கலையரசியின் – கவிதைகள்

கலையரசியின் – கவிதைகள்




குழந்தை வேண்டும்
***********************
நகராத நாற்காலியின்
கர்வம் உடைய,
தள்ளி விட்டு விளையாட
குழந்தை வேண்டும்.

சரியாக அடுக்கபட்ட
புத்தகங்கள்
காற்றையும் விடுவதில்லை.
அவற்றின் நடுவில்
இரு கண்கள் நுழைய
குழந்தை வேண்டும்.

வட்டில் சோற்றை
வாரி இறைத்து
பின்னல் கோலமிட
குழந்தை வேண்டும்.

கன்னத்தில் அறைந்து
சிரிக்கும் விஷமப் புன்னகை
வழிந்தோடும் இதழ்களை
பார்த்து ரசிக்க
குழந்தை வேண்டும்.

பால் நிலாவின்
அழகைக் காட்டி
பால் சோறு சாப்பிட
குழந்தை வேண்டும்.

நாளெல்லாம் கவனித்தும்,
தந்தையைப் பார்த்து
தாவி ஓடிடும்
செல்லக் குட்டி
குழந்தை வேண்டும்.

கரண்டியும் தட்டும்
இசை கருவிகளாக
மாறி நடனமிடும்
அழகைப் பார்க்கக்
குழந்தை வேண்டும்.

மதில் சுவர்களை
வண்ணமியற்றும் கைகளை
வண்ணத்துப் பூச்சிகள்
நிறத்தைக் கடனாக
பெறக் காத்திருக்கும்
காலத்தைப் பார்க்கக்
குழந்தை வேண்டும்.

வெற்றுக் காகிதங்களில்
கிறுக்கி எறியும்
பிஞ்சுக் கைகளை
அழுத்தமாய் வருடிட

குழந்தை வேண்டும்.

உடைந்த வளையல்
**********************
அடுக்கி வைத்த
கண்ணாடி வளையல்கள்
பார்த்து கண்ணடிக்க,
குட்டி கரங்களில்
நுழைந்துக் கொண்டன.
அவள் சிறுமியாய்
இருந்த போது!

தாய்மாமன் சீரில்
பல வண்ண நிறங்களில்
அடுக்கடுக்காய் அடுக்கி
வரிசை கட்டி இருந்தன!
அவள் பெரிய மனுஷியான
போது!

மஞ்சள் தாலி
கழுத்தில் ஏற
வெட்கத்தில் சிணுங்கியபடி
கைகளில் குலுங்கின
அவள் திருமணத்தின்
போது!

ஒவ்வொருவராய் கை பிடித்து
கன்னம் தடவி
வளையல்களை
அடுக்கினர்!
அவள் வயிற்றில்
குழந்தை இருந்த
போது!

கணவன் கட்டிலில்
கிடத்தி இருக்க!
முகத்தில் மஞ்சள்
வகிட்டில் குங்குமம்
கரைந்து ஓடி வர!
பல வண்ண வளையல்களை
உடைத்தனர் பெண்கள்.
அவள் கணவனை
இழந்த போது!

வெயிலோடு
***************
சுட்டெரிக்கும் வெயிலில்
இருளாய் தொடரும்
நிழலை அணைக்கிறேன்
வெயிலோடு!

ஒற்றை பெஞ்சில்
ஓராயிரம் கதைகள்
பேசுகிறேன் வெயிலோடு.!

முகத்தில் துளிர்க்கும்
வியர்வை துளிகளுடன்
அயர்ச்சி சேரும்
வேளையில்
வெயிலோடு!.

கீற்றாக அறுபட்ட
வெள்ளரிபிஞ்சுகள்
அரிசி விதைகளை காட்டி
சிரிக்கும் போது
வெயிலோடு.!

தெளிந்த நீல வானில்
சட்டென பறக்கின்ற
சிட்டுக்குருவி
கண்களை அள்ளி
செல்லும் நேரங்களில்
வெயிலோடு.!

கருப்பு தார் சாலையில்
பறக்கும் மகிழுந்துகளின்
அடைத்த சன்னலை
வெறித்து பார்க்கும்
சிறுவர்கள் வெயிலோடு.!

குட்டையில் குளிக்கும்
எருமைமாடுகள்
நோகாமல் அசை போடும்
வாய்களில் ஊறும்
ஈக்களை அன்போடு
படரவிட்டு வெயிலோடு.!

தகிக்கும் சூட்டினை
ஏந்திக் கொண்டு
உருளும் டயர்களை
வீரட்டும் மழலைகள்
வெயிலோடு.!

பூத்து குலுங்கும்
நூறு வயது பனை
விண்மீன்கள் சிதறலாய்
கண்களை களவாடியபடி
வெயிலோடு.!

கரைத்து வைத்த
கஞ்சி குளுமையாய்
சட்டியின் விளிம்பை
எட்டிப் பார்க்க
நாக்குகள் குத்தாட்டமிட்டு
வெயிலோடு.!

– இரா.கலையரசி

பாண்டிமுனி சிறுகதை – இரா.கலையரசி

பாண்டிமுனி சிறுகதை – இரா.கலையரசி




பளபளன்டு விடியற நேரத்துல,மெட்டா நடந்து வருது பாண்டியம்மாள் சேவல். “கொக் கொக்” கழுத்தை தூக்கி கொண்டையை ஆட்டுற அழக நாள் பூராவும் பார்க்கலாம். தூரத்து மேகம் சாவாவ பார்த்து கண்ண சிமிட்டுது. செவசெவன்டு திமிறி நிக்குது “பாண்டி” ஆமாம் ! அதேன் அதோட பேரு. குத்தி இடிச்ச குருணையைக் கொண்டாந்து போட்டா பாண்டியம்மாள்.

“குட்டி கண்ணு” ” செல்ல தேனு” குரலைக் கேட்டதும் மிடுக்கா ஓடி வந்திடுச்சு.’என்னா! ஒரு அழகு? என் ராசா என் மன்மதன்..’ கொஞ்சி விளையாடுறா பாண்டியம்மாள்.

வெரசா நடந்து வந்துக்கு இருக்காரு மாயாண்டி. பாண்டியம்மாள் அப்பன். காட்டுல மொச்சை போட்டு இருக்காரு. ஒரு ஏக்கரா நெலந்தான் அதுல உசுரா இருக்காரு.

மழை போக்கு காட்டிக்கே இருக்கு. வர மாட்டேனு வம்பு பண்ணிகிட்டு இருக்கு. ரொம்ப தவிச்சு போனாரு.

வளர்ந்து நிக்கிற வெள்ளாமையா நிக்கிறா பாண்டியம்மாள். வெளச்சலும் இல்ல. பாண்டியம்மாள் கலியாணத்தையும் நடத்த முடியல.

“என்னா மனுசா இப்புடி கெறங்கி போய் இருக்க. மதியம் கஞ்சி குடிக்க வாரேனுட்டு வராமலே இருந்துகிட்ட.” கேட்கிறாள் பவளம்.

“அடி போடி புள்ளயா வளத்த செடிங்க. மழை இல்லாமல் காய்ஞ்சு கெடக்குதுங்க. வகுத்துக்கு இல்லாட்டி என்னா இப்ப?”

“அட கூறு கெட்ட மனுசா.? ஒன்னைய நம்பி தான் மொத்த குடும்பமும் ஒக்காந்து இருக்கு.இந்தா ஒன் மகள் எப்புடி இருக்கான்டு பார். வெவரம் பத்தாத புள்ளையா இருக்கா பாண்டியம்மாள். இவள் சோட்டு காரிக கையில ஒண்ணும் வயித்துல ஒண்ணுமா இருக்காங்க.
நம்ம புள்ள வெளைஞ்ச கதிரா இருக்கு. பருவத்துல பயிர் செய்யனுமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல.

“அதெல்லாம் தெரியாமலயா இருக்கு. கைக்கும் வாய்க்கும் பத்தாத பொழப்பு.”

“குண்டுமணி கருகமணியுமா சேர்த்து வச்சது இருக்கு.”பக்கத்து தெருவுல போட்ட லட்ச ரூவா சீட்டு ஒண்ணு இருக்கு. மத்ததுக்கு கடன் வாங்கிக்கிற வேண்டியது தான். கையும் காலும் தானய்யா நமக்கு மொதலு. அத வச்சு தான் இத்தனை காலமும் பொழச்சோம். இனியும் பொழப்போம்”.

முழிச்சு பார்த்துக்கு இருந்த கம்மங்கஞ்சிய புளிச்ச தயிரை விட்டு கரைச்சு குண்டா சட்டிய எடுத்து வச்சா பவளம்.

தொண்டைகுழில உருண்டு உருண்டு பயணிக்குது கம்பங்கஞ்சி. “ஒத்த மிளகாய ஒரு கடி கஞ்சிய ஒரு குடி”னு “மடக் மடக்”குனு குடிக்க பசிக்கு அத்தனை ருசியா இருந்துச்சு.

பவளம்,கருமாயபட்ட கரிச காட்டு பொழப்புல எந்த நல்லது பொல்லதையும் பார்த்தது இல்ல.தங்கம் விக்கிற விலைக்கு நம்ம அந்த பக்கம் கூட போக முடியாது போல.

“ஓலைக்கும் கொலுசுக்குமே நம்ம தெணறிப் போறோம்.”
வாயில வழிஞ்ச கஞ்சிய வியர்வையில ஊறுன துண்டுல துடைச்சுகிட்டாரு.

“அந்த மீனாட்சி மாலை எடுத்து குடுப்பா”. மதுர தெசய பார்த்து ஒரு கும்பிடு போட்டா பவளம்.

நல்லா உடம்ப நிமித்தி முன்னும் பின்னும் நடை படிச்சுக்கு இருக்கு சாவா.கொள்ள தூரம் நடந்து போயிட்டா பாண்டியம்மாள்

கறுப்ப அள்ளி தெளிச்ச நெறத்துல இருப்பா பாண்டியம்மாள். கருநாகம் படமெடுத்த மாதிரி விரிஞ்சு கிடக்கு தலைமுடி.குட்டி மொச்சை சிரிச்சது மாதிரி அடுக்கி வச்ச பல் வரிசை. வழுக்க இளநியா வளவளப்பா கை காலு.கருவண்டு திராட்சைய கொத்தி தின்னுரும் அது கெனக்கா.இவள் கண்ணு. முழிய கண்டு பறவைங்க கொத்தி தின்னாலும் தின்னுரும் அம்புட்டு அழகு. வெள்ளந்தி மனுசங்க வாழுற வெளுத்து போகாத வாழ்க்கையில இலவம்பஞ்சா லேசா வாழுறா பாண்டியம்மாள்.

அவள் வீட்டு சாவா மேல அவளுக்கு உசுரு.வேண்டியத வாங்கி போடுவாள். அவங்க அப்பா வீட்டுல இருக்க வச்சா, இவள் பஞ்சொடைக்க போயிர்ரா. புளி தட்ட போயிடறா.அதுல வர்ர காசுக்கு அவள் பாண்டிக்கு, பட்டணம் பெருமாள் கடையில நல்ல குருணை அரிசியா வாங்கிப் போடுவா. அவ சாவாவ யாரும் வஞ்சா சண்டைக்கு வரிஞ்சி கட்டுவாள். அவளுக்கு மட்டும் புரியற மாதிரி பேசுதுனு பல பேர் சொல்ல கேட்ருக்காங்க. ஒரு தடவ பொன்னாத்தா வீட்டுல காய போட்டு இருந்த கம்ப கொத்தி தின்ருச்சு பாண்டி. வெளக்கமாத்த எடுத்து வெளாச பறந்து போயி கல்லுல முட்டி விழுந்திருச்சு.

”கொக் கொக் “னு சத்தம் கேட்டதும் பறந்துக்கு வந்துட்டா பாண்டியம்மாள்.

‘யாத்தே! என்னா இப்புடி அடிச்சுக்கு இருக்க சின்னம்மா.தெரியாமல் வந்திருச்சு.இனி வராமல் பார்த்துக்கறேன்’

ஆத்துல பாய்ஞ்ச வெள்ளமா கண்ணு பொங்குது.கல்லடி பட்ட இடத்துல லேசா ரத்தம் கசியுது.உசுரே போயிருச்சு அவளுக்கு.

நல்லா கனத்து போயிருக்கு சாவா.! செமக்க முடியாமல் வாரா பாண்டியம்மாள். அன்னைக்கு முழுக்க சாப்புடல. அழுது மாயிறா பாண்டியம்மாள்.

“அட கிறுக்கு பய மவளே!ஆடு சாவால்லாம் மனுசங்க வகுத்துக்கு தான்டி வளக்கறோம். நீ இதுக மேல இம்புட்டு பாசம் வெக்காதடி.அதுக தான் நம்மள அண்டி பொழைக்கனும். நாம இல்லடி.”

காதுல ஒண்ணும் ஏறல அவளுக்கு. மஞ்சள் பொடிய போட்டு சாவாட்ட பேசிகிட்டு இருக்கா.அதுவும் “கொக் கொகக்..கொக் கோ “ன்டு எதையோ பேசிகிட்டு இருக்கு.

வானம் புழுங்கி போயி கெடக்கு. காத்து மருந்துக்கும் வீசல. ஊரே வகுத்துலயும் வாயிலயும் அடிச்சுக்குது. தொண்டைய நனைக்கத் துளி தண்ணீயும் இல்ல. கத்தாழ கூட வெயில தாங்க முடியல. புழுங்கி கனத்து போயி இருக்கு வானம். நட்சத்திரங்க எல்லாம் சனங்கள உத்து பார்த்துக்கு இருக்கு. எவனாவது நம்மள பார்க்கறாங்களான்டு அதுகளும் பார்க்குது.

நடுசாமம் கடந்திருச்சு. குடுகுடுப்ப. சத்தம் காதுகள தட்டி எழுப்புது. வெரசா வீட்டுக்கு வாசக் கதவுல காதைக் கொண்டு போனா பவளம்.

“கண்ணாளம் தடை இருக்கு. ரத்த புலி கெட்குது. ரத்த பலி கேட்குது. மாலை கூடணும்னா ரத்த பலி கேட்குது. பிரியமானத விட்டு குடுக்கணும். பிரியமானத விட்டுக் குடுக்கணும்.”

மஞ்சன் தாலி கழுத்துல ஏற பாண்டி முனிக்கு ரத்த பலி காட்டணும்னு சொல்லி போயிட்டான்.
.
பொழுது விடிஞ்சு பாண்டி கூவ ஆரம்பிச்சிருச்சு. பஞ்சாரக் கூடைய பொத்துனு போட்டா பவளம்

“.ம்.உனக்கு ஆயுசு அம்புட்டு தான். நல்ல குருணை அரிசிய போட்டா பாண்டிக்கு. யப்பே பாண்டிமுனி! உனக்கு தான் கொண்டு வாரேன். என் மவளுக்கு மாலை எடுத்து குடுன்னு வேண்டிகிட்டா.”

“இந்தா! ஆம்பள நம்ம பொண்ணுக்கு நல்ல இடமா அமையணும்னா பாண்டிக்கு ரத்த பலி குடுக்கனும்.”

“பாண்டியம்மாளுக்கு தெரிய வேணாம்”.

றெக்கைய விசிறிகிட்டு பறக்க முயற்சி செய்யுது. காத்துல நீச்சல் அடிக்க பார்க்குது. கொண்டைய சிலுப்பி அலக துருத்தி புழுக்கள கொத்தி கொத்தி திங்குது. ராசா தலையில பவளத்த வச்சது மாதிரி கொண்டை அழகா இருக்கு. நடக்கற நடையில ஆளுக வெலகி ஓடணும். அம்புட்டு தெனாவட்டு அதுக்கு.அப்ப தான் பாண்டியம்மாள் ஒறக்கம் கலைஞ்சு வாறா.

ஆத்தா கவனிக்கற விதம் அவளுக்கு ஆச்சர்யமா இருக்கு.அங்கயும் இங்கயுமா ஓடிக்கே இருக்கு சாவா. ‘இரு உன்னைய அறுத்து சட்டியில கொதிக்க வைக்கிறேன்’னு பேசுன ஆத்தா இப்ப குருணைய போடுறானா ….அதுவே ரொம்ப திகிலா இருக்கு அவளுக்கு. ஆனால், எதுவும் பேசல.

“இந்தாடி நாளைக்கு கோயிலுக்கு போறோம். வீட்ட நல்லா அலசணும்டி. போயி ரெண்டு நடை தண்ணீர் எடுத்தா போ”ன்டு பத்தி விட்டா ஆத்தா.

பித்தளை கொடத்த தூக்கிட்டு பாண்டியம்மாள் நடக்கவும், அவங்க அப்பா வாசலுக்கு வரவும் சரியா இருந்தது. நெலையில தலை தட்ட, லேசா புடிச்சுக்கே வந்தாரு

“கெரகம் சரி இல்ல. சாமக் கோடாங்கி சொன்னது சரியா போச்சு. இந்தாய்யா! புள்ளைக்கு நல்லது நடக்கனும்னா இந்த பாண்டிய நம்ம பாண்டிமுனிக்கு பலி குடுக்கணும்.

“நாளைக்கு மருதைக்கு போறோம். ஆமாம்! சொல்லிபுட்டேன்” னா பவளம்.

“இவள் யாருடி! அஞ்சு காசு இல்ல.மருதைக்கு போறாளாம் மருதைக்கு”.

“அதெல்லாம் கந்துவட்டி கணேசன் கிட்ட வாங்கியாச்சு. நீ கெளம்பற வழி பாரு”ன்னு மொறச்சா பவளம்.

‘முந்துனா முட்டுது பிந்துனா எத்துது….என்னா பொழப்பு’ன்டு வெசனபட்டுக்கே போறாரு மாயாண்டி.

இந்தா அந்தான்டு காச பெரட்டிட்டா பவளம். சொந்தம் பந்தமுன்டு யாரையும் கூப்புடல. வெளியேற தயாரா இருக்காங்க. நல்லா ஒறங்கிக்கு இருக்கு.பாண்டி. அத பொத்துனாப்ல எடுத்து காலைக் கட்டி ஒடம்ப கட்டிபைக்குள்ள போட்டா பவளம்.

பதறிப் போனா பாண்டியம்மாள். ‘ஏன்? கட்டி வச்சிருக்க’னு கத்த ஆரம்பிச்சுட்டா.கிலுகிலுப்ப தராத குழந்தையா அடம் பிடிக்கிறா.

“பாண்டிக்கு நேந்திருக்கு….அதுக்கு ‘குக்கு நோவு’ வந்துச்சுல்ல ….அப்ப சாக பொழைக்க கெடந்துச்சு. அதுக்கு தான் அத தூக்கி வாரோம்”னு சொன்னத நம்பிட்டா.

பஸ்ஸுக்கு காத்து கெடந்து நின்டுக்கே போறாங்க. பாண்டி நல்ல புள்ளையா அடங்கி உட்கார்ந்து இருக்கு. வெரசா எறங்கறாங்க சனங்க.

நல்ல கூட்டம் சனங்க வண்டி புடிச்செல்லாம்வந்திருக்காங்க. பெருசா அசலூர்லாம் போனதில்ல பாண்டியம்மாள். வீரபாண்டி கோயில் திருவிழாக்கு வருசத்துக்கு ஒருக்கா கூட்டி போவாங்க.அதுவும் காசு பெரட்டலனா இல்ல.. புள்ளைங்க வேண்டிய பொருள வாங்கிக்கு இருக்குதுங்க. பாண்டிமுனி கிட்ட வந்துட்டாங்க.

நல்லா ஆள் உயர சிலையா இருக்கு. சம்மணம் போட்டு உட்கார்ந்து இருக்கு. பார்க்கவே பயமா இருந்துச்சு பாண்டியம்மாவுக்கு.

“புள்ளைக்கு நல்ல இடமா பார்த்து குடு.அவள் வளர்த்த பாண்டிய உனக்கே குடுத்துடறே”னு வேண்டிகிட்டா பவளம்.

கருப்பட்டி நெறத்துல அய்யனார் குளத்து கெண்டை மீனுங்க தவ்வி வெளியேறுனது கெனக்கா இருக்கு பாண்டியம்மாள் கண்ணுங்க.
பையில இருந்த பாண்டிய பக்குவமா எறக்குனா பவளம். அறுப்பு கூடத்துக்கு போறா. ஒண்ணும் தெரியாமல் முழிச்சுக்கே இருக்கா பாண்டியம்மாள். அங்கங்க சிந்தி கிடக்கற ரத்தம் அவளுக்கு மயக்கத்த கொண்டாருது. பையில இருந்த சாவாவ எடுத்து அருக்க கத்திய தூக்குன நொடி,”ஏய்!” னு சத்தம் போட்டு கண்ண உருட்டி தெறட்டி பல்ல நெறிச்சு அருள் இறங்கி ஆட ஆரம்பிச்சுட்டா பாண்டியம்மாள்.

‘பச்ச மண்ணு வளத்த உசுர பலி குடுக்க வந்தீகளா? மனுசங்க ஆசையா வளக்கற உசுரும் என் உசுரு தான். பாண்டிய விட்ரு விட்ரு’ ன்னு கைய முறுக்கி திருப்பி அந்த ஆட்டம் ஆடுறா பாண்டியம்மாள்.

மயங்கி விழுந்தவள தாங்கி புடிச்சா பவளம். சனங்க அவள பாண்டியாவே பார்க்கறாங்க.
.
“இன்னும் உத்தரவு வரல. அறுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இன்னும் நெனவு திரும்பல அவளுக்கு.

ஆனால், எதையோ? சாதிச்ச நிம்மதி மட்டும் இருக்கு.” காத்துல அசையற இலைங்க பூவ உதிர்த்து பாண்டி ய பார்த்து சிரிக்குது.

– இரா.கலையரசி 

பல்லக்கு கவிதை – இரா.கலையரசி

பல்லக்கு கவிதை – இரா.கலையரசி




ஊரில் இருந்த மனிதரெலாம்
ஊருக்குள் நடமாடினர்.
“கள்ளழகர் குதிரை கூட
கள்ளத்தனமாய் எட்டிப் பார்க்க”
காவல் கருப்பு அதட்டியது.

“கருவறை கசகசப்பிற்கு
சிறிது ஓய்வு கொடுத்து”
காற்று வாங்கிட வெளியேறினார்
கனிமுக அழகன் சிவன்.!

தினமும் பூச் சொரியும்
சின்னன் கூடையில்
குதூகலமாய்க் குதித்ததபடி
எட்டிப் பார்க்கின்றன பூக்கள்!
திருநீறு, குங்குமம் விற்கும்
திருநாவு முகமெங்கும் பரவசம்!

வாசலில் கோலங்கள்
ஆலம் விழுதாய் விரிகின்றன.
நாதஸ்வரம், தவில்களை
மூச்சை பிடித்தும், விரல்கள்
அழுத்தியும் வரும் இசை
மெலிதான மல்லிகை
மணமாய் காற்றை நிரப்புகின்றன.!

உற்சவ மூர்த்தியாய்
முன்பொருமுறை வந்த ஞாபகம்
சிவனுக்கு வந்த நொடி!
தள்ளிக் கொண்டு முன்னேறியது
தண்ணீர் லாரியைக் கண்டது போல்
பக்த பெருமக்களின் வெள்ளம்.!

“கூட்ட நெரிசலில் சிக்கிய
குழந்தை ஒன்று
சிவனின் கழுத்து” ஆபரணமாகியது!
தோள் மேல் அமர்ந்தபடி
கூட்டத்தை பார்த்து ரசிக்கிறாள்.

கழுத்து நீண்ட கொக்காக
எட்டிப் பார்க்கிற விளிம்புகள்!
வயிறு நிறைந்த வாத்தின்
அடிவயிறு துருத்தியதாய்
அகன்று ஒய்யாரமாய் இருக்கிறது
அந்த அழகிய “பல்லக்கு”

“அள்ளிச் செருகிய கொண்டையை
வட்டமிட்டபடி ருத்ராட்சக் கொட்டைகள்!
பட்டாடை பகட்டாய் பவிசாய்
கைகளின் இடுக்கில் ஒளிகிறது.
“அடிமையின் தோள்கள் திண்ணமாக
அடிமை வேலை பார்க்கிறது”!

சலித்த சிவனின் கண்கள்
காட்சிகளைப் பதிவேற்றம் செய்ய
தலையைத் தட்டிய ஒருவன்
“புள்ளய குடுய்யா”னு பிடுங்க
பல்லக்கு தூக்கும் மனிதரை
தொடர்கிறார் சிவன்
“என்னத்தச் சொல்ல”

என்றபடி கருவறை நோக்கி.!

கறி சோறு கவிதை – இரா.கலையரசி

கறி சோறு கவிதை – இரா.கலையரசி




அறுத்த ஆடுங்கல்லாம்
சத்தமில்லாமல் இருக்க!
பாய் கையில
துண்டுகளா மாறி
“கறுப்பு பை”ங்களுக்கு
போகுதுங்க எலும்புங்கறியுமாய்.!

வருசமெல்லாம்
பார்த்தே கடக்குது
“மாயி கண்”ணுங்க!
வட்டமான மரத்துல
“டொக் டொக்”ன்டு
கறி வெட்டுற சத்தம்
காதுல இசையா பாடுது.

கறுப்புப் பைகள் கனக்க
“ரோசாப்பூ நோட்ட”க் குடுத்து
வாங்கிப் போறாங்க
மனுசங்க!

மிச்சக் கஞ்சி ராப்பொழுதுல
இருந்துட்டாலே
மாயிக்கு கெளிப்புதான்
நாளைக்கு காலையில
பட்டினியா கெடக்க வேணாமே!

“கறி சோறு” தின்டதே
இல்ல மாயி!
கோலிக்குண்டு கண்ணுங்க
கறி வெட்டறதையும்
கணக்கா காசு வாங்கறதையும்
பார்த்துக்கிட்டே இருக்கு.

ஒண்ணாப்பு படிக்கிற
மாயி மனசு
காத்தில்லாத குகையா
ஏங்குது கறி சோறுக்கு!

அன்னைக்கு கடைக்கார பாய்
மாயி கையில
“கறுப்பு பை” தர
“எடுத்து போ” ல
“ஈகை திருநாள்” ன்டாரு
புரியல தான்.
“ரெண்டு விரலில சிக்கிருச்சு
மனசும் பையும்”.

ஆத்தாட்ட ஓடி வர
கம்பந்தட்டையத் தூக்கி

விலாச இருந்தவள
காப்பாத்தி வுட்டுச்சு
அவன் சொன்ன வார்த்தை
“ஈக திருநா”.

கொத்துன அம்மிக்கு
வேலை வந்திருச்சு.
கடைசியா கெடந்த
ஒன்ரெண்டு பூண்டுக
இஞ்சியோட சேர்ந்து
நசுங்கி வாசனைய
பரப்ப ஆரம்பிச்சிருச்சு!

அந்த கறுப்பு பை விலக
கறியும் எலும்புமா
உட்கார்ந்து இருக்குதுங்க.
அரிவாள்மனை மூக்கு வேர்க்க
இன்னமா அரியறா ஆத்தா.

அடுப்ப கூட்டி சட்டி வைக்க
அஞ்சாறு எண்ணெய
பட்டும் படாமல் தெளிக்கிறா.
“வருவேனா பாரு”ங்கறது
அவள் தெளிச்ச எண்ணெய்.

வதக்கிற கறி வாசம்
ஊருக்கெல்லாம் சொல்லுது
“மாயி வீட்டுல
கறி எடுத்திருக்காங்க.”.

ரேசன் கடை அரிசி
அன்னைக்கு பக்குவமா
வெந்திருச்சு!
நெசமாவே எச்சி
ஊருது மாயிக்கு!
வட்டியில சோறு வந்து சேர
அகப்பையில அரிஞ்சு
வைக்கிறா கறியையும்
எலும்பையும்.

“சொட்டான் போடற நாக்கை”
மெதுவா நிறுத்தி
பொசுக்க பொசுக்க
கறியும் சோறும்
ஒண்ணா பயணம்
போறாங்க!
“கறி சோறு” சொவைச்ச
நாக்குக்கு தண்ணீர் தரல
சொவை மாறிடுமாம்.

இரா.கலையரசி

மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

மிஸ் யூ! குறுங்கதை – இரா.கலையரசி.

பூங்காவில் தீவிரமான நடைபயிற்சியில் இருந்தார்கள்.பரசுவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு. எத்தனை நாள் தான் கொடுக்காமல் இருக்கறது? இன்னைக்கு குடுத்திடணும்னு இருந்தார். இதோ" தென்றலில் அசைந்து வரும் மலராய்" நடந்து வருகிறார் வசந்தா. "டீ.சர்ட்" ல் கண்ணைப் பறிக்கிறார். மெதுமெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார்.பரசுவும்…
கலையரசியின் கவிதைகள்

கலையரசியின் கவிதைகள்

1) படித்துறையில் சந்தித்த இரண்டு பறவைகள் மாறி சென்ற பாதையில் விட்டு வந்த நினைவுகளை அசை போடுகின்றன. 2) பல வண்ண மலர்களில் அலங்கரிக்கபட்டு செல்கிறது "ஒரே சாதி" தலைவரின் இறுதி ஊர்வலம். 3) அடர்ந்த இருளில் பயணிக்கின்றன வழித்தடம் மறக்காத…