பல்லக்கு கவிதை – இரா.கலையரசி
ஊரில் இருந்த மனிதரெலாம்
ஊருக்குள் நடமாடினர்.
“கள்ளழகர் குதிரை கூட
கள்ளத்தனமாய் எட்டிப் பார்க்க”
காவல் கருப்பு அதட்டியது.
“கருவறை கசகசப்பிற்கு
சிறிது ஓய்வு கொடுத்து”
காற்று வாங்கிட வெளியேறினார்
கனிமுக அழகன் சிவன்.!
தினமும் பூச் சொரியும்
சின்னன் கூடையில்
குதூகலமாய்க் குதித்ததபடி
எட்டிப் பார்க்கின்றன பூக்கள்!
திருநீறு, குங்குமம் விற்கும்
திருநாவு முகமெங்கும் பரவசம்!
வாசலில் கோலங்கள்
ஆலம் விழுதாய் விரிகின்றன.
நாதஸ்வரம், தவில்களை
மூச்சை பிடித்தும், விரல்கள்
அழுத்தியும் வரும் இசை
மெலிதான மல்லிகை
மணமாய் காற்றை நிரப்புகின்றன.!
உற்சவ மூர்த்தியாய்
முன்பொருமுறை வந்த ஞாபகம்
சிவனுக்கு வந்த நொடி!
தள்ளிக் கொண்டு முன்னேறியது
தண்ணீர் லாரியைக் கண்டது போல்
பக்த பெருமக்களின் வெள்ளம்.!
“கூட்ட நெரிசலில் சிக்கிய
குழந்தை ஒன்று
சிவனின் கழுத்து” ஆபரணமாகியது!
தோள் மேல் அமர்ந்தபடி
கூட்டத்தை பார்த்து ரசிக்கிறாள்.
கழுத்து நீண்ட கொக்காக
எட்டிப் பார்க்கிற விளிம்புகள்!
வயிறு நிறைந்த வாத்தின்
அடிவயிறு துருத்தியதாய்
அகன்று ஒய்யாரமாய் இருக்கிறது
அந்த அழகிய “பல்லக்கு”
“அள்ளிச் செருகிய கொண்டையை
வட்டமிட்டபடி ருத்ராட்சக் கொட்டைகள்!
பட்டாடை பகட்டாய் பவிசாய்
கைகளின் இடுக்கில் ஒளிகிறது.
“அடிமையின் தோள்கள் திண்ணமாக
அடிமை வேலை பார்க்கிறது”!
சலித்த சிவனின் கண்கள்
காட்சிகளைப் பதிவேற்றம் செய்ய
தலையைத் தட்டிய ஒருவன்
“புள்ளய குடுய்யா”னு பிடுங்க
பல்லக்கு தூக்கும் மனிதரை
தொடர்கிறார் சிவன்
“என்னத்தச் சொல்ல”
என்றபடி கருவறை நோக்கி.!