மௌனம் பேசியதே  குறுங்கதை – அன்பாதவன்

மௌனம் பேசியதே குறுங்கதை – அன்பாதவன்




விடை பெறுகையில் தயக்கம் நிறைந்த விழிகள் சிந்தும் நீர்க்கோடுகளை எப்படி வகைப்படுத்துவேன்… செல்லமே! கடந்து போன கசப்பு தருணங்களை கழுவி அலசி வெளியேற்றுகிறேன் மனசின் நீர்த்தாரையிலிருந்து…

கனல் கக்கும் சிறுநகரத்தின் அனலறைக்குள் காமேஸ்வரி உன் மோக முத்திரைகள்… சக்தி சாந்த சொரூபி உன்னோடு உறவும் தருணங்களில் அறிந்து புரிகிறேன் அர்த்த நாரியை…. உச்சத்தின் உச்சியில் “ஊ” ங்கார மாதங்கி….. களைத்த பசிக்கு கையமுதுட்டும் அன்னபூரணி….

எப்போது தொடங்கியது… எப்போது முடியும்…? எவரறிவார்….? முதன் முதலில் நாம் சந்தித்த அந்த சந்தோஷ மனசோடு புதிய அர்த்தங்கள் மிளிரும் இவ்வோலையை உள்வாங்கி இந்நொடி முதலாய் தொடர யத்தனிக்கிறேன். நமக்கான… ம்ஹூம்… எனக்கானப் புதுவாழ்வை. அது மிகப் புதியதாய்… காதலும் கனிந்த அன்பும் வாத்சல்ய வார்த்தைகள் நிரம்பிய ஆறுதல் கூடையாய்.. நிரம்பி வழியும் ஈர இதயத்தோடு.

தேவதையொருத்தியால் வரமளிக்கப்பட்டாலும் சில குறுமுனிகள் சாபத்தால் கலைந்த தவம்… தொடருமா… என் அதீக வலி… தனிமையைச் சுமந்து செல்கிறது வாகனம் தடதடத்த படி… மவுனமாய் உடனோடி வருகிறது இருட்டு… சில இடங்களில் நிழலும் கடக்கத் துணையாய் தொலைவில் ஒளி சிந்தும் உன் ஒற்றைக்கல் மூக்குத்தி கடினமான உனது தருணங்களில் தள்ளியே இருந்திருக்கிறேன். ஊர்சுற்றியாய்… தூரங்கள் தூயர் சுமந்த அடையாளங்கள்… இன்னொடு முகம் பூண்டு கழிகின்ற காலங்களைப் பாடுகிறேன். செவி மடுப்பாயா… அஃதென் வயிற்றின் பாடல் மட்டுமல்ல மனசின் இசை! மந்திரச்சொல் மறந்து குகைக்குள் சிக்குண்டவனுக்கு கிடைக்குமோப் புன்னகைத் திறவுகோல்…மலருமோ புதிய விடியல்… கிழக்கு ஒளிர்கிறது. நம்பிக்கையின் கீற்றாய்… அர்த்தமும் சுவையும் நிரம்பிய அத்திசையை நோக்கி பயணிக்கிறேன். உடன் வருகின்றன… நிலவும் உடுக்களும்.. கூடவே சூரியனும்….உன் நினைவுகளோடு

– அன்பாதவன்