது, சத்தமே இல்லாமல் இன்னொரு புறம் அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டியிருக்கிறது சீனா. அதுவும் கடுமையான கரோனா காலத்தில் அடையப்பட்டது என்பது இன்னொரு சிறப்பு. விண்வெளியை யார் முதலில் சுற்றுவது என்று அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் போட்டி ஏற்பட்டது பழைய கதை. முதலில் சோவியத் விண்வெளியை சுற்றி வந்தாலும், அதை முறியடிப்போம் என்று சொல்லி அமெரிக்க தனது ராக்கெட்டை நிலவைத் தொட வைத்து, ஆம்ஸ்ட்ராங்கையும், ஆல்ட்ரின்னையும் அங்கு இறக்கியது.
இப்போது கதை வேறு. பெரும் கோடீஸ்வரர்கள் சில நிமிடங்கள் விண்வெளியைத் தொடும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அதில் முதலில் விண்வெளியைத் தொட்ட ஒரு விமான ராக்கெட்டில் பயணித்த கோடீஸ்வரர் 85000 அடி உயரத்தைத் தொட்டுத் திரும்பினார். அந்த விமானத்தை அனுப்பிய கம்பெனியின் போட்டி கம்பெனி தாம் அனுப்பப் போகும் விமான ராக்கெட் ஒரு லட்சம் அடி உயரத்தைத் தொடும், அதாவது உலகின் காற்றுப் பகுதியின் இறுதியை அடையும் என்று சவால் விடுத்துள்ளது.
புதிய தாராளமயக் கொள்கைகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் தமது செல்வத்தைப் பல மடங்கு இந்தக் கரோனா காலத்தில் பெருக்கிக் கொண்டுள்ளனர். இன்னொரு புறம் அறுதிப் பெரும்பான்மையினரான சாதாரண மக்கள் தமது வேலையையும், வாழ்க்கையையும் இழந்து அதிதீவீர வறுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த இரண்டு முரணான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.
சர்வதேச நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கையில் பல விஷயங்களை அது சுட்டிக் காட்டியுள்ளது. நமது உலகைப் பல பிரச்சனைகள் அழுத்திக் கொண்டிருக்கின்றன. உலக விநியோகச் சங்கிலியில் இடையூறுகள், அதிகரித்து வரும் சரக்குப் போக்குவரத்துச் செலவு, கச்சாப் பொருட்களின் பற்றாக்குறை, அதிகரிக்கும் பொருட்களின் விலை, பொருளாதாரங்கள் மீது அதிகரிக்கும் பணவீக்க அழுத்தங்கள் போன்றவற்றை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. உலக அளவில் அதிகமான அரசுக் கடனால் உந்தப்பட்டு, உலக வளர்ச்சி விகிதங்கள் 2021இல் 6 சதவீதத்தையும், 2022இல் 4.9% தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தக் கடன், 2020இல் உலக மொத்த வளர்ச்சி விகிதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 100%ஐத் தொட்டு விட்டது என்றும், 2021, 2022இல் அதே அளவில் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் அதிகமாகவே நீடிக்கும். அதில் பெரிதாக நிவாரணம் ஒன்றும் கிடைக்காது.
ஒவ்வொரு ஆண்டும் உலக பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் இந்த அறிக்கையின் முக்கியமான அம்சங்களைத் தனது பிளாகில் வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு, அவரது பிளாக் தெளிவாகத் தனது தலைப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மேலும் விரிவடையும் பிளவு: உலக மீட்சியில் அதிகரிக்கும் விரிசல்’. இந்த விரிசல் வடக்கு-தெற்கு வழியில் செல்கிறது. பெருந்தொற்றால் உந்தப்பட்ட உலகளாவிய மந்தநிலையிலிருந்து விடுபட ஏழை நாடுகளால் எளிய வழியைக் காண முடியவில்லை. இந்த விரிசலை உண்டாக்கும் பல காரணங்கள் உள்ளன. அதிகமாகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான தண்டனை, மக்கள் தொகையின் பரவலான ஏழ்மை நிலை, நீண்ட காலப் பிரச்சனையான கடன். ஆனால் கீதா ஒரு விஷயத்தில் தன் கவனத்தைச் செலுத்துகிறார்: தடுப்பூசி தீண்டாமை (vaccine apartheid) முன்னேறிய பொருளாதாரங்களில் 40% பேர் தடுப்பூசி பெற்று விட்டனர். வளரும் நாடுகளில் 11% பேரும், குறைந்த வருவாய் கொண்ட வளரும் நாடுகளில் மிகவும் குறைவாகவே தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிடுகிறார். தடுப்பூசி கிடைக்காததுதான் பொருளாதார மீட்சியில் ஏற்படும் இந்த விரிசலுக்குக் காரணம் என்று அவர் வாதிடுகிறார்.
இவ்வாறு விரிவடையும் பிளவுகளால் உடனடியான சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2021ஆம் ஆண்டு அறிக்கையைப் பார்ப்போம். உலக அளவிலான உணவுப் பாதுகாப்பு மற்றும் சத்துணவு பற்றிக் கூறும்போது, ‘2020ஆம் ஆண்டில் உலகின் சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு (2.37 பில்லியன்; 100 கோடி) போதுமான உணவு கிடைக்கவில்லை – ஒரே வருடத்தில் இந்த அளவில் 320 மில்லியன் (ஒரு மில்லியன்: 10 லட்சம்) மக்கள் அதிகரித்துள்ளனர். பட்டினி என்பது சகிக்க முடியாத ஒன்று. இப்போது தென்னாப்பிரிக்காவில் உணவுக்கான கலவரங்கள் அதிரடியாக அதிகரித்து வருகின்றன. ‘அவர்கள் இங்கு எங்களைப் பட்டினியால் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று இந்தக் கலவரத்தில் பங்கேற்ற ஒரு டர்பன்வாசி குறிப்பிட்டார். இந்த எதிர்ப்புக்களூம், உலக பன்னாட்டு நிதியம் மற்றும் ஐ.நாவும் வெளியிட்ட விவரங்கள் மீண்டும் பட்டினியை உலக நிகழ்ச்சிநிரலில் மீண்டும் கொண்டு வந்துள்ளன.
ஜூலை இறுதியில், ஐ.நாவின் பொருளாதார, சமூக கவுன்சில் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி பற்றிய ஒரு உயர்மட்ட அரசியல் அரசியல் கூட்டத்தை நடத்தியது. இந்த அமைப்பின் அமைச்சரவைப் பிரகடனமானது, கோவிட் 19 பெருந்தொற்றினால் விளைந்த நெருக்கடியை அங்கீகரித்தது. நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கு இடையிலும் அதிகரித்த உலகின் பலவீனங்களையும், அமைப்பு ரீதியான பலவீனங்கள், சவால்கள், ஆபத்துக்கள் அழுத்தம் தந்து நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி இலக்குகளை அடைவதைத் தடுத்து நிறுத்தவோ அல்லது முன்னேற்றத்தை பாதிக்கவோ செய்கிறது என்று பிரகடனம் கூறுகிறது. 2015இல் நிலைத்து நீடிக்கும் பதினேழு வளர்ச்சி இலக்குகள் ஐநா உறுப்பு நாடுகளால் நிர்ணயிக்கப்பட்டன. அவற்றில் வறுமை ஒழிப்பு, பட்டினியை ஒழித்துக் கட்டுவது, நல்லாரோக்கியம், பாலின சமத்துவம் ஆகியவை அடங்கும். இந்த இலக்குகளை 2030இல் அடைய முடியாது என்பது பெருந்தொற்றுக்கு முன்னாலேயே வெளிப்பட்டு விட்டது. பட்டினியை ஒழித்துக் கட்டுவது என்ற மிகவும் அடிப்படையான இலக்கைக் கூட அடைய முடியாது.
இந்த இருண்ட காலகட்டத்தில், 2021 பிப்ரவரியில் சீனாவின் அதிபர் ஜீ ஜிங்பிங், இந்த உலகளாவிய மந்தநிலைக்கும் முரணாக, சீனா அதிதீவீர வறுமையை ஒழித்துக் கட்டி விட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் பொருள் என்ன? அதாவது 85 கோடி மக்கள் கடும் வறுமையிலிருந்து மீண்டு விட்டனர் (1949இல் சீனப் புரட்சியில் தொடங்கிய இந்த நீண்ட எழுபது கால நிகழ்வு முடிவுக்கு வந்தது) அவர்களது சராசரி வருவாய் பத்தாயிரம் அமெரிக்க டாலராக அதிகரித்தது (கடந்த இருபது ஆண்டுகளில் இது பத்து மடங்கு அதிகரித்துள்ளது), சராசரியாக உயிர்வாழும் வயது 77 ஆக அதிகரித்துள்ளது (இது 1949இல் 35 ஆக இருந்தது) என்பதே இதன் பொருள். இலக்கை பத்தாண்டுகளுக்கு முன்பே எட்டியதன் மூலம் உலக வறுமை ஒழிப்பில் 70%த்தை சீனா செய்து காட்டியுள்ளது. இந்த வெற்றியை ‘உலக நாடுகளின் ஒட்டுமொத்த சமூகத்திற்கு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை அளிக்கும்’ என்று ஐ.நாவின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடிரெஸ் மார்ச் 2021இல் கொண்டாடினார்.
இதைத் தொடர்ந்து தோழர் விஜய் பிரசாத் தலைமையில் செயல்படும் ட்ரைகாண்டினண்டல்: சமூக ஆய்வுக்கான நிறுவனம் தனது தொடர் ஆய்வை ஜூலையில் மேற்கொண்டது. சோசலிசக் கட்டமைப்புக்கான ஆய்வு என்ற இந்த ஆய்வில் கியூபாவிலிருந்து கேரளம் வரையிலும், பொலீவியாவிலிருந்து சீனா வரையிலும் சோசலிச நடைமுறைகளின் கட்டமைப்பை ஆய்வு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட கால ஆய்வுத் திட்டத்தில் சீனாவின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்குச் சேவை என்ற பெயரில் நடைபெறும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை கள அளவில் ஆய்வு செய்வது, இத்திட்டத்தில் பங்கேற்ற நிபுணர்களிடம் பேட்டி எடுப்பது போன்றவை நடைபெறும். உதாரணமாக, ரென்மின் பல்கலைக்கழகத்தின் தேசிய வறுமை ஒழிப்பு ஆய்வு நிறுவனத்தின் தலைவரான வாங் சாங்குயி எங்களிடம் சீன அணுகுமுறையில் பன்முக வறுமைக் கோட்பாடு எவ்வாறு மையமான ஒன்று என்பதை எங்களிடம் கூறினார்.
இந்தக் கோட்பாடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமான மூன்று உறுதிகள் (பாதுகாப்பான வீட்டு வசதி, சுகாதார வசதி, கல்வி) மற்றும் இரண்டு உறுதிகள் (உணவு அளித்தல், ஆடை அளித்தல்) ஆகியவற்றிலிருந்து வந்தது. ஆனால் இங்கும் கூட, இந்தக் கொள்கையின் சாரம் ஆழகாம உள்ளன. வாங் இதனை தண்ணீரைக் கொண்டு விளக்கினார்:
குடுதண்ணீர் பாதுகாப்பாக உள்ளது என்பதை நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்? முதலில், தண்ணீர் விநியோகத்தில் எந்தப் பற்றாக்குறையும் என்பது அடிப்படைத் தேவை. இரண்டாவது தண்ணீர் எடுக்கும் நீராதாரம் மிகவும் தொலைவில் இருக்கக் கூடாது. தண்ணீர் எடுத்து வர 20 நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடாது. கடைசியாக தண்ணீரின் தரம் எந்த ஊறு விளைவிக்கும் பொருளும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தண்ணீரின் தரம் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய நமக்கு சோதனை முடிவுகள் தேவை. அப்போதுதான் நாம் அதற்கான தரம் அடையப்பட்டு விட்டது என்று கூற முடியும்.
ஒரு கொள்கை வடிவமைக்கப்பட்டதும் அதனை அமலாக்குவது தொடங்குகிறது. கிராமப்புறத்தின் வறுமை நிலையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வீடுகளை சர்வே செய்யும் பணிக்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எட்டு லட்சம் தொண்டர்களை அனுப்பியது. பிறகு கட்சியின் 9.51 கோடி உறுப்பினர்களில் 30 லட்சம் உறுப்பினர்களை 2,55000 குழுக்களில் உறுப்பினர்களாக ஒதுக்கியது. அவர்கள் வறுமை நிறைந்த கிராமங்களில் பல ஆண்டுகள் வாழ்ந்து, அது உருவாக்கிய வறுமையையையும், சமூக நிலைகளையும் ஒழிக்க உழைத்தனர். ஒரு கிராமத்துக்கு ஒரு குழுவும், ஒரு குடும்பத்துக்கு ஒரு தொண்டரும் ஒதுக்கப்பட்டனர்.
வறுமை குறித்த ஆய்வுகளூம், தொண்டர்களின் அனுபவமும் சேர்ந்து வறுமை ஒழிக்க ஐந்து மையமான வழிமுறைகளை உருவாக்கின: தொழிலை வளர்ப்பது; மக்களை மீள்குடியமர்த்துவது; சுற்றுச்சூழல் நிவாரணத்துக்கு ஊக்கமளித்தல்; இலவச, தரமான, கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்துவது; சமூக உதவி அளிப்பது. இந்த ஐந்து மிகவும் வலுவான உந்துகோல்களில் தொழில் வளர்ச்சியானது அதிக முதலீடுகளுடனான விவசாய உற்பத்தி (பயிர் செயலாக்கம், கால்நடை வளர்ப்பு உட்பட); விளைநிலங்களை மீண்டும் அமைத்தல்; சுற்றுச்சூழல் நிவாரணத் திட்டங்களின் ஒரு பகுதியாகக் காடு வளர்த்தல்; ஆதாரங்களை அதிகமாக உறிஞ்சியதால் கெட்டுப் போன பகுதிகளை மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக சிறுபான்மை மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி அளிப்பதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, 2020 வாக்கில், உலகப் பொருளாதார அமைப்பின் கூற்றுப்படி சீனா உலகில் இறுதிக் கல்வியைப் பெண்கள் பெறுவதில் முதலிடத்தை அடைந்தது.
தம்மை தீவீர வறுமையிலிருந்து விடுவித்துக் கொண்டவர்களில் 10%க்கும் குறைவானவர்கள் இடப்பெயர்ச்சியால்தான் அதை அடைந்தனர். இது இத்திட்டத்தில் மிகவும் நாடகபாணியிலான நடவடிக்கை. இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்த ஒருவரான மவுஸ் அதற்கு முன் அவர் ஒரு மலையின் முனையிலிருந்த அடுலீர் என்ற கிராமம் பற்றி எனக்குச் சொன்னார். ‘ஒரு பாக்கெட் உப்பு வாங்குவதற்கு மலையைத் தாண்ட எனக்கு அரைநாளானது’ என்றார். அந்த மலைமுகடின் முனையில் ஆபத்தான முறையில் ஆடிக் கொண்டிருந்த ஒரு கயிற்றேணியில் அவர் இறங்கிக் கீழே செல்ல வேண்டும். அவரும், அவருடன் சேர்ந்து எண்பத்து மூன்று குடும்பங்களும் இடப்பெயர்ச்சி செய்து கொண்டதானது அவர்களை இப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையிலிருந்து விடுவித்து நல்ல வசதிகளைக் கிடைக்கச் செய்துள்ளது.
தீவீர வறுமையை ஒழித்துக் கட்டியதென்பது மிகவும் முக்கியமானது என்றாலும் அது அனைத்துப் பிரச்சனைகளையும் அதுவே தீர்த்து விடாது. சீனாவில் சமூக அசமத்துவம் மிகவும் தீவீரமான பிரச்சனையாக உள்ளது. இது சீனாவின் பிரச்சனை மட்டுமல்ல, நமது காலத்தில் மனித இனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மிகச் சில விவசாயிகளே தேவைப்படும் மூலதனம் மிகுந்த விவசாயத்துக்கு நாம் நுழையும்போது, கிராமப்புறமும் அல்லாத, நகர்ப்புறமும் அல்லாத இடங்களில் நாம் எப்படிப்பட்ட குடியிருப்புகளை உருவாக்கப் போகிறோம்? விவசாயத்தில் இனியும் தேவைப்படாத மக்களுக்கு நாம் எந்த வகையான வேலைவாய்ப்புக்களை உருவாக்கப் போகிறோம்? சமூக, சமூகம் சார்ந்த வாழ்க்கைக்கு அதிக நேரம் கொடுக்கும்படியாக நாம் குறைந்த வார வேலைநாட்களைக் கொடுப்பதன் மூலம் தொடங்க முடியுமா?
வறுமையை ஒழிப்பது என்பது சீனாவின் திட்டமல்ல. அது மனித இனத்தின் இலக்கு. அதனால்தான் இந்த இலக்குக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கங்களும், அரசுகளும் சீன மக்களின் இந்த வெற்றியைக் கவனமாகப் பார்க்கின்றனர். எனினும் நடப்பில் இருக்கும் பல திட்டங்களில் (தென்னாப்பிரிக்காவின் பல ஆய்வு நிறுவனங்கள் கூறுவது போல) வருவாயை மடைமாற்றுவது என்ற வேறுபட்ட அணுகுமுறை மூலம் வறுமையை ஒழித்துக் கட்ட முயலப்படுகிறது. ஆனால் பணத்தை நேரடியாக அளிக்கும் திட்டங்கள் போதுமானவை அல்ல. பலபரிமாண வறுமைக்கு இதை விட அதிகத் தேவை உள்ளது. உதாரணமாக பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலா டி சில்வா அமல்படுத்திய பிரேசிலின் போல்சா ஃபேமிலியா திட்டம் அந்த நாட்டின் பட்டினியில் பெரும் உடைப்பை ஏற்படுத்தியது, ஆனால் அது பட்டினையை ஒழிப்பதற்கான திட்டமேயல்ல.
அதே சமயம், இந்திய மாநிலமான கேரளாவில் 1973-74இல் இருந்த 59.79% தீவீர வறுமையானது இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் 2011-12இல் 7.05% ஆக வீழ்ச்சியடைந்தது. விவசாய சீர்திருத்தம், பொதுக்கல்வி, சுகாதார வசதிகளை உருவாக்கியது, உணவுப் பொதுவிநியோக முறையை உருவாக்கியது, சமூகப் பாதுகாப்பு, நலனை அளித்தது, (குடும்பஸ்ரீ கூட்டுறவுத் திட்டங்களைப் போன்ற)பொதுச்செயல்பாடுகளை அதிகரித்தது ஆகியவை இந்தப் பெரும் சரிவுக்கு இட்டுச் சென்றன. சமூகக் கட்டுமானம் பற்றிய எங்களது தொடர் ஆய்வுஇன் அடுத்த நடவடிக்கை கேரளாவின் கூட்டுறவு இயக்கத்தில் கவனம் செலுத்தும், வறுமை, பட்டினி, ஆணாதிக்கத்தை ஒழிப்பதில் அதன் பங்கின் மீது கவனம் செலுத்தும்.
மார்ச் மாதத்தில், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் தனது உணவு வீணாகுதல் குறித்த தகவல் அறிக்கையை வெளியிட்டது. உலகம் முழுதும் சுமார் 931 மில்லியன் டன் உணவு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதை அது காட்டுகிறது. அதாவது 40 டன் டிரக்குகளில் இவற்றை ஏற்றினால் அது 23 மில்லியன் (ஒரு மில்லியன் – பத்து லட்சம்) டிரக்குகளில் முழுவதுமாக அவற்றை நிரப்பலாம். இவற்றை வரிசையாக இடைவெளியின்றி நிற்க வைத்தோமானால், இந்த உலகின் சுற்றளவை அது ஏழு முறை சுற்றி வரும். அல்லது கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோசும், ரிச்சர்ட் பிரான்சனும் முடிவெடுத்தது போல் விண்வெளிக்குச் செல்லும். அவர்களில் பெசோஸ் விண்வெளியில் நான்கே நிமிடம் செலவிடுவதற்கான பயணத்துக்கு 5.5 பில்லியன் டாலர்களை செலவிட்டார். அந்தப் பணத்தைக் கொண்டு 37.5 மில்லியன் மக்களுக்கு உணவளித்திருக்க முடியும் அல்லது இரண்டு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசியைப் போட்டிருக்க முடியும். பெசோசுக்கும், பிரான்சனுக்கும் இருக்கும் இலட்சியங்கள் வாழ்க்கையல்ல. மாறாக, வாழ்க்கை என்பது தேவைகளின் கொடுமையை ஒழிப்பதேயாகும்.
விஜய் பிரசாத்.
தமிழில்: கி.ரமேஷ்
மூலம்: China Eradicates Absolute Poverty While Billionaires Go for a Joyride to Space: The Thirty-First Newsletter (2021)
Tricontinental Institute for Social Research