இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு – எஸ் வி வேணுகோபாலன்



இசை போல் வந்த உறவு
எஸ் வி வேணுகோபாலன்

கடந்த வாரம் புறநகர் ரயிலில் கடற்கரை ரயில் நிலையம் இறங்கப் போகிற நேரத்தில், ஓர் அருமையான இசைப்பாடலின் தொடக்கப் புல்லாங்குழல் இசையை அப்படியே ஓர் அன்பர் தமது குழலில் வாசித்தது கேட்டதுமே தலையைத் திருப்பிப் பார்க்காமலே தெரிந்துவிட்டது அது யாராகத் தான் இருக்க வேண்டும் என்று… மாதக் கணக்கு ஆகிவிட்டது அவரைப் பார்த்து.

சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து திரும்பிப் பார்த்தால் அவரே தான்… “துளசி” என்று காதல் இணையை ஓர் இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் இன்ப அதிர்ச்சியில் இரைந்து விளித்தேன் …அவரும் கண்டுணர்ந்து விட்டார்…

‘பெயரை மறந்துவிட்டேன் சார், உங்களை இன்னார் என்று நினைவிருக்கிறது’ என்று கைகளை அருகே வந்து பற்றிக் கொண்டார். ‘உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது, இப்போது தான் வெளியே வருகிறேன்’ என்றார். இருநூறு ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து அவர் கையில் திணித்து, ‘உள்ளே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் துளசி’ என்றேன். ‘உங்கள் நம்பர் சொல்லுங்கள், இழந்துவிட்டேன்’ என்று சொல்லிக் குறித்துக் கொண்டேன்.

‘கடற்கரை நிலையம் வந்துவிட்டது’ என்று சொன்னேன், ‘எந்த பிளாட்பார்ம்?’ என்று கேட்டார், எட்டிப்பார்த்து, இரண்டாவது என்று சொல்லிவிட்டு, ‘உங்கள் வாசிப்பை இடையே நிறுத்திவிட்டேன், மன்னிக்க முடியாத தவறு, அந்தத் தொடக்க வாசிப்பு எனக்காக, ப்ளீஸ்’ என்றேன். ‘உங்களுக்கு இல்லாமலா !’ என்று தோளில் மாட்டிக்கொண்டிருந்த பைக்குள் கையை வைத்து சரியான குழலை வெளியே எடுத்து வாசித்தார்…’பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலின் திறப்பை! அருகே இருந்தவர்கள் யாரும் ஓடிப்போய் இறங்க எத்தனிக்காமல் நின்று கேட்டுக் கொண்டிருக்க, ‘போதும் துளசி, இறங்கலாம்’ என்று அவரோடு சேர்ந்து இறங்கினேன், அவருக்கு இனி துணை தேவையில்லை, தனது கம்பு வைத்துத் தட்டிப் பார்த்துத் தனது வழி செல்லத் தொடங்கினார்.

ஆனால், இசை அங்கே நிற்கவில்லை. அதே பெட்டியில் இருந்து இறங்கி என்னைத் தொடர்ந்து வந்த ஓர் இளைஞர் என்னிடம், “சார், ரயில் பயணத்தில் தான் அறிவீர்களா அவரை, உங்கள் நீண்ட கால நண்பரா, அவரைப் பார்த்ததும் ஒரு பரவச உணர்ச்சி உங்களுக்குள் பரவுவதைப் பார்த்து அசந்து போய்விட்டேன்…உங்கள் கண்களை, உடல் மொழியை, அவரது சிலிர்ப்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்” என்று ஆங்கிலத்தில் அவர் விவரித்த துடிப்பில் இசை ததும்பிக் கொண்டிருந்தது. ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சக்கரதர் எனும் அந்த இளைஞரை மீண்டும் காண வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ, துளசியை நினைக்கும் போதெல்லாம் இவரது முகமும் நிழலாடும் உள்ளத்தில். அன்பு கொண்டாடிகள் இசை கொண்டாடிகள் அன்றி வேறென்ன…

கண் பார்வையற்ற துளசிக்கு, எனது குரல் உள்ளே பதிவாகி இருக்கிறது. எனது குரலே என் ஆதார் எண் அவருக்கு. ஸ்பரிசத்தை விட ஒரு பயோமெட்ரிக் உண்டா என்ன, இந்த உலகத்தில்! தொடுதலில் மூளை உணர்ந்துவிடுகிறது இன்னார் என்று, அது மற்ற கதவுகளை உடனே திறந்து கொடுத்துவிடுகிறது, புன்னகை அரும்பிவிடுகிறது, விட்ட இடத்திலிருந்து உரையாடல் தொடர ஆரம்பித்துவிடுகிறது.

கேட்புத் திறன் பற்றிய மிக வித்தியாசமான குறுங்கட்டுரை ஒன்று நேற்றிரவு தேடியெடுத்து வாசித்தது, உங்களுக்கும் பகிர்ந்து கொள்ளவேண்டியது.  https://www.evelyn.co.uk/hearing-essay/

காதுகளால் மட்டும் தான் நாம் கேட்கிறோம் என்று குறுக்கிப் பார்க்காதீர்கள் என்பது தான் அதன் அடிநாதம். மூளைக்குச் செய்தி தான் வேண்டும், அதற்கு ஒலி அதிர்வுகள் வந்தடைந்தால் போதும். மேளச் சத்தம் நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா, அப்போது அந்தக் கருவியின் அதிர்வுகளும் பாருங்கள், ஒரு மரம் காற்றில் அசையும் அதிர்வுகள் கவனியுங்கள். அதைப் பார்க்கும்போதே அந்த ஓசை வந்தடைந்துவிட முடியும். ஐம்புலன்களில் மற்ற நான்கு புலன்களும் உறுதுணையாக இருந்தே ஓசையைக் கடத்திக் கொடுக்கின்றன, நாமறியாமல் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்…என்று எழுதிச் செல்பவர் ஒரு தேர்ச்சியான இசையமைப்பாளர்.

ஸ்காட்லாந்தில் பிறந்த அவருக்கு வயது 57. தனது எட்டாம் வயதிலேயே செவித்திறன் வலுவிழந்து, அடுத்த சில ஆண்டுகளில் முற்றாக இழந்தவர். ஆனால், எவ்லின் க்ளென்னி, ‘கேட்புத் திறன் பறிகொடுத்ததால், அதிர்ஷ்டவசமாக கவனிக்கும் ஆற்றல் வளர்த்துக் கொண்டேன், இந்த உலகில் உற்று கவனிக்கும் தன்மையை மனிதர்கள் வளர்த்துக் கொண்டால் எத்தனையோ சச்சரவுகளைத் தீர்த்து விட முடியும்’ என்கிறார்.

Music Life 73: A Relationship Like Music - SV Venugopalan இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு - எஸ் வி வேணுகோபாலன்

எவ்லின் க்ளென்னி பெயரை அறிய வைத்ததற்கு எங்கள் மகள் இந்துவுக்கும், என் சி இ ஆர் டி பாட திட்டக் குழுவுக்கும் நன்றி சொல்லவேண்டும். அவளது பள்ளிக்கூட நாட்களில் படித்தறிந்தது. இப்போது க்ளென்னி அவர்களது இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன செய்திகள்.
இசைக்கான கிராமி விருதுகள் இருமுறை பெற்றவர், குறைந்த பட்சம் 100 சர்வதேச விருதுகள் பெற்றிருப்பவர். பியானோ சிறப்பாக வாசித்தவர், பின்னர் தாளக் கருவிகளின் அபார இசைக்கலைஞராக அறியப்படலானார். தான் சொந்தமாகவும், தனித்தும், குழுவினரோடும், புதிதாகவும், ஏற்கெனவே இசைக்கப் பட்டவற்றை மெருகேற்றியுமாக எவ்லின் க்ளென்னி 40 குறுந்தகடுகள் வெளியிட்டிருக்கிறார். உற்றுக் கேளுங்கள் என்பது தான் அவரது மிகப் பெரிய இயக்கமாக இருக்கிறது என்கிறது இணைய தள குறிப்பு.

ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான OBE (ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்) அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. லண்டனில் 2012ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் க்ளென்னி தலைமை ஏற்று வாசித்தது முக்கியமானது. அதன் காணொளிப் பதிவுகள் வியக்க வைக்கின்றன.

ஏதேனும் நிகழ்ச்சிகளுக்காகத் தன்னை அழைப்போர் யாருக்கும் தனது அறிமுகக் குறிப்புகளில் தனது காது கேளாமை பற்றி எழுதித் தருவதில்லை என்றும், ஆனாலும், ஊடக நிருபர்களது கவனம் அந்தப் புள்ளியிலேயே உறைந்திருக்கிறது என்றும் வேதனையோடு சொல்கிறார் க்ளென்னி.

காலணிகள் அணியாத வெறுங்கால்களோடுதான் அவர் மேடையில் நிற்பார், அவருக்கு அதிர்வுகளைப் பெருமளவு கொண்டு சேர்ப்பவை அந்தக் கால்கள்! எல்லாம் தெரியவந்தாலும், ‘காது கேட்காத உங்களால் எப்படி இசை அமைக்க முடிகிறது?’ என்ற அதே அரதப்பழசான கேள்வியைத் தான் எங்கே போனாலும் துரத்தித் துரத்திக் கேட்கின்றனர் அவரை.

பொறுமையாக எத்தனையோ விளக்கிய பிறகும், இந்தக் கேள்வியிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரிடம் வெறுத்துப் போய், “காது கேளாமை பற்றி நீங்கள் அறிய விரும்பினால் ஓர் ஆடியோலஜிஸ்ட் போய்ப் பாருங்கள், நான் இசை உலகத்தைச் சார்ந்தவள்” என்று சொல்லி முடித்துக் கொண்டாராம். அவரது இணைய தளத்தின் பக்கங்கள் எல்லாவற்றிலும், ‘இந்த உலகிற்கு உற்றுக் கேட்கக் கற்பி’ என்ற வாசகம் இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் பீத்தோவன் அவர்களும் செவித்திறன் பறிகொடுத்தவர் என்றாலும் எண்ணற்ற ரசிகர்களுக்காக இசை தொடுத்துக் கொடுத்து மறைந்தவர்தான். துளசியின் கைகளைப் பற்றும் போது எவ்லின் ஊடாக நாம் பீத்தோவன் தோள்களையும் தழுவிக் கொள்ள முடிகிறது.

ராஜ பார்வையில் கண் பார்வையற்ற கமல்ஹாசன் ஓர் இசைக்கச்சேரியில் வயலின் வாசிக்கும் முக்கியமான காட்சிக்கான இசையமைப்பு அபாரமானது. படத்தில் நாயகி அதற்கு முந்தைய காட்சியில் அவரைத் தவறாகக் கருதியதை நினைத்து நாணுவதும், அந்த இசையில் தன்னைப் பறிகொடுப்பதுமான பின்னணியில் அந்த இசைக்கோவை அப்படியே உள்ளத்தைத் திளைக்கச் செய்து திக்குமுக்காட வைத்துவிடும். ராஜ (முன்) பார்வை என்ற தலைப்பில் இந்தப் படத்திற்கு ஒரு வார இதழில் விமர்சனம் எழுதிய எழுத்தாளர் சுஜாதா, மேற்கத்திய இசைக்கும், கர்நாடக இசைக்குமான தேர்ச்சியான கலவையைப் பிடித்துவிட்டார் ராஜா என்பது போல் குறிப்பிட்டுக் கொண்டாடி எழுதி இருந்தார்.

Music Life 73: A Relationship Like Music - SV Venugopalan இசை வாழ்க்கை 73: இசை போல் வந்த உறவு - எஸ் வி வேணுகோபாலன்

கீ போர்ட், விஜி மேனுவல். வி எஸ் நரசிம்மன் வயலின் வாசிப்பு அது ….. வாசிப்பு அல்ல பொழிவு. பார்வைப் புலனுக்கும், செவிப்புலனுக்கும் உள்ள நெருக்கமான ஒற்றுமையை எவ்லின் க்ளென்னி பேசுவதை இங்கே இசையாகக் கேட்கிறோம். கருவிகளின் அதிர்வுகளை உணர்வுகளின் அதிர்வுகளாக்கி, உள்ளத்தின் அதிர்வுகளாக்கும் இசை.

முதலில் இலேசாக உடலைத் தொட்டுக் கடந்து போகும் குளிர்ந்த காற்று மெல்ல நம்முடலைத் தழுவுகிறது. பின்னர் முடிக்கற்றைகளைப் பறக்க விடுகிறது. இப்போது மேலாடைகள் தங்களைத் தளர்த்திக் கொள்ளப் போராட வைக்கிறது காற்று. பின்னர் காலை வலுவாக ஊன்றி நிற்காவிட்டால் குடை சாய வைக்குமளவு வலுப்பெறுகிறது காற்று. அப்புறமென்ன நம்மையும் அதன் போக்கில் இழுத்துச் செல்லவும், பின்னிருந்து தள்ளிவிடவுமாக இசையின் பன்மைத்துவம் அசர வைக்கிறது. கண்ணுக்குப் புலனாகிறது காற்று, அதிர்வுகளாக! வயல்காட்டில் நிற்கையில் நாற்றுகளின் ஆட்டத்தில் காற்று. கதிர்களின் அதிர்வுகளில் காற்று. காற்றின் இசைக் கச்சேரியில் புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், கிடார், பியானோ எல்லாம் சேர்ந்து கொள்கின்றன வயலின் பக்கமாக…..வயல் வெளியின் பக்கமாக!

கமல் எத்தனை நுணுக்கமாக அந்த இசையில் தன்னையும் பறிகொடுக்கிறார், மாதவியின் முகத்தில் காதல் படர்வதன் நிறமாற்றம் எப்படி நேர்கிறது என்பதையும் பார்க்க முடியும் அந்த அருமையான காட்சியில்! எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காதது.

ராஜ பார்வையின் அந்தி மழை பொழிகிறது ரசிகர்கள் இதயத்தைக் கொள்ளை கொண்ட பாடல் என்றாலும், காதல் துயரத்தைச் சிந்தும் வயலின் இசையை ஏந்தி வரும் கங்கை அமரனின் பாடல் படத்தின் முக்கியமான ஒன்று. விழியோரத்து….என்று அவர் அந்தப் பாடலை எப்படி விழியில் இருந்து தொடங்கினார் !

படத்தில், இந்தப் பாடல் இடம் பெறும் இடம் கவித்துவமானது. மன உளைச்சலில் இருக்கும் கமல், ரிக்கார்டிங் நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சரியாக வாசிக்க இயலாமல் திரும்பத் திரும்ப முயன்று தோற்று ஸாரி சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்க, சக இசைக்கலைஞர் ஒருவர் கையில் எடுக்கவும் சோகத்தை இழைக்கிறது ஓர் ஒற்றை வயலின்….அடுத்த நபர் சரியாக வாசிப்பதில் கமல் எதிர்கொள்ளும் இருப்பு கொள்ளாமை விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

அங்கிருந்து காட்சி, மாதவி வீட்டுக்கு இடம் பெயர, அந்த வயலின் இழைத்த ஏக்கங்களை சசிரேகா அப்படியே சுவீகரித்து எடுத்துக் கொண்டு பல்லவியைத் தொடங்குகிறார், ‘விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடிடுதே’ என்பதில் மட்டுமே நிறைய செய்திகள். ‘விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே’ என்பதில் மட்டுமென்ன இன்னும் ஆயிரம் செய்திகள். ‘கதை போல் வந்த உறவு இடையே இந்தப் பிரிவு’ என்பது சாதாரண விவரிப்பு, ‘இசை கூடிய கவிதை அதன் ஒலி தேய்ந்ததும் ஏனோ’ என்ற இடத்திலும் எத்தனை செய்திகள்…

சசிரேகா முடித்ததும், பல்லவியில் இணைகிறார் கமல். மென்மையாக ஒரு துயரத்தைக் கடத்தும் குரல் அது. பல்லவியை முழுதாகக் கூட அவர் இசைப்பதில்லை… சோக மனநிலையின் பரிதவிப்பு அது. அத்தனை கற்பனையோடு ராஜாவின் இசைக்கோவை.

பல்லவி முடிந்ததும் சட்டென்று இசையை முந்தைய கொண்டாட்ட தருணங்களின் நினைவுக்கு ஏற்ப மாற்றி, அதை அப்படியே வளர்த்துச் சட்டென்று ஓரிடத்தில் ஒற்றை வயலின் இழைப்பில் இப்போதைய சோக கட்டத்திற்கு இலகுவாகக் கைமாற்றிக் கொண்டு வந்துவிடுகிறார் ராஜா. அதன் உருக்கமான வளைவுப் பாதையில் எதிரே வரும் வாகனத்திற்கு இடம்கொடுத்து நிற்பது போல் வயலின் நிற்க, கமல் அருமையான ஹம்மிங் எடுக்கிறார்….அது யாருமற்ற வெளியில் தொலைவில் கேட்கும் பெருமூச்சாக அலைந்தலைந்து எதிரொலிக்க, சசிரேகா வேறொரு வெளியில் நாயகியின் தனிமை பெருமூச்சை ஹம்மிங் மூலம் வெளிப்படுத்த, பாடலின் ஒரே சரணத்தை கமல் எடுக்கிறார்: ‘ஒரு ஓவியக் கவிதை கண்ணீரினில் நனையும் ஒரு காவியக் கனவைத் தினமும் மனம் நினைக்கும்’

உள்ளத்தின் அந்தப் பாடுகளை தபேலா ஆர்ப்பாட்டமின்றி அருமையாகத் தாங்கி ஒலிக்கிறது. ‘இரு காதலர் நடத்தும் தனிமைப் பயணம் ஒரு பாதையில் இருந்தும் அதில் பிரிவென்பதும் ஏனோ’ என்று சசிரேகா சரணத்தை உருக்கமாக முடித்து, அப்படியே பல்லவிக்குப் போய்ப் பாடலை நிறைவு செய்கிறார்.

உலகத்தை உற்றுக் கேட்கக் கற்பிக்க வேண்டும் என்று எவ்லின் க்ளென்னி பல ஆண்டுகளாக முன்னெடுக்கும் அறைகூவல், சமூகத்தில் ஏற்படும் அதிர்வுகளை மௌனமாகக் கடந்து செல்லும் எல்லோருக்குமான அழைப்பு. அலைபேசியில் மட்டுமல்ல, குடும்பத்தில் பணியிடத்தில் பொது வெளியில் கூட எத்தனையோ கவன ஈர்ப்புச் செய்திகள், அழைப்புகள் மிஸ்ட் கால் ஆக நழுவிப் போய்விடுகின்றன. அல்லது அரைகுறையாகக் கேட்டுத் தவறான எதிர்வினைகள் நேர்கின்றன.

அன்போடு அணுகும் உள்ளங்கள் பேசிக் கொள்ளாவிட்டாலும் பரஸ்பரம் அதிர்வுகள் பரிமாறிக் கொள்ளவும், புன்னகை பூக்கவும் சாத்தியமாகிறது. இசை, சமூகத்தின் கூட்டு உளவியலுக்கான அதிர்வுகளை அசாத்தியமாகப் பரவ விடுகிறது. உள்ளுக்குள் தவிக்கும் ஆதங்கப் பள்ளங்களை இசை நதி நிரப்பிக் கண்கள் வழியே ததும்பி வெளியேறி ஆற்றுப் படுத்தவும் செய்துவிடுகிறது. உற்றுக் கேட்கும் ஒவ்வொரு முறையும் இசை, எத்தனையோ புதிய செய்திகள் சொல்லக் காத்திருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலா

ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலா

ஒளிப்பதிவாளர் நிவாஸின் மரண செய்தி சற்று முன் நண்பர் சிஜே ராஜ்குமார் பதிவிட்டிருந்தார் . 16 வயதினிலே படத்தின் ஒளிப்பதிவு மூலம் அவர் தமிழ் சினிமா காட்சியியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தவர் . அப்படம் மூலம் அவர் நிகழ்த்தியது மிகப்பெரிய…
வீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம்? நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன்

வீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம்? நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன்

வீடுகளில் பெண்கள் செய்கிற வேலைகளுக்கு பண ஈடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் கூறியுள்ள கருத்து ஒரு விவாத அலையை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் திரைப்பட நட்சத்திரமுமான கமல்ஹாசன் சென்ற மாதம் தனது தேர்தல் பரப்புரைப்…
சூரப்பாவின் நேர்மையும் வளைந்து கொடுக்காத தன்மையும் உச்சி முகரத் தக்கதா? – நா.மணி

சூரப்பாவின் நேர்மையும் வளைந்து கொடுக்காத தன்மையும் உச்சி முகரத் தக்கதா? – நா.மணி

‌ புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை மறந்து அல்லது மறைத்து அதற்கு ஆதரவாக ஒரு சில அறிவுஜீவிகள் குரல் கொடுக்கின்றனர். அதேபோல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விசயத்திலும் அவர் நேர்மையானவர் என்று, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவர் ஓங்கி…