கடல் மட்டம் உயர்வு கவனம் கொள்வோமா? (Do we care about sea level rise?) - - முனைவர். பா. ராம் மனோகர், Environment - https://bookday.in/

கடல் மட்டம் உயர்வு கவனம் கொள்வோமா?

கடல் மட்டம் உயர்வு கவனம் கொள்வோமா? - முனைவர். பா. ராம் மனோகர்   கடற்கரை அழகிய சூழல் அமைப்பு! சுற்றுலா செல்ல ஏற்ற ஒரு அருமையான இடமாக நாம் அனைவரும் விரும்பும் நிலை, அறிந்ததே! கடல் அதிக பொருளாதார மேம்பாடு…
Koppaiyai Sutri Pootha Kadal Poem By Kumaraguru கோப்பையைச் சுற்றி பூத்த கடல் கவிதை - குமரகுரு

கோப்பையைச் சுற்றி பூத்த கடல் கவிதை – குமரகுரு




பிரிவதற்குச் சற்று முன்தான்
இருவருக்கும் பொதுவானதொரு ஒளிக்கு நடுவில்
மவுனத்தின் ஊடாக
மிதந்து கொண்டிருந்தோம்!

நமக்குள் எத்தருணத்திலும்
இத்தகைய மவுனம் இருந்ததில்லை!
ஏதாவதொரு சொல்
ஏதாவதொரு கதை
ஏதாவதொரு நினைவின் புன்சிரிப்பில்
உடைபட்டுத் தெறித்து
ஓரமாகக் கிடந்த இந்த மவுனம்
இன்று பிரிவினால் நம்மோடு தைக்கப்பட்டிருக்கிறது!!

நாமிருவரும் அமர்ந்திருக்கும் போது
யாருமற்றத் தனிமையை எப்போதும்
உணர்ந்திராத காஃபி மேஜையும்
பல மணி நேரங்களாக மிடறு மிடறாக
அருந்தும் காஃபியும்
கூட… இப்போது நம்மையே
ஒரு நாய்க்குட்டியைப் போல பார்த்து கொண்டிருக்கின்றன!!

நான் கவனித்த வரையில்
உன் தொங்கிய முகத்திலிருந்து
வழிந்தோடும் கண்ணீர்
காஃபி கோப்பையைச் சுற்றிலும்
கரையைச் சுற்றிப் பூத்த கடலாகக்
கிடக்கிறது…

சிறிது நேரம் பேசலாம் என்றழைத்தும்
இதுவரை பேசாமலிருப்பது
இப்படியே மவுனத்தைச் சமந்து சென்றிடலாமோ என்றே எண்ண வைக்கிறது!!

நாம் ஏன் இப்படி உறவின் அடிமைகளாக இருக்கிறோம்?
மனிதர்களால் உறவுகளின்றி வாழ இயலவில்லை?
புலி வேட்டையாடி மானை உண்கிறது…
பசியற்ற நேரம் மான் குட்டியினருகில்
சும்மாதான் படுத்திருக்கிறது!!

உறவுகளால் பிணைக்கப்படாத வாழ்க்கையைப் பற்றிய கனவிலும் கூட
ஏதோவொரு உறவுப் பிணி போல்
பீடித்துக் கொள்வதைத் தவிர்க்கவே இயலவில்லையே அன்பே!!

இந்த ஒரு வார சண்டையால்
கடந்த பல்லாண்டுகளும்
வரும் பல்லாண்டுகளும்
நம்மை ஏக்கத்துடன் கவனித்து கொண்டிருக்கின்றன…

நாம் அன்பெனும் மரத்தில் காய்த்துத் தொங்கிய போது
ஒருவரையொருவர் காற்றுரசிவிட
கனியாகியபடியிருந்தோம்!!
அப்போதெல்லாம் நமக்கு
நாம் கனியாகப் போவதைப்பற்றியோ
விலைக்கு நாம் விற்கப்படுவோம் என்றோ
இல்லை அழுகிப் போவோம் என்றோ
ஒரு பொழுதும் தோன்றியதேயில்லை…
அத்தருணத்தின்
அக்கணத்தின்
பேருவகையில் திளைத்து,
அதிசயமாகக் கிடைத்த
முழு சாக்லேட்டைச் சூழ்ந்த
எறும்பு கூட்டமென
கொறித்தபடியிருந்தோம்!!

நாளையும்
நாளைய மறுநாளையும்
அதன் பின்னான காலங்களையும்
பற்றி அஞ்சத் துவங்கிய வேளையில்தான்
அழுகத் துவங்கியிருக்கிறோம்?

இன்றை இப்பொழுதைத் தாண்டிய
உன் கரம்பற்றுதலை எப்படியாவது
தக்க வைத்துக் கொள்ள இருவருமே போராடிக் கொண்டிருக்கிறோம்…
ஒரு சொல்லில்லை…
ஒரு வாக்கியமில்லை…
வெறும் மவுனத்தையேந்திய போர்!!
நீ சொன்னால் நானழுவேன்…
நான் சொன்னால் நீயழுவாய்…
என்ற கரிசனத்தில் நிகழும் இப்போரின்
முடிவுதான் என்ன?

அதோ அந்த நிலவைப் பாரேன்
அதற்கு நாளை பவுர்ணமி
என்று சத்தியமாகத் தெரியாது!!
தெரிந்தாலும் அதற்கதுவொரு பொருட்டுமில்லை…

இப்போது மட்டுமே ஒளிரும்
அப்பேரழுகு நிலவினடியில்
இப்போதைக்கு மட்டுமேயான
நாமிருக்கிறோம்!!

என் விரல்கள் வியர்த்து
உன்னை அரவணைத்து
அழாதே என்று சொல்லும்படி துன்புறுத்துகின்றன!!

அந்த அரவணைப்பை என் மூடிய கண்களுக்குள் வரைந்து பார்க்கிறேன்!!
எப்பேர்ப்பட்ட தருணமது?
புழுவிலிருந்து குக்கூனாக மாறிக் கொண்டிருக்கிறோம் அன்பே!
சற்று காலம் பொறுத்தால்
நாம் வண்ணங்களின் காலத்தில்
தூரிகைகளைப் பிடித்தபடி
நம் ஓவியங்களை வரைவோம்!!
அத்தனையும் இத்தருணத்திலிருந்தே தொடங்கட்டுமென நினைத்து
எழுந்துவிட்டேன்…

வா!! ஒரேயொரு நடனத்தை மட்டும்
நாம் வாழ்நாள் முழுவதும் செய்வோம்…
அந்த ஒரே பாடலுக்கு!!

காஃபி கோப்பை காத்திருக்கிறது…
மேஜை சிரிக்கிறது…
எங்கெங்கோவிருந்தெல்லாம்
வண்ண வண்ண மலர்கள்
நம் முன் கொட்டுகின்றன…
இத்தனை கெட்டியான மவுனத்திலிருந்து
விடுபட்டு வெளியேறி உனை நோக்கி வருகிறேன்…

இவ்வாழ்வொரு வலை
சிலந்தியின் வலையதன் வீடாவதைப்
போல
நமக்கான அன்பின் வலை!!

தூக்கணாங்குருவி கூட்டில் ஒளிரும்
மின்மினியாக எப்போதும்
அது நமக்குள் ஒளிர்ந்தபடியிருக்கட்டுமே…
மின்னி மின்னி!!