காலத்தின் தீர்ப்பு  கடவுளின் தீர்ப்பு கவிதை – கலா புவன்

காலத்தின் தீர்ப்பு கடவுளின் தீர்ப்பு கவிதை – கலா புவன்




வெங்கொடுமைச் சாக்காடில்
விழவைத்தார் அன்றொருநாள்
பெண்களும் குழந்தைகளும்
வீழ்ந்தது போல்
துடித்தார்
துவண்டார்
மடிந்தார்
மரணமுற்றதே மனிதநேயம்
ஆண்டோரின் கொடுங்கோலாட்சி
அனைவரையும் ஓடவைத்தது
வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிமாண்டார்
மாளவைத்த மன்னராட்சி
அரக்கர்களின் அநியாய பிரதிபலிப்பு
வாய்க்கால் கரையோரம்
வசந்த தலைவனையே வீழ வைத்து
நோகடித்துச் சாக வைத்தார்
திக்கெட்டா நெடுந்தொலைவில்
தெறித்தோடி சென்றவர்கள்
உகுத்த கண்ணீர் பெருவெள்ளம்
வரலாறு திரும்பிற்று இன்று
பெருவலி தந்தவர்கள்
பெருத்த அவமானத்துடன் ஓடுகிறார்
திக்கேதும் அறியாமல்
தீவு தேடி ஒழிகின்றார்
இரத்தக் கண்ணீரே திரும்பிய பக்கமெல்லாம்
நிகர்தெளுந்து ஓடுகிறது
மனிதநேயம் அறியாதோர்
மன்னிப்புத் தேடியே
மன்பதையில் அடைக்கலம் நாடியே
மனுக்கள் பல விடுக்கின்றார்
அந்தோ பரிதாபம்
அனைத்துலகும் மெளனித்து
அலட்சியமே செய்யும்கால்
ஆண்டவனின் நீதியின்று
ஆழமாய்க் கோலோச்சுது

காலத்தின் தீர்ப்பு இதுவே
கடவுளின் தீர்ப்பும் இதுவே

ஆமென்

கலா புவன் – லண்டன்

காடு கவிதை – கலா புவன்

காடு கவிதை – கலா புவன்




பகலின் இருட்டு
மரங்களின் அடர்த்தி
அருவிகள் தொடங்குமிடம்
நகரங்களின் முன் ஜென்மம்
காடு

மனிதன் காட்டிற்கு அன்னியமானவன்
மரங்களை அழித்து ஊர்களை உருவாக்கினான்

மனிதனின் ஆசைகளுக்கு அளவேயில்லை
காடு என்ன பாவம் செய்தது ?

காடுகள் அழிக்கப்பட்டன
நிலங்களை கூறுபோட்டு விற்றனர்

காடு குறையக் குறைய மழை நின்றுபோனது

நாடுகளின் வயல்கள் வறண்டு போயின
காட்டு மரங்களை அழித்து காகிதம் செய்தான்

படித்த புலவர்கள் காடுகளை காப்போம்
என்று புத்தகங்கள் எழுதி வெளியிட்டனர்
இதுவே
ஒரு பெரிய முரண்பாடு

நெகிழி நாற்காலிகளை விட மர நாற்காலிகள் சிறந்தவை
மரக்கட்டில் பாட்டிக்கும்
மரபொம்மைகள் குழந்தைகளுக்கும்
மரமேசைகள் குடும்பத்திற்கும்
உகந்தவை

முன்னாளில் அடுப்பெரிக்க
மரங்கள் பயன்பட்டன

மரங்கள் எரிப்பில்
வியாதியற்ற சாப்பாடு வீட்டிற்கு உதவியது

காடுகளை அழித்து ,எரித்து நிலக்கரி தயாரிக்கின்றனர்
நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர்

எப்படியோ புலிகளைப் போலவே
காடுகளும் உலகில் குறைந்து விட்டன

காடு வளர்ப்போம்
காட்டைக் காப்போம் என்ற
வெற்றுக்கோஷம் மட்டும்
விண்ணளவு முழங்கப்படுகிறது

அய்யகோ இதென்ன பெரும் கொடுமை ?

இனியாவது விழித்துக் கொள்வோம்
இருக்கும் காடுகளை பாதுகாப்போம்

ஆமென்

கலா புவன் -லண்டன்

கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்

நிழலும் நிஜமும்
நிழலின் ஒளியிலே நான் நடக்கிறேன்
உயிர் உறையும் பனியின் காற்றில் மனிதநெடியின் வாசம்
குண்டுகள் குவலயத்தை தீக்கிரையாக்கிய நெடி
மனிதம் உருவழிந்து போயிற்று

புள்ளினங்கள் மடிந்து போயின
குழந்தையின் அலறலும்
ஆந்தையின் அலறலும் நடுநிசியைக் கிழித்தன
மனிதனின் இருப்பின் நிலை கேள்வியானதோ
கேவலத்தின் உச்சம் ஆக மனிதன் ஆனானோ?
அவலங்களின் மொத்த வடிவமே அகிலந்தானோ?

தீச் செயல்கள் படையெடுக்க தீய்ந்தது மானிடந்தானோ ?
அரசும் மக்களும் எதிர் எதிர் பாதைகளில் பயணித்தல் கொடுமையன்றோ?
சிவப்புக் குருதிநதிகள் தெருக்களில் ஓடுகின்றன
உவப்பு வாழ்க்கை எங்கோ ஓடிவிட்டது
மேகங்கள் பொழியும் மழை கண்ணீராய் மாறிவிட்டது

இந்நிலை எந்நாளும் என்றால்
உயிர்கள் இல்லா உலகே
நிதர்சனமாகும்
தீப்பந்தங்களின் கொடூரத்தால் குழந்தைகள் மடிந்து போகும்
துப்பாக்கி ஓசைகள் நாட்டின் இசையாகும் அவலம் அரங்கேறும்
அய்யகோ அய்யகோ மானுடம் இங்கே அழிந்தம்மா

*************************************************
மேகத் திரைக்கு பின்னால் இரு சந்திரன்கள்
ஒன்று சிவன் தலையில்
இன்னொன்று வானத்தில

கைலாயத்தின் பொற்கிரணங்கள்
வெண்பனி மலையில் பணியை சாரல் நதியாக்குகின்றன
மேகலையின் இடை நெகிழ்ச்சியில்
அன்பு ஊற்றெடுக்கிறது

எங்கிருந்தோ வரும் சூலாயுதம்
கைலாயத்தின் பள்ளத்தாக்கை
ஊடுருவிச் செல்கிறது
சிவப்புக் குருதி பொங்கி வழிகிறது

நந்தவனத்தின் பூ வாசனை
உலகத்தை வாசமாக்குகிறது
நீல நிற ஆகாயம் விண்மீன்களை பார்த்து
கண்சிமிட்ட சொல்ல

அவை தப்பாது
அப்பணி தனை
செய்கின்றன
அகிலத்தில் ஆனந்த லீலா விநோதங்கள்
அதிசயப் பூக்களாய் பூக்கின்றன

Kala puvan's Poems கலா புவன் கவிதைகள்

கலா புவன் கவிதைகள்




சமர் பறவைகள்
•••••••••••••••••••••••••
சிறகுகளின் மடிப்புகளில்
சமர் குறிப்புகளை வைத்திருக்கும்
பறவைகள் தினம் தினம் பறக்கின்றன
தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும்
தமது வாழ்க்கைப் போராட்டத்தை மறு விழியிலும்
சுமந்து வைராக்கியத்தை இலக்காக
ஒற்றைச் சிறகிலும் தூக்கிப் பறக்கிறது
நேற்றின் மகிழ்ச்சியையும்
இன்றைய அவலங்களையும்
நாளைய எதிர்பார்ப்புக்களையும்
தனது குஞ்சுகளுக்கு உணவுடன் ஊட்டுகிறது
சமர் பற்றிய புரிதலை
தமது குஞ்சுகளுக்குக்
கூடுகளிலேயே அறியப்படுத்துகிறது
அச்சத்தின் எச்சங்களை
தமது கழுத்தில் சுமந்து கொண்டு
தூரங்களைப் பறந்து கடக்கின்றன
இப்படித்தான் பறவைகள்
தங்கள் வானங்களில்
வாழ்க்கையை நடத்துகின்றன….
ஆமென்

நிழல்
•••••••••
என்னிலிருந்து என் முன் நீளும்
என்னிலிருந்து என்னுள் இறங்கும்
என்னிலிருந்து என் பின் தொடரும்
ஆதவனுக்கும் நிழலுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்
நிழலுக்கு உயிர் தருபவன் ஆதவன்
இரவு நேர நிழல்கள் விளக்குகளாலும்
மெல்லிய விளக்குகொளியாலும் ஏற்படுவன
விளக்கின் கண்ணாடியில் அமரும் சிறு கொசுவின் நிழல்
சுவரில் பூதாகரமாய்த் தெரியும்
நம்மைப் பயமுறுத்தும்
இரவு நிழலைக் கண்டு பயப்படாத குழந்தைகளும்
பெண்களும் அபூர்வம்
எப்படியிருந்தாலும் நாமும் நிழலும்
ஒன்றுடன் ஒன்றாய்ப் பின்னிப்பிணைந்து கிடப்பவர்களே
நானின்றி நிழலில்லை
நிழலின்றி நானில்லை
ஆமென்

காத்திருப்பு
••••••••••••••••••
என் கனவுகளின் மீது நிஜங்களை நீ வரைகிறாய்
முகையவிழும் மலர்க் காடுகளில் வசந்தம் வந்து வீசிப்போயிற்று
பேரன்பின் உதிர்தல் பற்றி நீயறிவாயா ?
இரவுகள் உதயமாகின்றன
பகல்கள் நீளங்களை அளக்கின்றன
அது பெருங்கடல்
ஆழத்தில் உறைகிறது

நிறங்களை
வண்ணத்துப்பூச்சிகள் வர்ணஜால வண்ணங்களாய்
மாற்றுகின்றன
அவை என்
கண்ணுக்குள் நுழைத்து என் கனவுக்குள் புகுகின்றன
நாம் இருவரும் மெளனங்களை மொழியாக்கி பேசிக்கொண்டிருக்கிறோம்
நீலோற்ப மலர்கள் வண்டினங்களின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன
நம்மைப்போல……….
ஆமென்