நூல் அறிமுகம்: ம. காமத்துரையின் கடசல் நாவல் – ந. ஜெகதீசன்
நூல் : கடசல் நாவல்
ஆசிரியர் : ம.காமுத்துரை
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: 350
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
காலந்தோறும் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அம்மாற்றங்கள் சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். மாறாக சமுதாயத்தில் நிகழும் பல மாற்றங்கள் பெரும்பான்மையானோரை துக்கத்திலும் துயரத்திலும் ஆழ்த்துவதாகவே இருக்கிறது. அவர்களது வாழ்வாதாரத்தை கெடுப்பதாகவே இருக்கிறது.
அவ்வாறு எண்பதுகளில் தொழில் துறையில் நிகழத் தொடங்கிய ஒரு மாற்றத்தை மையமாகக்கொண்டு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் இறுதி பக்கங்களை வாசிக்கும் வரை நாவலின் மையக்கருவை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வகையில் ஒரு சிறுகதையின் தன்மை நாவலின் இறுதியில் வெளிப்பட்டிருக்கிறது.
நாவலை வாசிக்கத் தொடங்கும் முன் கடசல் என்ற பெயர் என்னை ஐயத்திற்க்கு உள்ளாக்கி இருந்தது. நாவலின் பின்புற அட்டையில் நாஞ்சில் நாடன் அவர்களின் உரையை வாசித்தபோது தான் இது தொழில்துறை கடசல் (டர்னிங்) வேலையை குறிக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
ஒரு பட்டறை ஆகட்டும் சினிமா கொட்டகை ஆகட்டும் ஒரு வீதி ஆகட்டும் வீடாகட்டும் கோயிலாகட்டும் கடைத்தெருவாகட்டும் அவ்விடங்களில் இருக்கும் கதாபாத்திரங்களோடும் காட்சிகளோடும் வாசகனையும் மூன்றாம் நபராக நின்று கண்கொட்டாமல் பார்க்கச் செய்வார் ஒரு கை தேர்ந்த படைப்பாளி. அவ்வாறு இந்த நாவலில் வரும் பாத்திரங்களோடும் காட்சிப் படைப்புகளோடும் வாசகனை கரைந்து போகச் செய்து விடுகிறார் ஆசிரியர்.
சமுதாயத்தின் கடைநிலை மக்களின் வாழ்வைப் பேசுகிறது இந்த நாவல். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான வட்டாரச் சொற்களையும் வழக்காறுகளையும் இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். வாசிக்கத் தொடங்கியவுடனே நாவலானது உள்ளிழுத்துக் கொள்கிறது. நாவலின் காட்சிகள் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன. அவை அடுத்த அத்தியாயத்தை வாசிக்க நேரத்தை ஒதுக்க தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
சிரிப்பு நட்பு காதல் அழுகை கோபம் காமம் துக்கம் என்று மனிதர்களின் வாழ்வில் தோன்றும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் தேவையான இடங்களில் இயல்பாக நாவலில் பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர். தற்காலகட்டத்து நாவல்களில் சிரிப்பு என்பது குறைவுதான் . அதுவும் சில இடங்களில் கேலியாகவும் கிண்டலாகவுமே தான் இருக்கும். எதார்த்தமாக நம்முடன் வாழும் ஒரு சக மனிதனை போல செந்தில் என்னும் நகை உணர்வை தூண்டும் கதாபாத்திரம் இந்த நாவலில் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இயல்பு.
தற்காலத்தில் பேயை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் சிறப்பாக ஓடுகின்றன. இதற்கு காரணம் பேயின் மீதுள்ள ஆர்வம்தான். தாம் புரிந்துகொள்ளாத ஒன்றை மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நாவலில் பேய் குறித்த ஒரு ஆழமான பார்வை வெளிப்பட்டிருக்கிறது. மனதில் பெரிதாக காயம் ஏற்படுவதால் ஒருவன் தன்னுடைய உயிரை போக்கிக் கொள்ளும் போது அவனது அந்த ஆற்றல்மிக்க மனமானது இந்த பிரபஞ்சத்தில் தங்கிவிடக்கூடும். அவ்வாறு தங்கிவிட்ட மனமானது ஒத்த அலைவரிசையில் உயிருடன் இருக்கும் மனிதனின் மனதை ஆக்கிரமிக்க தொடங்குகிறது. இவ்வாறு இறந்த ஒருவனின் ஆற்றல்மிகுந்த மனம் உயிருடன் இருக்கும் ஒருவனின் மனதை ஆக்கிரமிப்பதை பேய் பிடித்தல் என்கிறோம். இந்த நாவலில் வரும் பேய் விரட்டும் காட்சி நான் சிறுவயதில் கிராமத்தில் கண்ட காட்சிகளை நினைவு கூறச் செய்தது.
பேய் குறித்து அறிவியல் பூர்வமான கருத்துகளை எழுத்தாளர் அ. உமர்பாருக் அவர்கள் தமது ஆதுரசாலை நாவலில் வெளிப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இரும்பு கடையும் இடத்தில் பேய்க்கும் இடம் கொடுத்து நாவலை நவரசம் ஆக்கியுள்ளார் ஆசிரியர். சாப்ட்டை லேத்தில் பிடித்து கடைசல் செய்யும் நுணுக்கங்களும் ஒரு தகரத்தை வெல்டிங் செய்யும் நுணுக்கங்களும் இந்த நாவலைப் படிப்பவர்க்கு கைக்கூடிவிடும்.
தேவையான பொருட்களை வாங்கியும் தன்னிடம் இருக்கும் பொருட்களை வைத்தும் மனதில் உதித்த வடிவத்தை அழகுபட செய்வது ஒரு வகை கலைநயம். தாம் நேரில் பார்த்து வாழ்ந்த மாந்தர்களின் வாழ்க்கையினூடாக சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நுண்ணிய மாற்றங்களை பொது சமூகம் கவனிக்கத் தவறிய கணங்களை ஒரு இரும்பு உருளைக்கொண்டு அழகாக நேர்த்தியாக கடைந்திருக்கிறார் நாவலாசிரியர்.
சிறு குறு பூச்சிகளை பெருவாய் முதலைகள் விழுங்குவதைப் போல பெருநிறுவனங்கள் சிறுதொழில்களை விழுங்குவதை பதிவு செய்திருக்கும் ஒரு காலப்பெட்டகம் இந்த நாவல். இலக்கிய உலகம் வாசிக்கப்பட வேண்டியதொரு படைப்பு இது.