யானைத் தாலி – நூல் அறிமுகம் : இரா.இயேசுதாஸ்
யானைத் தாலி நூல்கவிஞர் ரவி சுப்பிரமணியம் அவர்களின் முன்னுரையோடு வெளிவந்திருக்கிறது.
சமூகத்தின் சாதாரண.. அடித்தட்டு மனிதர்களை “அப்படி” முழுவதுமாய் வாசித்திருக்கிறார் நூல்ஆசிரியர்.. கதைகளில் ஒரு வரி கூட கற்பனை கிடையாது.. ‘ஓவர் பில்டப்பும்’ கிடையாது.. நம் வீட்டில் ..பக்கத்து வீட்டில்.. நம் தெருவில் நடப்பது ..நமக்கு சீரியஸாகத் தெரியாது. இவர் எப்படி சீரியஸாக கண்டு.. கதையாக்கி விடுகிறார் என்பது ஆச்சரியம்! ஒரு கட்டத்தில் நாமும் இவர் போல எழுதி விடலாம் என்று கூட தோன்றும்.. ஆனால் இவ்வளவு நுட்பமாக உட்கிரகித்து.. உரிய இடத்தில்.. உரிய வார்த்தைகளோடு.. வெளிப்படுத்த முடியுமா என்ற பயம் ..மிரட்சி வந்துவிடும்..”குதிப்பி” நாவலில்.. சமையல்காரர்களை மையப்படுத்தி என்னமாய் எழுதி இருந்தார் காமுத்துரை. அதுவே இன்னும் “ஹேங்ஓவராக “இருக்கும் போது.. இன்றைக்கு இந்த சிறுகதை தொகுப்பு வந்திருக்கிறது.
ஒவ்வொரு சிறுகதையுமே வாசகனை வளைத்து போட்டு கிறங்க வைக்கும் வசீகரத்துடன் இருக்கிறது .கதையின் கதாபாத்திரங்கள் மீது வாசகனுக்கு இரக்கமும்.. கோபமும்.. ஆற்றாமையும் ஏற்பட்டு விடுகிறது. கதையின் ஆரம்பத்தில்… தொடர்வில்.. கதை முடிவு இப்படித்தான் இருக்கும் என சற்றும் யூகிக்க முடியாத படி ஒவ்வொரு கதையுமே .. நியாயமான முடிவுடன் அமைந்து விடுகின்றன.. குடியின் கேட்டால் தாயே மகன் “இறந்து தொலையட்டும்” என விட்டு விடுவதை” யானைத்தாலி” கதை நியாயப்படுத்துகிறது. இப்படி ஒவ்வொரு கதையின் உள்ளடக்கத்தையும் விமர்சனம் என்ற பெயரில் வெளிப்படுத்துவது வாசகனின் வாசிப்பு ‘திரில்’ இல்லாமல் செய்து விடும் என்பதனால் ஒவ்வொரு கதையின் உள்ளடக்கத்தையும் வேண்டுமென்றே வெளிப்படுத்த விருப்பமில்லை!
சிவப்புச் சிந்தனைகள் ..காவி அரசியல்.. சங்க வாதியின் நேர்மை.. தாய் பாசம் ..மாமியார்- மருமகள் உறவு.. சொந்தங்களுக்கு இடையே ரத்த உறவுகளுக்கு இடையே ஏற்படும் கொடுக்கல், வாங்கல்கள் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத கிராமங்கள் .. நண்பர்களிடையேநிலவும் நையாண்டி கலாட்டா.. வெள்ளந்தியென நாம் கருதுவோரிடம் இருக்கும் வஞ்சகஏமாற்றுத்தனம்.. வஞ்சகம் இல்லாமல் உழைக்கும் உழைப்பாளிகள்.. வாய்ப்பேச்சு மூலமே காரியம் சாதிக்கும் கடை உரிமையாளர்.. சீரியசான விஷயத்தையும் சிக்கென முடித்துவிடும் கிராமத்து ஜனம் ..இந்தக் காலத்திலும் பிழைக்கத் தெரியாதவன் என பெயரோடு நேர்மையாக இருக்கும் சில மனிதர்கள்.. கணவனை திருத்த மனைவி எடுக்கும் அதிரடி முடிவு.. கந்துவட்டி பிரச்சனை.. வறுமை.. கொரோனா காலத்தில் உறவுகளுக்கு இடையே நிலவிய யதார்த்த நிலைமைகள்..என இவை
எல்லாம் கதை கருக்களாகியுள்ளன.
நாம் சமூகத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் ..மிக எதார்த்தமாக.. வசீகரமாக.. வாசகனை கட்டிப்போடும் எளிய வார்த்தைகளில்.. வாசிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ம. காமுத் துரை. இன்னும் இப்படிப்பட்ட படைப்புகள் அவரிடமிருந்து நிறைய வரும்…நிறைவாய் வரும் என ஆவலாய் எதிர்பார்க்கிறோம்..
ஒவ்வொரு வாசகனும் பல நூல்களை வாசித்து தெரிந்து கொள்ளக்கூடிய ஏராளமான விஷயங்களை.. இந்த 17 சிறுகதைகளில் ..176 பக்கங்களிலேயே கிடைத்து விடுகிறது. வாசித்த பின் வாசகனுக்கு ஒரு வாசிப்பு திருப்தியையும் நூல் தருகிறது என்றால் அது மிகையல்ல.!
யானைத்தாலி | ம.காமுத்துரை
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
176 பக்கங்கள்: ரூபாய் 200/-
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்யவும்