காமாட்சி சிறுகதை – மாக்சிம் சூர்யா
கோடை மழையின் உக்கிரம் பூமியின் உடலைக் கூட நடுங்கச் செய்து கொண்டிருந்தது. ஊசி கொண்டு முகத்தைக் குத்துவது போல் மேகம் தன் மழை புதல்வர்களைத் துப்பிக்கொண்டிருந்து. தலைவருக்கு ஜால்ரா போடும் தொண்டர்களைப்போல் காற்றும், மழைக்குத் தன் விசுவாசத்தைக் காட்டியது.
தான் எப்போதும் படுத்துறங்கும் சீமை ஓடுகளால் கூரை வேய்ந்த பழைய ரேஷன் கடையின் முன்பக்கமிருந்த சிறிய இடம் கூட மழையில் நனைந்து விட்டதே என்ற கவலையில் மழைச் சாறலுக்கு ஒடுங்கி, குத்துக்காலிட்டு அமர்ந்து பக்கவாட்டில் கைகளைக் கட்டிக் கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள் காமாட்சி.
அம்மா இறந்த பிறகு அப்பாவோடு பிழைப்புக்காகத் தனது 22 ஆவது வயதில் தான் மேலூருக்கு வந்து சேர்ந்தவள். என்றிலிருந்தோ நைந்து போன துணியைப் போல் கிடக்கும் காமாட்சி இவ்வூரிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். காலை வேளையில் யாரவது ஒருவர் வாங்கித்தரும் பூமணி ஒட்டல் இரண்டொரு இட்லியை உண்டுவிட்டு ஆலமரத்திற்குப் பக்கத்தில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட்டில் படுத்துக்கொள்வாள். மதிய நேரத்தில் செட்டியார் கடையிலிருந்து ஆலமரக் குரங்குகளுக்கு வீசப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகள் தான். சிலநேரம் மிக்ஸரும் கிடைப்பதுண்டு. சாயங்காலம் அம்மன் கோவிலுக்கு இடப்புறம் உள்ள அடிபம்பில் குளியல். இரவு உணவு யாராவது இரக்கப்பட்டு கொடுத்தால் உண்டு. இல்லையெனில் இரவு உணவுக்கு விடுமுறைதான்.
நாலடிக்குக் கொஞ்சம் கம்மியான உயரம். க்ராப் வெட்டிய தலை முடி. சீவுக்குச்சியால் தோடு போட்டிருக்கும் காதுகள். களிமண்ணில் ஆற்று மணற் கலந்தாற்போன்று மினுமினுக்கும் நிறம்.அம்மாவின் நினைவாய் தான் கட்டியிருக்கும் சேலை முந்தானையை கைவிரல்களில் சுற்றியபடி தாமோதர பிள்ளையின் வீட்டின் முன்பாக தன் அப்பாவோடு நின்றுக்கொண்டிருந்தாள் காமாட்சி.
‘யாருப்பா நீங்க? எந்த ஊரு? யாரப் பாக்கணும்?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டாள் 45 வயது மதிக்கத்தக்க தாமோதர பிள்ளையின் மனைவி.
கையில் வைத்திருந்த சாயம் வெளிறிய பச்சைத் துண்டை சட்டென இடுப்பில் கட்டிக் கொண்டு, ‘அம்மா! நாங்க வெளியூரு. வேல தேடி வந்துருக்கம். அய்யாவ பாக்கணும்னு காத்துட்டுருக்கம்’ என்று பணிவான குரலில் கூறினார் காமாட்சியின் அப்பா.
‘அய்யா குளிச்சிட்டுருக்காரு நீங்க ரெண்டு பேரும் இப்டி ஒரு ஓரமா நில்லுங்க வர சொல்றேன்’ என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள் பிள்ளையின் மனைவி.
இடுப்பில் வெள்ளை நிற வேட்டியும் சட்டை அணியாத உடம்பிலும், நெற்றியிலும் திருநீறு பட்டையும், தங்கச் செயினில் ஒற்றை ருத்திராட்சமும் அணிந்தவாறு வெளியே வந்தார் தாமோதர பிள்ளை. ‘யார் உங்கள அனுப்புனது?. என்ன விஷயமா வந்துருக்கீங்க?’ என்று காமாட்சியைப் பார்த்தவாறே கேட்டார்.
‘சாமி நாங்க வேலை தேடி வந்துருக்கம். அய்யா வீட்ல தோட்ட வேலைக்கும், மாடுகளைப் பாத்துகிறதுக்கும் ஆளுங்க தேவைன்னு சொன்னதா கலியன் அண்ணன் சொன்னாரு. அதான் உங்கள பார்த்து வேலை கேட்டுப் போலம்னு வந்தம் சாமி’ என்று பணிவான குரலில் சொன்னார் காமாட்சியின் அப்பா.
‘வேல வேணும்னு சொல்ற, கூட வயசு புள்ளைய கூட்டிட்டு வந்திருக்க, யாரு இந்தப் பொண்ணு, என்ன உறவு?’ என்று கேட்டார் பிள்ளை.
‘அய்யா! இது என் மொவ. பேரு காமாட்சி. கொஞ்சம் மந்த புத்தி. ஆனா வேலையில படு சுட்டி. கொஞ்ச நாள் முன்னாடி என் பொண்டாட்டி இறந்துட்டா. இவள வீட்லயே விட்டுட்டு வர மனசில்ல… அதான் கூடவே கூப்பிட்டு வந்துட்டேன். எந்த வேலையா இருந்தாலும் நல்லா செய்வாங்கய்யா. எங்க ஊர் கவுண்டர் வீட்ல வேலை பாத்துக்கிட்டு இருந்தோம். அவங்க இப்போ எல்லாத்தையுமே வித்துட்டு டவுனுக்கு அவங்க பையன் வீட்டுக்குப் போய்ட்டாங்க. அந்த வீட்டு தோப்புதொரவெல்லாம் நான்தான் பார்த்துகிட்டுருந்தன். அங்கிருந்த மாடுங்க எல்லாத்தையும் என் பொண்ணு தான் பார்த்துகிட்டா. தொழுவத்த சுத்தம் பண்றது. மாடுகளுக்கு தீவனம் வக்கிறது. விசேஷ நாள்ல மாடுகள குளுப்பாட்டுறதுனு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வா’ என்று காமாட்சியின் புகழை பாடி முடித்தார்.
ங்க்.. என்று செறுமிவிட்டு இடுப்பு வேட்டியை சரிசெய்யதவாறே ‘தோட்டத்துக்கும்,மாடுகள பாத்துகிறதுக்கும் ஆளு தேவைதான். ஏற்கனவே இருந்தவன் பொண்டாட்டிக்கு பிரசவம்னு போனான் ஆளையே காணும். ம்.. சரி கலியன் அனுப்புனானு வேற சொல்ற அவன் நல்ல ஆளுதான். அவன் அனுப்புன ஆளுங்களும் நியாயமான ஆளுங்களாதான் இருக்கும். நீங்க ரெண்டு பேரும் இங்கயே வேலைக்கு வந்துடுங்க. தங்குறதுக்கு மாட்டு தொழுவம் பின்னாடி மண்குடிசை இருக்கு அங்கயே தங்கிக்கிட்டு வேலைய பாருங்க’ என்றார் தாமோதர பிள்ளை.
இரு கைகளையும் கூப்பி ‘ரொம்ப நன்றிங்க சாமி’ என்று கும்பிடும் அப்பாவையும், தாமோதர பிள்ளையையும் மாறி, மாறி பார்த்துக்கொன்டிருந்தாள் காமாட்சி.
‘சரி.. ரெண்டு பேரும் கொல்லப்புறமா போங்க அம்மா சோறு கொடுப்பா சாப்டுட்டு நாளையிலருந்து வேலைய பாருங்க’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் பிள்ளை.
‘ஏங்க! அதுங்க ரெண்டையும் பார்க்கவே மெலிஞ்சுபோய் ரொம்ப பரிதாபமா இருக்குதுங்க. வேலையெல்லாம் நல்லா பாக்குங்களா. அந்த பொண்ணு வேற பாக்குறதுக்கு கிறுக்கு மாதிரி இருக்கு. வேலையெல்லாம் பாக்குமா?’ என்று சந்தேகத்தோடு கேட்டாள் பிள்ளையின் மனைவி.
‘ரெண்டும் சாப்டுறத பாத்தல்ல கூச்சம் கீச்சம் இல்லாம கை நிறைய அள்ளி வாய் நிறைய சாப்டுதுங்க. இந்த மாதிரி பசிக்கு சாப்டுறவன் தான் நல்லா வேலை செய்வான். ருசிக்கு கொஞ்சம் கொஞ்சமா கொறிக்கிறவன் வேலை செய்யுற மாதிரி பாவ்லாதான் காட்டுவான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறன் நீ ஒண்ணும் கவல படாத’ என்றார் பிள்ளை.
இரையைப் பார்த்த புலி தரையோடு தரையாய் ஊர்ந்து செல்வது போல் சூரியன் மெல்ல மெல்ல மேலெழ ஆரம்பித்திருந்து. சேவலின் சப்தம் கேட்கும் முன்பே காமாட்சி தன் அன்றாட அலுவல்களைத் தொடங்கியிருந்தாள். மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வது, வீட்டு வாசலைப் பெருக்குவது. மாடுகளுக்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வைப்பது என்று தன் வேலையை செய்துகொண்டிருந்தாள்.
காமாட்சி யின் அப்பா மேலூருக்கு வந்த ஒருசில மாதத்திலேயே தென்னந்தோப்புக்கு நீர் பாய்ச்சும் போது பாம்பு கடித்து இறந்து விட்டார் . அன்றிலிருந்து காமாட்சி தனியாகத்தான் இருக்கிறாள்.
‘உன் ஒருத்திக்கு மட்டும் எதுக்கு சோறாக்குற இனிமே நம்ம வீட்லயே சாப்ட்டுக்க’ என்று பிள்ளையின் மனைவி கூறியிருந்தாள். காமாட்சியின் அப்பா இறந்த பிறகு அவளுக்கென்று புது ஈயத் தட்டு வாங்கப்பட்டது.
முரண்டு பிடிக்கும் செவலக் காளையின் மூக்கணாங்கயிறை இழுத்து வலப்பக்க முன்னங்காலில் கட்டிவிட்டு ரெண்டாளுயர கருவேலங் குச்சியை எடுத்துக் கொண்டு மதியம் சாப்பிடுவதற்கு பிள்ளையின் மனைவி கொடுத்த பழைய சோற்றைத் தூக்கு வாளியில் போட்டு எடுத்துக் கொண்டு ஊருக்கு மேற்கே உள்ள ஏரிக் கரைக்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள்.
ஏரியின் தெற்குக் கரையில் மாடுகளை இறக்கி மேய விட்டுவிட்டு ஏரிக்கரையின்மேல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் புளியமரத்தின் அடியில் வந்து உட்கார்ந்தாள்.
‘என்ன காமாட்சி, இன்னிக்கு சீக்கிரமே மாட்டை ஓட்டியாந்துட்ட?’ என்று மஞ்சள் கறை படிந்த பற்கள் தெரிய இளித்தவாறே கேட்டுக் கொண்டு அவளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் கட்டையன்.
‘அதுவாண்ண! இன்னிக்கு வெயில் காலையிலேயே அதிகமாயிருந்துச்சு.. அதான் நேரத்திலேயே ஓட்டிட்டு வந்துட்டேன்’ என்று குழந்தையைப் போல் கூறிக்கொண்டே இடுப்பில் செருகி வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து வேர்க்கடலையை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள்.
கட்டையனும் அவள் சொல்வதை ஆமோதிப்பதைப்போல் தலையை அசைத்தான். கட்டையன் முத்து கவுண்டர் வீட்டில் பண்ணை வேலைப் பார்ப்பவன். அவனும் இந்த ஏரிக்கரைக்குதான் மாடுகளை ஓட்டி வருவான். அவன் மட்டுமல்ல மேலூரிலிருக்கும் பாதி பேர் தங்களது ஆடு,மாடுகளை அங்குதான் ஓட்டிப்போவார்கள். ஒரு சில பேர் ஊருக்கு வடக்கு பக்கம் இருந்த வாய்க்காலுக்கு ஓட்டிப்போவார்கள்.
மழைக் காலத்தில் கடல் போல் காட்சியளிக்கும் ஏரி, கோடையில் வறண்டு திட்டு திட்டாய் தண்ணீர் தேங்கி நிற்கும்.
இடக்காலை நீட்டியும், வலக்காலை மடக்கியும் உட்கார்ந்திருந்த காமாட்சியிடம் ‘என்ன! பாப்பா காலுல இவ்ளோ பெரிய தழும்பு!’ என்று அக்கறையாய் விசாரிப்பது போல காயம்பட்ட தழும்பை தடவிப் பார்க்கும் சாக்கில் அவளின் அந்தரங்கமெல்லாம் தொடுவதாக நினைத்து கொண்டு தடவினான்.
‘விடுண்ண! ஒண்ணுமில்லை’ என்று கையைத் தட்டிவிட்டாள்.
‘அட, சும்மா தான எப்படியாச்சுனு கேட்டன்’.
‘அது ஜானகி அம்மா குளிக்க வெந்நீர் போட சொன்னாங்க.. அப்போ தெரியாம விறகு கட்டையில கால வச்சுட்டன். அப்போ அதுலருந்த நெருப்பு சுட்டு காயமாச்சு. இப்போ ஆறிடுச்சு’ என்று முழங்காலுக்கு மேலே ஏறியிருந்த பாவாடையை இறக்கிவிட்டாள்.
அவள் சொல்வது எதுவும் காதில் ஏறாதவனாய் காமாட்சியின் பருத்த ஸ்தனங்களையே வெறித்து பார்த்துக் கொண்டு தன் மன விரல்களை அவளின் உடல் முழுக்க பரவ விட்டான் கட்டையன்.
பக்கத்திலிருந்த பெரிய கருப்பன் கரும்பு காட்டில் செவலை காளை நுழைவதைப் பார்த்த காமாட்சி வேர்க்கடலையை கீழே போட்டு விட்டு சட்டென்று குச்சியை எடுத்துக் கொண்டு ஓடினாள்.
‘என்னங்க! காமாட்சி சாயங்காலத்துலருந்து உடம்பு சரியில்லாம மொனகிக்கிட்டு இருக்கா. நான் டாக்டர்க்கு சொல்லிவிட்டிருக்கன். அவரு கொஞ்சம் நேரத்துல வந்துருவாரு. நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரன். அதுக்குள்ள அவ சாப்ட எதாவது கேட்டாள்னா வீட்டு பின்னாடி கஞ்சி வச்சிருக்கன் அத எடுத்துக்க சொல்லுங்க நான் சீக்கிரமே வந்தரன்’ என்று கூறிவிட்டு கோவிலை நோக்கி நடந்தாள் பிள்ளையின் மனைவி.
வீட்டின் மண் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஜானகி அம்மாள் கொடுத்த தைலத்தை நெற்றியில் தேய்த்து விட்டு முழங்காலில் தேய்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. புதிதாய் தோலை உரித்த கருநாகப் பாம்பு பளபளவென மின்னுவது போல் தைலம் பட்டு மினு மினுக்கும் அவளின் காலைப் பார்த்து தொண்டைக்குழியிலிருந்த எச்சிலை விழுங்கிவிட்டு கோழிக்கூட்டுக்குள் நுழையும் நாகத்தைப்போல் குடிசையில் நுழைந்தார் தாமோதர பிள்ளை.
‘என்ன காமாட்சி, உடம்புக்கு என்னாச்சு?’ என்று விசாரித்தவாறே அவளின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
‘உடம்புலாம் ஒரே வலியாருக்கு. ஜுரம் வர மாதிரி சூடாருக்கு. அதான் மாட்டை சீக்கிரமே ஓட்டிட்டு வந்துட்டேன். அம்மா தைலம் கொடுத்தாங்க அதான் தேச்சிக்கிட்டுருக்கன்’ என்று மரியாதை கலந்த பயத்தில் கூறினாள்.
‘சரி.. சரி நீ படுத்துக்க நான் தைலத்தை தேய்ச்சு விடுறன்’.
‘அய்யோ! வேனாங்கய்யா நீங்க எனக்கு தைலம் தேச்சுவிடுறதா..! வேண்டாங்கய்யா’ என்று படபடத்த குரலில் கூறினாள்.
‘அட, ஒண்ணும் வெட்கப்படாத ஏன் பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லனா நான் தேய்ச்சு விடமாட்டனா அது போலத்தான்’.
‘அதுலாம் வேண்டாங்கய்யா’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் காமாட்சி.
அவள் கூறியதை காதில் வாங்காமல் தைலத்தை பிடுங்கி தேய்க்க ஆரம்பித்தார். பிள்ளையின் கையில் உள்ள வெள்ளை முடி சிலிர்த்து நிற்க காமாட்சியின் நெற்றி, கழுத்து என கைவிரல் இறங்கி வந்து அவளின் பருத்த ஸ்தனங்களை தொட முயற்சித்துக்கொன்டிருந்தது.
தூண்டில் முள்ளில் மாட்டிய மண்புழுவைப்போல் அவள் நெளிந்து கொண்டிருந்தாள். பாவம் அவளால் அதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்.
பெரிய கருப்பன் கரும்பு காட்டில் மயங்கிய நிலையில் காமாட்சி கிடப்பதாக அவளுடன் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஊர் முழுக்க கத்திக்கொண்டே ஓடினார்கள்.
அன்றிலிருந்து காமாட்சி பித்துப் பிடித்தவளைப் போல் தனியே புலம்பிக் கொண்டும், வசைபாடிக்கொண்டும் ஊரைச் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தாள். இனி இவள் வேலைக்கு லாயக்கு இல்லை என்று சொல்லி வீட்டை விட்டேத் துரத்திவிட்டாள் பிள்ளையின் மனைவி.
இப்போது தாமோதர பிள்ளை வீட்டின் மாடுகளையும், தோட்டத்தையும் பார்த்துக் கொள்வதற்காக மீனாட்சி எனும் ஒருத்தி குடும்பத்தோடு மேலூருக்கு வந்து சேர்ந்தாள்.