நூல் அறிமுகம்: கனவும், இயற்கையும், வாழ்வின் பொருளும் – ச. வின்சென்ட்
கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்
சக்தி ஜோதி
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம்: 80 விலை: ரூ 100
குழந்தைப் பருவத்தில் அன்பைத் தேடுகிறார்கள்; இளவயதில் காதலுக்கான பொருளைத் தேடுகிறார்கள். இடைப்பட்ட வயதுக்காரர்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடுகிறார்கள். முதுமை எய்த எய்த இதுவரைக் கண்ட பொருளினால் என்னபயன் என்று தேடுகிறார்கள். சக்தி ஜோதியும் வாழ்க்கைக்கான பொருளைத்தான் தேடுகிறார். அதனைப் பலவழிகளில், பல இடங்களில் தேடுகிறார்: நிலத்தில், பயிர் முளைத்தலில், வானத்தில் பறக்கும் பறவைகளில், காலில் குத்திய முள் வடித்த இரத்தத் துளியில், கதைகளில் வரலாற்றில் தேடுகிறார்.
கவிஞர் ஜோதி அண்மையில் வெளியிட்டிருக்கும் கவிதைத் தொகுப்பான கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் அறுபது கவிதைகளைக் கொண்டது. அவற்றில் பெரும்பான்மையானவை இயற்கையையும் இயற்கை சார்ந்த பயிர்த்தொழில் நுட்பங்களையும் பாடுபவை. பயிர்த்தொழில் செய்வதில் ஆணென்ன பெண்ணென்ன? ஆனால் பெண் குழந்தைதான் தான் போட்ட விதை முளைத்திருப்பதைக் கண்டு குதிக்கும். சிறுமிதான் தான் நட்ட செடியில் மலரும் ரோஜாவை உயிர்போல நேசிப்பாள். கழனிதிருத்தி விதை விதைத்து வளர்த்த முள்ளங்கியைத் தோண்டிப்பார்க்கும் அந்தப்பெண்ணின் கையில் தவழும் வெண்கிழங்குதான் கண்களில் நீர்திரட்டும். இது அன்பின் நெகிழ்ச்சியில் புன்கணீர் வரும் .
இயற்கையின் அதிசயம் சிறுவிதை முளைத்து மரமாவது. கவிஞருக்கு அந்த விதையினுள் உறங்குகிறது மரத்தின் கனவு. ( கவிதைகளில் அடிக்கடி கனவு வரும், கற்பனையே கனவு; மரங்களின் கூட்டம் கனவாவது எப்போது? வனம் எதை வேண்டுமென்று கேட்கும், மழையையும் வெய்யிலையும் தவிர? (இரண்டும் வேண்டும் வாழ்க்கைக்கு). இவையிரண்டும் சிலவேளைகளில் அழிவையும் தரும். நீரின்றி வறண்ட நதியில் எப்போது வெள்ளம் வரும் , மீன்கள் துள்ளும் என்று கனவுகண்டுகொண்டு பறக்கிறது செங்கால் நாரை. ஆனால் எதிர்பாராது கொட்டும் மழை அணையையும் நிரப்பி உடைத்துவிடும்.
இயற்கையோடு இயைந்தது உழவு; சக்தி ஜோதி இரண்டும் ஒன்றியிருப்பதைப் பாடிவிட்டு இயற்கையைமட்டுமே பலபாடல்களில் கனவுகளாய், கனவுகளில் காட்டுகிறார்; அவற்றில் கனவு வரும், நம்பிக்கையும் வரும். பருவம்தோறும் துளிர்த்து, பூத்து அடுத்த பருவத்தில் மண்ணில் ஈரத்தைக் காத்துத் துளிர்விடுவோம் என்று தாவரத்திடம் இருப்பது நம்பிக்கை; ஆனால் அது கனவாகிவிடுமோ என்ற அச்சமும் இழையோடுகிறது. லூயிஸ் க்ளக்கின் ‘The Wild Iris’ கவிதையை நினைவுபடுத்துகிறது.
கோடை வானத்து மழையில் நெகிழும் நிலம் விதைகளைத் தேடுகிறது. ஆனால் மழையின் கதை எப்படிப்பட்டது? அதைக் காற்று அழித்தல்லவா எழுதிக் கொண்டிருக்கிறது? இயற்கை நம்பிக்கைதருவது போலவே ஏக்கத்தையும் தருகிறது என்கிறார் கவிஞர். கானகம் அவருக்குப் பிடித்த ஒன்று. சிறுவயதில் கம்பம் பள்ளத்தாக்கு மலையில் ஏறி வனத்தை அடையும்போது அது எத்தனை புதிராக இருக்கிறதோ அதே புதிரைத் தான் பல்முறை அவர் எதிர்கொள்கிறார். வயது கூடினாலும் யாருடன் சென்றாலும் கானகம் புதுப்புதுக் கதைகள் சொல்லும்போலும். அவரது கனவுகளின் ஏக்கம்கூட சுனையின் ஆழத்திலிருந்துதான் பிறக்கிறது
எப்போதும் நாம் சக்தி ஜோதியிடம் பார்த்து மகிழ்பவை அவருடைய நம்பிக்கை ஒளிக்கீற்றும், இனிய மென்மையான பெண்ணியமும்தான். வாழ்க்கையை அவர் தீராத பாசத்தோடு பார்க்கிறார். காலம் அவரை ஒன்றும் செய்வதில்லை. கணப்பின் நெருப்பை சிரமங்களுக்கு இடையில் காத்து வரும் அப்பெண் குளிரிலும் காத்திருப்பது வழிதவறிய போக்கனுக்காக. குவளையளவு பச்சைத் தேயிலையைக் கொதிக்க வைக்க அவ்வளவு ஒன்றும் அதிகமாய்த் தேவைப்படாது சுள்ளிகள் என்று தன்னையே ஊக்கப்படுத்தி க்கொள்கிறாள். பயணப்படாத சாலையைக் கவிஞன் பேசுவான். மயக்கம் மனிதனுக்குத்தான், பறவைக்கு இல்லை, வானத்தில் பறவைக்கு திசையென்று ஏதும் இல்லை என்று காரணம் காட்டுகிறார் நமது கவிஞர். வாழ்க்கைக்கும் காலத்திற்கும்தான் எவ்வளவு தொடர்பு? சாவி கொடுக்க மறந்த பழைய கடிகாரத்தின் முட்களின் அடியில் முறுக்கவிழ்ந்த சுருள்வில் நடுவே சுருண்டு படுத்திருக்கும் காலத்தின் சூட்சுமம் – வாழ்க்கையின் சூட்சுமமும்தான். நல்ல படிமம். நாம் யார் எங்கே இருக்கிறோம் என்ற கேள்விகள் எழாதவர் யாரும் இருக்க முடியாது. அது இடத்தில் தோன்றி காலத்தில் மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார் கவிஞர். நம்பிக்கையைச் சொல்லும் கவிதைகள் நிறையவே இருக்கின்றன. இளவயதில் மென்மையாய் காலில் குத்திய முள்ளை எடுத்த நண்பைனின் கரமோ அயிரைமீன் உண்ணுகையில் தொண்டையில் சிக்கிய முள்ளைக் கீழிறக்க சோற்றுருண்டையைத்தந்த அம்மாவின் கரமோ மாயமுட்களை நீக்கவும் ஒரு பிடி சோறு தரவும் இன்றும் மாயமாய் நீளும் என்று காத்திருக்கிறார் அப்பெண். எனினும் வாழ்க்கை பற்றிய குழப்பமும் இல்லாமல் இல்லை.
உள்வெளி
முழுக்க அறைந்து மூடவும்
தெரியவில்லை
முற்றிலுமாகத் திறந்து வைக்கவும் இயலவில்லை
பாதி திறந்தும்
மீதி மூடியும்
நிற்கும்
கதவின் பின் இருக்கிறது
கொள்ள முடிந்ததும்
தள்ள முடியாததுமானதொரு
வாழ்வு.
பெண்மையைச் சுட்டும் பாடல்கள் சிலவாக இருந்தாலும் மனத்தில் தைக்குமாறு இருக்கின்றன. குறிப்பாக ”ஓராயிரத்து ஒருத்தி”, ”விழிப்பின் திசை” ஆகியவற்றைச் சொல்லலாம்.
கவிஞர் இயற்கையைப் பாடும் போதும் சரி, நம்பிக்கையை வெளிப்படுத்தும்போதும் சரி, வாழ்க்கைத் தத்துவத்தை முன்வைக்கும்போதும் சரி பல படிமங்களைப் பதிக்கிறார். ஒரு சில கொஞ்சம் பழசாக இருந்தாலும் பெரும்பாலானவை புதுமணம் வீசுகின்றன. மேலே எடுத்தாண்டிருக்கும் செய்யுளில் பாதி திறந்த கதவுப் படிமம் நன்றாகவே இருக்கிறது. ”விழிப்பின் திசை”யில் காலை விடியும்போது குயில்பாட்டில் கண்விழித்த அந்தப் பெண்
சுறுசுறுப்பான பறவையெனத்
தனது சிறகுகளை
அவிழ்த்தவள்
தனக்கான திசையினைத்
தெரிவு செய்கிறாள்
தீர்மானமாக.
சிறகுகளை அவிழ்ப்பது எதன் படிமம்?
சக்தி ஜோதியின் இந்தக் கவிதைத் தொகுப்பு கனவில் இறங்கிவரும் விண்மீன்களாகக் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைக்கின்றது. சுவைத்து மகிழுங்கள்.