நூல் அறிமுகம்: பொன்-குமாரின் “தனிமையில் அலையும் ஒற்றை இறகு” – ஜனநேசன்

நூல் அறிமுகம்: பொன்-குமாரின் “தனிமையில் அலையும் ஒற்றை இறகு” – ஜனநேசன்



தனிமை என்னும் கலைடாஸ்கோப்

நாடறிந்த நல்ல கவிஞரும், திறனாய்வாளரும், நூல்கள் சேகரிக்கும் இலக்கியத் தேனீயுமான கவிஞர் பொன்.குமார் எழுதியுள்ள “தனிமையில் அலையும் ஒற்றை இறகு “எனும் கவிதைத்தொகுப்பை அனுப்பி இருந்தார். அட்டைப்படத்தை கண்ணுற்றபடி புத்தகத்தை விரிக்கையில் அந்த இறகைப் போலவே வாசக மனமும் சிந்தனை வெளியில் இலக்கற்றுப் பறக்கத் தொடங்கியது.

“தனிமையிலே இனிமை காணமுடியுமா …” பாடலை கவிஞர் கண்ணதாசனின் சொற்களுக்கு இசைத்தேனை தடவிய ஏ.எம்.ராஜா- சுசிலா குரல்கள் செவிவழி மனதை சிலிர்க்கச் செய்தன. . இந்த உலகில் யாரும், எதுவும் தனிமையில் இல்லை என்ற கவிஞரின் தர்க்கம் நினைவில் ஆடியது. அப்புறம் வள்ளலார் மொழிந்த உயிர்நேயச் சிந்தனையின் முதற்ப் படிகளாக “ பசித்திரு; தனித்திரு ; விழித்திரு “ என்ற நற்சுடர் மொழியும்; தனிமை பரவசத்தை வேறொரு சொல்லால் “சும்மா இருப்பதே சுகம் “என்றுரைத்த தாயுமானவர் மொழிகளும் ; இன்னும், “முறிந்த சிறகுகள் “ எழுதிய கவிஞர் கலீல் ஜிப்ரான் முதல் கல்யாண்ஜி உள்ளிட்ட பலரது சிந்தனைகளும் விரிய மனவெளியில் பறக்கச் செய்தது இந்த” ஒற்றை இறகு “.! யோசித்துப் பார்க்கையில் மேற்சொன்னவர்களின் வரிசையில் இந்த ஒற்றை இறகும் செருகி கவிதாதேவியின் மகுடத்தில் சிலிர்த்து நிற்கிறது.

இத்தொகுப்பில், தனிமை என்னும் சொல் சூழலுக்கேற்ப மலர்த்தும் பொருண்மை கலைடாஸ்கோப்பாக அர்த்தஜாலங்களை விரிக்கின்றன. தனிமை என்ற சொல் – ஒற்றை, தனித்துவம், தனிமைத்துவம், தனிமனிதத்துவம் விலக்கப்பட்ட, உறவுகளற்ற, மனதின் குரல், மௌனம், தவநிலை, சிகிச்சைமுறை, துணையன், இப்படி பல அவதாரங்களைப் புனைவதை தனிமை கவிதைகளில் கவிஞர் பொன். குமார் “தனிமையில் அலையும் ஒற்றை இறகு “தொகுப்பில் கோர்த்து, வாசக ரசனைக்கும், சிந்தனைக்கும் விருந்து வைக்கிறார் ..

சில கவிதைகள் வாசகனுக்குள் இன்னும் சில கவிதைகள் முளைவிட விதை தூவுகின்றன. சில கவிதைகள் குறுங்கதையாக கண் சிமிட்டுகின்றன. இத்தொகுப்பு வாசகனுக்குள் கவிச்சிறகு துளிர்ப்பதை உணர்த்துகின்றது. இத்தொகுப்பை வாசிப்பவர் இதை உணருவர்.

சில கவிதைகளையாவது சொல்லாமல் அறிமுகம் செய்வது மரபல்ல ஆகவே சில கவிதைகள் வாசக பார்வைக்கு முன்வைக்கிறேன்.

சமூகம் புறக்கணிப்பவர்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறது

தனிமை. [ பக். 18 ]

தனித்திருக்க

தனி இடம் தேடினேன்.

தனியிடத்தில்

தனியாக  இருந்தனர்

இருவர். [பக்.13 ]

இப்படி  நிறைய கவிதைகளை  வேறுவேறு உணர்வலைகளில்  வாசிக்கலாம். இத்தனிமை  கவிதை தொகுப்பில் தனித்துவமான ஒற்றைப் பொருண்மைத்   தலைப்புகளில்   பல்வேறு  படைப்பாளிகள் எழுதிய படைப்புகளின் பட்டியலை பின் இணைப்பாக  பொன். குமார்  இணைத்துள்ளார். இது இலக்கிய ஆய்வாளர்களுக்கு பேருதவியாக  அமையும். 

நூல் : “தனிமையில்  அலையும்  ஒற்றை இறகு “-  கவிதைகள்
ஆசிரியர் : பொன். குமார்
விலை : ரூ. 60 /-
பக்கம் : 64 .
வெளியீடு : வெற்றிமொழி  வெளியீட்டகம்,
திண்டுக்கல் . 9715168794.