கலை இலக்கிய சங்கதிகள் கட்டுரை – விட்டல் ராவ்

கலை இலக்கிய சங்கதிகள் கட்டுரை – விட்டல் ராவ்



1.குழந்தைகள் வாசிப்பு

எதற்கும் ஒரு பழக்கம் வேண்டும். அதைவிடத் தீவிரமானது பயிற்சி. பயிற்சிக்கான ஆதார ஆரம்பமாய்ப் பழக்கமும் இருக்கக் கூடும். பழக்கம், பழக்கமாக மட்டுமே தொடர்ந்து, குறிப்பிடும்படியான வளர்ச்சி காணாது போய்விடவும் கூடும். பயிற்சி -சிந்தனை, ஆக்கம், சோதனை போன்ற வளர்ச்சிகளை உள்ளிட்டது.

வாசிப்பைப் பொருத்த அளவு தினசரிகளைப் படிப்பதற்கும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்கும் வெறும் பழக்கமே போதுமானது. “பத்திரிகை படிக்கிற பழக்கமேயில்லே” என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். ஆனால் அதைவிட இன்னும் சில படிகள் மேலே சென்று தீவிரமான, கனமான சங்கதிகளைக் கொண்ட பத்திரிகைகள், நூல்களை வாசிக்க நிறைய பயிற்சி தேவை. வாசிப்புப் பயிற்சிக்கு ஆதாரமான வாசிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே வருதல் ஆணிவேர் போன்றது.

வாசிப்பைப் பொருத்த அளவு, ‘குழந்தைகள்” என்று வரம்பு கட்டுவதிலும் இடற வேண்டியிருக்கிறது.

இப்போதென்றில்லை, பல வருஷங்கள் முந்தியும் கூடக் குழந்தைகள் என்னென்ன வாசித்தார்கள், எதெல்லாம் விரும்பி வாசித்தார்கள், அவர்களுக்கு எதெல்லாம் வாசிக்கக் கொடுக்கப்பட்டன, அந்த வாசிப்பு அவர்களில் எவ்வளவு விஸ்தாரத்தை ஏற்படுத்திற்று என்றெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஐம்பதுகளில் பாலர் மலர், டமாரம் பத்திரிகைகளில், “விச்சுவின் வனவாசம்” தொடர் வாசித்த குழந்தை, அப்போது கலைமகளில் வெளியான ஆனைக்குஞ்சித பாதம் எழுதி பரபரப்பூட்டின “நல்ல பிசாசு” கதையைச் சுவாரசியத்தோடு படித்தது. குஞ்சிதபாதமும் தன் குழந்தை வாசகர்களை வளர்க்க ‘வால் முளைத்த சாமியார்” எனும் திகில் கதையைத் தனி வெளியீடாய் வெளியிட்டார்.

நல்ல பிசாசையும் சேர்த்து ‘கலைமகளை’ முழுக்க வாசித்த வயது வந்தோர் டமாரத்தையும் அணிலையும் விட்டு வைக்கவில்லை. சிறுவர் பகுதி, பாப்பா மலர் என்று சில பக்கங்களையே நிரந்தரமாய்க் குழந்தைகளுக்கென ஒதுக்கிய பத்திரிகைகளுக்குக் குழந்தைகளிடையே செல்வாக்கு ஏற்பட்டது. 50-களில் ‘ஆனந்த விகட’னில், ‘சின்ன ஜமீன்தார்’ தொடர் வந்தபோது, அப்படித்தான் அது ஒரு முழுக் குடும்பப் பத்திரிகையாயிற்று.

அதேசமயம் தினமணியில், “மாண்ட்ரேக் என்னும் மந்திரவாதி” வண்ணச் சித்திரத்தொடர் வந்தபோது குழந்தைகளின் வாசிப்பில் தினசரியான தினமணியும் சிக்கினதோடு, அப்போது அதில் வெளியான ஆளவந்தார் கொலை வழக்குச் செய்தியும் அவர்களின் வாசிப்பில் அடங்கிற்று.

இன்றைக்கு வரிந்துகட்டி எழுதப்படும் அறிவியல் கதைகள் மற்றும் மர்மக் கதைகள் எல்லாம் குழந்தைகள் வாசிப்புத் தரத்துக்கு மேல் போகவில்லை . சில பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகள் குழந்தைகளுக்கான எழுத்துகளோ எனும்படியாயிருக்கின்றன.

ஆயினும் குழந்தைகளுக்கெனப் பத்திரிகைகள், நூல்கள் நிறையவே அன்றிருந்தன.

தினமணியின் மாண்ட்ரேக்கும், கதிரில் வந்த டப்பாச்சி முதலிய கதைகளும் குறிப்பிடத்தக்கன.

குழந்தைகளுக்கெனவே வெளியிடப்பட்ட பாலர் மலர், வாசிப்புப் பழக்கத்தை மட்டுமே தூண்டியது. புதுமொழிகளை வெளியிட்ட டமாரம், புதுமொழியின் ஆதிப் பழமொழி எது என்று கேட்டு குழந்தைகளைத் தேடச் செய்தது.

அணில், ஜில் ஜில் எனும் குழந்தைப் பத்திரிகைகள் சித்திரங்களில் கவனம் செலுத்தியதோடு, குழந்தைகளுக்கான சிறப்பு வெளியீடுகளையும் அழகிய முகப்புடன் வெளியிட்டன. ‘அழகி தாமரை’ போன்ற ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கதைகளும், அணில் வெளியீடுகளில் இடம் பெற்றன.

50-களில் நெ.சி.தெய்வசிகாமணியை ஆசிரியராய்க் கொண்டு ‘அம்பி’ மாதமிருமுறையாக வெளிவந்தபோது, குழந்தைகள் வாசிப்பில் பழக்கம் எனும் சாதாரணத் திறனை மாற்றி, பயிற்சி எனும் சிந்தனை சம்பந்தமான திறனைத் தூண்டிவிட்டது. வழக்கமான அம்சங்களான ‘கிளிக்கூண்டு” போன்ற தொடர்கதைகள், சிறுகதைகளோடு ‘அம்பி’யில் சிறுகதைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டன.

”சுழலும் ரங்கராட்டினத்தைப் பார்த்துக் கொண்டே…” என்ற வாக்கியத்தை ஆரம்பமாகக் கொண்டு சிறுகதை எழுதியனுப்பச் சொல்லிப் போட்டி வைக்கப்பட்டது.

குழந்தைகள், வாசிக்கும் பழக்கம் என்பதிலிருந்து வாசிப்புப் பயிற்சி பெற்று அதன் பயனாய்ப் பெருக்கிக் கொண்ட சிந்தனை – கற்பனைத் திறனைப் பிரயோகித்துப் பார்க்க ‘அம்பி’ வகை செய்தது. ஜ.ரா.சுந்தரேசனின் ‘நொண்டி” எனும் சிறுகதை முதல் பரிசு பெற்றது. அம்பி தன் பங்கிற்குத் தீபாவளி மலர் மற்றும் குழந்தைகளுக்கான தனி வெளியீடுகளைப் பதிப்பித்தது. சிப்பாய் சின்னச்சாமி, இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் (நெ.சி.தெ.). பட்டுப்பூச்சி (தங்கமணி) என்பவை அவை.

‘அம்பி’ நின்றுபோன அதே சமயம் அந்த இடத்தை அதைவிடப் பன்மடங்கு உறுதியாகவும், அதிகமாகவும் பிடித்துக்கொண்ட குழந்தைகள் பத்திரிகை, கலைமகள் குடும்பத்தைச் சேர்ந்த ‘கண்ணன்’ பத்திரிகை. குழந்தைப் பத்திரிகைகளிலேயே தரம், அழகான அமைப்பு, சிறப்பான விஷயங்கள் ஆகியவற்றைக் கொண்ட பத்திரிகை ‘கண்ண ன்’தான். ஆர்.வி. அதன் ஆசிரியர். அட்டைப்படம் ஒரு பத்திரிகையின் பரவலுக்கு வழி செய்யும் என்ற கருத்துக்குக் ‘கண்ணன்’ சிறந்த சான்று.

ஓர் அட்டைப் படத்தில் அரை நிஜார் போட்ட பையனும், முழு நிஜார் போட்ட பையனும் கையை மடக்கி, கையைத் தூக்கி ரோஷமாய்ச் சண்டைக்கு நிற்பது போன்று சித்தரித்தார் ஓவியர் சசி. இதைப் பாராட்டி வந்த குழந்தை வாசகர்களின் கடிதங்கள் பிரசுரமாயின. பிறகு பல பத்திரிகை விளம்பரங்கள் அந்தப் படத்தை உபயோகிக்கித்தன.

நீச்சல் கற்றுக் கொள், கிரிக்கெட் கற்றுக்கொள் – எனும் பகுதிகள் சம்பந்தப்பட்ட வல்லுநர்களின் விளக்கத்தோடு கண்ணனில் தொடர்ந்து வெளிவந்தன. அதே சமயம் இதில் ஆர்வி தாம் எழுதிய ஜக்கு, ஜக்கு துப்பறிகிறான், ஜம்பு, மாஸ்டர் பாலகுமார் ஆகிய தொடர் கதைகளில் சர்க்கஸ், புலி-சிங்கப் பயிற்சியாளர் களையெல்லாம் பயங்கர வில்லன்களாய்க் காட்டியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தோ எனும்படியிருக்கிறது. அன்றைக்குக் கண்ணனின் வாசகக் குழந்தைகளுக்கு சர்க்கஸ் என்றால் ஒவ்வாமையாக இருந்திருக்கலாம்.

‘கண்ணன்’, வாசிப்பு என்ற பழக்கத்தைத் தாண்டி, வாசிப்புப் பயிற்சி என்ற தளத்திற்குக் குழந்தைகளை உயர்த்தியதோடு, பெரியவர்களையும் சேர்த்துக் கொண்டது. ‘கண்ணன் கழகம்’ என்று ஒன்றை ஏற்படுத்தித் தமிழகமெங்கும் அதற்குக் ‘கண்ணன்’ கிளைக் கழகங்களை உண்டாக்கி வைத்தது. பிரதி மாதம் இதழ்களில் வரும் கிளைக் கழக அங்கத்தினர் கூப்பன்களைக் கத்தரித்து பூர்த்தி செய்து அனுப்பினால் அங்கத்தினராகலாம்.

வெளிர் நீலத்தில், வெண்ணெய்த் தாழியுடன் மண்டியிட்ட கண்ணன் மோனோகிராம் போட்ட இனாமல் பாட்சு அங்கத்தினருக்கு அனுப்பப்படும். சென்னையில் வருஷ மாநாடும் நடக்கும். தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் கண்ணன் கிளைக் கழக அங்கத்தினர்கள் சென்னைக்கு வந்து மாநாட்டில் கலந்து கொண்டது சாதாரணமானதல்ல. குழந்தைகளின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நல்லெண்ணப் பரிமாற்றம், தலைமை தாங்கும் பொறுப்பு எனப் பல உயர்ந்த சங்கதிகளை உள்ளடக்கி வளர்த்த பெருமை ”கண்ணன்” பத்திரிகைக்கும், கண்ணன் கழகத்திற்கும் உண்டு.

”அம்புலிமாமா’ வாசிப்புக்கு வயதுக் கணக்கேயில்லை. அதற்கும் அதற்குப் போட்டியாகப் புறப்பட்ட ‘பாலமித்திரா’வுக்கும் எவ்வயதினரும் வாசகர்களாயிருந்தனர்.

‘கல்கண்டு’ – குழந்தைகள் பத்திரிகையென்றுதான் தொடங்கப்பட்டது. வாசகர்களை ஈர்த்த கல்கண்டு, குழந்தைகளை – குழந்தைத்தனமான – வாசிப்பு – எல்லையிலிருந்து வேறு பிராந்தியங்களுக்கு இழுக்க முயற்சி செய்தது. தொடர்கதைப் பக்கத்திற்கு முன் பக்கத்தில் “நியூஸ்” என்ற செய்திப் பகுதியை முதன் முதலில் தொடங்கிய குழந்தைப் பத்திரிகை கல்கண்டு. தமிழ்வாணனைத் தவிர ராஜன் என்பவரும் (சின்னத் தம்பி) தொடர்கதையொன்று எழுதினார். ஏராளமான திகில் – மர்மக் கதைகளைக் கல்கண்டு வழங்கினாலும், வன்முறை மேலோங்கிய கதைகளை அது கொண்டிருக்க வில்லை .

ராஜனை ஆசிரியராய்க் கொண்டு “மிட்டாய்” என்ற குழந்தைப் பத்திரிகையொன்று வெளிவந்து சீக்கிரமே நின்றும் போனது. பிறகு வந்த ‘கரும்பு’ம், ‘பூஞ்சோலை’ யும் நிறைய தகவல்களையும் கதைகளையும் கொடுத் தன. குமுதத்தின் அச்சுக் கூடத்திலிருந்து வெளிவந்த “ஜிங்கிலி’யும் கல்கண்டு அளவுக்குப் பேர் சொல்லிற்று.

ஓவியர் சந்தனு, “சித்திரக்குள்ளன்” என்ற தன் பத்திரிகையின் மூலம் நவரசத்தையும் குழந்தைகளுக்கு வழங்கி வந்தார். கண்ணன், கல்கண்டு அளவுக்கு இது பிரபலமாகவில்லை.

மாயம், மர்மம், பயங்கரம் என்ற பதங்கள் பெரிதும்’ கதைவாசிப்பில் குழந்தைகளுக்கென வார்த்துக் கொடுக்கப்பட்டன. மாயக்கள்ளன், மர்ம மனிதன், பயங்கர நகரம் (கல்கண்டு – தமிழ்வாணன்), ரிவால்வர் ராஜா (ஜிங்கிலி – ரங்கராஜன்), பயங்கரப் பாதை (மிட்டாய் – ராஜன்), மாயத் தம்பி (நெ.சி. தெய்வ சிகாமணி), ஆற்றிலே மிதந்து வந்த பிரேதம் (தமிழ் வாணன்) என்று குழந்தைகளுக்காகத் திகில் – மர்மம் மிக்க அதே சமயம் வன்முறையை மிகவும் அடக்கி வாசித்த இந்தக் கதைகளால் சூழ்ந்த குழந்தைகளின் வாசிப்பு உலகில் குழப்பமும் நிகழ்ந்ததுண்டு.

இந்தச் சமயம் புதுமைப்பித்தனின் மொழி பெயர்ப்பில், “பிரேத மனிதன்” என்ற புத்தகமும் வெளிவந்து புத்தகக் கடைகளில் தொங்கிற்று. மர்மம், திகில் என்று மண்டையில் சரக்கேற்றப்பட்ட பல சிறுவர்கள் (குழந்தைகள்), குழந்தைப் புத்தக வரிசையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு புதுமைப் பித்தனின் பிரேத மனிதனையும் வாங்கிச் சென்று படிக்கத் தொடங்கி, படிக்க ஓடாமல், திணறிப்போய்ப் போட்டுவிட்டது வேறு விஷயம்.

குழந்தைகளுக்கென அன்று திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. பெற்றோர்களோடு மாமூல் படங்களையே விரும்பிப் பார்த்து, அதைப்பற்றி மற்றவர்களோடு பேசுவதுமாயிருந்த குழந்தைகள், வயது வந்த பத்திரிகைச் சங்கதிகளில் சஞ்சரிக்கவும் தயங்கவில்லை. டப்பாச்சி – படித்த கையோடு, கதிரில் வந்த கிராம மோகினி, துறைமுகக் காதலி, தாரா, பிரின்சிபால் கொலை முதலிய தொடர் கதைகளையும், விகடனில் நாயக்கர் மக்கள், சிஐடி சந்துரு, கட்டபொம்மு கதை ஆகியவற்றையும் வாசிக்காமல் விடவில்லை. குழந்தைகளுக்கெனத் தனி எழுத்து, தனிப் படைப்பு, தனிப் பத்திரிகை, சினிமாவென்று பிரத்தியேகமாகக் கொண்டு வந்தாலும், அதை வாசிப்பதோடு பிற வயதினருக்காய் அச்சேறுபவைகளையும் குழந்தைகள் படித்தே வைக்கின்றன.

பொதுவாக வாசிப்பு என்பது எல்லோரையும் வயதைப் புறக்கணித்த, வயதை மீறின கதியில் ஆழ்த்தச் செய்துவரும் ஒன்று என்பது ஐம்பதுகளிலிருந்தே நிரூபணமாயிருக்கிறது.

நன்றி:
திணமணிச்சுடர்.
(தமிழ்மணி – 1991 )