கடலோடி சமூகத்தின் கலங்கரை விளக்கம் வறீதையா kadalodi samugathin kalangarai vilakkam varrithaiya

கடலோடி சமூகத்தின் கலங்கரை விளக்கம் வறீதையா – செ.கா


எங்கள் பள்ளியின் கடல்சார் கல்விச்சுற்றுலாதான் பேரா.வறீதையாவின் எழுத்துகள் பக்கம் என்னை திருப்பியது. கடல்சார் விவரங்களை மாணவர்களுக்குப் பகிர்வோம் என நினைத்து “மன்னார் கண்ணீர்க்கடல்” நூலை வாசித்தேன். இராமேஸ்வரம் , பாம்பன் , தனுஷ்கோடி குறித்து தேவையான விவரங்கள் கிடைத்தபின் , அது எனக்கு மீனவர்கள் குறித்து மற்றுமொரு பார்வையைத் திறந்துவிட்டது.வரும் கோடைவிடுமுறையைக் கணக்கில் கொண்டு , நாம் ஏன் கடல்சார்ந்த வாசிப்பில் ஈடுபடக்கூடாது ? என நினைத்து , தேடித்தேடி பேரா.வறீதையாவின். எழுத்துக் கடலில் நீந்த ஆரம்பித்தேன். 13 நூல்கள் வாசித்தேன்.அவ்வப்போது ஏற்பட்ட சந்தேங்களை நிவர்த்தி் செய்ய மணிக்கணக்கில் அவரோடு உரையாடினேன். அவர் சித்தரித்துக் காட்டிய கடலைக் காண ,உரையாட , அவரோடு ஒரு குறும்பயணமும் மேற்கொண்டேன்.

இவையெல்லாவற்றையும் உள்வாங்கிய பின் , கடல் குறித்த பொதுச் சித்திரம் எனக்குக் கிடைத்தது. அது முற்றிலும் புதிதாக இருந்தது.அது சமவெளியின் ஆதரவைக் கோருவதாக இருந்தது. அரசுகளின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய குரல் கொடுக்குமாறு என்னை உந்தித் தள்ளியது. கடல் பழகுதல் என்பது அழகான அனுபவமல்ல. அது ஓர் உலக அரசியல் செயல்பாடு என்பதை பேராசிரியரின் எழுத்துகள் வெளிச்சமிட்டுக் காட்டின.

இத்தனைக்கும் எந்த ஒரு மாற்று அரசியல் தத்துவத்தையோ , அமைப்பையோ சாராத , முன்னிலைப்படுத்தாத பேராசிரியரின் எழுத்துகளுக்கு இப்படி ஒரு ஆற்றல் எப்படிக் கிடைத்தது ? உண்மை…உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை…கடலின் உண்மை முகத்தை உள்ளபடியே சமரசமின்றி பதிவு செய்தல் என்பதும் ஓர் உச்சகட்ட அரசியல் செயல்பாடுதான். தான் கற்றறிந்த கல்வியும், தனக்குக் கிடைத்த மரபார்ந்த பின்புல அறிவையும் துணைகொண்டு இதனை சாத்தியப்படுத்த பேராசிரியரால் முடிந்திருக்கிறது.

“உருவாக்கிய மண்ணின்பால் , ஆங்கே உருவிழந்து கிடக்கும் சமூகத்தின்பால் ஈர்ப்புற்றேன்.அச்சமூகத்தின் வாழ்வியலை மையப்படுத்திய என் எழுத்துகள் ஒரு சாதாரணனின் கோணத்தில் சமகாலத்தை உள்வாங்கும் சிறு முயற்சி ; வெளிச்சமும் காற்றும் சுதந்திரமாய் உள்ளே வரச் சன்னல்களை அகலத் திறந்துவிடும் முயற்சி ; சக சமூகங்களின் நெய்தல் சமூகம் பற்றிய பார்வையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்பதைச் சற்று அழுத்திச் சொல்லும் முயற்சி. என் எழுத்து மற்றுமோர் நடுநிலைவாதப் பிரகடனமல்ல , விளிம்பு மக்கள் சார்புநிலை வெளிப்பாடு” என்று தனது எழுத்தை வெளிப்படையாக இன்னதனென்று அறிவித்துக் கொள்கிறார்.

விளிம்பு மக்கள் சார்பு நிலை என்றதும், தான் சார்ந்த மீனவப் பழங்குடிகளைப் பற்றிய கழிவிரக்க வகைமை அல்லது கரிசனம் கோருகிற எழுத்தாக இருக்கும் என்கிற நிலைக்கு நாம் செல்ல வேண்டியதில்லை. இவரது எழுத்தை சமவெளியில் ஒடுக்கப்படுகிற விளிம்பு மக்களுக்கும் கச்சிதமாகப் பொருத்திப் பார்க்கலாம். தமது சமயத்தைக் கடந்த பக்குவமும் , சில கிறித்துவ சாமியார்களின் மீதான காத்திரமான விமர்சனத்தையும் கூட சமரசமின்றி வெளிப்படுத்துகிறார்.

சொந்த இனக்குழுவை விமர்சிப்பதில் இருந்து , அவர்கள் மீதான தமது கரிசனத்தைக் காட்டுகிறார். அதே நேரம் அவர்களது தனித்துவமான பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துகிற செழுமையான பணியினை “கன்னியாகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு” நூலில் செய்திருக்கிறார்.கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில், சிறிது பிசகினாலும் சுயசாதிப் பெருமையாகிவிடக் கூடிய கூரிய பணியை அந்நூலில் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அதே நேரம் காலங்காலமாக எதிர்க்குரலின்றி சபையும் , சாமியாரும் சொல்வதை அப்படியே கடைபிடித்துக் கொண்டு வருவதில் உள்ள நுட்பமான பாதக அம்சங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

சொந்த இனக்குழுவின் மீதான விமர்சனங்களுக்குப் பிறகு அவர்களை பொதுச் சமூகத்தோடு உரையாடவைக்க கடுமையான முயற்சிகள் பலவற்றை , சில அமைப்புகளோடும் , நண்பர்களோடும் , சில சாமியார்களோடும் முன்னெடுக்கிறார்.

அதுவரைக் கடலைப் பற்றிய எழுத்துப் பதிவுகள் என்பது முற்றிலும் சமவெளி ஆளுமைகளைச் சார்ந்ததாகவே இருந்தன. ராஜம் கிருஷ்ணன் , வண்ணநிலவன் போன்றோரின் படைப்புகள் உண்மையான மீனவ வாழ்வியலைப் பிரதிபலிக்கவில்லை என்பதை சில இடங்களில் வெளிச்சமிட்டும் காட்டியிருக்கிறார். உள்ளிருந்து படைப்புகளும், எழுத்தாளர்களும் வரவேண்டும் என்கிற முயற்சிக்கு பேரா.வேதசகாயகுமார் பெரும் உந்து சக்தியாக இருக்கிறார்.

தெரிவு செய்யப்பட்ட இளந்தலைமுறையினரிடம் மிக முக்கிய ஆளுமைகளை திறந்த மனதுடன் கலந்துரையாடச் செய்கிறார். இத்தகைய ஒலிக்கோர்வைக்  கலந்துரையாடலை எழுத்துக் குறிப்பில் அச்சேற்றம் செய்து நூலாக வெளியிட்டும் இருக்கிறார். இதனை வாசிக்கும் எந்த திணை வாசகருக்குள்ளும் படைப்பாற்றலுக்கான உந்து சக்தி பீறிட்டு எழும்.அபாரமான உழைப்பு அது. இந்த சூழ்நிலையில் பேரா.வேதசகாயகுமார் அவர்களது அறிமுகத்தினால் பேரா.வறீதையாவிடம் ஏற்பட்ட சில குறிப்பிடத்தகுந்த அணுகுமுறை மாற்றங்களை “எக்கர் வேதசகாயகுமாரின் நெய்தல் பதிவுகள்” எனும் நூலின் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம். இந்நூலை வாசித்ததுமே என்னுள் பெருகிய சிந்தனைவீச்சின் அளவைக் குறைத்து மதிப்பிட முடியாது. வேதசகாயகுமார் போன்றோரின் மையத்தைவிட்டு விலகாத அணுகுமுறைகள் என் போன்ற வளரும் தலைமுறைக்கு மிக முக்கியமான பாடம். மார்க்சின் வர்க்க அரசியலை கடலோடிச் சமூகத்தில் பொருத்த எத்தனித்த அவரது கலந்துரையாடல் பதிவுகள் ஒவ்வொன்றுமே இரத்தினங்கள். ஒலிக்கோர்வையை எழுத்தாக்கி , அச்சாக்கும் சவாலான இந்தப் பணியும் அவரது பணிகளுள் மிக முக்கியமானதுதான்.

மீனவச் சமூகத்தை ஆற்றல்படுத்துகிற செயல்பாடுகளுள் அடுத்து வரும் நூல் “கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை”.

6000 பேர் கொண்ட , குற்றப்பின்னணி அதிகம் உள்ள ஒரு கிராமம் தன்னை சுயமாக மீட்டெடுத்துக் கொண்டு , அனைத்து வகையிலும் தன்னிறைவு அடைவதற்கான “அடித்தள மக்கள் குழுவாக்கத்தை” 1977 ல் சாமியார் எட்வின் அவர்களது சீரிய வழிகாட்டலில் ஏற்படுத்தி அதில் பெருமளவு வெற்றியும் கண்ட , முன்மாதிரியான கம்யூன் நிகழ்வுகளை பேரா.வறீதையா நேர்காணல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து முறையாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

சாமியார் எட்வின் அவர்களை அடியொற்றி பணி.மாற்கு ஸ்டீபன் அவர்கள் (பேருவகை – நூலாசிரியர் , தமிழினி வெளியீடு)1983ல் திருச்சபைகளில் பாலின சமத்துவத்திற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் , கல்லறை இடிப்புப் போராட்டம் குறித்தும் வெளிச்சம் தரக்கூடிய கட்டுரைகள் உண்டு.

இத்தகைய முன்னெடுப்புகள் ஏன் பின்னாட்களில் வலுப்பெறாமல் நீர்த்துப் போயின என்பதற்கான ஆய்வுமுடிவுகளும் இந்நூலில் உண்டு.

சமகாலத்தில் இதுபோன்ற முன்னெடுப்புகள் மீண்டும் எடுக்கப்பட சாத்தியக்கூறுகள் உள்ளனவா ? என்பதற்கான பரிசீலனைத் தரவுகளும் உண்டு.

பிரிவினைக் கிறித்தவ நண்பர்கள் முன்னேறியதற்கு சபை உதவிய சாதக அம்சங்கள் , கத்தோலிக்க கிறித்தவ நண்பர்கள் (கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில்)இன்னும் கல்வி, தொழில் வாய்ப்பு , பொருளாதார வளர்ச்சியில் முன்னேறாமல் தடுக்கிற பாதக அம்சங்கள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டு அலசுகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவ வாழ்க்கையில் மதச் சபையின் புரிதலற்ற சில சாமியார்களால் ஊடறுத்து ஆடுகிற ஏற்ற இறக்க விளையாட்டுகளைப் புரிந்து கொள்ளவும் , முன்மாதிரியான மாற்று அம்சங்களை உடன் விரைவாக செயல்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களையும் ஒரு சேர வழங்குவதன் மூலம் , இந்நூல் மாற்றத்தை விரும்புவோர்க்கான மறைநூலாகவும் விளங்குகிறது.

“கடலம்மா பேசுறங் கண்ணு”
“வேளம் உரையாடும் தமிழ் நெய்தல்” எனும் இரண்டு நூல்கள் , மீனவப் பழங்குடிச் சமூகம் பற்றிய புரிதலை பொதுச் சமூகத்திடம் ஏற்படுத்துவதற்கான மிக முக்கியமான நூல்களாக என் வாசிப்பில் நான் உணர்ந்தேன்.

 

தெற்கே நீரோடி முதல் வடக்கே பழவேற்காடு வரை அலைவாய்க்கரையை வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவர்களின் பண்பாட்டு, வாழ்வியல் நெறிமுறைகள் , வேறுபட்டு விரவிக் கிடக்கிற கடலின் வகைமைகள் மற்றும் அதன் தனித்தன்மைகள் , அறிவியல் பூர்வமாகக் கடலை உள்வாங்குவதற்கான சில புரிதல்கள்  , கடல்வாழ் உயிரினங்களின் சிறப்புத் தகவமைகள் உள்ளிட்டவற்றை சுவையான மொழியில் எளிதில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

2004 சுனாமி குறித்து சில கட்டுரைகள் தனி நூல்களாகவும் , தொகுப்பிலும் வெளியாகி உள்ளன.சுனாமிக்குப் பிறகு கடற்கரையை நோக்கிப் படையெடுத்த நிதிக்கொடைத் தொண்டு நிறுவனங்களின்(N.G.O) பரிதாப அரசியல் நடவடிக்கைகள் , அரசுகளின் சுனாமி மறுகட்டுமானச் செயல்பாடுகளின் திருப்தியின்மை , சுனாமிக்குப் பின்னர் கடலிலும், மீனவர்களிடத்தும் ஏற்பட்டிருக்கிற சூழல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை இவை அலசுகின்றன. கடலால் ஏற்பட்ட சுனாமியைவிடக் கொடுமையானது, நிலம் நிகழ்த்தும் கருணைச் சுனாமி என்பதை சில உண்மை நிகழ்வுகளின் பின்னணியில் எடுத்தியம்புகிறார்.

2016 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 400 பேருக்கு ஒரு தொண்டு நிறுவனம் இருக்கிறது. இவற்றுக்கென ஆண்டுதோறும் இந்தியாவிற்கு வந்துசேரும் தொகை ரூ 80,000 கோடி. சுனாமிக்குப் பிறகு தமிழகக் கடற்கரையை நம்பி சுரண்டிக் கொழித்த என்.ஜி.ஓக்களின் அவலங்களை விளக்குகிறார். அதே வேளையில் சில என்.ஜி. ஓ-க்கள் தீவிரமுயற்சி எடுத்தும் கூட கழிப்பறைப் பயன்பாடு என்பது பல மீனவக் கிராமங்களில் இன்று வரை சாத்தியமாகவில்லை என்பதையும் மற்றொரு முனையில் நின்று அவதானிக்கிறார். குஜராத் பூஜ் பேரிடர் மறுகட்டுமானப் பணிகள் குறித்த நேரடி ஆய்வுப் பணியினை பல இடங்களில் சிலாகித்து விவரிக்கிறார். அதுபோன்ற தொலைநோக்கு அடிப்படையிலான முன் தடுப்பு நடவடிக்கைகள் ஏதும் தமிழகச் சூழலில் இல்லை என்கிற தனது கவலையையும் பதிவு செய்கிறார்.

1076 கி.மீ தமிழகக் கடற்கரை , 13 கடலோர மாவட்டங்கள் , 600 கடற்கரைக் கிராமங்கள் – தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிற சுரண்டல் சுனாமிகள் குறித்து நிறைய இடங்களில் பதிவு செய்திருக்கிறார். கனிம மணல் கொள்ளை , சேதுக் கால்வாய்த் திட்டம் , இடிந்தகரை அணுமின் நிலையம் , கச்சத்தீவு போராட்டம் , துபாய் போலிருந்த பழவேற்காடு கழிவுநீர்க் குட்டையான அவலம் , அனல் மின் நிலைய சீரழிவுகள் , நதிநீர் வீணாகக் கடலில் கலத்தல் என்கிற தவறான நம்பிக்கைகள் , வழக்கொழியுந் தருவாயில் உள்ள முத்துக் குளித்தல் , முரண்பாடான துறைமுகக் கட்டுமானங்களால் கடல் நீரோட்டப் போக்கில் ஏற்படுகிற மாற்றங்கள் , அதன் உபவிளைவாக அருகே உள்ள கிராமங்கள் மண்ணில் புதைதல் , கரை அரிப்பு,கேளிக்கை விடுதிகள் , அறமற்ற சுற்றுலாச் சீரழிவுகள்  உள்ளிட்ட பல்வேறு தினசரி சுனாமிகளை அலைவாய்க்கரை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலைகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கு சாதகமாகவே ஒன்றிய/மாநில அரசுகளின் கடல் மேலாண்மைச் சட்டங்கள் , மசோதாக்கள் , ஆணையங்கள் வரையறுக்கப்படுகின்றன என்பதையும் தக்க உதாரணங்களோடு அடிக்கோடிட்டு எச்சரிக்கைப்படுத்துகிறார்.

கடந்த 300 ஆண்டுகளில் விசுவரூபம் கொண்டுள்ள பருவநிலை மாற்றம் என்னும் உலகளாவிய சிக்கலை தமிழகக் கடற்கரையில் பொருத்தி , அதை எதிர் கொள்வதற்கான பரிந்துரைகளையும் பட்டியலிடுகிறார்.(கடல் பழகுதல்).இவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1).ஒன்றிய/மாநில அரசுகள்
2).பசுமை ஊடகர்கள்
3).கடற்கரை மண்டலம் சார்ந்தவை
4).தனிநபர் சார்ந்தவை.

கடல் சார்ந்த வாசிப்பு என்கிற வகையில் பேராசிரியர் தமக்கு நெருக்கமான சில வாசிப்புகள் குறித்த சுவையான அறிமுகத்தை நமக்கு வழங்குகிறார்.

செண்பகராமன் பள்ளு , ஆழி சூழ் உலகு , காலனியம் , சமயம் , பரவர் :1900-50 , செள்ளு , தூரத்துச் சொந்தங்கள் (சிறுகதைகள்) , காடோடி , கடலறிவுகளும் நேரனுபவங்களும் , நினைவலைகள் , கையிலிருக்கும் பூமி உள்ளிட்டவை அவற்றுள் மிக முக்கியமானவை. சக எழுத்தாளர்களின் எழுத்துகளை வெளிப்படையாக , அகன்ற மனதுடன் கொண்டாடிப் பாராட்டுவதற்கென்று அவரிடம் உள்ள தார்மீகப் பொறுப்பை என்னால் பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

இறுதியாக அவரது எழுத்துகளில் அறச்சீற்றம் தெறித்தவையாக  நான் உணர்ந்தது “1000 கடல் மைல் – கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்” நூலைத் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை இந்நூல் முழுக்க முழுக்க உச்சகட்ட கோபத்தில் பேரா.வறீதையா வெளிப்படுகிறார். நவம்பர் 2017 ல் வீசிய ஒக்கிப் புயலை , புலப்படா மக்களின் மீது கவிந்த புலப்படாப் பேரிடராக அவதானிக்கிற பேராசிரியர் ,  அரசுகள் தெளிவாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தால் பெருமளவு உயரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்.

230 க்கும் அதிகமான கன்னியாகுமரி மீனவர்கள் ஆழ்கடலில் சுழற்றி அடிக்கப்பட்டு உயிரிழந்த அவலம் முற்றிலுமான அரச பயங்கரவாதம் என்பதை இந்நூலில் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார். ஏனைய நூல்களைப் போல இதனை சுலபமாகப் படிக்க இயலவில்லை. அதுபோலவே மன்னார் கண்ணீர்க் கடல் நூலும். மீனவர்கள் படும் பாட்டை நமக்கு உணர்த்துவதற்காக, பல இடங்களுக்கு நேரடிக் களப்பயணம் சென்று குரலற்ற பலரின் குரலாக இருந்து நம்மிடம் உரையாடுவது வலியை ஏற்படுத்துகிறது.

இயற்கை ஒரு போதும் பேரிடர்களை நிகழ்த்துவதில்லை ; இயற்கையை நாம் அணுகும் விதம்தான் பேரிடர்களுக்குக் காரணமாகிறது என்று கூறுகிற பேராசிரியர் , எளிய மீனவர்கள் மேல் அரசுகள் ஒக்கியைக் கையாண்ட விதம் பெரும் பேரிடராகிய கொடுமையை பக்கத்திற்குப் பக்கம் ஆழமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

நான் வாசித்த நூல்களை வைத்து நான் உள்வாங்கிக் கொண்டதைப் பகிர்ந்திருக்கிறேன். இன்னும் சில நூல்கள் இருக்கின்றன. பால் தாமஸின் “நினைவலைகள்” எனும் அற்புதமான தன் வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிற தன்வரலாற்று நாவலான “கையறுநதி” நாவலும் தற்பொழுது பரவலாகப் பேசப்பட்டு வருகிற மிக முக்கியமான நூல்.

ஒட்டு மொத்தமாக , நான் வாசித்த அளவில் பேரா.வறீதையாவின் எழுத்துகள் எனக்குக் காட்டிய வெளிச்சம் மிகப்பெரியது. அவை திறந்து வைத்த சாளரங்களும் முற்றிலும் புதியன.கற்பிதங்களைத் தகர்த்தன.

அவருடைய விமர்சனம் என்பது , வறட்டுவாதமாகவோ , கேட்போரிடத்து கடும் சினத்தைத் தூண்டுவதாகவோ இல்லை. சிந்திக்கத் தூண்டுகிற , உரையாடலுக்கு அழைக்கிற நிதானமான கோபத்தை பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அது தாம் சார்ந்த மத நிறுவனமாகவோ , அரசாகவோ அல்லது பிறரின் படைப்பாகவோ , தமது சொந்த இனக்குழு மரபாகவோ , எதுவாயிருப்பினும் அவரது விமர்சனம் அல்லது சுட்டிக்காட்டல் என்பது நிதானமான பக்குவ அணுகுமுறை. இவரது எழுத்துகளின் ஆகப்பெரும் பலம் இதுதான்.

அதுபோல கடல் என்பது கடலளவு தகவல்களை உள்ளடக்கிய ஒன்று. அவற்றுள் தமக்கு வருகிற , தம்மால் உண்மையைப் பதிவு செய்யமுடியுமென நினைக்கிற தளங்களுக்குள் தம்மை நிலை நிறுத்திக் கொண்டு அவற்றுள் ஆழமான , அடர்த்தியான பார்வையை முன்வைக்கிறார். எல்லாவற்றையும் சொல்லியாகவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்கிவிடாமல் அதிலும் நிதானமான அணுகுமுறையை 35 ஆண்டுகளாகக் கடைபிடிப்பது சவாலான பணிதான்.

தான் சார்ந்த கடல் குறித்த , அந்தந்த காலத்தின் உண்மை நிலவரங்களை உள்ளபடியே பதிவு செய்யவேண்டும். அதில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் கடலையொட்டி நடைபெற ஆய்வுகளுக்கு தமது எழுத்துகள் உண்மைசான்று பகர்கின்றனவாக இருப்பதன் மூலம் பல சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கலாம் என்கிற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

உள்சமூகத்தில் அறிவுஜீவிகள் உருவாக வேண்டும் , வெளிச்சமூகம் மீனவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டுக்குமான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்குகிற உன்னதமான பொறுப்பு தமது எழுத்திற்கு உள்ளதன் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

பேராசிரியரின் கள ஆய்வின் முக்கியமான அடிப்படை அலகு , மீனவப் பெண்களை சந்தித்து உரையாடுதல். பொதுச் சமூகத்திற்காக தான் அணிந்திருக்கிற பல சட்டைகளை கழற்றிய பிறகே அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற முடியும் என்று குறிப்பிடுகிறார்.இந்தியாவிலேயே அதிக மீனவ விதவைகள் இருக்கிற பகுதி தமிழக கடற்கரைப் பகுதிகளாகத்தான் இருக்கும் என்கிற வலி நிறைந்த தகவலை பலரது நேர்காணலின் மூலம் பதிவு செய்திருக்கிறார். கோடிமுனை கிராம முன்னேற்றச் செயல்பாடுகளில் பெண்கள் பங்கேற்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.

நூற்றுக்கணக்கான பெண்கள் அணியாகத் திரண்டு பணி.மாற்கு ஸ்டீபன் சாமியாரைக் காப்பாற்றி பத்திரமாக அனுப்பிவைத்த நிகழ்வை தமது “கோடிமுனை முதல் ஐ.நா.சபை” வரை நூலில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். கடல் என்பதே ஆண்களுக்கானதாகத்தான் இருக்கிற சூழலில் முதன்முதலாக , அரசினால் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு பெண்கள் கடலுக்குள் படகை செலுத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை பதிவு செய்திருக்கிறார். எந்த ஒரு சமூகத்தின் பெண்கள் ஆற்றல்படுத்தப்படாமல் , அச்சமூகம் முன்னேற வாய்ப்புஇல்லை என்பதை மீனவச் சமூகத்தோடும் பொருத்திப் பார்க்கிறார். மீனவப் பெண்களை ஆற்றல் படுத்துவதற்கான சில வழிவகைகளையும் முன்வைக்கிறார். அவரது பணியில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பு என்பது மீனவப் பெண்களை உள்ளடக்கியதாகவே இருப்பதாக நான் உணர்ந்தேன்.

ஒட்டுமொத்த வாசிப்பிலும் எனக்குக் குறையெனப்பட்டது தொகுப்பில் உள்ளவற்றை தனிநூல்களாகப் போட்டிருக்க வேண்டியதில்லை. அது இரண்டையும் சேர்த்து வாங்குவோருக்கு தேவையற்ற செலவினத்தை ஏற்படுத்துகிறது. அதுபோல மறுபதிப்பில் வெளியாகிற நூலின் கருத்துகள் மேலான நிகழ்காலப் போக்கையும் இணைத்திருக்கலாம். தொகுப்பில் உள்ள சில கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டிருக்கலாம்.

படைப்பிலக்கண ரீதியில் நேர்த்தியான உருவாக்கமும் , அழகு தமிழ் சொற்களையும் கொண்டு இலகுவான வாசிப்பிற்குள் நம்மை எளிதில் இழுத்துவிடுகிறார்.

அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று அவருக்கும் கடலுக்குமான இயல்பூக்கப் பிணைப்பை உணர்த்தியதை நேரில் கண்டுணர்ந்தேன்.

தேங்காய்பட்டணம் துறைமுக விரிவாக்கப் பணியை , அவருடன் பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. நடந்து கொண்டே பல தகவல்களைக் பகிர்ந்து கொண்டுவந்தவர் , திடீரென ஓரிடத்தில் நின்றுவிட்டார். கடல் அலைகளைத் தணிக்கும் அரை வட்ட கற்பாளக் குன்று மிகவும் குறுகலாக வந்துள்ளதால் , நூழைவாயிலில் படகுகள் எளிதில் துறைமுகத்திற்குள் நுழைய இயலாது ; மோதுவதற்கும் மூழ்குவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறினார். மேலும் இது இன்னும் 50 மீ கடலுக்குள் சென்று வளைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அலைகளைத் தணிப்பது கைக்கூடும் என்று சொல்லிவிட்டு சில நூறு மீட்டர்கள் முன் நகர்ந்து ஒரு வளைவில் திரும்பினோம். அவர் முன்மொழிந்த  விரிவாக்கப்பட்ட அரைவடிவக் கட்டுமானப்பணி அதே 50 மீ நீளத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்துபோனோம்.

கடலின் ஒவ்வொரு அலைக்குப் பின்னும் இருக்கிற அறிவியல் , அந்த அலைகளைக் கணித்து எதிர்த்துடுப்பு போடுகிற மீனவர்களின் எதிர்காலப் பாதுகாப்பு , அரசின் கட்டுமானத் திட்டங்களின் போதாமைகள் என எல்லாவற்றையும் 5 நிமிடத்திற்குள் எளிதில் விளக்கிவிட, அவரின் நீண்ட நெடிய கடலுறவும் , அனுபவமும் உதவியிருந்தன.

அலைவாய்க்கரையின் 400 ஆண்டுகால வரலாறு , கடல் சார்ந்த மரபறிவு , பருவநிலை மாற்றம் குறித்த முன் எச்சரிக்கை செயல்பாடுகளை வகுத்துக் கூறிய அளவில் ,  அவரை தமிழகக் கடல் சார் ஆவணக் காப்பகம் என்று விளிப்பதில் தவறேயில்லை. மிகப் பொருத்தமான உவமை. உண்மையும் , அறச்சீற்றமும் நிறைந்த அவரது எழுத்துகள்தான் என்னை 25 நாட்களாக அவரோடு பயணப்பட வைத்திருக்கின்றன.

கடலைக் கொண்டாட்ட மனநிலையோடு அணுகிக் கொண்டிருந்த ஒரு சமவெளிக்காரனுக்கு கடலின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விளக்கிக் காட்டியிருக்கிறார்.அதன் மீதும் , அப்பாவி மீனவர்கள் மீதும் நிகழ்த்தப்படுகிற மதஅரசியலை  , அரசுகளின் போதாமையான அணுகுமுறைகளை , கரைகள் மீது தினம்தினம் நிகழ்ந்து கொண்டிருக்கிற வரைமுறையற்ற சுரண்டலை எல்லாம் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

சமவெளிக்காரனுக்கும் கடலுக்குமான பிணைப்பை ஏற்படுத்துவதில் பேரா.வறீதையாவின் எழுத்துகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. கடலை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒருவருள் எழுகிற அக்கறை அலைகளை எவராலும் தடுக்க முடியாது. அது அலைக்கழிக்கவைக்கும்.முடிவில் ஆழிப்பேரலையாக மாறும்.  அனைத்தும் ஆர்ப்பரித்து ஓய்ந்த பின்  அடுத்தடுத்து வருகிற தலைமுறைக்கு , வடக்கே தெரிகிற துருவ நட்சத்திரமாக  , கலங்கரை விளக்காக பேரா.வறீதையாவின் எழுத்துகள் என்றும் நின்று வழிகாட்டும்.

வாசிப்பிற்கு எடுத்துக் கொண்ட நூல்கள்

1.மூதாய் மரம்
2.கன்னியாகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு.கன்னியாகுமரி முக்குவர்: பண்பாட்டியல் வரலாறு (Tamil Edition) by [வறீதையா கான்ஸ்தந்தின் ]
3.எக்கர் – வேதசகாயகுமாரின் நெய்தல் பதிவுகள்எக்கர் : வேதசகாயகுமாரின் நெய்தல் பதிவுகள் (Tamil Edition) by [M. Vethasagayakumar, வறீதையா கான்ஸ்தந்தின் ]
4.கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை.
5.விளிம்பு மையம் மொழிவிளிம்பு, மொழி, மையம்: படைப்பாளுமைகளின் உரையாடல் (Tamil Edition) by [வறீதையா கான்ஸ்தந்தின், வேதசகாயகுமார் எம்.]
6.வேளம் – உரையாடும் தமிழ் நெய்தல்வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல் (Tamil Edition) by [வறீதையா கான்ஸ்தந்தின்]
7.கடலம்மா பேசுறங் கண்ணு
8.கடல் பழகுதல்கடல் பழகுதல் : தடம் பதித்த எழுத்துகள் (Tamil Edition) by [வறீதையா கான்ஸ்தந்தின் ]
9.மன்னார் கண்ணீர்க் கடல்மன்னார் கண்ணீர்க் கடல்
10.என்னைத் தீண்டிய கடல்என்னைத் தீண்டிய கடல்
11.திணைவெளி நிலம் சூழலியல் பண்பாடுதிணைவெளி: நிலம் | சூழலியல் | பண்பாடு (Tamil Edition) by [வறீதையா கான்ஸ்தந்தின்]
12.1000 கடல்மைல் கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)
13.பழவேற்காடு முதல் நீரோடி வரைபழவேற்காடு முதல் நீரோடி வரை

அலைவாய்க் கரையின் ஞாழல் மலர் “பேரா.வறீதையா கான்ஸ்தந்தின்”

(பேரா.வறீதையா கான்ஸ்தந்தின் நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம்)