Posted inPoetry
கல் கவிதை – சூர்யநிலா
அவள்
சுமக்க முடியாத தனது
திருஉருவை
தூக்கிக் கொண்டு
மலையேறினாள்.
சடுதியில் விரையும்
மெல்லிய தேகமுடையவர்களை
சபித்தபடி
ஊர்ந்தாள் மேல்நோக்கி.
சனிக்கிழமைகள்
புண்ணியமிக்கவை என்று
சொன்னவர்களை
வைதபடி மேலும்
சில படிகள் கடந்தாள்.
இரை விழுங்கிய மலைப் பாம்பின்
இயலாமை
அவளைப் படுத்திற்று.
காலில் இடறிய சிறு கல்லை
ஆற்றாமையில் எடுத்து வீசினாள்
அது
பெருமாளின் மீது போய் விழுந்தது