கடற்கரை தாகம் கவிதை – பூ.கீதா சுந்தர்
பள்ளிப் பருவத்தில்
திரை போட்ட
அவள் முகம் காண விரும்பியவர்களுக்கு
காணக் கிடைத்தன
அவளின் பாதவிரல்களே…
அவளின்
கொள்ளை அழகை
கொள்ளை கொண்டு
போனது திருமணம்
என்னும் திருப்பம்…
தந்தையின்
நன்றியுணர்வால்…
திருமணம் போன்றே
முதலிரவிலும் விருப்பமின்றியே களையப்பட்டன
மன ஆடையும்
உடல் துகிலும்!
உடன் இருந்தவனின்
குடி போதை நாற்றத்தில் திக்கு முக்காடி
திணறியது
அவள் சுவாசம்
காலச் சக்கரத்தில் ஒட்டிய
கசடென
நோய்மை குடியேறியவனைக் காத்திருந்து
தூக்கி சென்றான்
மரணதேவன்
கையில்
குழந்தை கனக்க
அவளோ
கைம்பெண்ணாய்..
தான் தனியல்ல
துணை உண்டென
தேற்றிய மனதுடன்
உச்சி முகர்ந்தாள்
மடந்தை.
கணவனால்
களவாடப்பட்ட
பொழுதுகள் கனக்கவில்லை
அது எதுவும்
அவள் மனதில் நினைவிலில்லை
சட்டென ஒரு நாள் உணர்ந்தாள
தன் இளந்தாகம்
தினம்
இரவுகளின்
கோரப் பற்கள்
கிழித்திட தொலைந்தது
அவள் தூக்கம்
தலையில்
ஊற்றிய தண்ணீரால் அடங்காத நெருப்பு
அணைபட மறுத்தது…
உடைபட துடித்தது…
வளர்(த்)ந்த மகனிடம் மறுமணத்திற்கு
கேட்டாள்
மறுவாய்ப்பு..
இத்தனை நாட்களுக்குப்
பின்னுமா
இந்த எண்ணம்
வெளியிலென்ன
பேசுவார்களென
வெகுண்டான் அவன்..
இறுதிவரை
அவளின் முகமும்
அகமும் தெரியாமல்
மூடியது சமூதாய மேகம்
என்றென்றும் தீராது
கடற்கரை தாகம்
பூ. கீதா சுந்தர்
சென்னை