Writer Abdulrazak Gurnah's By the sea Book Review By S.Vincent. நூல் அறிமுகம்: அப்துல்ரசாக் குர்னாவின் கடலருகில் (By the Sea) - ச. வின்சென்ட்

நூல் அறிமுகம்: அப்துல்ரசாக் குர்னாவின் கடலருகில் (By the Sea) – ச. வின்சென்ட்



ஏகாதிபத்தியம் அழுகல் கிருமிகளை விட்டுச் செல்கிறது. அதை நாம் மருத்துவ முறையில் கண்டுபிடித்து நமது நிலத்திலிருந்து மட்டுமல்ல, நமது மனங்களிலிருந்தும் நீக்க வேண்டும்.
பிரான்ஸ் ஃபனான்.

அப்துல்ரசாக் குர்னா சான்சிபார் என்ற தீவில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது 1948 ஆம் ஆண்டு பிறந்தார். 1963 ஆம் ஆண்டு காலனிய ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு சான்சிபாரில் நடந்த புரட்சிக்குப் பிறகு அபெய்த் கருமாவின் ஆட்சி ஏற்பட்டது. அப்போது அரபு இனத்தார் ஒடுக்கப்பட்டுக் கொடுமைக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். குர்னா அவ்வினத்தைச் சார்ந்தவர் ஆதலால் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் தனது பதினெட்டாவது வயதில் நாட்டைவிட்டும் குடும்பத்தை விட்டும் ஓடி இங்கிலாந்தில் தஞ்சம் புக வேண்டியதாயிற்று. கென் ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற அவர் அங்கேயே ஆசிரியப் பணி மேற்கொண்டார். ஆங்கில பின்காலனிய இலக்கியத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.

பின்காலனிய எழுத்தாளர்கள்பற்றி ஆராய்ச்சி நூல்கள் எழுதியுள்ள இவர் பத்து நாவல்களும் பல சிறுகதைகளும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்த ஒருவரின் அனுபவங்கள் அவரது எழுத்துக்களில் இடம்பெறுகின்றன. ஒரு ஏதிலியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் அறைகூவல்களும் அவரது நாவல்களின் மையக்கருத்தாக இருக்கின்றன. எனினும் மற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர்ககள் காலனிய ஆட்சிக்கு முந்தைய எளிய தூய்மையான வாழ்க்கையினை நினைவு கூர்வது போல இவர் இல்லை. அவருடைய சான்சிபாரும் தன்சானியாவும் பல காலனிய வாதிகளின் கீழ் இருந்து பலவகையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வந்திருக்கிறது. இந்தியர்களும் அரேபியர்களும் உள்நாட்டு க் கறுப்பினத்தாரும் கலந்த ஒரு கலவைச் சமுதாயம் அது. குர்னாவின் படைப்புகளில் புலம்பெயர்ந்தவர்களின் பழைய நினைவுகளுடன் புதிய உறவுகளின் மோதல்கள் இடம்பெருகின்றன.

2001 ஆம் ஆண்டு வெளியான By the Sea நாவல் அடையாளப்படுத்தலையும் தன் ஆளுமையையும் மையமாகக் கொண்டது. மௌனம் இடம்பெயர்ந்தவரின் அடையாளத்தை இனப்பாகுபாட்டிலிருந்தும் இனவெறுப்பிலிருந்தும் காத்துக் கொள்ளவும் கடந்த காலத்திற்கும் நிக்ழ்காலத்திற்கும் இடையிலான மோதலைத் தவிர்க்கவும் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. ஏமாற்றமும் தன்னையே ஏமாற்றிக் கொள்வதும் நிகழும் நாடகமாக இந்த நாவல் இருக்கிறது.

சான்சிபாரிலிருந்து தப்பி வந்து சரியான ஆவணங்களில்லாமல் லண்டன் அருகிலுள்ள கேட்விக் விமானநிலையத்தில் இறங்கிய சாலே ஓமர் என்ற 65 வயது முதிய இஸ்லாமியரால் கதை சொல்லப்படுகிறது. இடையில் ஒரு பகுதிமட்டும் அவருடைய எதிரி ராஜாப் ஷாபான் முகம்துவின் மகனான லத்திஃபால் சொல்லப்படுகிறது. ஷாபானின் பெயரில்தான் ஓமர் இங்கிலாந்து வருகிறார். ஓமர் ஷாபானாலும் அமைச்சர் ஒருவரின் ஆசைநாயகியான அவரது மனைவி ஆஷாவாலும் பழிவாங்கப்பட்டதும் சிறைமுகாம்களில் அவர் அடைந்த துன்பங்களும் நமக்கும் லதீஃபுக்கும் கதையின் இறுதியில்தான் தெரியவருகின்றன.

கதை இங்கிலாந்தின் சிறு நகரில் தொடங்கினாலும், கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் கிழக்கு ஜெர்மனிக்கும், சில வளைகுடா நாடுகளுக்கும் செல்கின்றது; அல்லது அங்கே நடந்த நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் அழைத்துச் செல்கிறது. நிகழ்வுகள் கதை சொல்லிகள் மூலம், அவர்கள் இருவரது உரையாடல்கள் மூலம் வாசகருக்குத் தெரிய வருகின்றன. சாலே பல ஆண்டுகள் சிறை வாசத்திற்குப்பிறகு கொடுங்கோல் அரசிடமிருந்து தப்பி இங்கிலாந்து வருகிறார். இடம் பெயர்ந்தோருக்கான அலுவலர் கெவின் அவருக்கு அகதியாக இங்கிலாந்து வருவதன் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்கிறார். சாலே வைத்திருந்த முப்பதாண்டுப் பழமையான நறுமணப் பொருள் அடங்கிய பேழையையும் எடுத்துக் கொள்கிறார். ராசெல் என்பவருடைய உதவியுடன் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பபடுகிறார். கடைசியில் கடலருகிலுள்ள சிறு நகரம் ஒன்றில் அடைக்கலம் தரப்படுகிறார். இங்கே ”இரவின் நேரங்கள் மதிப்பு மிக்கவையாக இருக்கின்றன. இரவு மௌவனத்தின் முணுமுணுப்புகள்; அச்சமுறுத்தும் அமைதி இல்லை.”

ராசெல் அவருக்கு உதவ அவர் ஊர்க்காரரான லத்தீஃபை ஏற்பாடு செய்கிறார். லத்திஃபின் தந்தையிடமிருந்து அவர்களுக்குச் சேரவேண்டிய வீட்டையும், அவரது அத்தையின் வீட்டையும் சாலே ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக லத்தீஃப் நினைக்கிறார். மேலும் அவருடைய சகோதரர் ஹாசன் வீட்டைவிட்டுப் போனதற்கும் அவர்தான் காரணம் என்றும் நினைக்கிறார். சாலே அவர்களது வீட்டை எடுத்துக் கொண்டதற்காகவும் அவர்கள் விருப்பப்பட்ட மேசையைத் தர மறுத்ததற்காகவும் வருந்துகிறார். ஆனால் தான் நியாயம் தவறி நடந்தத்தாக அவர் நினைக்கவில்லை. உண்மையில் அவர்தான் லத்தீஃபின் தந்தையும் ஒழுக்கம்கெட்ட ஆஷாவும் செய்த சூழ்ச்சியால் நாடுகடத்தப்பட்டு சிறையில் பல ஆண்டுகள் துன்பப்பட நேர்ந்தது. அவரது குழந்தையும் மனைவியும் இறக்கிறார்கள். விடுதலைபெற்றுத் வீடு திரும்பிய பிறகும் வீட்டை விட்டுப் போன லத்தீஃபின் சகோதாரன் ஹாசன் திரும்பி வந்து மீண்டும் ஓமருக்கு ஆபத்து விளைவிக்கிறான். அதிலிருந்து தப்பிக்கத்தான் இங்கிலாந்துக்கு அகதியாக வருகிறார். ஆனால் இந்தச் செய்தி லத்தீஃபுக்கும் வாசகருக்கும்கூட கடைசியில் தான் தெரியவரும். ஏற்கனவே சாலே மேல் அனுதாபம் கொண்டிருக்கும் வாசகருக்கு இப்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது. அதேபோல லத்தீஃபும் மனம் மாற்றம் அடைகிறார். இருவருமே தாங்கள் போக முடியாத தாயகத்தை, கடலுக்கு அப்பாலுள்ள தங்கள் நாட்டை, வேற்று நாட்டுக் கடற்கரையில் கூட இல்லை, கடற்கரைக்கு அருகிலிருந்து எண்ணிப் பார்க்கிறார்கள்.

சாலே முதலில் தனது கதையை ராசெலிடம் சொல்கிறார். அரேபிய இரவுகள் போல கதைக்குள் கதையாக நாவல் வளர்கிறது. தனிப்பட்ட மனிதரின் கதை விரிவதைப்போல சான்சிபாரின் வரலாறும் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுப் பழமைவாய்ந்த சான்சிபாரை கடற்கொள்ளையர்களும், வணிகர்களும், போர்த்துக்கீசிய நாடுபிடிப்போரும் சீரழித்த கதை சொல்லப்படாவிட்டாலும் 1960 இல் பருவக்காற்றுக் காலத்தில் வந்த நறுமணப்பொருள் வணிகர் ஹுசையினின் வருகையும் அதனால் இரண்டு குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களும் பிறநாட்டு வணிகர்கள் சான்சிபாரின் மேல் அக்கறை கொண்டதைக் காட்டுகின்றன. அதன் பிறகு ஏழாண்டுகள் கழித்து ஏற்பட்ட மார்க்சியப் புரட்சியால் ஏற்பட்ட விளைவுகள் சாலேயைப்போன்ற பலவணிகர்களைப் பாதிக்கின்றன. பல தொழில்கள் நொடித்துப் போகின்றன. பல வீடுகள் கைமாறுகின்றன. அரசுகள் மாறுகின்றன, வீழ்கின்றன. தேர்தல் தில்லுமுல்லுகள், காரணமின்றிச் சிறையிலடைத்தல், சித்திரவதைகள், ஊழல், பாலியல் வன்முறைகள், படுகொலைகள் எல்லாமே எல்லா காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளிலும் நடப்பதைப் போலவே இங்கும் நடந்தேறின.

ஆனால் இவையெல்லாம் இந்தப் பின்காலனிய நாவலில் தொட்டுக் காண்பிக்கப்படுகின்றனவே தவிர விகாரமாக விவரிக்கப்படவில்லை.
ஏனென்றால் இந்த நாவலின் முதன்மைக் கருப்பொருள் ஏதிலிகளாய் வந்த புலம் பெயர்ந்தவர்கள் பற்றியது, எனவே ஆங்கிலம் தெரியாதவர்போல் முதலில் நடிக்கும் ஓமரும், பல்கலைக் கழகத்தில் (குர்னா போல) பேராசிரியராக இருக்கும் லத்தீஃபும் அகதிகளாய் இங்கிலாந்து வந்தவர்கள். ஓமர் அந்த வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறார். ஆனால் லத்தீஃப் முன்னரே வந்து நல்ல நிலையில் இருப்பவர். அகதியான ஓமர் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி தனது குரலையும் பெயரையும் திரும்பப் பெறுகிறார். தன்னுடைய, தனது நாட்டினுடைய அடையாளத்தையும் வரலாற்றையும் கண்டுகொள்கிறார். இனஒதுக்கலையோ வெறுப்பையோ அவர்கள் அதிகம் சந்திக்கவில்லை. ”இந்த இடத்திற்கு வருபவர்கள் இல்லை. அவர்கள் மதிப்பவற்றை இவர்கள் மதிப்பதில்லை. உங்களுடைய வாழ்க்கையைக் கடினமாக ஆக்குவோம்; இழிவுகள் இருக்கும், வன்முறை இருக்கும்,” என்ற கெவினுடைய எச்சரிக்கை தேவையில்லாமல் போனது.
புலம்பெயர்தலையும் அகதிகளின் நிலையையும் பின்புலமாக வைத்துக் கொண்டு குர்னா வரலாறுகளும் பழைய நினைவுகளும் இரு பகைவரிடையே ஏற்படுத்தும் மாற்றங்களைக் காட்டுகிறார் என்று சிலர் கருதுகின்றனர். தவறான புரிந்தல்கள், மனத்தாங்கல்கள், அவமானம், அவ்ற்றிலிருந்து மீளுதல், மன்னிப்பு ஆகிய கருப்பொருள்கள் முன்னிற்கின்றன. லத்தீஃப் கடற்கரை நகர வீட்டில் சாலேயைச் சந்திக்கும்போது சாலே தனது முதுமையை, வரலாற்றைத் திரும்பிவரச் செய்யமுடியாத தனது இயலாமையை (லத்தீஃப் கேட்ட மேசையைத் தறாமல் போன குற்றம் மனத்தை உறுத்துகிறது) நினைத்துத் தன்னிரக்கம் கொள்கிறார்.

”[நான்} கைகழுவும் தொட்டிக்க்குள் கூர்ந்து பார்த்துக் கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கி, எப்போதுமே மங்காதது போல இருக்கும் நினைவினால் சூழப்பட்டு, வலுவிழந்து எங்களது ஆன்மாக்களின் சிறுமையையும் கந்தலாகிப்போன நிலையையும் எதிர்க்கமுடியாமல் வலுவிழந்த எனக்காகவும் என்னைபோனறவர்களுக்காகவும் துக்கத்தில் மூழ்கிப்போகிறேன்.” அவர் செய்த தவறு மிகச்சிறியது, சொல்லப்போனால் தவறே இல்லை. அதற்காக வருந்தி லத்தீஃப் தன்னை மன்னிப்பாரா என்று அவர் அஞ்சுகிறார். மன்னிப்புக் கேட்கவேண்டியவர் லத்தீஃப். அவர் இறுதியில் பிழையை உணர்கிறார், ஏற்றுக்கொள்கிறார். அன்னிய நாட்டிற்கு அகதியாகத் தனது முதுமையில் வந்து தன்னையே நொந்து கொண்டிருக்கும் ஓமருக்கு ஒரு ஆருதல் கிடைக்கிறது. இருவருக்கும் இடையேயுள்ள பிணக்கு கதைக்கு முடிச்சு. அது இறுதியில் அவிழ்கிறது. கருப்பொருள் தெளிவாகிறது. ஆனால் கதைக்கான பின்காலியானப் பின்னணியைத் தருவதுதான் இந்த நெஞ்சைத்தொடும் கதையைச் சொல்வதன் நோக்கமோ என்ற ஐயமும் எழுகிறது.

”குன்ராவின் நாவல் பின்காலனிய உலகின் அவலக்கதை. இங்கே கூடிவரும் உருக்குலைவுகளின் ஒளிக்குள் வந்து கண்கூசி நிற்கிறார்கள் ஏதிலிகள்.”
சாலே ஓமரின் தனித்தன்மை அவரை ஏதிலிகளின் மத்தியில் தனியாகக் காட்டும். ஹெர்மன் மெல்வில்லின் சிறுகதை ஒன்றில் வரும் “ நான் அப்படிச் செய்யவே விரும்புகிறேன், “I prefer to” என்ற வாக்கியம் அடிக்கடி நாவலில் வருவது இதனைக் காட்டுகிறது.

மனித உணர்ச்சிகளின் மோதல்களை மென்மையாக வெளிப்படுத்தும் நாவல் அவருக்கு நோபெல் பரிசு கொடுத்தறகான காரணத்தைக்கூறும் வாசகத்திற்கு ஒரு விளக்கமாக இருக்குமா?

”காலனியத்தின் விளைவுகளையும், பண்பாடுகளுக்கும் கண்டங்களுக்கும் இடையேயான இடைவெளியில் அகதிகளின் விதியையும், சமரசம்செய்யாத கருணைமிக்க ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தியதற்காக” நோபெல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ச. வின்சென்ட்

Abdulrazak Gurnah
By the Sea
Bloomsbury 2001
Pages 256
Price New Press $22.90