நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் காலநிலை அகதிகள் – இரா.சண்முகசாமி
நூல் : காலநிலை அகதிகள்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹60
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
இந்நூல் அறிவியல் புனைகதை. ஆனால் வாசிப்பவர்களுக்கு ஒருநிமிடம் அதிர்ச்சியே கொடுக்கும். ஆம் இன்று இந்த கார்பரேட் உலகம் புவி மக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே வைத்துள்ளது. அது மனிதன் என்கிற தன்மையை முற்றிலும் அழிக்கத் துடிக்கிறது. நாமும் தேவையில்லாத வீண் ஆடம்பரத்திற்கு நம்மை அறியாமல் விட்டுக்கொடுத்து வருகிறோம்.
இங்குதான் அடுத்த நிலை உருவாகிறது. அது எந்தவிதமான உலகை அல்லது இந்த உலகமே வேண்டாம் வேறு உயிரினக் கிரகத்திற்கு படையெடுப்போம் என சோம்பேறி உண்டு கொழுத்த கார்பரேட் உயிரினம் பறந்திட, வேற்றுக்கிரகத்தில் என்னென்ன தேவையோ அவற்றை ஒரு உலக பறிமாற்ற சுரண்டல் நிறுவனம் வழியில் எதைச் சுரண்டிச் செல்கிறார்கள் என்பதை வாசித்து அறியும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் ஒரு நிமிடம் நின்று போனதாகவே உணரமுடியும். உணர்ந்தேன் தோழர்களே.
நாம் தற்போது இருப்பது 21ஆம் நூற்றாண்டில். 31ஆம் நூற்றாண்டில் என்ன நிலைமை இருக்கும் குறிப்பாக 3040-3050 இடைப்பட்ட காலத்தில் பூமி எப்படி இருக்கும் என்று புனைவாக அதேநேரம் முன்னோக்கிய சிந்தனையாக ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் Ayisha Era.Natarasan அவர்கள் குறிப்பிடுவது போன்ற நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்தாலே திகிலாக இருக்கிறது. தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கு ராயல் சல்யூட்.
இனி என் மனதில் பட்ட சில கருத்துகள் உங்களோடு-
நமக்கு சாலைகளும் சரியில்லை, வாகனமும் பெருத்துவிட்டது, நுகர்வும் அதிதீவிரமாகி விட்டது. பிறகென்ன உலகம் முழுவதும் காலநிலை மாற்ற குழுவை போட்டுகிட்டே இருப்போம். வளர்ந்த பெருச்சாளி கும்பெனிகள் வளராத, வளரும் நாடுகளின் முதுகில் ஏறி சவாரி செய்யும். நாம் அப்படியே நமக்கு வரும் அவர்களுக்கான செய்தித்தாள்களையோ, அவர்களுக்கான ஊடகங்களையோ மட்டுமே உண்மை என்று நம்பி நமக்காக யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதை கவனியாமலே பல நேரம் ‘அவர்களுக்கு வேலையே இல்லை எந்நேரமும் போராட்டமும் கையுமாகவே அலைவார்கள்’ என்று நமக்காக போராடுபவர்களை மட்டம் தட்டியே கடந்து போவோம்.
நான் சொல்வது உண்மையா, பொய்யா என்பதை நம்மை சுற்றி நடக்கும் போராட்டங்களையும், இதோ இந்நூலையும் வாசியுங்கள் புரியும் தோழர்களே.
இந்நூலுக்கு மிகச்சிறப்பான அணிந்துரை வழங்கிய அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் Kattanur Ponniah Rajamanickam அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்!
உலகின், மனித இனத்தின் அடுத்த எதிர்கால தொழில்நுட்பம் என்னவாக இருக்கும் என்பதை தோழர் ஆயிஷா அவர்கள் எழுதிய இந்நூலை அனைவரும் குறிப்பாக இளையோர் அதிகம் வாசிக்க வேண்டுகிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழர்களே!!!
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.