நூல் அறிமுகம்: தேனி சீருடையானின் ”கடல் வனம்” (சிறுகதை தொகுப்பு) – மாதா

நூல் அறிமுகம்: தேனி சீருடையானின் ”கடல் வனம்” (சிறுகதை தொகுப்பு) – மாதா




உலக இலக்கிய வரலாற்றை தொகுத்துப் பார்த்தால் இதுவரை எழுதப்பட்டு தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு நீடிக்கும் பெரும்பாலான படைப்புகள் புனைவுகளே. இன்று உலக அளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது கதைகளாகத்தான் உள்ளன. கதைகள் காலம் செல்ல செல்ல மேலும் தகுதி பெறுகின்றன. வெறும் சித்தரிப்பாக அமையும் எளிய புனைவுகள் கூட எழுதப்பட்ட காலகட்டத்தை பதிவு செய்யும் ஆவணங்களாக மாறி வாசிக்கப்படுகின்றன. கதைகளிலிருந்து மேலும் மேலும் கதைகள் உருவாகின்றன. கதைகள் வழியாகவே வாழ்க்கை தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய வாழ்க்கையை புனைவுகளாக சொல்லியும், எழுதியும் தொகுத்துக்கொண்டே இருக்கிறது. கதைகள் வழியாகவே முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறையை அறிகிறது. சின்னச் சின்ன விஷயங்களால் ஆனது வாழ்க்கை. அவை பதிவாகும் களம் புனைவுகளே. தமிழ்ச் சிறுகதை உலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தும் படைப்புகள் தொடர்ந்து வந்துகொண.டே இருக்கின்றன.

வைக்கம் முகமது பஷீர் இளமையில் வீட்டைவிட்டு வெளியேறி, தேசாந்திரியாக சுற்றி அலைந்து, அதன்பின் சொந்த ஊரில் நிலைபெற்று மலையாளத்தில் புகழ்பெற்ற இலக்கியங்கள் படைத்திருக்கிறார். தேனி சீருடையானும் விரக்தியால் வீட்டைவிட்டு, ஊரை வெறுத்து, கண்போன போக்கில் போய்க்கொண்டிருந்த போது திருப்பு முனை ஏற்பட்டு, திரும்பி வந்து நாவல்களும், சிறுகதைகளும் படைத்திருக்கிறார். தஞ்சை, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த வளமான பகுதிகளே அதிகமும் இலக்கியத்தில் கவனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. தேனி, கம்பம் போன்ற பள்ளத்தாக்குப் பகுதிகள் அதிகம் எழுதப்படவில்லை. தேனி சீருடையானின் “கடல் வனம்”சிறுகதைத் தொகுப்பு தேனியை கதைக்களமாகக் கொண்டுள்ளது.

சீருடையானின் எட்டாவது சிறுகதை தொகுப்பான இதில் முதலாவதாக உள்ள “நாகம்” சிறுகதை மேற்குத் தொடர்ச்சி மலை நிலப்பரப்பில் நிகழ்கிறது. விவாதங்களை உருவாக்குவது என்பது எழுத்தின் அவசியங்களில் ஒன்று. சிறுகதைகளில் தத்துவ உரையாடல்கள் குறைந்துள்ள இக்காலத்தில் சாமியாரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் வாசகர்களுக்கு புதிய திறப்பைக் காட்டுகின்றன. தகுதியுள்ள அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இருந்தும் கூட சனாதன சக்திகள் தொடர்ந்து தடையாக இருக்கின்றன. புரோகிதம் கற்றும் சாமியாருக்கு அர்ச்சகர் வேலை கிடைக்கவில்லை. கேரளத்தில் தலித்துகளை அர்ச்சகார்களாக்குவது சாத்தியமாகி உள்ளது, சட்டங்கள் நிறைவேற்றினால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் அதனுடைய வெற்றி அடங்கியுள்ளது என்று அம்பேத்கர் கூறியுள்ளார். வேள்பாரி நாவலில் வருவது போல் நாகம் சிறுகதையிலும் ஏராளமான தாவரங்களையும், மூலிகைகளையும் ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். “இந்த மண்ணோட பண்பாட்டுப் பழமையையும், இயற்கை வழிபாட்டு உன்னதத்தையும் மீட்டெடுக்கனும்” என்று சாமியார் கூறுவதாக வருகிறது. நாம் மீட்டெடுக்க வேண்டியது மண்ணோட மரபுகளைத்தான். பழமையை அல்ல. இயற்கை வழிபாட்டில் புரோகிதம் கிடையாது. புனைவின் செயல்முறையே தரவுகளைக் கொண்டு ஓர் அனுபவக் களத்தை உருவாக்கி, வாசகன் அந்த அனுபவத்தை அவனே கற்பனை செய்துகொள்ள வைப்பதுதான்.

“புறை நிலா” கதையில் அண்ணன்-தங்கை பாசம் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் வரும் குடும்ப உறவுகளின் நுண் சிக்கல்கள் பெரும்பாலான குடும்பங்களில் நடப்பதை வாசகன் உணர்கிறான். திருமணம், ஈமக்கிரிகைகள் போன்ற நிகழ்ச்சிகளில் வர்ணாசிரமக் கருத்துக்கள் புகுத்தப்பட்டு நம்மை ஏற்க்கச் செய்கின்றன. பசு புனிதமானது என்போர்களின் மூதாதையர்களான ரிஷிகள் பசுவையும், மற்ற விலங்குகளையும் வேள்வித் தீயில் பொசுக்கி புசித்தார்கள் என்ற வரலாறு வெகுமக்களான சுத்திரர்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. மனுஷ்மிருதியை நோக்கி கேள்வி எழுப்புவதோடு கதை முடிவடைகிறது..பவுனாச்சியின் மரணம் ஒரு விடைபெறுதல் போல் நிகழ்கிறது. முதிர்கன்னியாய் வாழ்ந்து முடிந்தவளுக்கு பேத்தி கொள்ளி வைப்பது ஒரு கட்டுடைப்பாக உள்ளது. பவுனாச்சியின் சேமிப்பு பணத்திற்காக உறவுகளுக்குள் தகறாறு எழுவது எதார்த்த நிலை. நினைவும், புனைவும் கலந்து எழுதும் போது சிறுகதை உயிர்ப்போடு இருக்கிறது.

மனிதனுக்கு எந்த நிலையிலும் வாழ்தலே இனிது. வுhழ்தல் ஒன்றே மெல்ல மெல்ல வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளின் அடுக்குகளும், நுண்தகவல்களும் கதைக்கு மெருகூட்டுகின்றன.” மஞ்சுளா” சிறுகதையில் பார்வையற்ற பருவப் பெண்ணான அவளின் கனவுகளை அடுக்கியிருக்கலாம். சுயசார்பு என்பது பெண்ணுக்கு சுயமரியாதையை அளிக்குமென்றாலும் புளி தட்டுவதும், தொலைக்காட்சியில் பாட்டு கேட்பது மட்டும்தான் வாழ்க்கையா? சொல்லப்படுவதைவிட சிறுகதையை வாசகனுக்கு உணர்த்த வேண்டும். “நின்றான்”;, “தாது பருவம்” கதைகள் கொரானா காலத்தில் நிகழ்கின்றன. கைத்தறி, கட்டுமானம், தள்ளுவண்டியில் வியாபாரம் போன்ற தொழில்களில் பெற்றோர்களுக்கு கூடமாட ஒத்தாசையாக இருக்கும் பிள்ளைகள்தான் குடும்பத்தின் பொருளியல் சு+ழல் காரணமாக, கற்பதை கழற்றிவிட்டு, குழந்தை தொழிலாளர்களாகவும், குழந்தை வியாபாரிகளாகவும் உருவாகிறார்கள். “மலை வாழையல்லவோ கல்வி நீ வாயாற போய் உண்ணுவாய் என் செல்வி” என்ற பாரதிதாசன் கவிதை வரிகள் இத்தகைய குழந்தைகளுக்கு பொருத்தமாக உள்ளன. அஞ்சலை கதாபாத்திரம் தாது வருட பஞ்சத்தை நினைவுபடுத்துகிறது. புலம்பெயர்ந்த மக்களோடு அஞ்சலையும் உணவுக்காக அலையும் கொடூரத்தை வாசகன் உணரச் செய்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உணவின்றித் தவித்த மக்கள் திரளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியது போன்ற அறச் செயல்பாடுகள் கொரானாவை வெல்வதில் முக்கிய பங்காற்றியது.

“தங்if” சிறுகதையில் “பிளாஷ்பேக்” கதை சொல்லும் உத்தி இன்னும் கைகூடி வரவேண்டியுள்ளது. டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் ஏழைகள் ஏராளமாக வசிக்கும் பகுதி மட்டுமல்ல, இந்தியாவின் மாபெரும் போராட்டக் களமாகவும் இருக்கிறது. சந்தையில் கூடாரங்கள் அடித்து வியாபாரம் செய்வது போல, அரசியல் கட்சிகளும், சமூக நிறுவனங்களும் கூடாரம் போட்டு நாள்தோறும் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திருமணமே முடிக்காமல், தனக்காகக் காத்திருந்த பாக்கியத்தின் மனதில் ஆசைகளை விதைத்துவிட்டு, மீண்டும் அவளை விட்டுச் சென்று, தன்னோடு குடும்பம் நடத்தும் குமுதாவிடம் காசி செல்வது சரியானதா என்பதை வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம். சிறுகதையின் மெய்யான தன்மை இருப்பது அதன் முடிவுக்குப் பின்தான். முடிவிலிருந்து வாசகனை மேலே செல்ல வைப்பது சிறந்த கதையாக இருக்கும்.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வந்தால் ஆலயங்களை அறநிலையத் துறையே எடுத்துக் கொள்ள சட்டம் உள்ளது. அர்ச்சகர்களெல்லாம் அரசு ஊழியர்களாகிவிடுகிறார்கள். அமல்ராஜ் நாடார் போன்ற தனியார் முதலாளிகள் இக்காலத்தில் கோவிலில் அதிகாரம் செலுத்த முடியாது. “இறைப்பாலங்கள்”; கதையில் சங்கரன் பு+சாரி தனியாக கோவில் கட்டி பு+ஜை செய்ய நினைப்பது, இறைவழிபாடு சுயதொழில் போல் ஆகிவிடுகிறது. ஆரியர்கள் வேள்வியில் விலங்குகளை சுட்டுச் சாப்பிட்டதை சங்கரன் மூலம் வெளிப்படுத்தியது தற்போதுள்ள சு+ழலுக்கு பொருத்தமாக உள்ளது. கதையில் சீதாசுந்தரி, சங்கரன் காதல் பின்னணி இசைபோல் ரம்மியமாக இழையோடி வருகிறது.

சமூக அவலங்களில் ஒன்று கந்துவட்டிக் கொடுமை. சட்டங்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை. பணத்தைக் கொடுத்து பெண்களை வீழ்த்தி காமலோக வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு கடைசியில் என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்வதுதான் “ஒருக்களிததிருந்;த கதவின்”; கதை. ஓடுவட்டி, மீட்டர் வட்டிக் கொடுமைகள் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அங்கியின் மகன் செல்வராசு ஓட்டல் வேலைக்குப் போகிறான். டீ மாஸ்டராகப் போக வேண்டுமென்பது அவனுடைய ஆசை. ஆனால் டேபிள் சுத்தம் செய்யவும், எச்சி இலை எடுக்கவும் பணிக்கப்படுகிறான். கவிஞர் கந்தர்வன் ஒரு கவிதையில், டேபிள் கிளீன் செய்பவனைப் பற்றி சொல்லும் போது, “வர்ரவங்களெல்லாம் ஆத்தா பேரைச் சொல்லி திட்டுராங்க” என்று அந்த சிறுவன் சொல்லுவதாக எழுதியிருப்பார். செல்வராசின் வலியை நம்மால் உணர முடிகிறது. சிறுகதை நடந்ததை தெரிவித்தால் போதாது. நடந்த நிகழ்ச்சியை வாசிப்பவருக்கு அனுபவமாக ஆக்க வேண்டும்.

எத்தனை ஆண்கள் வந்து போனாலும், வீட்டில் தனக்கென்று ஒரு ஆண்மகனுடன் குடும்பமாக இருக்கவே பெண்கள் விரும்புகிறார்கள். வீடும், குடும்பமும் ஆண்களுக்கு வெறும் வசிப்பிடமாகவே அறியப்பட்டிருக்கிறது. பெண்களுக்கோ அது கனவும், நிஜமும் கலந்த ஒரு வெளி. குடும்பம் என்பது ஒருவர் கொடுப்பதும், மற்றொருவர் வாங்குவதும் இல்iல். ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கொடுத்து நிரப்பிக் கொள்வது. வேசியானாலும், நாட்டின் மகாராணியானாலும் இதுதான் எதார்த்தம். இதைத்தான் “குடும்பம்”கதையில் முத்து மீனா சொல்லிச் செல்கிறாள் உயிரற்ற சரக்குகளை விட, உயிருள்ள மனிதர்களே மேல். “கடல் வனத்தில”; வரும் கேப்டன் கப்பலிலுள்ள மற்றவர்களையெல்லாம் காப்பாற்றிவிட்டு, எதற்காக தேசியக் கொடியுடன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார்?. பயணிகள் கப்பலோ, சரக்குக் கப்பலோ விபத்து என்று வந்துவிட்டால், முடிந்த வரை கப்பலிலுள்ள மனிதர்களைக் காப்பாற்றிவிட்டு, தன்னையும் காப்பாற்றிக் கொள்வதே கேப்டனின் கடமை. இருந்தாலும் உயர்ந்தெழும் அலைகள், விரைந்தாடும் பிரவாகம், காற்றின் தாண்டவம் போன்ற ஆழி சு+ழ் காட்சி விவரணைகள் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்”; கதை படித்த உணர்வு வருகிறது.

இத்தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்துமே ஓயாத மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசுகின்றன. நுணுக்கமான வாழ்க்கைச் சித்திரங்கள் வந்தபடியே உள்ளன. நாம் உண்மையானது என அறிந்த நிகழ்வை, உணர்வெழுச்சியை இக்கதைகளி;ல் காணும் போது, அது நம்மை நெகிழவும், கொதிக்கவும் வைக்கிறது. கதை மாந்தர்கள் நாம் அறியும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். தேனி சீருடையான் மிக எளிமையான நேரடி நடையில் யதார்த்த தளத்தில் நின்றபடி கதைகளை உருவாக்கியிருக்கிறார். இக்கதைகளை வாசிப்பது நாம் அடைந்த அனுபவங்களை கற்பனையில் மீண்டும் அனுபவிக்க உதவுகின்றன. நமக்கு உண்மையில் வாழ்ந்த அனுபவத்துக்கு நிகரான அறிதல்களை அளிக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் வாழ்க்கைப் போராட்டம் பற்றிய பதிவுகளில் சீருடையானின் கதைகளுக்கு ஓர் இடம் உண்டு.

– மாதா

நூல் : கடல் வனம் (சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர் : தேனி சீருடையானின்
விலை : ரூ.₹200
வெளியீடு : அகரம் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]