கலைவாணி சத்தியபாமாவின் கவிதை

கலைவாணி சத்தியபாமாவின் கவிதை




தரையில் அமர்பவன் தவறி விழமாட்டான்
முயற்சியைத் துணை கொண்டவன் துவண்டு போக மாட்டான் .
வளர்ச்சி என்ற பெயரில் போர்த் தீயை ஏன் மூட்டணும்
மாறாக
எழுதுகோலைக் கையில் எடுத்து வரிகளாகத் தீட்டணும்.
புத்தகமே மந்திரமாய் மாணவர்களுக்குக் கொடுக்கணும்
புது வளர்ச்சிப் பாதை பார்த்திடத்தான்
பரந்த உலகை மாற்றணும்.
எதிர் கால நடையை மாற்ற எழுது கோலைக் கையில் கொடுக்கணும்.

சிட்டுக்குருவிகள் சட்டென்று பறந்தது
கதிர்களைத் தேடிஅல்ல
கதிர் வீச்சின் அலையால்.
என்றாவது மழை பொழிய, மயில் ஆடும்
மனிதனே நீ
இருக்கும் மரங்களைக் காயப்படுத்தாமல்
இரு போதும்.
இனி எடுக்கப்போவதில்லை எழு பிறவி
இருக்கும் போதே செய் இயன்ற உதவி.

நீ செய்யும் தவறினைப் பிறர் கணக்கில் எழுதாதே
அடுத்தவர் உடைமையைக் கைப்பற்ற எண்ணாதே.
பச்சிளம் குழந்தையைப் பசியில் தவிக்க விடாதே
பத்துமாசம் சுமந்தவரை பாதியில் துரத்தி விடாதே.
வாழ்வின் கசப்புகளை விழுங்கக் கற்றுக்கொள்
இல்லையெனில்
மகிழ்ச்சியின் சுவையறியாமல் போய் விடும்.

-கலைவாணி சத்தியபாமா