நூல் அறிமுகம்: தமிழில் பேரா. ச. வின்சென்ட் உருமாற்றம் – பொன் விஜி

நூல் அறிமுகம்: தமிழில் பேரா. ச. வின்சென்ட் உருமாற்றம் – பொன் விஜி




அன்பான நண்பர்களே,
இப்படியாகத் தொடங்குகிறது சிறுகதைகள். தனது நீண்ட நித்திரைக்குப் பின், கனவு கண்டு விழித்த போது, தான் ஒரு இராட்சத வண்டாக உருமாறியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும் கிரோக்கோர், ஆரம்பத்தில் தந்தையைத் தவிர மற்றவர்களால் அரவணைக்கப்பட்டாலும், இறுதியாக எல்லோராலும் வெறுக்கப்படுகிறான். அவரது நடமாட்டம் ஒரு அறைக்குள்ளேயே இடம் பெறுகிறது. அதேவேளை 3 முறைதான் அவருக்கு வெளியில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவரது யோசனைகள், மற்றவர்களின் கற்பனைகள், நடைமுறைக்குக் கொஞ்சம் சாத்தியமற்ற பல நிகழ்ச்சிகளைத் தனது கதாபாத்திங்களின் மூலம் நகர்த்துகிறார் காஃப்கா அவர்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர் ச. வின்சென்ட் அவர்கள் கூறியதுபோல் காஃப்கா வின் நாவல்கள் புரிந்து கொள்ளவது கொஞ்சம் கஷ்டம் தான், கொஞ்சமில்லை சில வேளைகளில் என்னைப் பொறுத்தவரை தலை சுற்றும் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த மாதிரி என்பார்கள். சொல்ல வந்ததை மிகவும் நீட்ட்ட்ட்ட்டிக் கொண்டே போவார்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று நான் என்னையே கேள்வி கேட்டேன். இருப்பினும் நாம் வாசிக்கும் போது முழுக் கவனமும் புத்தகத்திலேயே செலுத்தி விட்டால், கடைசியில் என்ன சொன்னார் என்பதனை தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம். ச. வின்சென்ட் மொழிபெயர்த்த ஃபிராய்ட் நாவல் (ஆசிரியர். ஜோனத்தன்) வாசிக்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. காரணம், ஆசிரியர் ஜோனத்தன் ஃபிராய்ட்டின் தத்துவங்களை ஆய்வு செய்து இரண்டுபக்க நியாயங்களையும் தந்துள்ளார். எனது பார்வையில் உள்வாங்க சிரமமாயிருந்தது என்றே சொல்லுவேன். காஃப்கா வின் மொழி நடை வித்தியாசமானது என்றே கூறலாம். விசாரணை கூட இதே நடைபோல் தான் எனக்குப் படுகிறது. (அவர் சொல்ல வரும் விடையம்)

உருமாற்றத்தில் காஃப்கா தான் மட்டும் உருமாறியதுடன் மற்றவர்களையும் உருமாற்றி விட்டார் என்றே தோன்றுகின்றது. அவரது அப்பா, அம்மா, தங்கை, வேலைக்காரி உட்பட எல்லோரையும்.. மனிதன் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் அதனை உள்வாங்குவதில்லை. அதனை நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், சமூகத்திலும் காணலாம். அதனைத் திரும்பிப் பார்ப்பதில்லை. இயந்திர வாழ்க்கை அவற்றையெல்லாம் எங்கேயோ தூக்கி எறிந்து விட்டது. தனி மனித தெரிவுக்கு ஒரு போதும் இடமே இல்லை, இந்த ஓட்டுமொத்த சமுதாயமே அவனைச் சிந்திக்க விடாது பெரிய சுத்தியலால் மண்டையில் போட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனைக்தான் காஃப்கா இங்கே படம் பிடித்துக் காட்டுகிறார். இதனை வாசிக்கும் போது பல குடும்பங்களில் இவற்றைக் காணலாம். ஆனால் அவை ஒரு புகைப்படச் சட்டத்திற்குள் பூட்டி வைக்கப்பட்ட படமாகவே எங்கும் காணப்படுகிறது. இவரது படைப்புக்களில் கதாபாத்திங்கள் குறைவாகவும் எங்கோ தொடங்கி எங்கோ முடிவதுபோல் இருந்தாலும், சொல் வந்த கருத்தை சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை நண்பர்களே.

இந்நாவலின் சிறுகதைகளை

* உருமாற்றம்.
* சீனாவின் நெடுஞ்சுவர்.
* ஒரு நாயின் ஆராய்ச்சி.
* தண்டனைக் குடியிருப்பில்.
* இராட்சத மூஞ்சுறு.

ஆகிய தலைப்புகளில் காணலாம்.
இங்கே இருப்பியலை இரண்டு வகையாகப் பார்க்கிறார் காஃப்கா. முதலில் 2வது உலக மகா யுத்தத்தின் பின்னர், அறிவுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு அபத்தத்தை ஏற்படுத்தும் சமூகம், அடுத்தது ஒரு அரசு, மக்களின் சுயவிழிப்பை அறுத்து விட்டு, புதியதொரு இயந்திரமயத்தை அறிமுகம் செய்வதாகக் குறிப்பிடுகிறார். அடுத்தது, புறக்கணித்து ஒதுக்கப்படுத்துதல். தனிமனிதனிலும் சரி, குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி, இந்த மனோநிலமையை மாற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் அவர், தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தினை அடிப்படையாக வைத்து, மற்றும் முதலாளி, தொழிலாளிக்குமிடையேயுள்ள வேறுபாட்டைக் கிண்டல் செய்கிறார்.

அறியாமையும், முரன்பாடுகளுமே குவிந்து கிடப்பதையும், அதனையே மக்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறார்கள் எனக் கூறும் அவர், நெடுஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டதாக அரசு அறிவித்தாலும் ஆனால் முழுமை பெறாத நிலையில் சுவர் உள்ளதற்கு, இன்னும் பல ஓட்டைகள் இருப்பதைக்காட்டி, அது எந்தக் காலத்திலும் அடைக்கவே முடியாது என்ற உவமையோடு தனது தத்துவக் கருத்தை இங்கு பதிவு செய்கிறார் காஃப்கா.

தண்டனைக்குரியவர், ஆய்வாளர், அலுவலர், பொலிஸ் அதிகாரி, இவர்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் குழப்பங்களினால், மரணதண்டனைக்குரியவர் விடுதலையாகிறார், அலுவலர் மீது தண்டனை சுமத்தப்பட்டுகிறது. புரிதல் இன்றி இயங்கும் நிர்வாகச் சீர்கேடுகளை மிகவும் தமாஷாகக் காட்டுகிறார்.

விலங்குகளயே வைத்து, மறைமுகமாக தனது சுய வாழ்க்கையை முன்வைக்கும் அவர், பூமி இந்த உணவை எங்கிருந்து பெறுகிறது  என்றும், மிதமிஞ்சிய உணவு இருப்பின், இல்லாதவர்களுக்குக் கொடு என்ற தத்துவத்தைக் காட்டுகிறார். இராட்சத மூஞ்சுறு எப்படி வந்தது என்று ஆராய வரும் தொழில் அதிபர், அங்குள்ள கிராமத்து ஆசிரியர், கல்வியாளர்களும் மோதும் இடம் மிக அருமையாக படம் பிடித்துக் காட்டும் காஃப்கா, இறுதியாக, உருமாற்றம் பெற்ற இராட்சத வண்டு தொடர்ந்தும் வாழ்ந்ததா? அல்லது தொலைந்து போ என அடித்துக் கொல்லப்பட்டதா? சரிதான் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்களா? அறிய நாவலை வாசியுங்கள் நண்பர்களே..

என்னைப் பொறுத்த வரை மிக அருமையான நாவல். எங்கள் வீட்டுக்குள் கூட இப்படியான உருமாற்றத்தைக் கண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த விதமான உருமாற்றம் நடைபெற்றிருக்கும். அதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனக்கூறி, ஏற்கனவே பலராலும் வாசிக்கப்பட்ட இச் சிறுகதைகள் இன்னும் வாசிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை உங்களோடு பகிர்வதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்: உரு மாற்றம்
ஆசிரியர்: ஃபிரான்ஸ் காஃப்கா
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
நூல் வெளியீடு: எதிர் வெளியீடு 
விலை: 280/-
பக்கம்: 238
முதற் பதிப்பு: டிசம்பர் 2014
இரண்டாம் பதிப்பு: ஜூலை 2021
புத்தகம் வாங்க: 24332924

https://thamizhbooks.com/product/urumaatram-5801/